இடதுசாரி சக்திகள் செல்ல வேண்டிய தூரம்!

Tariq Ali

இடதுசாரி சிந்தனையாளரும் சர்வதேச அரசியல் அறிஞர்களில் ஒருவருமான எழுத்தாளர், அரசியல் செயற்பாட்டாளர் தாரிக் அலி (Tariq Ali), பிரண்ட்லைன் (FRONTLINE) ஜனவரி 14 இதழுக்கு அளித்துள்ள நேர்காணலில் இன்றைய சர்வதேச அரசியல் நிலைமைகள், புவி அரசியல் நகர்வுகள், ஏகாதிபத்தியத்தின் சூழ்ச்சிகள், அதற்கு எதிரான சோசலிச நாடுகளின் செயல்பாடுகள் உள்ளிட்ட அனைத்தையும் அலசுகிறார். “சோசலிசம் ஒருமுறை தோற்றது; முதலாளித்துவமோ ஒவ்வொரு முறையும் தோற்கிறது” என்று கூறும் தாரிக் அலியின் இந்த மிக விரிவான நேர்காணல் உலக அரசியலை புரிந்து கொள்ள மிகவும் உதவுகிறது. தி கார்டியன் ஏட்டின் மிக நீண்டகால கட்டுரையாளராகவும், 50 ஆண்டுகளுக்கும் மேலாக ‘நியூ லெப்ட் ரெவ்யூ’ (NEW LEFT REVIEW) ஏட்டை நடத்தியும் வருகிறார். சர்வதேச அளவில் பல்வேறு இதழ்களுக்கு பங்களிப்பு செய்து வருகிறார்.

ஆப்கானிஸ்தான் 1919 ஆம் ஆண்டிலேயே பெண்களுக்கு வாக்குரிமை வழங்கிய நாடு என்பதும், அத்தகைய சட்டம் பல மேற்கத்திய நாடுகளுக்கு மிக மிக முந்தையது என்பதையும், பிரிட்டன் உட்பட பல மேற்கத்திய நாடுகளில் அந்த காலத்தில் வாக்குரிமை இல்லை என்பதையும் மக்கள் மறந்து போய்விட்டனர். இத்தகைய மகத்துவம் கொண்ட ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலைக்கு எது இட்டு சென்றது?


தாரிக் அலி: ஆப்கனிஸ்தானின் அமைப்பை புரிந்து கொள்ள வேண்டுமெனில், அது சுயமாக உருவான பூர்வ குடிகளின் கூட்டமைப்பு என்பதை புரிந்து பார்க்க வேண்டும். பல்வேறு பூர்வகுடிகள் ஒன்றிணைந்த உருவான நாடே ஆப்கானிஸ்தான் என்றழைக்கப்படுகிறது. அவர்கள் தங்க ளின் சுயநிர்ணய உரிமையை பறிக்கும் எந்த முயற்சியையும் எதிர்த்து போரிட்டுள்ளனர். ஆப்கன் பழங்குடிகளை அடக்கி ஒடுக்க அவுரங்கசீப் எடுத்த முயற்சிகளுக்கு எதிராக மிகப்பெரிய யுத்தம் நடைபெற்றுள்ளது. அவுரங்கசீப்பின் இராணுவத்திற்கு இந்து, முஸ்லீம் மற்றும் சீக்கிய தளபதிகள் இருந்தனர். சீக்கிய மற்றும் இந்து தளபதிகள் எல்லா காலத்திலும் முகலாய இராணுவத்தில் மிக முக்கிய பங்கு வகித்தனர். முகலாயர்களுக்கு ஆப்கானியர்களிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியது, அதில் நடைபெற்ற யுத்தங்களில் ஒரு யுத்தத்தில் அவர்கள் அவுரங்கசீப்பின் ஒரு படையை தோற்கடித்தனர். பிரிட்டன் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிய போதும், இதே போக்கு நீடித்தது, ஆப்கானிஸ்தானில் பிரிட்டன் 3 யுத்தங்களில் ஈடுபட்டது. அவர்கள் முதல் போரில் தோற்கடிக்கப்பட்டனர். அது பிரிட்டிஸ் சாம்ராஜ்யத்திற்கு அவமானகரமான பெருந்தோல்வி. இரண்டாவது போரில் ஆப்கானியர்கள் பிரிட்டனிடம் அடிவாங்கி தோற்றனர். ஆனால் அவர்கள் மூன்றாவது போரில் பிரிட்டனை சமாளித்து தோற்கடித்தனர். அந்த தோல்விகளுக்கு பழி வாங்க, ஜெனரல் பாலாக் காபூலின் மத்திய காலத்து கடைத்தெருவை அழித்தொழிக்க உத்தரவிட்டான். அந்த கடைத்தெரு வில் கலை நயத்துடன் அழகான கட்டிடங்கள் அமைந்திருந்தன. மக்களை பழிவாங்க, அவர்கள் காதல் கொண்டதை, விரும்பியதை, மிகுந்த மரியாதை வைத்திருந்ததை என அனைத்தையும் பிரிட்டன் அழித்தது. மிகவும் கொடூர இனவாத ஏகாதிபத்தியம் என்ற கொள்கையை பிரிட்டிஷ் அரசு பின்பற்றியது.

நான் ஆப்கனிஸ்தான் பற்றிய எனது புதிய புத்தகத்திற்காக சில கூடுதல் ஆய்வுகளை மேற்கொண்டிருந்தேன். ஒரு மூத்த பிரிட்டிஷ் அரசு சிவில் அதிகாரி, பஞ்சாப் கவர்னருக்கு எழுதிய கடிதத்தில், ஆப்கானியர்களை ‘காட்டுமிராண்டிகள்’ எனக் குறிப்பிட்டு எழுதியுள்ளார். ஆப்கானிஸ்தான் என்ற நாடு மிக அற்புதமான கவிதைகளை கொடுத்த நாடு. குஷால் கட்டக் 17ஆம் நூற்றாண்டில் கவிதைகள் எழுதியுள்ளார். அந்த கவிதைகள் முகலாய சக்கரவர்த்தியை தாக்கியும், ஆப்கானியர்களை உயர்த்திப் பிடித்தும் எழுதப்பட்டவை. காதல் கவிதைகள், அரசியல் கவிதைகள் எழுதப்பட்டுள்ளன. 1917ஆம் ஆண்டு நடைபெற்ற ரஷ்யப் புரட்சியின் தாக்கம் உலகம் முழுவதும் உணரப்பட்டது. போல்ஷிவிக் அரசின் முதல் கையெழுத்துகள் வியக்கவைப்பவை. ஏகாதிபத்தியத்தின் கொடூரங்களால் நசுக்கப்பட்டிருந்த காலனி நாடுகளில் வாழ்ந்த அனைத்து மக்களுக்கும் விடுதலை, குறிப்பாக, ஜார் ஏகாதிபத்திய நுகத்தடிக்கு கீழே அடிமைப்பட்டுக் கிடந்த இஸ்லாமிய நாடுகளுக்கு விடுதலை என அறிவிக்கப்பட்டது. போல்ஷிவிக்குகள் முதன் முதலில் பிரகடனப்படுத்திய சட்டங்கள் அன்றைய ஆப்கானிஸ்தான் ஆட்சியாளர் அமானுல்லாகானை சென்றடைய, அவர் அச்சட்டங்களால் ஈர்க்கப்பட்டார். அந்த காலத்தில் துருக்கி தேசியவாதிகள் துருக்கி காலிபா ஆட்சிக்கு முழுமையான மாற்றாக வரவில்லை. எனினும் தேசியவாதிகள் நவீன துருக்கியை கட்டமைக்கும் பணியினை தொடங்கி யிருந்தனர், அவர்கள் பெண்களுக்கு சம உரிமை கொடுத்திருந்தனர். சோவியத் தலைவர் லெனின் மற்றும் முஸ்தபா கமால் அட்டாடுருக் (நவீன துருக்கியை கட்டமைத்த முதல் குடியரசுத் தலைவர்) ஆகியோரின் தாக்கம், ஆப்கானிஸ்தான் மேல்தட்டு வர்க்கத்திடம் மிக அதிகமாக இருந்தது, அமானுல்லா ஆதரவு கடிதங்களை அனுப்பிக்  கொண்டிருந்தார். ஆப்கனிஸ்தான் தனக்கான அரசியல் சாசனத்தை 1919ஆம் ஆண்டு தயாரித்தது, அந்த அரசியல் சாசனத்தில் பெண்களுக்கு முழு சம உரிமை அளிக்கப் பட்டிருந்தது. இந்த செயல் ஏகாதிபத்திய எதிர்ப்பு செயலாக அவர்களால் பார்க்கப்பட்டது. 

அதன் பிறகு பிரிட்டன் ஆப்கானிஸ்தானில் தலையிட்டது, அமானுல்லா கான் அரசை ஒழித்து கட்டியது. அமானுல்லா கான் மற்றம் ராணி சொரேயா ஆகியோருக்கு எதிராக பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டது. இந்த பிரச்சாரத்தின் முன்னணியில் இருந்தவர்கள் பழங்குடிக் குழுக்களில் உள்ள பிற்போக்காளர்கள். அவர்களுக்கு ஆயுத  உதவியளித்தது, நிதி தேவைகளை கவனித்துக் கொண்டது பிரிட்டானிய சாம்ராஜ்யம். இது ஓரளவிற்கு 1970களில் இறுதி 1980களின் ஆரம்பத்தில் (அமெரிக்காவின்  ஜனாதி பதி)ஜிம்மி கார்ட்டர், அன்றைய யு.எஸ்.எஸ்.ஆர் (சோவியத் சோசலிஸ்ட் குடியரசுக்கு) எதிராக கிளப்பிவிட்ட ஜிகாத் போன்றது. ஆகவே, ஆப்கனிஸ்தான் மிக நீண்ட காலமாக ஏகாதிபத்தியங்களின் தலையீடுகளுக்கு உள்ளாகியுள்ளது. ஒவ்வொரு முறையும் அது ஆக்கிரமிப்பாளர்களை தோற்கடிப்பதில் வெற்றி பெற்றுள்ளது.

மேற்கத்திய அரசுகளோ அல்லது அமெரிக்காவோ இவை எல்லாவற்றிலிருந்தும் பாடம் ஏதும் கற்றிருக்குமா?

தாரிக் அலி: கிடையாது. அவர்கள் எந்த காலத்திலும், தங்களது பின்னடைவுகளிலிருந்தோ, அல்லது அனுபவித்த தோல்விகளிலிருந்தோ எந்த பாடத்தையும் கற்றது கிடையாது. அவர்கள் எப்போது கற்றுக் கொள்வார்கள் எனில், மற்றொரு சம்ராஜ்யம் அவர்களுக்கு எதிரான சவாலாக வரும்போது மட்டும்தான். அமெரிக்கா தற்போது ஒரு பைத்தியக்காரத்தனமான பணியில் இறங்கியுள்ளது, அது சீன அரசை  உள்ளிருந்து கவிழ்க்க முயற்சிகளை மேற்கொள்கிறது. இதற்காக தைவானைத் தேர்வு செய்திருப்பது அவர்களுக்கு மிகவும் சாதகமான ஒன்றல்ல. ஹாங்காங்கில் குழப்பம் ஏற்படுத்தும் முயற்சியும் கிட்டத்தட்ட தோல்வியில் முடிந்துவிட்டது. இப்போது, சீனாவுக்கு எதிராக அமெரிக்காவுக்கு இருக்கிற ஒரே தேர்வு, சீனா வின் ஜின்ஜியாங் மாநிலத்தில் உய்கர் இன மக்களுக்கு ஆயுதமளித்து அவர்களை ஏவிவிடுவதுதான். எனக்கு தெரிவிக்கப்பட்டது என்னவெனில், ஆயிரக்கணக்கான உய்கர் இன ஆண்களுக்கு துருக்கியில் பயிற்சி அளிக்கப்பட்டு அவர்களுக்கு ஆயுதங்களும் கொடுக்கப்படுகிறது. அமெரிக்க சார்பில் துருக்கி அரசு மேற்கொண்டுள்ளது. அவர்களில் சிலரை அந்த பிரந்தியத்தில் உள்ள தனது எதிரிகளுக்கு எதிராக, குறிப்பாக சிரியாவில் துருக்கி ஜனாதிபதி எர்டோகான் பயன்படுத்துகிறார். துருக்கி ஒரு முக்கிய சக்தி. தற்போது அமெரிக்கா அதனை நம்பியிருக்கிறது, ஆனால், சில சமயங்களில் அது தனது நலன்களை பாதுகாத்துக் கொள்ள  அமெரிக்காவையும் எதிர்க்கிறது. 

சீனாவின் ஜின்ஜியாங் மாநிலத்தில் இந்த சக்திகளை பயன்படுத்தினாலும், தான் வெல்ல மாட்டோம் என்பதை அமெரிக்கா அறிந்திருந்தாலும், சீனா இந்த பிரச்சனையில் மூழ்கியிருந்தால் இதர விஷயங்களில் கவனம் செலுத்த முடியாது என்று நினைக்கிறது. ஆனால், இதன் விளைவுகள் அமெரிக்கர்கள் கணிக்க தவறிய அல்லது கணிக்க இயலாத சூழ்நிலைகளுக்கு அந்த நாட்டை தள்ளலாம். இது மிகவும் ஆபத்தான விளையாட்டு.  சீனா செய்யும் அனைத்து காரியங்களையும் எல்லோரும் ஆதரிக்க முடியாது. எனினும், ஜின்ஜியாங் மாநிலத்தில் நடைபெறுவதை ‘இனப்படுகொலை’ என்று வகைப்படுத்துவது தவறு. சமீப காலங்களில், மேற்கத்திய நாடுகள் விரும்பாத எந்த நாடாக இருந்தாலும், அவை இனப்படுகொலையில் ஈடுபடுவதாக மேற்கத்திய நாடுகள் அறிவித்து, அந்த நாடுகளில் இராணுவ தலையீடு செய்து அந்த நாடுகளை ஆக்கிரமிக்கின்றன.

வேறொரு நாட்டில் ஆட்சி மாற்றம் கொண்டுவர அமெரிக்காவின் முயற்சிகளை ஒருவர் எதிர்ந்து வருவதாகக கொண்டாலும், உலகின் பல பகுதிகளிலும் இன்று எதேச்சதிகாரப் போக்கு என்பது யதார்த்தமாக உள்ளது என்பதையும் ஒருவரும் மறுக்க முடியாது. அந்த பகுதிகளில் எவ்வாறு ஜனநாயக மாற்றங்கள் நிகழும்? தற்போதுள்ள உலகின் நிலைமை குறித்து உங்களின் கணிப்பென்ன?

தாரிக் அலி: எனது கருத்து, எந்த நாட்டில் பிரச்சனை உள்ளதோ, அந்த நாட்டு மக்களே உண்மையான மாற்றங்களைக் கொண்டுவர முடியும். அது வெளிநாட்டு சக்திகளால் நடத்தப்பட்டால் எப்போதுமே தோல்வியடைகிறது. அது ஒரு வெளிப்படையான பொது அறிவு. இராக்கில் யுத்தத்திற்குப் பிறகு சுதந்திரமும், ஜனநாயகமும் தழைக்கிறதா? இல்லை. சுமார் 15 லட்சம் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். சிரியாவில் அமெரிக்காவின் தலையீட்டால், சுதந்திரமும் ஜனநாயகமும் வந்து விட்டதா? இல்லை எக்காலத்திலும் வராது. லிபியாவில் மும்மார் கடாபியை தூக்கியெறிந்ததின் விளைவாக ஜனநாயகம் அந்த நாட்டில் செழித்து வளர்ந்துள்ளதா? இல்லை. அவர்கள் அலபாமாவில் (அமெரிக்கா) பல பத்தாண்டுகளாக லாபம் சம்பாதித்துக் கொண்டிருந்த ஒரு பெரிய வர்த்தகரை இறக்குமதி செய்துள்ளார்கள். அவரை அவர்கள் பிரதம மந்திரியாக்கியுள்ளனர். அவர் கொஞ்ச நாள்கூட தாக்குபிடிக்கவில்லை. அதில் உண்மையென்னவெனில் அவர் மிகக் குறைந்த நாட்களே பிரதமராக இருந்ததால் மிகச் சில லிபியர்கள் மட்டுமே அவரின் பெயரைக்கூட அறிந்துள்ளனர். இதற்கு மாறாக அமெரிக்கா, லிபியர்களுக்கு அளித்துள்ளது என்னவெனில், 3 ஜிகாதி குழுக்கள் ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுக் கொண்டும், ஒருவரை ஒருவர் கொன்று கொண்டும் இருக்கிற அமெரிக்காவின் கொள்கை அரேபிய நாடுகளை துண்டு துண்டாக சிதைப்பது. ஆகவே அரபு உலகத்தின் மீது அவர்களால் ஏற்பட்ட பேரழிவுகள் முதலாம் உலகப் போருக்குப் பின் மிக மிக அதிகமானது.

ஊழல் மலிந்த, முதலாளித்துவ மேல்தட்டு ஆட்சிகளை அதிகாரத்திலிருந்து அகற்ற ஒரே உண்மை வழி, கீழேயிருந்து இயக்கங்கள் மூலம் மக்களைத் திரட்டுவது தான். அதுவே தென் அமெரிக்காவில் நடைபெறுகிறது. ஆனால், அவர்கள் தொடர்ச்சியாக அமெரிக்காவின் சவாலை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. ஏகாதிபத்தியம் இடது முற்போக்கு சக்திகளை நசுக்கிட மேற்கொண்ட முயற்சிகள் முழுமையாக செயல்படவில்லை. சமீபத்தில் பெரு நாட்டில் ஒரு ஆசிரியர் வெற்றி பெற்றிருப்பது அதன் அறிகுறியே! 2020ல் பொலிவியாவில் ஈவோ மொரேல்ஸ் அரசை இராணுவ பின்புலத்துடன் கவிழ்த்த அமெரிக்க ஆதரவு சக்திகள் தோற்கடிக்கப்பட்டிருப்பது ஒரு சிறந்த உதாரணம். பொலிவியர்கள் தெளிவாக தெரிவித்துள்ளது என்னவெனில், எங்களின் தலைவர் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டிருக்கலாம், நாடு கடத்தப்பட்டிருக்கலாம், ஆனால் அவர் இல்லாமலேயே நாங்கள் வெற்றி பெறு வோம், ஏனெனில் நாங்கள் அதற்கான பலமான அமைப்புகளை உருவாக்கியுள்ளோம் என்பதுதான்.

ஆசியாவில் சீனா உள்ளது, அது குறித்து நான் ஏற்கனவே விவாதித்துள்ளேன். தெற்காசியாவில், இந்தியா உள்ளது, அது சட்டரீதியாக ஜனநாயகநாடு. இந்தியாவில் தற்போதுள்ள அரசு, தனது தத்துவங்களைப் பயன்படுத்தி, ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி காந்தி-நேரு காலத்திய – ஒருமித்த கருத்தினை உருவாக்கி ஆட்சி நடத்துவது. என்பதிலிருந்து முற்றாக முறித்துக் கொண்டுள்ளது. மோடி தனக்கான ஒரு ஒருமித்த கருத்து எப்படி உருவாக்கியுள்ளார் என்றால், அவரது கட்சியை எதிர்ப்பவர்களையும் அவருடைய மடியில் விழுமாறு செய்கிறார். இந்த கட்சிகள் வெவ்வேறு கட்சி அமைப்புகளை கொண்டிருக்கலாம், ஆனால், அவர்கள் பேசுவது ஒரே மாதிரி உள்ளது, அவர்கள் ஒரே மாதிரியான கருத்துகளையே ஊக்குவிக்கின்றனர். என்னுடைய கருத்துபடி, இந்தியாவின் இரண்டு முக்கிய எதிர்கட்சிகளில் காங்கிரஸ் அதிகாரத்திற்கான ஒரு யுத்தத்தை நடத்திக் கொண்டிருக்கிறது. மறுபுறத்தில், இந்தியாவின் இடதுசாரிகள் எல்லா காலத்தை விடவும் அதன் வரலாற்றிலேயே மிக மிக பலவீனமாக இருக்கிறார்கள். சோவியத் யூனியன் தகர்ந்த போது, இத்தாலி மற்றும் பிரான்ஸ் கம்யூனிஸ்ட் கட்சிகள் காணாமல் போயின. இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) நிலைமை அப்படியல்ல. அது தனது தளங்களை கேரளா, திரிபுரா மே.வங்கம் மற்றும் நாட்டின் இதர தனது தளங்களில் தக்க வைத்திருந்தது. பல அறிவு ஜீவிகள் அப்போதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் ஏதாவது ஒரு வகையில் உறவு கொண்டிருந்தனர். ஆனால், வங்கத்தில் ஏற்பட்ட பெரும் தோல்வி அந்த கட்சி சரிவை நோக்கியுள்ளது என்பதைக் காட்டுகிறது. யாரும் தரவுகளிடமிருந்து தப்ப முடியாது. கேள்வி இதுதான், மக்களுக்கு தேவைப்படும் இயக்கங்களில் மிக அதிக மக்களைத் திரட்டி முன்னேற முடியுமா என்பதே. அதை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும். 

கொரிய தீபகற்பத்தில், பெரிய மாற்றம் எதுவும் நிகழ்ந்து விடப் போவதில்லை. ஜப்பான் இன்னமும் அமெரிக்காவால் ஆதிக்கம் செலுத்தப்படுகிறது, கட்டுப்படுத்தப்படுகிறது. அது தனக்கான வெளியுறவுக் கொள்கையைக் கூட உறுதியாக கொள்ள முடியவில்லை. உள்நாட்டில், அதன் அரசியல் மேல்தட்டு வர்க்கத்தினரால் பல்வேறு கட்சிகளின் உயர் பதவிகளில் ஒட்டி கொண்டிருக்கின்றனர். சோசலிஸ்டுகளும், கம்யூனிஸ்ட்களும் ஜப்பானில் கிட்ட தட்ட இல்லை என்பதே நிலைமை.  தென் அமெரிக்காவைப் பொறுத்தவரை, வெகுஜன இயக்கங்களுக்கும் இடது சமூக ஜனநாயக கட்சிகளுக்கும் பிணைப்பு ஏற்பட்டுள்ளது. அது மூலதனத்திற்கு பெரிய அச்சுறுத்தலாக இல்லை, மாறாக, மூலதனத்தை கட்டுபடுத்துகிறது. இந்த பகுதியில் மூலதனத்தின் ஆதிக்கம் முழு மையாக உள்ளது. இத்தகைய ஆதிக்கத்தின் விளைவாக, எதிர்க்கட்சிகள் அனைத்தும் முதலாளித்துவம் உருவாக்கிய கூட்டிற்குள் கூட்டுப் புழுவாக அடைந்து கிடக்கிறது. மக்களின் உண்மையான தேவைகள் கவனிக்கப்படு வதில்லை. அதன் பிறகு இரண்டு முக்கிய நிகழ்வுகள் நடை பெறுகிறது. முதலில் 2008 பொருளாதார சரிவு, வால்ஸ்ட்ரீட் சரிவு. அது முதலாளித்துவவாதிகளுக்கு இரண்டாம் உலகப் போருக்கு பிந்தைய காலத்தைப் போல முதலாளித்துவத்தில் மிகச் சிறிய மாற்றங்களை உருவாக்க வாய்ப்பு கொடுத்தது, அவற்றில் சீர்திருத்தங்களும் அடங்கும். முரண்பாடாக, (கொரோனா) பெருந்தொற்று, நவீன தாராளமயத்திலிருந்து அரசு தலையீடு என்கிற சிறிய நிலை மாற்றத்திற்கு இட்டு சென்றுள்ளது. எனினும் இந்த நிலை தொடர்ந்தது மக்களிடம் நம்பிக்கையை அளிக்கவில்லை.

2020 கொரோனா பெருந்தொற்றை சுற்றி ஏற்பட்ட அரசியல், பொருளாதார மற்றும் சமூக மாற்றங்களை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

தாரிக் அலி:  “மற்றொரு உலகிற்கு வாய்ப்புள்ளது” என்பது எப்போதுமே உண்மை. வலதுசாரிகளே தற்போது ‘மற்றொரு உலகை’ உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இடதுசாரிகள் சற்றேறக்குறைய பலவீனமாக உள்ளனர்.

“நாங்களே 99%” என்ற கோஷம் இடதுசாரி அனுதாபிகள் நிறைந்த விளம்பர ஏஜென்சியால் எழுப்பப்பட்ட ஒரு கோஷம். 99 சதவீதத்தினர் உருவாக்கும் வளங்களை வெறும் 1 சதவீதத்தினர் முழுமையாக கட்டுபடுத்துகின்றனர் என்ற வாதம் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இல்லை. ஏனெனில் அந்த 99 சதவீதத்தில் நூற்றுக் கணக்கான மற்றும் ஆயிரக்கணக்கானவர்களின் உண்மை ஊதியம் ஏழைகள் மற்றும் பட்டினியாக கிடப்பவர்களிடமிருந்து வேறுபட்டது. ஆகவே அந்த கோஷத்தை ஏற்க இயலாது. அதைத் தவிர இந்த 99 சதவீதத்தில் சமூக இடைவெளி வேறு உள்ளது. என்னைப் பொறுத்தவரை, ஆம்  உண்மைதான், நீங்கள் மகா கோடீஸ்வர பணக்காரர்களுக்கு எதிராக உள்ளீர்கள். அதுமட்டுமே 50 சதவீத மக்கள் தொகையைவிட மிக மிக உச்சத்தில்  ஊதியம் வாங்குபவர்களை கண்டுகொள்ளாமல் விடக்கூடியதாக்கி விடாது. ஆகவேதான், இந்த கோஷம் எவ்வுளவு கவர்ச்சிகரமாக இருப்பினும், எந்த காலத்திலும் போதுமானதல்ல. உலகம் எப்படி அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் இயங்குகிறது என்பது முக்கியமாக புரிந்து கொள்ள வேண்டும்.  சமூக கட்டுமானங்களை எப்படி மாற்றப் போகிறோம் என்பதே கேள்வி. பெருந்திரள் போராட்டம் பங்கெடுப்பின் மூலம் சமூக கட்டமைப்பை மாற்றுவதும், மேலும், புதிய அரசியல் அமைப்பு சட்டம், அந்த புதிய அரசியல் அமைப்பின் அடிப்படையில் புதிய நாடாளுமன்றம் ஆகிய ஜனநாயக அமைப்புகளை உருவாக்குவது ஆகியன குறித்தது. தென் அமெரிக்கர்கள் கொடுத்துள்ள மாதிரிகள் மோசமானதல்ல. சிலியில் பெருந்திரள் இயக்கம் தற்போது அந்த நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தையே மாற்றியுள்ளது. ஆகவே, இப்படிப்பட்ட பல்வேறு உத்திகளை ஒன்றிணைத்தால்தான் இடதுசாரிகள் மீண்டும் முன்னோக்கி நகர முடியும். பிழைத்திருத்தலுக்காக “போல  செய்தல்” இல்லை இது.  நீங்கள் தற்போதுள்ள பலவீன மான நிலையிலிருந்து மீள விரும்பினால் புதுமையான வழிகளில் சிந்தித்து புதிய வழிகளை கண்டுபிடிக்க வேண்டும்.

2008 நிதி நெருக்கடி ஏற்படுத்திய வெற்றிடம்  அதிதீவிர வலதுசாரி (அரசியல்) வளர்ச்சிக்கு வழிகோலியதாக நீங்கள் முன்பொரு சமயம் தெரிவித்திருந்தீர்கள். ஏன் தாரளவாதிகள் அல்லது இடது கொள்கைகள் அந்த இடத்தை நிரப்புவதில் தோல்வியடைந்தன?

தாரிக் அலி: முதலில், ஒரு மிகவும் சுவாரஸ்யமான தொலைகாட்சி விவாத நிகழ்வு. அமெரிக்காவில் 2008 நிதி நெருக்கடியின் போது நான் அந்த நிகழ்வில் கலந்து கொண்டது, ஜனநாயக கட்சியைச் சேர்ந்த, ராபர்ட் ரீக் ஜனா திபதி பில் கிளிண்டன் அமைச்சரவையில் பணியாற்றியவர். அவருக்கு முன்பாக ஒரு கேள்வி வைக்கப்படுகிறது: பெரு மந்த நிலைக்கு பின்பு பிராங்க்ளின் ரூஸ்வெல்ட் அமெரிக்க குடியரசுத் தலைவராக இருந்த போது, அரசு தலையீடு மிக வும் வலுவாக செய்யப்பட்டு, வேலைவாய்ப்புகள் உரு வாக்கப்பட்டது, வாழ்நிலைமை மேம்பட உதவிகள் மேற்கொள்ளப்பட்டன, மக்களின் வாழ்க்கை அரசால் கவனிக்கப்பட்டது, ஆனால், 2008ல் அத்தகைய நடவடிக்கைகள் எதுவும் ஏன் மேற்கொள்ளப்படவில்லை என கேள்வி எழுப்பப்பட்டது. இந்த கேள்விக்கு ரீக் பதிலளிக்கும் போது, “பெரு மந்த நிலையின் போது சோவியத் யூனியன் இருந்தது. நாம் அது குறித்து சிந்திக்க வேண்டும்.  நாம் எதையும் செய்ய வில்லையென்றால், நமது தொழிலாளர்கள் இடது பக்கம் திரும்பிவிடுவர்” என்றார். 

எனது சிந்தனையெல்லாம், இந்த வார்த்தைகள் உயர்த்திப் பிடிக்கும் அம்சம் உண்மை என்பதுதான். இரண்டாவது 2008 நிதி நெருக்கடிக்கு காரணமாக பெரும் பாலான வங்கியாளர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை, தண்டிக்கப்படவும் இல்லை. அதிபர் பாரக் ஒபாமா, வால்தெருவுடன் நிற்பது மற்றும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்ற உறுதியான முடிவெடுத்திருந்தார். கீழே நடந்த இயக்கங்கள், (வால் தெருவை) ஆக்கிரமிப்போம் போன்றவைகளின் நோக்கங்களும் அணுகு முறையும் மிகவும் சிறியதாக இருந்த து. அதே சமயம் மத்திய கிழக்கில் (மேற்காசியா) மிக பிரம்மாண்டமாக நடை பெற்ற ஆக்கிரமிப்பு எதிர்ப்பு போராட்டங்கள் மிக அதிக எண்ணிக்கையில் மக்கள் பங்கெடுத்து நடைபெற்றது, அங்கோ கோரிக்கை ஜனநாயகம் வேண்டும் என்பதைத் தவிர வேறெதுவும் கிடையாது. ஆகவே, அரசியல் மாற்று கொள்கைகள், ஏன் இடது-ஜனநாயக மாற்றுகள் கூட, அந்த குறிப்பிட்ட சமயத்தில் இல்லாமல் இருப்பது வெற்றிடத்தை உருவாக்குகிறது. ஒரு புதிய மாற்றை உருவாக்க அல்லது ஏற்கனவே உள்ளதில் புதிய மாற்றை உருவாக்கம் செய்ய அமெரிக்காவின் பெர்னி சாண்டர்ஸ் முயல்கிறார், இங்கிலாந்தில் ஜெர்மி கோர்பன் சமீபத்தில் முயன்றார். எப்படியாகினும், இவர்கள் முயல்கிறார்கள், ஆனால் கடக்க வேண்டிய தூரம் மிக நீண்டதாக உள்ளது. 

மூன்றாவதாக, இந்தியாவுக்கு வருவோம். இங்கு  சிபிஐ(எம்) கட்சிக்கு நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் உள்ளனர். அவர்கள் நாடாளுமன்றவாதத்தில் மிக கடிமானக ஒட்டிக்  கொண்டிருக்காமல், கீழேயிருந்து மக்களை திரட்ட வேண்டும். அது ஒரு வேளை கடினமானதாக இருக்கலாம். மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி வெற்றி பெற்றதற்கு காரணம், காலம் காலமாக சிபிஐ(எம்) கட்சியின் ஆதரவு தளம் அந்த கட்சியை கைவிட்டது. அதற்கு ஒரு முக்கிய காரணம் வங்கத்தின் அக்கட்சிக்கு தளங்கள் உண்டு, அதற்கென ஆதரவாளர்கள் உண்டு. ஆனால் எந்த உணர்ச்சி பிழம்பும் இல்லாமல் போய்விட்டது. அவர்களும் பிறரைப் போல்தான் என்ற தோற்றம் ஏற்பட்டது. ஆகவேதான் அவர்கள் தோற்றனர். எனக்கு சிபிஐ(எம்) கட்சியில் நிறைய நண்பர்கள் உண்டு, அவர்களை நான் மிகவும் மதிக்கிறேன். ஆனால் நான் நம்பிக்கை கொள்வதெல்லாம் அவர்கள் முறையாக தங்கள் தோல்வியை பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும். எங்கு தவறு நிகழ்ந்தது என்பது பற்றி ஒரு சிறப்பான மற்றும் நேர்மையான கூராய்வு – பகுப்பாய்வு மிகவும் தேவையாக உள்ளது. ஆனால் அதற்கு இப்போதே மிகவும் காலம் கடந்து விட்டது. ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது, இந்த முதலாளித்துவக் கட்டமைப்பிற்கும் எதேச்சதிகாரத்திற்கும் 2008க்கு பிறகு எந்த சோதனையும் வரவில்லை.

Tags: