இந்தியாவின் சமத்துவமின்மையை அதிகரிக்கும் தனியார்மயம்: தீர்வு என்ன?

-ஸ்ரீஷ்டி ஆனந்த்
நிதி தொடர்பான ஆராய்ச்சி நிபுணர், ஒக்ஸ்பாம் இந்தியா

2022 ‘சமத்துவமின்மை கொல்லும்’ (Inequality kills) என்ற ஒக்ஸ்பாம் அறிக்கை வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையில் இந்தியாவில் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையேயான இடைவெளி மிக அதிக அளவில் வளர்ந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கால் இந்தியா பாதிக்கப்பட்டிருந்த 2020 ஆம் ஆண்டில், உலகிலேயே அதிக பணக்காரர்களைக் கொண்ட மூன்றாவது நாடாக இந்தியா மாறியது.

இந்தியாவின் ஒட்டுமொத்த செல்வத்தில் 45 விழுக்காட்டை 10 விழுக்காட்டு மக்கள் கொண்டுள்ளனர் என்று ஒக்ஸ்பாம் அறிக்கை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் 100 கோடிக்கும் அதிகமாகச் சொத்து சேர்த்துள்ள பணக்காரர்களின் எண்ணிக்கை 102 இல் இருந்து 142 ஆக அதிகரித்துள்ளது. கடைநிலையில் உள்ள 50 விழுக்காடு இந்திய மக்களிடம் நாட்டின் ஒட்டுமொத்த செல்வத்தில் வெறும் 6 விழுக்காடு மட்டும் உள்ளது என்று ஒக்ஸ்பாம் அறிக்கை தெரிவித்துள்ளது.

அதே சமயம் இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 2017-18 இல் 4.7 விழுக்காடு ஆகவும், 2018-19 இல் 6.3 விழுக்காடு ஆகவும் 2020 டிசம்பரில் 9.1 விழுக்காடாகவும், 2021 டிசம்பரில் 7.9 விழுக்காடாகவும் இருந்தது.

தனியார்மய வளர்ச்சியின் கட்டுக்கதை :

இந்தப் பின்னணியில் ஒரு சிலரின் செல்வம் ஏன் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது? இதற்குத் தனியார்மயமும் ஒரு காரணம். தனியார்மயமாக்கலின் காரணமாக அரசு வழங்கும் கல்வி மற்றும் சுகாதாரம் உட்பட மக்களுக்குத் தேவையான அடிப்படைச் சேவைகள் அனைத்தும் மோசமடைந்து வருகிறது.

ஒன்றிய அரசின் ஆத்மநிர்பார் பாரத் தொகுப்பு மற்றும் நேசனல் மானிடைசேஷன் பைப்லைன் எனப்படும் தேசிய பணமாக்கல் திட்டம் போன்ற திட்டங்கள்மூலமாக பொதுத்துறை நிறுவனங்களின் அதிகளவிலான பங்குகளைத் தனியார் நிறுவனங்களுக்கு விற்பதன் மூலம் அரசின் உரிமையும் கட்டுப்பாடும் குறைகிறது.

குறைந்தளவிலான பங்கே ஒன்றிய அரசிடம் உள்ளதால், அது அந்த பொதுத்துறை நிறுவனங்களின் முடிவெடுக்கும் பாத்திரத்தையும், விலைகளை நிர்ணயம் செய்வதிலும், பெருமளவிலான தொழிலாளர்களை பணியமர்த்துவதிலும் தனது அதிகாரத்தை இழக்கிறது.

தனியார்மயம் அதிகமான செயல்திறன், தரமான சேவையை வழங்குவதால் அரசின் பொது செலவினங்கள் குறைந்து அதன் நிதி ஆதாரங்கள் மேம்படும் என்று பொதுவாக நம்பப்படுகிறது. ஆனால் இந்த அனுமானம் 2 விதங்களில் தவறானது. பொதுத்துறை நிறுவனங்களைப் போலவே தனியார் நிறுவனங்களும் தவறாகப் பயன்படுத்தப்படலாம். சமூக சேவைகளை வியாபார பண்டங்களாக மாற்றவும் வாய்ப்புள்ளது. இதன் மூலம் ஏழை எளிய மக்களுக்கு இத்தகைய சேவைகள் கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது.

உதாரணமாக, கொரோனா தொற்றுநோயின்போது உலகளவில் முதல் பத்து பெரும் பணக்காரர்கள் தங்கள் செல்வத்தை இரட்டிப்பாக்கியபோது, ​​உலகிலுள்ள 99% மக்களின் வருமானம் குறைந்தது. 55.2 கோடி இந்திய மக்களிடம் இருக்கும் செல்வத்திற்கு இணையாக 98 பணக்கார இந்தியர்கள் செல்வம் வைத்துள்ளனர். கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கு உள்ள இடைவெளி அதிகரித்துள்ளது. 2012 இல் கீழ்நிலையில் உள்ள 50 விழுக்காடு மக்கள் 8 விழுக்காடு செல்வத்தை வைத்திருந்த நிலையில் 2021 இல் வெறும் 6 விழுக்காடு செல்வத்தை மட்டுமே வைத்துள்ளனர்.

தனியார் மருத்துவத் துறை :

இந்தியாவில் உள்ள மக்கள் அவர்களது வருமானத்தில் அதிகளவிலான பணத்தைச் சுகாதார தேவைகளுக்காகச் செலவு செய்கிறார்கள். இந்தியக் குடும்பங்களின் மிகப்பெரிய நிதிச்சுமை மருத்துவச் செலவுகள் தான்.

மிக குறைந்த அளவு பொதுச் சுகாதார தேவைகளுக்குச் செலவு செய்யப்படும் இந்திய நாட்டில் உள்ள மக்கள் தான் அதிகளவிலான பணத்தைச் சுகாதார தேவைகளுக்குச் செலவு செய்கிறார்கள். இந்திய மக்கள் சுகாதார செலவில் 43% மருந்தகங்களுக்கும், 28% தனியார் மருத்துவமனைகளுக்கும், 7.42% அரசு மருத்துவமனைகளுக்கும் செலவு செய்கிறார்கள். தனியார்த் துறை ஆதிக்கம் செலுத்தும் மருத்துவத் துறையில், நகர்ப்புறங்களில் 74% பேர் வெளி நோயாளிகளாகவும், 65% தனியார் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்படுகிறார்கள்.

இந்நிலையில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலையில் இந்தியாவின் ஒட்டுமொத்த பொதுச் சுகாதார கட்டமைப்பும் செயலிழந்தது. இந்நிலையில் தனியார் மருத்துவமனைகளை நாடிச் சென்றவர்களுக்குச் சிகிச்சை அளிக்காதது முதல் பணமோசடி வரை நிறையப் பிரச்சனைகளை எதிர்கொண்டனர். மேலும் தனியார் சுகாதார சந்தையானது லாபத்திற்காகத் தேவையில்லாத மருந்துகளை அதிகளவில் விற்பனை செய்யும் அபாயத்தையும் கொண்டுள்ளது.

இதன் விளைவாக மாநில அரசுகள் தலையிட்டுத் தனியார் மருத்துவமனைகளின் விலை நிர்ணயம், படுக்கைகள் ஒதுக்கீடு ஆகியவற்றைச் செயல்படுத்தியது. கொரோனா நோய்த்தொற்றால் பலருக்கு மருத்துவ தேவை ஏற்பட்டது. ஆனால் மருத்துவ காப்பீடு இல்லாததாலும், செலவு செய்யப் பணம் இல்லாததாலும் பலரால் மருத்துவமனைகளை அணுக முடியால் போனது.

கல்வி :

இந்தியாவில் அரசு மற்றும் தனியார்ப் பள்ளிகள் உள்ளன. மக்களின் வருவாய் அதிகரிக்கும்பொழுது தனியார்ப் பள்ளிகளின் எண்ணிக்கையும் அதன் மாணவர் சேர்க்கையும் அதிகரித்தது. ஆனால் கொரோனா நோய்த்தொற்றின் பொழுது தனியார்ப் பள்ளிகள் தன்னிச்சையாக அதிகளவில் கல்விக் கட்டணத்தை உயர்த்தியது. இந்தியாவில் உயர்கல்வி பயிலும் மாணவர்களில் 68% பேர் தனியார் கல்வி நிறுவனங்களிலும், 32% பேர் அரசுக் கல்வி நிறுவனங்களிலும் பயில்கின்றனர்.

தேசிய கல்விக் கொள்கை 2020 என்பது கல்வித்துறையில் தனியார்மயத்தைப் பெருமளவில் ஊக்குவிக்கிறது. இந்தியாவில் உள்ள 35% மாணவர்கள் கல்விக் கட்டணம் செலுத்தாததால் தங்களது கல்வியைத் தொடர முடியாமல் உள்ளனர். 57% பெற்றோர்கள் கல்விக் கட்டணங்களுடன் கூடுதல் கட்டணங்களைச் செலுத்தியுள்ளனர் என்று தரவுகள் கூறுகிறது.

தனியார்ப் பள்ளிகள் பொதுவாகவே நல்ல பொது உள்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்படுவதால், ஒடுக்கப்பட்ட சமூகங்களான பட்டியல் மற்றும் பழங்குடியினர் மாணவர்களை விலக்குகிறது. சாதி, மதம், பாலினம் ஆகிய வேறுபாடுகளுடன் இருக்கும் நமது சமூகத்தில் கல்வியைச் சந்தைப்படுத்தும் பொழுதும் அதே வேறுபாடுகள் வேறு வழியின்றி நிலவுகின்றன.

பொதுவான பொருட்களை தனியார்மயமாக்குதல் :

தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பு திட்டங்களுக்கு இந்திய பட்ஜெட்டில் 0.6% மட்டுமே ஒதுக்கப்படுகிறது. இது ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களையும் உள்ளடக்கியது. கொரோனா தொற்றுநோயினால் இதுவரை இல்லாத அளவிற்கு அமைப்புசாரா தொழிலாளர்களையும், புலம்பெயர் தொழிலாளர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். அந்த சமயத்தில் தான் அத்தகைய தொழிலாளர்களுக்கு எவ்வித சமூகப் பாதுகாப்பு திட்டங்களும் இல்லை என்பது வெளிப்படையாக அனைவருக்கும் தெரிய வந்தது.

கல்வி, சுகாதாரம், சமூகப் பாதுகாப்பு, உணவு மற்றும் குடிநீர் போன்ற அனைத்து விஷயங்களையும் தனியார்மயமாக்குவதன் மூலம் இந்தியாவில் உள்ள பெரும்பாலான மக்களின் நெருக்கடிகள் அதிகமாகின்றன.

கொரோனா தொற்றுநோயின் பொழுது நிதி உதவியும், ஆக்ஸிஜன், மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்கள்பற்றிய தகவல்களும் பகிர்ந்து கொள்ளப்பட்டது. இது மருத்துவ கட்டமைப்பின் சிதைவின் விளைவாக உருவானது. அந்த சமயத்தின் நாட்டின் பெரும்பான்மையோர் மருத்துவச் செலவுகளுக்காகக் கடன் வாங்கினர், தங்களது அன்புக்குரியவர்களை இழந்தனர். தங்களது வாழ்வாதாரத்தை இழந்து வறுமையின் விளைவால்,கொரோனா தொற்றுநோய்க்கு முன்பிருந்ததை விட குறைவான உணவை உண்டனர்.

அரசு நிறுவனங்களின் தனியார்மயமாக்கலை அதிகரிப்பதன் மூலம் பொது நிதியுதவியை அதிகரிக்க முடியாது. ஆனால் சமமான வளர்ச்சியைப் பெற வேறுசில வழிகள் உள்ளன.

1. அரசின் செலவினத்தை அதிகரிக்கவும்

தனியார்மயத்தினால் அரசு அதன் உரிமையையும் கட்டுப்பாட்டையும் இழக்கிறது. தனியார் நிறுவனங்களுக்குப் பொதுநலன் பற்றிய எந்த அக்கறையும் இல்லை. சுகாதாரத் துறைக்கு இந்திய அரசு தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி)  இருந்து செலவு செய்யும் விகிதத்தை 1 சதவீதத்திலிருந்து 2.3 முதல் 3 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என்று பொருளாதார ஆய்வு 2020-21 கூறுகிறது. அவ்வாறு இந்திய அரசு செய்தால், பொதுமக்களின் மருத்துவச் செலவு 65 சதவீதத்திலிருந்து 30 சதவீதமாகக் குறையும்.

கல்வி, சுகாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்பு போன்ற அடிப்படை உரிமைகள் மற்றும் தற்போதைய ஏற்றத்தாழ்வுகளைக் கருத்தில் கொண்டு, ஒன்றிய அரசு தனது கட்டுப்பாட்டை வலுப்படுத்த வேண்டும். சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளைக் களைவதற்குத் தனியார் நிறுவனங்களுடன் அரசு கைக்கொள்ளும் தனது உறவை மறுசீரமைக்க வேண்டும். தனியார் நிறுவனங்கள் லாபத்திற்காக மட்டும் சேவைகள் வழங்காமல் இருப்பதற்கு அரசு சில நிபந்தனைகள் விதிக்க வேண்டும்.

2. சேவை வழங்கலில் தனியார்-பொதுத்துறை நிறுவனங்களின் சமநிலையான பங்கு

இந்தியாவில் அதிகளவிலான மக்களுக்குக் கல்வியறிவை வழங்க அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்கள் தொடர வேண்டும் என்ற வாதம் வைக்கப்படுகிறது. கல்வியற்றவை அடைவதோடு வேலைவாய்ப்பை உருவாக்கவும், தனியார் நிறுவனங்கள் நிச்சயம் உதவும். ஆகவே தனியார் கல்வி, சுகாதாரத் துறை ஆகியவை அரசுடன் இணைந்து செயல்படலாம்.

3. முற்போக்கான வரிவிதிப்பு

இந்தியாவில் அதிகரித்து வரும் பணக்காரர்களுக்குப் படிப்படியாக அதிகளவில் வரி விதிக்க வேண்டும். இந்த வகையில் கிடைக்கும் வரிகள்மூலம் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு ஒரு அடிப்படை வாழ்க்கைத் தரத்தை அரசால் உறுதி செய்ய முடியும். இந்த வகையில் இருப்பிடம், உணவு, சுகாதாரம், கல்வி மற்றும் போக்குவரத்து போன்ற அடிப்படைத் தேவைகளை அரசால் நிறைவேற்ற முடியும்.

4. ஏற்கனவே உள்ள திட்டங்களை மதிப்பாய்வு செய்து புதுப்பிக்க வேண்டும் :

ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டங்களை மறுஆய்வு செய்து புதுப்பித்து வலுப்படுத்த வேண்டும். மருத்துவ தேவைகளுக்காக இந்திய மக்கள் அதிகளவில் செலவு செய்து வரும் வேளையில் தான், உலகிலேயே மிகப்பெரிய மருத்துவ காப்பீட்டுத் திட்டமான பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா யோஜனா திட்டமும் இந்தியாவில் உள்ளது. இது கிட்டத்தட்ட இந்திய மக்கள்தொகையில் 40 சதவீத மக்களுக்குப் பயன்படும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இந்த திட்டத்தை இன்னமும் சாதாரண மக்களால் அணுகமுடியவில்லை.

இந்திய மக்களின் வாழ்வாதார ஊதியங்களை அதிகரிப்பது பற்றியும், நாம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

5. சமத்துவமின்மையை அளவிட வேண்டும் :

இந்திய மக்களின் வருமானம் மற்றும் நுகர்வின் அளவுகள் மற்றும் வருமான வரித் துறையின் தகவல்களைச் சேகரிக்க நமக்கு ஒரு தரவுத்தளம் தேவை. இது வெளிப்படைத்தன்மையுடனும், ஜி.எஸ்.டி போன்ற மறைமுக வரிகளின் மூலம் சாதாரண மக்களின் தலையில் சுமையை ஏற்றாமல் மக்களை பெரும் பணக்காரர்களுக்கு அதிகளவிலான வரி விதிப்பதைப் பற்றி நாம் பேச வேண்டும்.

பின் குறிப்பு : சான்சல் மற்றும் பிக்கெட்டி ஆகியோரின் ஆய்வுக் கட்டுரையான ‘ஒர்க்கிங் பேப்பரில்’ “1980-2015 காலகட்டத்தில் இந்திய மக்களின் வருமானங்கள் அதிகரித்துள்ளது. இந்தியாவில் கீழ்நிலையில் உள்ள 50% பேர் இந்த காலகட்டங்களில் தங்களது வருமானத்தை 90% அதிகரித்துள்ளனர். அதேசமயம் முதல் 10% பேர் தங்களது வருமானத்தில் 435 % அதிகரித்துள்ளனர்” என்று கூறப்பட்டுள்ளது.

மொழிபெயர்ப்பாளர் : நிதிஷ்குமார்

Tags: