உலக அரங்கில் தெளிவில்லாத இந்தியாவின் நிலைப்பாடு!

-ச.அருணாசலம்

ருபுறம் உக்ரைனை உசுப்பிவிட்டுக் கொண்டே, மறுபுறம் பொருளாதார தடைகளை ஏற்படுத்தி, ரஷ்யாவை மண்டியிட வைக்க அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பல்வேறாக முயற்சிக்கின்றன. இந்த சிக்கலில் இந்தியா  மதில் மேல் பூனையாக தடுமாறுவது  கேள்விகளை எழுப்பியுள்ளது. போர் நிறுத்தத்திற்கு உண்மையில் செய்ய வேண்டியது என்ன?

கிட்டத்தட்ட இருபதாயிரம் இந்தியர்கள் (இவர்களில் மாணவர்கள் அதிகம்) உக்ரைனில் இருந்து வெளியேற முடியாமல் தவிக்கின்ற சூழல் உள்ளது. இவர்களுக்கு உதவ இந்திய அரசு முன் கூட்டியே எந்தவித முன்னேற்பாடும் செய்யாததால் நிலைமை மோசமடைந்து வருகிறது. இந்த நிலையில் இந்திய அரசின் மெத்தனப்போக்கை பல்வேறு தரப்பினரும் கண்டித்து வருகின்றனர்.

போர்சூழல் பரவுவதை இந்திய அரசினால் கணிக்க இயலவில்லையா? அல்லது உலக நிலைமைகளை புரிந்து கொள்வதில் இன்றைய அரசியல் தலைமையின்  இயலாமையா? என்ற கேள்விகள் எழுகின்றன.

ரஷ்யா படையெடுக்கப் போகிறது என்று கடந்த சில மாதங்களாக கூச்சலிட்ட அமெரிக்க அரசுடன் இந்தியா கலந்துரையாடியதா? அல்லது நட்பு பாராட்டும் ரஷ்யா அரசின் எண்ணங்களை அறிந்து கொள்ள இந்தியா முயற்சித்ததா என்ற கேள்விகள் எழுகின்றன.

சிக்கலை தீர்க்க இந்தியா முயற்சிக்க வேண்டும் என்ற பேராசையெல்லாம் நமக்கில்லை என்றாலும், குறைந்தபட்சம் உக்ரைனில் வாழும் இந்தியர்கள் போர் வெடித்தால் என்னாவார்கள்? , அவர்கள் கதி என்னாகும் என்று யோசித்திருக்க வேண்டாமா? அத்தகைய சூழலை எதிர்கொள்ள திட்டங்களும்,பணிகளும் முன் ஏற்பாடுகளும் செய்யப்பட்டதா?

உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்கள்

இப்படி நடைமுறை விஷயங்களில் கூட முன் யோசனையும் திட்டமிடுதலும் செய்யாத ஒரு அரசியல் தலைமை தன்னை “விஷ்வ குரு” என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் விந்தையை என்னவென்பது?

உலகிற்கு தலைமை தாங்க ஆசை மட்டும் போதாது. உலக நடப்புகளை அறிந்து கொள்வது மட்டுமல்ல உலகப்போக்கின் ஊடே நாம் எதை நோக்கி பயணிக்க வேண்டும் என்ற பார்வையும் வேண்டும்.

அணிசேராக்கொள்கையை அன்று இந்தியா கையிலெடுத்து நடைபயின்ற போதும் அதனை தொடர்ந்து பல்வேறு சந்தர்ப்பங்களில் இந்தியா தனது கருத்தை உறுதியாகவும் தெளிவாகவும் உலக அரங்கில் எடுத்து வைத்தது. அந்த குரலுக்கு மதிப்பும் மரியாதையும் அன்றிருந்தது. செவிமடுக்கவும் நாடுகள் இருந்தன. அதில் ஒன்றுதான் 1999ல் இந்தியா இணை முன்னெடுப்பாளராக இருந்து ஐ. நா பொதுச்சபையில் நேட்டோவின் யூகோஸ்லாவிய ஆக்கிரமிப்பிற்கெதிராக மார்ச்26, 1999ல்  கொண்டுவரப்பட்ட தீர்மானம் ஆகும்.

ஆனால், ரஷ்ய அதிபர் புட்டினை தொடர்பு கொண்டு பேசிய மோடி – போர் நிறுத்தத்தை வலியுறுத்திய மோடி- போருக்கே அடிப்படை காரணமான நேட்டோவின் கிழக்கு நோக்கி விரிவாக்கத்தை முன்னின்று நடத்தும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை தொடர்பு கொண்டு பேசினாரா என்றால் இல்லை!

1990களின் ஆரம்பத்தில் தொடங்கி (வார்சா ஒப்பந்த கலைப்பிற்கு பின்) போலந்து, ஹங்கேரி, செக்கஸ்லோவாக்கியா ஆகிய நாடுகளை நேட்டோவில் இணத்துக் கொண்ட அமெரிக்கா 1999ல் பல்வேறு மொழி இன மக்களை கொண்ட மல்டி கல்சுரல் (Multi cultural) நாடான யுகோஸ்லாவியாவை தாக்கி(தொடர்ந்து 82 நாட்கள் யுகோஸ்லாவிய தலைநகர் பெல்கிரேடின் மீது நேட்டோ விமானத்தாக்குதல் நடத்தியது) சிதறடித்து, சின்னாபின்னமாக்கியது. துண்டாடப்பட்டது. இன்று அந்த நாடே இல்லை ; பல்வேறு நாடுகளாக பிரிக்கப்பட்டது.

இறுதியாக 2008ல் புக்காரெஸ்ட் நேட்டோ உச்சி மாநாட்டில் ஜியார்ஜியா மற்றும் உக்ரைன்  நாடுகளையும் தன்னுடன் இணக்க , ரஷ்யாவை சுற்றி வளைக்க முடிவெடுக்கப்பட்டது. இனி வார்சா ஒப்பந்த நாடுகளில் எஞ்சியிருப்பது ரஷ்யா மட்டுந்தான்!

எதிர்ப்பாளர் யாரும் உலகில் இல்லாத நிலையில் அமெரிக்கா தனது மேலாதிக்கத்தை யூகோஸ்லாவியாற்கு அடுத்து ஆப்கானிஸ்தான் அதற்குப்பின் இராக், ஜியார்ஜியா, பின்னர் லிபியா அதனையடுத்து சிரியா, சோமாலியா என்று பல்வேறு நாடுகளை தாக்கியழித்தது! இத்தனை நாசவேலைகளில் ஈடுபட்ட அமெரிக்கா இறுதியில் உக்ரைனில் 2014ல் மூக்கை நுழைத்தது.

அன்று ஆட்சியில் இருந்த – அமெரிக்க திட்டங்களுக்கு ஒத்து வராத – யானுகோவிச் சி. ஐ. ஏ சதிகாரர்களால் பதவியிறக்கப்பட்டார் . அமெரிக்க கைப்பாவையும், காமெடியனுமான ஜெலன்ஸ்கி பதவியில் அமர்த்தப்பட்டார் . விளைவு,  ரஷ்ய மக்கள் அதிகம் வாழும் டான்பாஸ் பகுதிகளுக்கு தனி அந்தஸ்து மற்றும் மொழியுரிமை வழங்குவதாக வாக்குறுதி அளித்த 2012 மின்ஸ்க் ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்டது!

உரிமைகள் மறுக்கப்பட்டன, அம்மக்கள் வேட்டையாடப்பட்டனர் நாஜி வெறியர்களின் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டனர், ரஷ்யாவிற்கெதிராக நேட்டோ ராணுவ வல்லுநர்களும் போர்தந்திர தளவாட நிபுணர்களும் உக்ரைனில் உள்நுழைந்தனர் . ஹிட்லருடன் கைகோர்த்து கொடுமைகள் புரிந்த ‘பன்டேராஸ்’ இனவெறியர்களின் வழித்தோன்றல்களை ஆதரவளித்து, ஆயுதமளித்து ருஷ்ய மொழி பேசும் மக்களுக்கெதிராக களத்தில் இறக்கிவிடப்பட்டனர். இதையெல்லாம் அமெரிக்கா முன்னின்று நடத்தியது. அன்று இதற்கு முதுகெலும்பாக திகழ்ந்தவர் வேறு யாருமல்ல , அன்றைய அமெரிக்க துணை அதிபராக இருந்த ஜோ பைடன்தான்.

பதற்றத்தையும் , கலவரத்தையும் தூண்டுவதன் மூலம் ரஷ்யாவை பொறிக்குள் சிக்க வைக்க அமைரிக்கா நேட்டோ மூலம் அனைத்து முயற்சிகளும் மேற்கொண்டது. யுரேசியா என்றழைக்கப்படும் ஐரோப்பா மற்றும் ஆசிய கண்டங்களில் தன்னை எதிர்த்து எந்த நாடும் அல்லது அணியும் தலைதாக்குவதை அமெரிக்கா விரும்பவில்லை. ஆப்கன் பின்வாங்குதலுக்குப்பின் ஆட்டங்கண்டாலும் தனது ஆளுமையை நிலைநாட்ட வேண்டும்.

அதற்கு எதிர்ப்பு, ரஷ்யாவிடமிருந்தும், சீனத்திடமிருந்தும் வருவது அமெரிக்காவின் போதாத காலம் என்றே கூற வேண்டும் .

ஆனால் வரும் எதிர்ப்பை ஒன்றன்பின் ஒன்றாக முளையிலே கிள்ளி விட வேண்டும்,  அடுத்து ஐரோப்பா தன்னிச்சையாக இயங்குவதை தடுத்து தன்பிடிக்குள் வைத்துக்கொள்ளவும் அமெரிக்கா விழைகிறது.

முதலில் ரஷ்யாவையும் அதற்குப்பின் சீனாவையும் எதிர்கொண்டு வீழ்த்துவதே அமெரிக்காவின் எண்ணமும் ஏற்பாடும் ! ரஷ்ய அதிபர் புட்டினும் இதை நன்கு உணர்ந்துள்ளார். இன்று நம்மை பாதுகாக்காவிட்டால் நாளை நமக்கும் (ரஷ்யாவிற்கும்) யூகோஸ்லாவியாவிற்கு நேர்ந்த கதியே நேரும் என்று உணர்ந்துள்ளார் புட்டின்.

சீனாவோ அமெரிக்க அச்சுறுத்தலுக்கும் அகங்காரத்திற்கும் பலத்த அடி ரஷ்ய நடவடிக்கைகள் மூலமாக கிடைக்கும் என்று நம்புகிறது. இதற்காக தனது நலன்களை விட்டுக்கொடுத்து (சீன-ரஷ்ய எல்லை பிரச்சினை, தகவல் தொழில் நுட்பம் மற்றும் எரிவாயு ஒப்பந்தம்) ரஷ்ய நலன்களை கருத்தில் கொண்டும் நட்புறவு ஒப்பந்தம் செய்துள்ளது.

இன்று ரஷ்யா போரிடுவது தன்னை பாதுகாத்துக்கொள்வதற்கே அன்றி உக்ரைனை இணைத்துக் கொள்வதற்காக அல்ல. இது ரஷ்யாவின் வாழ்வா சாவா போராட்டம்.

இதை யாரும் குறைத்து மதிப்பிட்டு தப்புக்கணக்கு போட தேவையில்லை. தனது இரட்டை குறிக்கோள்களான டீ மிலிட்டரைசேஷன் (demilitarization), டீ நாஜிபைக்கேஷன் (denazification) ஆகியவற்றை அடையாதவரை போரை ரஷயா நிறுத்தாது.

இந்தப் பிரச்சினையின் அடிநாதம் ரஷ்ய நாட்டின் இருப்பை பற்றிய பிரச்சினை என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் . இதனுடைய தீர்வும் உக்ரைன் நாடு நடு நிலையாக  இருப்பதில் தொடங்கியே நகரமுடியும் அதற்கு அமெரிக்காவும், நேட்டோவும் முன்வர வேண்டும் . பிரச்சினை தொடர்ந்தால், இது அமெரிக்க – ரஷ்யா போராக மாற வாய்ப்புள்ளது. ஏன் அணு ஆயுதப்போராக மாறினாலும் ஆச்சரியமில்லை. எனவே, இந்த பூதாகரமான பிரச்சினை எவ்விதம் முடியும் என்று யாராலும் ஊகிக்க முடியவில்லை.

தீர்வை நோக்கியே நாம் நகர வேண்டும் . அத்தகைய தீர்வு ஆதிக்க மனோபாவத்தை பனிப்போர் மனோபாவத்தை கட்டுப்படுத்துவதன் மூலமாகவே நடக்கும். இதை ‘விஷ்வ குரு’ புரிந்து கொண்டதற்கான எந்த அடையாளமும் இந்திய அரசின் செயல்களில்,அறிவிப்பில் இல்லை. ரஷ்யாவை கண்டனம் செய்யாததால், அமெரிக்காவின் கோபத்திற்கு ஆளான இந்திய அரசு அதை சரிகட்ட ‘குவாட்’ அமைப்பில் அமெரிக்காவிற்கு தாராளத்தை காட்ட முயல்வது ராஜதந்திரமல்ல. அதன் விளைவு ஆசியாவில் மேலும் பல சிக்கல்கள இந்தியாவிற்கு உருவாக்கும்.

பல்வேறு மொழி இன மக்களை உள்ளடக்கிய நாடான இந்தியாவில் அம்மக்களின் மொழி, மதம் மற்றும் கலாச்சார உரிமைகளை பெரும்பான்மைவாத அடிப்படையில் அடித்து நொறுக்கும் இந்துத்துவா கொள்கை ஆட்சி பீடத்தில் இருக்கையில் , அகில உலக அரங்கில் தோன்றும் மொழி, இன, தேசீய பிரச்சினைகளில் சிறுபான்மை மக்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் அதுவே நாட்டிற்கு வலு சேர்க்கும் என்ற உண்மையை இந்த ‘விஷ்வ குரு’கூற அருகதை உள்ளதா? உள்ளத்தில் இல்லாத ஒன்று உதட்டில் வராததில் வியப்பில்லை.

கருத்து தெளிவை விடுங்கள், நாட்டு மாணவர்கள் போர் இடர்ப்பாடுகளில் சிக்குவார்கள் என்றோ அவர்களை எச்சரித்து பத்திரமாக வெளியேற்ற எடுக்க வேண்டிய செயல்கள் மற்றும் திட்டங்கள் ஏதுமற்ற ‘விஷ்வ குரு’ இன்று போர் தொடங்கி பத்து நாளாகியும் மாணவர்களை வெளியேற்ற தடுமாறிக்கொண்டுள்ளது.

ஆனால், மிகுந்த இடர்களுக்கிடையே தாய்நாடு வந்தடைந்த ஒரு சில மாணவர்களுடன் போட்டோ எடுத்துக்கொள்வதும், மாணவர்கள் வெளிநாடு சென்று படிப்பதற்கும் முந்தைய அரசுகள்தான் காரணம் என்று பிதற்றுவதும் தொடர்கிறது. மீடியாவின் பொய்யுரைகளும் அதிகம் வலம் வருகின்றன. இதையெல்லாம் உற்று நோக்கையில் ‘குரு’ இன்னும் கற்றுக்கொள்ள நிறைய உள்ளது என எண்ணத்தோன்றுகிறது.

கடைசியாக வந்த செய்தி : உக்ரைன் ராணுவத்தினர் அனைத்து வெளிநாட்டு மாணவர்களையும் (இந்திய மாணவர்கள் உட்பட) பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர் என்பதுதான். ஆனால் இந்திய மாணவர்களின் வெளியேற்றத்திற்கு ரஷ்யா பிரத்தியேக அக்கறை காட்டி செயல்பட்டு வருகிறது.

2022.03.04

Tags: