பலஸ்தீனர்களின் உயிருடன் விளையாடும் அமெரிக்கா

காஸாவில் போர் நிறுத்தத்தை கொண்டு வர எகிப்து தலைநகரில் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் பிரதிநிதிகளுக்கும் இடையேயான பேச்சு வார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ரமழான் மாத துவக்கத்தில் ரஃபா எல்லையில் தீவிரமான தாக்குதலை நடத்தப் போவதாக கடந்த மாதம் இஸ்ரேல் இராணுவம் அறிவித்தது. எனினும் அந்த அறிவிப்புக்கு முன்பிருந்தே ரஃபா எல்லையில் இஸ்ரேல் இராணுவம் பயங்கரமான இனப்படுகொலை தாக்குதல் நடத்தி வருகிறது.  

ஆயுதத் தாக்குதல் மட்டுமின்றி உணவுகளை தடை செய்து பலஸ்தீனர்கள் மீது பட்டினிப் போரையும் நடத்தி வருகிறது. இதனால் ஒவ்வொரு நாளும் பலஸ்தீனர்களின் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தச் சூழலில் பலஸ்தீனர்களுக்கு பாதுகாப்பான பகுதி என சொல்லிக் கொள்ள எஞ்சி இருந்த ரஃபாவிலும் இஸ்ரேல் துவங்கியுள்ள தாக்குதலின் காரணமாக பேரழிவு உருவாகி வருகிறது என உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்து மார்ச் 2 அன்று உலகம் முழுவதும் இடதுசாரிகள் தொழிற் சங்கங்கள் ஊர்வலங்களையும் ஆர்ப்பாட்டத்தையும் நடத்தினர்.  இந்தச் சூழலில் போர் நிறுத்தத்தை கொண்டு வர கத்தார், எகிப்து ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையை சுமூகமாக கொண்டு செல்ல பெரும் முயற்சி எடுத்து வருகின்றனர்.  

அமெரிக்காவின் விளையாட்டு  

இஸ்ரேல் நடத்தி வரும் இனப்படுகொலை தாக்குதலுக்கு ஆயுதங்களை வழங்குவது மட்டுமின்றி, தொழில்நுட்ப உதவிகள் உள்ளிட்ட அனைத்தையும் அமெரிக்கா இஸ்ரேலுக்கு கொடுத்து உதவுகிறது. மேலும் தனது கூட்டாளிகளையும் கொடுக்க அழுத்தம் கொடுத்து வருகிறது.  

ஐ.நா பாதுகாப்பு அவையில் போர் நிறுத்த தீர்மானம் கொண்டு வந்த நான்கு முறையும் அமெரிக்கா மட்டும் அதனை தனது இரத்து அதிகாரத்தை பயன்படுத்தி இரத்து செய்து விட்டது. அவ்வாறு செய்ததால் அமெரிக்காவின் இனப்படுகொலை உதவிக்கு எதிராக அமெரிக்க மக்களின் எதிர்ப்பு   தீவிரமடைந்துள்ளது. அந்நாட்டில் பொதுத் தேர்தல் நெருங்கி வருவதால் மக்கள் எதிர்ப்பை திசை திருப்பும் வகையில் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையில் அமெரிக்கா தீவிரமாக ஈடுபடுவது போல காட்டிக் கொள்கிறது.

ஒரு புறம் பலஸ்தீனர்களை இனப்படுகொலை செய்வதற்கு தேவையான உதவிகளை தொடர்ந்து செய்து கொண்டு போர் நிறுத்தம் வந்து விடாமல் தடுத்து வரும் அமெரிக்கா, மறுபுறம் போர் நிறுத்தம் கொண்டு வர பேச்சு வார்த்தை நடத்துவதாக படம் காட்டி பலஸ்தீனர்களின் உயிரோடு விளையாடிக் கொண்டிருக்கிறது. 

Tags: