அரசியல் பொறிமுறை தவறே மொழிப் பிரச்சினைக்கு காரணம்

அரசியல் பொறிமுறை தவறே மொழிப் பிரச்சினைக்கு காரணம். இதனை நிவர்த்திக்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்

யாழ். ஊடகவியலாளர்களுடனான சிநேகபூர்வ சந்திப்பில் ஊடகத்துறை அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவிப்பு

தமிழ் மொழியில் உங்கள் முன் என்னால் பேச முடியாதமைக்காக நான் வெட்கப்படுகிறேன். அதில் என்னுடைய பிழையில்லை. அரசியல் பொறிமுறையிலுள்ள பிழை. இதனை நாம் நிவர்த்தி செய்ய வேண்டுமென ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் 18.02.2022 அன்று அமைச்சர் டலஸ் அழகப்பெருமவுக்கும் மாவட்ட ஊடகவியலாளர்களுக்கும் இடையிலான சிநேகபூர்வ சந்திப்பொன்று நடைபெற்றது. இதன்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் இங்கு மேலும் தெரிவிக்கையில்,

யாழ். மாவட்டத்திலேயே 05 பிராந்திய பத்திரிகைகள் உள்ளன. அதனால் இங்கே பல பிராந்திய ஊடகவியலாளர்களும் உள்ளதாக அறிகிறேன்.

ஊடகவியலாளர்களின் கல்வித் தகமைகளை மேம்படுத்தும் வகையில், பட்டயக்கல்வியை விரைவில் ஆரம்பிக்கவுள்ளோம். அதன்போது பிராந்திய ஊடகவியலாளர்களுக்கும் சந்தர்ப்பம் வழங்கப்படும். அதேவேளை ஊடகத்துறைக்கான ஜனாதிபதி விருது இந்த வருட இறுதிக்குள் வழங்க நடவடிக்கைகள் எடுத்துள்ளோம். அதிலும் பிராந்திய ஊடகவியலாளர்களுக்கும் சந்தர்ப்பங்கள் வழங்கவுள்ளோம்.

ஊடகவியலாளர்களுக்கான காப்புறுதிகள் வழங்கப்பட்டுள்ளன. அதில் யாழ். மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர்கள் எத்தனை பேர் உள்வாங்கப்பட்டார்களென்ற தகவல் தெரியவில்லை. காப்புறுதிகள் தொடர்பில் தேசிய பத்திரிகைகளில் விளம்பரம் செய்துள்ளோம். பிராந்திய பத்திரிகைகளில் விளம்பரம் செய்ய தவறிவிட்டோம். அந்த தவறை நாம் ஏற்றுக்கொள்கிறோம்.

இனிவரும் காலங்களில் அரச அறிவித்தல்களை பிராந்திய ஊடகங்களுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.

அதனூடாக பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு தகவல்கள் எளிதில் கிடைக்கும்.

அதேவேளை பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்படும் உதவிகள், கடன் உதவிகள், புலமை பரிசில்கள் என்பன உரிய முறையில் சென்றடைவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

அதனை ஏற்றுக்கொள்கிறோம். இனிவரும் காலங்களில் மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்கள் ஊடாக அறிவித்தல்களை வழங்கி அவற்றினூடாக பயனாளிகளாக ஊடகவியலாளர்களை தெரிவு செய்யும் பொறிமுறையை ஆரம்பிக்கவுள்ளோம்.

அத்துடன் இந்திய நிதியுதவியில் யாழ்.நகரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுவரும் கலாசரா மண்டபத்தில் ஊடகவியளலாளர்களுக்கென ஒரு தொகுதியை ஒதுக்குவது தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் பேசவுள்ளோம்.

இத் தொகுதியில் கணனி மயப்படுத்தப்பட்ட நூலக வசதிகள் உள்ளிட்டவற்றை உள்ளடக்கவும் நடவடிக்கை எடுக்கவுள்ளோம். அதனூடக பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு பெரிதும் நன்மை பயக்குமென நம்புகிறோம்.

ஊடகவியலாளர்களுக்கென நிர்ணயிக்கப்பட்ட சம்பளம் வழங்கப்படுவதில்லை.

ஊடகவியலாளர்களை தொழில்முறை ஊடகவியலாளர்களாக மாற்றுவதன் மூலமே இது சாத்தியமாகும். அதற்காகவே ஊடகவியலாளர்களுக்கு பட்டயக்கல்வியை வழங்க நடவடிக்கை எடுக்கிறோம்.

அதன் மூலம் சிறந்த தொழில்முறை ஊடகவியலாளர்களை உருவாக்க முடியுமென நம்புகிறோமென மேலும் தெரிவித்தார்.

Tags: