உக்ரைன்-போலந்து எல்லையில் இந்திய மாணவர்கள் மீது தாக்குதல்!

-பிரியா

க்ரைனில் சிக்கித் தவித்த 900 இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளனர். இவர்களில் 21 பேர் தமிழகம் வந்தடைந்தனர். இந்தசூழலில் உக்ரைனின் அண்டை நாடுகள் வழியாக நாடு திரும்பும் மாணவ, மாணவிகள் எல்லை பகுதியில் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

உக்ரைனில் கடந்த 5 நாட்களாக ரஷ்யப் போர் தொடுத்து வருகிறது. இதில் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்னும் இரு நாட்டுத் தரப்பிலிருந்தும் வெளியிடப்படவில்லை.

ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைன் சர்வதேச உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பெலாரஸில் நடைபெறும் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் ஒப்புதல் அளித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே உக்ரைனில் இருக்கும் இந்தியர்களை மீட்க ‘ஒப்பிரேசன் கங்கா’ (Operation Ganga) திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. உக்ரைனின் அண்டை நாடுகளான போலாந்து, ரோமானியா, ஹங்கேரி, ஸ்லோவேக்கியா ஆகிய நாடுகளின் எல்லைகளில் கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டு, அங்குச் சாலை மார்க்கமாக அழைத்து வரப்படும் இந்தியர்கள் அங்கிருந்து விமானங்கள் மூலம் இந்தியா அழைத்து வரப்படுகின்றனர்.

இதுவரை 4 விமானங்கள் மூலம் 907 பேர் தாயகம் திரும்பியுள்ளனர். இவர்களில் 21 பேர் தமிழகம் வந்துள்ளனர். ஆப்ரேஷன் கங்கா ஹெல்ப்லைன் என்ற பெயரில் ட்விட்டரில் மத்திய அரசு ஒரு கணக்கு தொடங்கியுள்ளது. இதன்மூலம் உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்கள் இந்திய அரசுக்கு தெரியப்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளது. அதோடு மார்ச் 1, 2 ஆகிய தேதிகளில் கூடுதல் விமானங்களை அனுப்பி இந்தியர்களை அழைத்து வர நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனில் நிலவும் பதற்றமான சூழலில் இந்திய மாணவர்கள் தங்கள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு அண்டை நாடுகளின் எல்லை வழியாக தயாகம் திரும்பும் நிலையில், அவர்கள் உக்ரைன் -போலந்து எல்லைகளில் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் புகைப்படங்களும் வீடியோக்களும் வெளியாகி கொண்டிருக்கின்றன.

கேரளாவைச் சேர்ந்த ஏஞ்சல் என்ற மாணவி கூறுகையில், “போலந்து எல்லையில் உக்ரைன் ராணுவம் மற்றும் போலீசாரால் தாக்கப்பட்டோம். என்னைத் தாக்கி கீழே தள்ளினர். உதவ வந்த நண்பர்கள் மீதும் தாக்குதல் நடத்தி கீழே தள்ளினர்” என தெரிவித்துள்ளார்.

மற்றொரு இந்திய மாணவியான மான்சி சவுத்ரி என்டிடிவியிடம் கூறுகையில், நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி வருகிறது. இந்திய மாணவர்கள் சித்திரவதைக்கு உள்ளாகின்றனர். அவர்கள் எங்களை போலந்துக்கு செல்ல அனுமதிக்கவில்லை. மாணவிகள் கூட துன்புறுத்தப்படுகின்றனர். தலைமுடியை இழுத்து கம்பிகளால் தாக்குகின்றனர். சில மாணவிகளுக்கு எலும்பு முறிவு மற்றும் காயங்கள் ஏற்பட்டுள்ளன.

இந்தியத் தூதரக அதிகாரிகள் எங்களுக்கு உணவு மற்றும் தங்குமிடம் கொடுத்து உதவி செய்தனர். ஆனால், எல்லைக் காவலர்கள் எங்களை கடக்க விடுவதில்லை. யாரேனும் கடக்க முயன்றால், கம்பியால் தாக்குகின்றனர். அவர்கள் முகத்தில் குத்துகிறார்கள். நேற்று துப்பாக்கிச்சூடு நடத்தினர். நாங்கள் விலங்குகளைப் போலச் சித்திரவதை செய்யப்பட்டோம். அவர்கள் உக்ரைன் மக்களைக் கடக்க அனுமதிக்கிறார்கள், ஆனால் எங்களை அல்ல” என்று வேதனையுடன் கூறியுள்ளார்.

இதனிடையே உக்ரைனில் உள்ள கார்கிவ், கீவ், சுமி நகரங்களில் தாக்குதல்கள் நடந்து வருவதால் இந்த நகரங்களில் வாழும் மற்றும் ஊரடங்கு அமலில் உள்ள நகரங்களில் வசிக்கும் இந்தியர்கள் பயணிக்க வேண்டாம் என உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. சண்டை தீவிரமாக நடப்பதால் ரயில் நிலையங்களுக்குச் செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளது.

உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டு மாணவர்கள்

லகின் எந்தப் பகுதியில் போர் நடந்தாலும், அது எல்லா நாடுகளின் அரசியல் உறவுகளில் மட்டுமின்றி, அன்றாட வாழ்க்கையிலும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. தற்போது உக்ரைன் மீது ரஷ்யா நடத்திவரும் தாக்குதல்களால், கச்சா எண்ணெய் கடுமையான விலை உயர்வைச் சந்தித்திருக்கிறது. போர் நடக்கக்கூடும் என்ற பதற்றம் உருவானபோதே, கச்சா எண்ணெயின் விலையும் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. இது இந்தியா போன்ற ஒரு வளரும் நாட்டின் பொருளாதாரத்தில் பணவீக்கம், நிதிப் பற்றாக்குறை உள்ளிட்ட நீண்ட கால அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது.

இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 80%-ஐ இறக்குமதியின் வாயிலாகவே ஈடுசெய்துவருகிறது. இந்தியாவின் மொத்த இறக்குமதி மதிப்பில், கச்சா எண்ணெய் மட்டுமே சுமார் 25% வகிக்கிறது. இந்தியாவுக்கு சூரியகாந்தி எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ரஷ்யா, உக்ரைன் இரண்டும் முதன்மையானவை. எனவே, சூரியகாந்தி எண்ணெய் விலையும் உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தவிர, உக்ரைனில் நீடித்துவந்த போர்ப் பதற்றத்தின் காரணமாக, இந்த ஆண்டின் முதலிரு மாதங்களில் மட்டுமே இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்பட்ட அந்நிய முதலீடுகள் பெருமளவில் திரும்பப் பெறப்பட்டுள்ளன.

உக்ரைன் போரால் இந்தியா சந்தித்துள்ள நேரடியான உடனடிப் பாதிப்பு, அங்கு உயர்கல்வி பயிலும் இந்திய மாணவர்களின் பாதுகாப்புதான். ஏறக்குறைய 20,000 இந்திய மாணவர்கள் உக்ரைனில் தங்கிப் படித்துவருகின்றனர். அவர்களது பெற்றோர்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். தமிழ்நாட்டிலிருந்து மட்டும் சுமார் 5,000 மாணவர்கள் உக்ரைனில் மருத்துவம் படித்துவருகின்றனர். அவர்களைச் சாலை மார்க்கமாக ருமேனியா அழைத்துவந்து, அங்கிருந்து இந்தியாவுக்கு விமானத்தில் அனுப்பும் முயற்சிகள் நடந்துவருகின்றன.

இப்படியொரு பதற்றச் சூழலில், தமிழ்நாட்டு மாணவர்களுக்கான விமானச் செலவை அரசே ஏற்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பது ஆறுதல் அளிக்கிறது. உக்ரைனில் சிக்கித் தவிக்கும் மாணவர்களுக்குத் தேவையான உதவிகளையும் தகவல்களையும் பெறுவதற்காக சென்னையில் அவசரக் கட்டுப்பாட்டு மையம் ஒன்றும் தொடங்கப்பட்டுள்ளது.

உக்ரைன் செல்லும் இந்திய மாணவர்களில் பெரும்பாலானவர்கள் மருத்துவப் படிப்புக்காகவே செல்கின்றனர். மருத்துவப் படிப்புகளுக்கான கல்விக் கட்டணங்களை வரைமுறைப்படுத்தும் நோக்கத்திலேயே நீட் தேர்வு நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால், அதற்குப் பிறகும்கூட இந்தியாவைக் காட்டிலும் கல்விக் கட்டணங்கள் குறைவாக இருக்கின்றன என்பதாலேயே இந்திய மாணவர்கள் உக்ரைனுக்கு மருத்துவம் படிக்கச் செல்கின்றனர்.

இந்திய மருத்துவக் கல்லூரிகள் ஒவ்வொன்றிலும் உள்ள பேராசிரியர்களைக் கொண்டு ஆண்டுதோறும் மேலும் கூடுதலான மாணவர்களை உருவாக்குவதற்கான வாய்ப்புகளைக் குறித்து ஏற்கெனவே விவாதிக்கப்பட்டுவருகிறது. உக்ரைன் போர் விளைவித்துள்ள உயிரச்சத்தைக் கருத்தில்கொண்டு, இனிமேலாவது மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் மாணவர் சேர்க்கைகளைக் குறித்து பரிசீலிக்க வேண்டும்.

Tags: