சமூக மாற்றத்திற்கு வித்திட்ட அறிவொளி: தோழர் ம.சிங்காரவேலர்

– விக்ரம் கௌதம்

சமூகநீதி – வர்க்க சமத்துவம் – அரசியல் சுதந்திரம் இவையாவும் பாழ்பட்டிருக்கும் இன்றைய இந்திய ஒன்றியத்தைப் போன்றே, வரலாற்றின் எத்தருணத்தில் இந்நிலை நீடிப்பினும் – துவண்டோர் மனதைத் தட்டி எழுப்பி, மீட்சிக்கான வழிகாட்டியாக, அறிவார்ந்த தோழமையாக, திசை காட்டும் தலைவர்கள் பலருள் போர்க்குணமிக்க முன்னோடியாகக் கருதத்தக்கவர் சிந்தனைச் சிற்பி ம. சிங்காரவேலர். வாக்குகளுக்காக வலதுசாரிகள் வசப்படுத்த வலைவீசினாலும் அவர்தம் தடங்களே அதனைத் தகர்த்தெறியும் வரலாற்றிற்கு உரித்தானவர். இன்று பெப்ரவரி 11: அவரது 76வது நினைவு தினம். பெப்ரவரி 18: அவரது 162ஆவது பிறந்தநாள்.

இன்றைய வைதீக மயிலாப்பூரில், அழகிய மீனவ கிராமமான நடுக்குப்பத்தில், 1860 இல் உதித்த விஞ்ஞான-நாத்திக, சுயமரியாதை-சமதர்ம அறிவொளி அவர். சாதிய சமூகக் கட்டமைப்பு பிற்படுத்தி அமிழ்த்திய போதும், கடல் கடந்து வணிகம் செய்த செல்வச் செழிப்புமிக்க மீன்பிடி குடும்பப் பின்னணியின் துணையுடனும், அயராத உழைப்பினாலும் பல காலப் பகுப்புகளில் கல்வியைத் தேர்ந்து நுகர்ந்தார். 29 வயதில் அங்கம்மையாரை பல எதிர்ப்புகளிடையே காதல் மணம் புரிந்து, இல்லறத்துடன் நல்லறமுமாக சமூக மாற்றச் செயலாக்கங்களில் தம்மைத் தொடர்ச்சியாக ஈடுபடுத்திக்கொண்டார். இணையரின் மறைவு நேர்ந்த அடுத்த மூன்று தசாப்தங்களுக்குப் பின்னர் தீவிர செயற்பாட்டாளராக, வாசிப்பையே சுவாசமாகக் கொண்டு, மானுட விடுதலைக்கான சமூகச் செயலாக்கங்களில் தம் இறுதி மூச்சு வரை இயங்கினார். தேச எல்லைகள் கடந்து ஒடுக்குமுறைக்கு எதிரான குரலாகத் தாம் வாழ்ந்த காலம் முழுமைக்கும் ஒலித்தார், “அநியாயங்களையும் அக்கிரமங்களையும் கண்டு உன் மனம் கொதித்தால் நீயும் என் தோழனே” என்று முழங்கிய சேகுவேராவின் பலபடியாக்க மூதாதையராக.

செயற்பாட்டுத் தடங்கள்

பெளத்தத்திலுள்ள வர்ண-சாதி-கடவுள் மறுப்பு, மூடநம்பிக்கை-தீண்டாமை எதிர்ப்பு, சமத்துவம், மானுட நேயம் போன்றவை ஆழ்ந்த வாசிப்பும், புது நோக்கும், சமத்துவ உணர்வும் மிக்க சிங்காரவேலரை இயல்பிலேயே அதன்பால் ஈடுபாடு கொள்ளச் செய்தது. சிங்காரவேலர் மகாபோதி சங்கத்திலும், அவரது சமகாலத்தவரான பண்டித அயோத்திதாசர் சாக்கிய பெளத்த சங்கத்திலும் இயங்கினர். 1889ஆம் ஆண்டில் இருவரும் இணைந்து – சாதி-வர்ண தீண்டாமை, பெளத்தம் குறித்து தாங்கள் இயங்கிய பெளத்த சங்கங்களில் பல உரைகளை நிகழ்த்துவதிலும், விவாதங்களிலும் ஈடுபட்டனர்.

மணம் முடித்து ஐந்து ஆண்டுகள் நிறைவடைகையில், 1894ஆம் ஆண்டு மெட்ராஸ் மாகணக் கல்லூரியில், சிங்காரவேலர் இளங்கலை பட்டம் பெற்றார். பெளத்த மாநாட்டில் பங்கேற்பதற்காக 1902 ஆம் ஆண்டு லண்டன் சென்றபொழுது மார்க்ஸ்-ஏங்கெல்ஸ் சிந்தனைகளும், தொழிற்சங்க செயல்பாடுகளும், அறிவியல் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளின் யதார்த்த பயன்பாடுகளும் அவருக்கு நேரடி அறிமுகமாயின. பொதுவுடைமை வரலாற்று இயங்கியலையும் , அறிவியல் முன்னேற்றங்களையும் விசாரணை செய்து கொண்டே, சட்டப் படிப்பு பயின்றார். 1907 ஆம் ஆண்டு முதல் மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றத் தொடங்கினார். பொதுவுடைமை இடதுசாரி சிந்தனைக் கோட்பாடுகளை மானுட நலனிற்காக செயற்படுத்தும் பொருட்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயலாற்றினார்.

ரஷ்யப் புரட்சி 1917 ஆம் ஆண்டு நிகழ்ந்தேறியதற்குப் பின்னரான கால் நூற்றாண்டு காலம் சிங்காரவேலரின் தீவிர பொதுவுடைமை செயற்பாட்டுக் காலமாகும். இந்தியாவின் முதற் தொழிற்சங்கம் (“மெட்ராஸ் தொழிலாளர் சங்கம்”) 1919 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27 ஆம் நாள் துவங்கப்பட்டது. அதன் துவக்ககாலம் முதலே இரயில்வே – டிராம்வே – மின்வாரிய – மன்ணெண்னெய் – அடுமனை – துப்புரவு – பஞ்சாலைத் தொழிலாளர்களின் உரிமைப் போராட்டங்களில் பங்கேற்றார். தொழிற்சங்க முன்னோடியாகவும், காங்கிரஸ் கட்சியின் செயல்வீரராகவும், மெட்ராஸ் அரசியல் வட்டங்களில் அறியப்பட்டார். தொழிலாளர்களை காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக அணியம் செய்தார். உழவர்-தொழிலாளர் குறித்தான உரையாடல்களை கட்சிக்குள் முன்னெடுப்பது மட்டுமல்லாது அவர்களுக்கான அமைப்பினைக் கட்டும் முயற்சியிலும், அவ்வமைப்புகளுக்கான இதழ்களைத் துவங்கும் முயற்சியிலும் ஈடுபட்டார். 1920 ஆம் ஆண்டு காந்தியின் தலைமையில் காங்கிரஸ் கட்சி முன்னெடுத்த ‘இந்திய சோதனையான’ ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டு தம் வழக்கறிஞர் பணியைத் துறந்தார். இரண்டாண்டுகள் கழித்து அவ்வியக்கம் பின்வாங்கப்பட்டதன் ஒவ்வாமையால் காங்கிரஸ் கட்சியிலிருந்தும் வெளியேறினார்.

1923 ஆம் ஆண்டு இந்துஸ்தான் தொழிலாளர் உழவர் கட்சியைத் (லேபர் கிசான் பார்ட்டி ஆஃப் இந்துஸ்தான்) தோற்றுவித்து இந்தியாவில் முதல் முறையாக மே தினத்தினை செங்கொடி ஏற்றிக் கொண்டாட வழிகோலினார். “லேபர் கிசான் கெஜட்” ஆங்கில வார இதழையும், மெட்ராஸிற்கு வெளியே நடக்கின்ற தொழிலாளர்கள் இயக்கங்களைப் பற்றியும், அரசியலில் தொழிலாளர் வர்க்கத்தின் பங்கு பற்றியும், மெட்ராஸ் தொழிலாளர்களுக்குப் பயிற்றுவிப்பதற்கு “தொழிலாளன்” தமிழ் வார இதழையும் ஆசிரியராக இருந்து பதிப்பித்து வெளியிட்டார். 1924 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், இன்றைய உத்திரப்பிரதேச மாநிலத்தின் கான்பூரில், போல்ஷெவிக் சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். அச்சமயத்தில் அவர் நீண்ட காலம் நோய்வாய்ப்பட்டிருந்தமையால் அவருக்கு எதிரான நடவடிக்கை கைவிடப்பட்டது.

1925 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் நாள், கான்பூரில் பொதுவுடைமை இயக்கத்தை இந்நிலப்பரப்பில் முதன் முறையாகத் தோற்றுவித்து, அந்நிகழ்விற்குத் தலைமையேற்று, தலித் மக்களின் முன்னேற்றம் குறித்து பொருளாதாரக் கண்ணோட்டத்தில் சிந்தனை மிக்க உரையாற்றினார். 1927 ஆம் ஆண்டு பெங்கால்-நாக்பூர் ரயில்வே வேலை நிறுத்தத்திலும், 1928 ஆம் ஆண்டு வரலாற்றுப் பெருமை வாய்ந்த தென்னிந்திய ரயில்வே வேலை நிறுத்தத்திலும் தீவிரமாக ஈடுபட்டார். பிந்தைய வேலை நிறுத்தத்தினை நடத்திய தலைவர்கள் மீது தொடரப்பட்ட சதி வழக்கில் அவருக்குப் பத்தாண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டும், பின்னர் அது குறைக்கப்பட்டும் 1930 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் விடுதலை செய்யப்பட்டார்.

இடைக்காலத்தில் நீதிக்கட்சியுடன் இணைந்து செயலாற்றிய சிங்காரவேலர், அக்கட்சியின் செயலாக்கங்களில் நிலவிய முதலாளித்துவ சாய்வு போக்குடன் சமரசம் செய்து கொள்ளவியலாமல் விலகிச் சென்றார். 1931 ஆம் ஆண்டு பெரியார் அவரைச் சந்தித்த பிறகு, இருவருக்குமிடையிலான புரிதலின் தொடர்ச்சியாக, பெரியார் பதிப்பித்த குடியரசு, ரிவோல்ட், புரட்சி, புதுவை முரசு போன்ற இதழ்களில் – நாத்திகம், பகுத்தறிவு, பொருளியல், உளவியல், அரசியல், மெய்யியல், சமதர்மம் குறித்து எழுதலானார்.

பெரியாரும், சிங்காரவேலரும் இணைந்து பணியாற்றிய காலம் சிந்தனைக் கிளர்ச்சியும், தத்துவ வளர்ச்சியும், அரசியல் எழுச்சியும் பெருகிய காலமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே சாதி-மதத்திற்கு அப்பாற்பட்டும், கல்லாமைக்கு அப்பாற்பட்டும், தனிமனித மானத்தை, தனி மனிதச் சுயமரியாதையை உருவாக்கி வளர்த்தெடுத்த ஒரே மக்கள் இயக்கம், சுயமரியாதை இயக்கம் மட்டுமே. மானமும் அறிவும் மனிதர்க்கு அழகென்று நிறுவி, மூடநம்பிக்கைகளை, சாதி-சமய-வர்ணப் பாகுபாட்டை ஒழிக்கும் பகுத்தறிவு இயக்கமாக அதனை பெரியார் கட்டியமைக்க, அதன் கோட்பாட்டு முக்கியத்துவங்களுக்கு சிங்காரவேலர் காரண காரியங்களோடு அறிவியல் பூர்வமாக விளக்கம் நல்கி விஞ்ஞான வெளிச்சத்தைப் பாய்ச்சினார்.

பொதுவுடைமை குறித்து ஒரு தெளிவினை உண்டாக்கிய அதே வேளையில் அறிவியல் சார் கட்டுரைகளை தக்க தர்க்க ஆய்வு முறைமைகளின் அடிப்படையில் வடித்தும் வந்தார். கடவுளும் பிரபஞ்சமும், மெய்ஞ்ஞான முறையும் மூடநம்பிக்கையும் (இருபாகங்கள்), சுயராஜ்யம் யாருக்கு?, மனித உற்பவம் போன்ற கட்டுரைகள் சுயமரியாதை பதிப்பக நூல்களாக வெளிவந்தன. “சமஸ்கிருத சனியன்” என்ற பெரியாரின் காட்டமான கட்டுரையையும், “நாம் செய்ய வேண்டிய வேலை என்ன?” என்ற சிங்காரவேலரின் எதிர்காலம் நோக்கிய பகுப்பாய்வுக் கட்டுரையையும் ஒருசேர வாசிப்பதற்கு குடியரசு இதழ் (17.01.1932) மட்டுமே போதுமானதாக இருந்தது. தொடர்ச்சியாக, மாவட்டம் தோறும் நடந்தேறிய சுயமரியாதை மாநாடு, பகுத்தறிவு மாநாடு, சமதர்ம மாநாடு, சாதியொழிப்பு மாநாடு, நாத்திக மாநாடு மற்றும் கருத்தரங்குகள் அடித்தட்டு மக்களும் விழிப்புறும் வகையில் அமைந்தன. பல்வேறு தருணங்களில் அம்மாநாடுகளுக்கு சிங்காரவேலர் தலைமையேற்று, புது சிந்தனைகள் மிளிரும் வகையில் உரையாற்றியுள்ளார். 1934 ஆம் ஆண்டு வரையிலான ஏறக்குறைய நான்காண்டு காலம் தொடர்ந்த இப்பயணம், ஈரோடு திட்டத்தில் ஏற்பட்ட முரணுடன் முறிந்தது.

அறிவியல் கருத்துக்களை பரப்பும் நோக்கம் கொண்டு தம் 75ஆவது அகவையில், 1935-36 ஆம் ஆண்டு வெளிவந்த ‘புது உலகம்’ இதழில் மட்டும் என்பதிற்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார். உற்றுநோக்குதல், சோதனை முறைமைகளுடன் தூண்டுதல் கோட்பாட்டினையும் தம் விசாரணைகளுக்குப் பயன்படுத்தினார். எத்தகைய கருதுகோளினையும் வரலாற்று இயங்கியல் முறைமையின் விசாரணை அடிப்படையில் ஆய்ந்து அறிந்த பின்னரே ஏற்றுக்கொள்ளும் வழமையினைக் கொண்டிருந்தார். அரசியல் சூழலில், காலந்தோறும் மாறும் உற்பத்தி சாதனங்கள் மூலம் எய்தப்படும் அறிவியல் முன்னேற்றங்களின் மூலம் பெறப்படும் முடிவுகளைக் கொண்டு அக்காலகட்டத்தில் நிலவும் கருத்துகளுக்கு நம்பகம் கூட்டும் முயற்சியினை செவ்வனே செய்து வந்தார்.

உழைப்பாளர், உழவர் (மீனவர் உட்பட) என்று வர்க்க சமத்துவமின்மையால் ஒடுக்கப்படுவோருக்காகவும், பெண்கள், தலித்துகள், சிறுபான்மையினர் என சமூகக் கட்டமைப்பால் நலிவுற்று விளிம்பு நிலையில் தள்ளப்படுவோருக்காகவும் அவர்களின் வாழ்வு மேம்பட யதார்த்த சூழலை தெளிவாக ஆய்ந்து அறிந்து அதற்கேற்ப தனது பங்களிப்பைச் செய்துள்ளார். வழக்கறிஞராகப் பணியாற்றிய போதும், நகராண்மைக் கழக உறுப்பினராக செயல்பட வாய்ப்பு கிட்டியபோதும் சமூக நலன் சார்ந்தே செயல்பட்டுள்ளார். காரல் மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின், இங்கர்சால், ஸ்பென்சர், காம்டே, தாந்தே, கான்ட், ஹெகல் போன்ற பல மேற்குலகத் தத்துவவியலாளர்களின் நூல்களில் பரிச்சயம் பெற்றிருந்ததைப் போலவே இந்தியத் தத்துவ சிந்தனை மரபிலும், பெளத்த தத்துவ இயலிலும், தமிழிலக்கிய நூற்பரப்பிலும் மனந்தோய்ந்து கற்றுத் தேர்ந்திருந்தார். தொழிற்சங்கம், காங்கிரஸ் கட்சி, சுயமரியாதை இயக்கம், பொதுவுடைமை இயக்கம் இவை சார்ந்தே வாழ்நாள் முழுமையிலும் உழைத்தார். பொதுவுடைமை புரட்சிக்கான சாத்தியங்களற்ற, அதிகாரப் பரிமாற்றத்தை காணும் வாய்ப்பிற்கு ஓராண்டிற்கும் முன்பாகவே 1946 ஆம் ஆண்டு, தம் 86 ஆம் அகவையில் உயிர் நீத்தார்.

“தோழர் என்று கொடுக்கப்படும் அடைமொழி அவருக்குத்தான் இருந்தது; பொதுவுடைமை, பகுத்தறிவுச் சம்பந்தமாக அவரைப் போன்று அறிந்தவர்கள் அப்போது இல்லையென்றே கூறலாம்; அவர் எப்போதும் படித்துக் கொண்டே இருப்பார்; அவர் வீடே புத்தகச்சாலையாக இருந்தது. எதனையும் ஆராய்ச்சி செய்யும் பண்பும், துணிச்சலும், தைரியமும் உடைய அவரைப் போன்ற ஆராய்ச்சியாளர்கள், நிறைய விஷயம், அறிந்து வாதிப்பவர்கள் அவருக்குப் பிறகு தோன்றவே இல்லை; தோழர் சிங்காரவேலு அவர்கள் சமுதாயக் கோளாறுகள் ஒழிவதற்காகவே பாடுபட்டவர். தோழர் சிங்காரவேலுவின் கருத்துகள் நமக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும்”. (பொன்மலை ரயில்வே பணிமனையில் சிங்காரவேலரின் திருவுருவப் படத்தை 28. 09. 1952-இல் திறந்து வைத்து பெரியார் ஆற்றியவுரை).

கருப்பு-சிவப்பு-நீலம்

“மறுபிறவி என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனென்றால் ஆன்மா என்பதையே பெளத்தம் மறுக்கிறது. பெளத்தத்தில் கடவுளும் கிடையாது. ஆன்மாவும் கிடையாது. ஆன்மாவே கிடையாது என்கின்ற போது மறுபிறவி என்பது எப்படி இருக்கும்” என்பது சிங்காரவேலர் கேள்வி எழுப்புகிறார். அம்பேத்கருடைய “புத்தமும் அவர் தம்மமும்” நூலின் முன்னுரையில் அம்பேத்கரால் குறிப்பிடப்பட்டவரான லட்சுமி நரசு, “எவனொருவன் சிந்தனையும் பேச்சும் எல்லோருடைய மனதிலும் பதிந்து தொடர்ச்சியாகப் பேசப்படுகிறதோ அதுதான் மறுபிறவி” என்கிறார்.

அறிவிக்கப்படாத அவசரநிலை நீடிக்கும் சூழலில், சூழ்ந்திருக்கும் இருளகற்ற ம.சிங்காரவேலரைப் போன்று கருப்பு-சிவப்பு-நீலம் இழைந்த சிந்தனையாளர்கள், தாம் தலைமுறைகளுக்கு கடத்திச் சென்ற எழுத்துகளின் மூலம் மறுபிறவி கொண்டு பரந்த சமூகத்திற்கு விழிப்பேற்படுத்துவதே தற்காலத் தலையாய தேவை.

இரண்டு  மாதங்கள் இன்னும் கடந்துவிடாத இவ்வாண்டில் நிலவும் உண்மை…

  • பெங்களூரூவில் வசித்த இளம் பருவநிலை மாற்ற சூழலியற் செயற்பாட்டாளர் தீஷா ரவி, இந்திய ஒன்றியத்தின் தலைநகரமான தில்லியில் சர்ச்சைக்குரிய விவசாயச் சட்டங்களுக்கு எதிராக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக ட்வீட் செய்த செயலுக்காக தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு பிணையில் வரவியலா காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
  • பகுத்தறிவு சிந்தனையாளர்களான நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, எம்.எம். கல்புர்கி, கௌரி லங்கேஷ் ஆகியோரின் உயிர்களைப் பறித்தவர்கள் யாரென்று இன்றளவும் காவல்துறையால் கண்டறியப்படவில்லை.
  • கொரோனா பேரிடர் துவங்கியது முதல் இன்றளவும் தமிழகத்தில் நிகழ்ந்த தீண்டாமை வன்கொடுமைகளை, எண்ணித்தீர்க்கவே பத்திற்கும் மேற்பட்ட கைகள் தேவைப்பட, நீதி வழங்கிய பேனாக்கள் சொற்ப அளவிலாவது உள்ளனவா எனத் தேடித் தெளியவேண்டிய நிலை நீடிக்கிறது.
  • நீங்கள் கார்ப்பரேட்டாக இருந்தால் நீதிமன்றம் செல்லலாம், சாமானியர் நீதிமன்றம் சென்றால் வருத்தம் தான் அடைவர் என முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் கருத்து பகிர்ந்துள்ளார்.
  • 2001 முதல் 2018 வரையிலான காலகட்டத்தில் 17,547 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்ட மகாராஷ்டிராவின் வடகிழக்குப் பகுதியான விதர்பாவில் ‘நிதி சமர்ப்பன் அபியான்’ என்னும் பெயரில் 30,000 தன்னார்வலர்கள், 40 லட்சம் மக்களை நேரடியாக அணுகி அயோத்தி இராமர் கோவிலுக்கு நன்கொடை வசூல் செய்ய களமிறக்கப்பட்டுள்ளனர். இதுவரை 27 கோடி ருபாய் வசூலாகியுள்ளதென இப்பரப்புரையின் ஒருங்கிணைப்பாளர் கோவிந்த் ஷிண்டே குறிப்பிட்டுள்ளார். நிதி வசூலிப்பதோடு நில்லாமல் பணம் கொடுத்தவர்கள், கொடுக்காதவர்கள் யார் என அறியும் பொருட்டு வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டிச் செல்வதாகவும் அறியப்படுகிறது.

சிங்காரவேலரின் எழுத்துக்கள் புகுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு, இச்செய்திகளுக்கான எதிர்வினையாக கீழ்கண்டவற்றுள் ஏதேனுமொன்றை தாம் அறிந்த சூழலுக்கு  ஏற்றவாறு முகநூலில் பதிவிடக்கூடும்…

  • “உலகிலே மானிடவர்க்கத்தில் இந்நாட்டவரைப் போல் துயரக் கடலில் மூழ்கியிருப்போர் எவரு மில்லை எனக் கூறலாம். வாழ்வுக்கு அவசியமான உணவு, குடியிருப்பு வசதிகள் நமக்கு இல்லை. உயர்ந்த அறிவு வாழ்வுக்கு அவசியமான சுதந்திரம், சமத்துவம், கல்வி இல்லை. நம்மில் பெரும்பான்மையோர் உலகில் உள்ள மற்ற தேசத்துக்கு எல்லா வகையிலும் கீழ்ப்பட்டிருக்கிறோம். முப்பது கோடி ஜனங்களில் நான்கு கோடி ஜனங்கள் அரை வயிறு உண்டு, அரை ஆடை உடுத்தித் துன்புற்றிருக்கின்றனர். பதினைந்து கோடிப் பேர் தகுந்த குடியிருப்பு வசதியின்றி மனிதர்கள் வகிக்கத்தகாத இடங்களில் வசிக்கின்றனர். நூற்றுக்கு எண்பது பேருக்கு மேல் எழுதப்படிக்கத் தெரியாதவர்கள். முப்பது கோடியில் கால் பகுதிக்கு மேல் தீண்டத்தகாதவர்கள். மற்ற வகுப்பாருக்கு ஊழியம் செய்வதைத் தவிர இவர்களுக்கு வேறு வகை சம்பந்தமும் கிடையாது. அவர்கள் கோயிலுக்குப் போகக் கூடாது… நமது தாய்நாட்டில் நமது சகோதரர்கள் படும் துன்பங்களை நீக்கும் பொருட்டு கிளர்ச்சி செய்வது ஆட்சேபிக்கப்படுகிறது”. (ம.சிங்காரவேலரின் பொதுவுடைமை விளக்கம்: 12, என்.சி.பி.எச், மூன்றாம் அச்சு)
  • “முதலாளித்துவத் தன்னாதிக்கத்தை எதிர்த்துப் போராடாமல் அரசியல் தனி ஆதிக்கத்தை எதிர்த்துப் போராட முடியாது. அரசியலில் விடுதலைக்கு இன்றியமையாதவைகள், தொழில் துறையில் சுதந்திரம் ஆகியவைகளைப் பொருத்த வரை நம் சுயராஜ்ஜிய அரசியல், விட்டுக் கொடுத்தலை எவ்வுருவத்திலும் ஏற்றுக் கொள்வதில்லை. ஆகையால் நமக்கு வரவிருக்கும் சுயராஜ்ஜியத்தில் நிலமும் இன்றியமையாத தொழிற்சாலைகளும் நாட்டின் நன்மைக்காக பொதுமையாக்கல்படுமென்றும், நாம் பயிரிடாத எந்தத் துக்காணி நிலத்தையும், நாம் வேலை செய்யாத எத்தொழிற்சாலையையும், நாம் வசிக்காத எந்த வீட்டையும் நம்மில் ஒருவரும் வைத்துக்கொள்ளக் கூடாது என்று எளிய மொழியில் எவ்வகை ஐயத்துக்கிடமின்றி அறிவிக்க வேண்டுமெனத் தங்கள் முன் தாழ்ந்து பணிந்து வேண்டுகிறேன்”. (சிங்காரவேலு – தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்டு:273 ஆசிரியர்கள் கே.முருகேசன், சி.எஸ்.சுப்பிரமணியம். நி.செ.பு. என்.சி.பி.எச். வெளியீடு.) (காந்திக்கு அவர் எழுதிய பகிரங்கக் கடிதம்)
  • “தத்துவஞானிகள் கூறும் பிரம்மமும் (Brahmam), சத்தும் (Sat), சர்வமும் (Absolute), தெரியப் படாததும் (Unknownable), எண்ணமும் (Idea), இச்சையும் (Will), யாவும் கற்பனைகளென அறிக”. (ம.சிங்காரவேலரின் சிந்தனைக் களஞ்சியம் தொகுதி: I: 256, தொகுப்பாசிரியர்கள்: முத்து குணசேகரன், பா.வீரமணி. தென்னக ஆய்வு மையம்.)
  • “பற்பல நூற்றாண்டுகளாகத் பட்டியல்சாதி மக்களைத் தீண்டாமை யென்னும் சமூக இழிவுமூலம் அடிமைகளாக இந்து மதம் நடத்தியது; இருபதாம் நூற்றாண்டிலும் அந்த இழிவும், அவலமும், புறக்கணிப்பும் தொடர்ந்ததால் அம்பேத்கர் புத்தமதத்தைத் தழுவினார். பல மதங்கள் தத்தம் மதங்களில் சேர்க்க அழைப்பு விடுத்திருந்தும், அவற்றை ஏற்காது சமத்துவமும் முற்போக்கும் கொண்ட புத்தத்தில் அம்பேத்கர் தம் மக்களோடு இணைந்தார். அம்பேத்கர் அப்படி இணைந்ததில் தவறொன்றும் இல்லை. மிகச் சரியான முடிவு; காலந்தோறும் தம் மக்களை இழிவுபடுத்தி ஊமைகளாக வைத்திருந்த இந்துமதம் மீது அவருக்கு அளவொண்ணா வெறுப்பு இருந்தது; தம் மக்கள் யாருக்கும் கீழானவர்கள் அல்லர். அவர்கள் எல்லோர்க்கும் சமமானவர் என்பதை உறுதிப்படுத்தவே சமத்துவநோக்கு கொண்ட புத்தத்தில் இணைந்தார்.” (“டாக்டர் அம்பேத்கருக்கு நமது வேண்டுகோள்” – சிங்காரவேலரும் அம்பேத்கரும் கட்டுரை, பா. வீரமணி)
  • “பின் யாருக்குத்தான் சுயராஜ்ஜியம்? நமது லாயர்களுக்கும், ஜட்ஜுகளுக்கும், மந்திரிகளுக்கும், தர்மகர்த்தாக்களுக்கும், மடாதிபதிகளுக்கும், நிலச்சுவான்தார்களுக்கும், வீடு சொந்தக்காரர்களுக்கும், வர்த்தகர்களுக்கும், தொழிற்சாலை, ரயில் மற்றும் கப்பல் உரிமையாளர்களுக்கும், ராணுவம் மற்றும் போலீஸ் உத்தியோகஸ்தர்களுக்கும், கலாசாலை பண்டிதர்களுக்கும், பட்டவர்த்தனர், மகுடவர்த்தனருக்கும், இவர்கள் சந்ததியருக்கும்தான் நமது தேசிய காங்கிரஸ் கோரும் சுயராஜ்ஜியமெனவும் அறிக”. (ம.சிங்காரவேலரின் சிந்தனைக் களஞ்சியம் தொகுதி: I: 59, தொகுப்பாசிரியர்கள்: முத்து குணசேகரன், பா.வீரமணி. தென்னக ஆய்வு மையம்.)
  • “பிரபஞ்சத்தில் நமக்குத் தெரிந்தவரை, இருக்கும் பிராணிகளில் மனிதனைப் போன்ற மூடப்பிராணி இல்லை என்றே சொல்லலாம். இல்லாத தெய்வங்களையும் பிசாசுகளையும் தானே சிருஷ்டி செய்து கொண்டு, அந்தச் சொற்களுக்குத் தானே நற்குணங்களையோ, துர்குணங்களையோ காட்டி, தான் கொடுத்த குணத்திற்குப் பயந்து அந்தப் பயத்தைப் போக்க, பிரார்த்தனையும் பூசையும் காவையும் பலியையும் செய்து, அவைகளால் தன்னையும், பிறரையும் இம்சித்துக் கொண்டு, இவ்வுலகில் உயிர் வாழும் சம்பவம் பிரபஞ்சத்தில் வேறு எங்கும் இருக்காது என்று தீர்க்கமாக எண்ணலாம்.” (ம.சிங்காரவேலரின் சிந்தனைக் களஞ்சியம் தொகுதி: I: 290, தொகுப்பாசிரியர்கள்: முத்து குணசேகரன், பா.வீரமணி. தென்னக ஆய்வு மையம்.)
  • “….சாதியும் மதமும் அழித்தொழிக்கப்படுவதற்கு, அரசும் அதனை நிலைத்திருக்கச் செய்யும் அரசியலும் முதலில் வெளியேற வேண்டும்…” (குடியரசு, பிப்ரவரி 20 மற்றும் நவம்பர் 1, 1932)
Tags: