உக்ரைன் போர் இழுத்துக் கொண்டிருப்பதேன்? – பகுதி 2

பாஸ்கர் செல்வராஜ்

மெரிக்க-ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவின் ஐரோப்பிய எரிபொருள் சந்தையையும் அதன் எரிபொருள் வளத்தையும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ அடைய நீண்ட நெடுங்காலமாக முயற்சி செய்து வந்தன. ரஷ்யா அதற்கு எதிரான நகர்வுகளைச் செய்து தடுத்து நிறுத்தி தனது ஐரோப்பியச் சந்தையைக் காப்பாற்றி தனது கட்டுக்குள் வைத்திருந்தது. கொரோனா மக்களை வீட்டுக்குள் முடக்கி அமெரிக்க பங்குச்சந்தையை வீழ்த்தியது. வீழ்ந்த பங்குச்சந்தையைக் காக்கவும் முடங்கும் பொருளாதாரத்தை முடுக்கவும் ஆறு ட்ரில்லியன் டொலரை சந்தையில் இறக்கியது அமெரிக்கா.

அது முடங்கிய பொருளாதாரத்தை முடுக்கிவிட்டாலும் கூடுதலாகப் பணவீக்கத்தைக் கொண்டு வந்திருக்கிறது. உலகின் 18 விழுக்காடு பொருட்களை ஏற்றுமதி செய்யும் சீனாவை டொலர் கடன் அளவைக் கூட்டவைக்க முடியாமல் போகவே எண்ணெய் உற்பத்தியாளர்களின் பக்கம் கவனம் திரும்பியது. ரஷ்யாவின் தலைமையில் இயங்கும் எரிபொருள் உற்பத்தியாளர்கள், உற்பத்தியைக் கூட்டி விலைவாசியைக் குறைக்க மறுக்கவே உக்ரைனை நேட்டோவில் சேர்க்க நகர்வுகள் தொடங்கியது. ரஷ்யாவை மண்டியிட வைக்கும் இந்த நகர்வை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கமுடியாததால் ஆயுத பலத்தின் மூலம் எதிர்கொள்ள முடிவெடுத்த ரஷ்யா உக்ரைன் மீதான போரை அறிவித்தது.

போரின் முதன்மைக் குறிக்கோள்கள்

பெப்ரவரி 24 அன்று அதிபர் புட்டின் உக்ரைன் மீது தாக்குதலைத் தொடுப்பதாக அறிவித்த சில நாட்களில் ரஷ்ய இராணுவம் கியேவ் (Kyiv) நகரை அடைந்தது. இந்த மின்னல் வேக ராணுவ முன்னேற்றம் இந்தப் போரை மிக வேகமாக முடிவுக்குக் கொண்டுவந்துவிடும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. உண்மையில் 4.4 கோடி மக்களையும் 2 இலட்சம் ராணுவ வீரர்களையும் கொண்ட மிகச்சிறிய நாடான உக்ரைனை, அமெரிக்காவுக்கு இணையான இராணுவ பலம் கொண்ட ரஷ்யா வீழ்த்துவது அவ்வளவு கடினமானது அல்ல. அதனால் அப்படியான எதிர்பார்ப்பு இயல்பானதும்கூட. ஆனால் இந்த எதிர்பார்ப்பை பொய்யாக்கி இரண்டு மாதங்களுக்கும் மேலாக போர் இழுத்துக்கொண்டிருப்பது ஏன் என்பது எல்லோர் மனதிலும் இருக்கும் புரியாத புதிர்.

இந்தப் புதிர் தோன்ற காரணமான போர் குறித்த புரிதலையும் (போர் என்பது பொருளாதார நலனை அடைய எடுக்கப்படும் அரசியல் நடவடிக்கை), இது ரஷ்யா, உக்ரைன் இடையிலான போர் என்பதாகக் கட்டப்பட்டிருக்கும் பிம்பம் பொய்யானது (இது ரஷ்யா, நேட்டோ இடையிலான போர்) என்பதையும் நேற்றைய கட்டுரை விளக்கியது. ரஷ்யா உக்ரைனின் முக்கிய நகரங்களை சுற்று வளைத்து அதன் போர் விமானங்கள, ஆயுதங்கள், முக்கிய இராணுவ நிலைகளைத் தாக்கி அழித்த நடவடிக்கையின் நோக்கம். உக்ரைனை ஆயுத நீக்கம் செய்து சரணடைய வைத்து, அங்கிருக்கும் நேட்டோவையும் அவர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட நவநாசிச அசோவ் (Azov) படையையும் கலைத்து, முன்னர் மேற்கு உக்ரைனும் கிழக்கு டொன்பாஸ் பகுதியும் செய்துகொண்ட மின்ஸ்க் 2 உடன்படிக்கையின்படி அந்தப் பகுதிக்கு சுயாட்சி அதிகாரத்தையும், நடுநிலையான அல்லது ரஷ்ய ஆதரவு அரசையும் அங்கே நிறுவுவது என்பதாக இருந்தது.

இந்த இராணுவ நகர்வுக்குக் காத்திருந்த மேற்கு அணு ஆயுதத் தாக்குதலுக்கு ஒப்பானது என வர்ணிக்கப்படும் ஸ்விப்டில் (SWIFT) இருந்து நீக்கம், ரஷ்ய மத்திய வங்கி மற்றும் பண முதலைகளின் சொத்துகள் முடக்கம், மேற்கின் எண்ணெய், நிதி, சேவைத் துறை உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களின் வெளியேற்றம் எனப் பல அதிரடி பொருளாதாரத் தடைகளை அறிவித்து ரஷ்யாவை உலகில் இருந்து தனிமைப்படுத்தியது. இந்த நடவடிக்கைகளின் நோக்கத்தை ரஷ்ய அதிபர் புட்டினின் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால், “ரஷ்யாவின் நிதி, பொருளாதாரத்தைச் சீர்குலைத்து, சந்தையில் பீதியை ஏற்படுத்தி, வங்கித் துறையை நிலைகுலைய வைத்து, கடைகளில் மாபெரும் அளவில் பொருட்களுக்கான தட்டுப்பாட்டை ஏற்படுத்துவது.” இதன்மூலம் ரஷ்யாவுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி நாட்டுக்கு வெளியில் இருக்கும் படைகளைக் கொன்று சிதறடித்து ரஷ்யாவில் ஆட்சி மாற்றத்தை அரங்கேற்றி புட்டினுக்கு பதிலாக யெல்ட்சின் போன்ற ஒருவரை ஆட்சியில் அமர்த்துவது.

நேட்டோ கைக்கொள்ளும் வழிமுறை

ரஷ்யா உக்ரைனின் பெரும்பகுதி ஆயுத பலத்தை அழித்தொழிப்பதில் வெற்றி பெற்றாலும் எதிர்பார்த்ததைப் போன்று உக்ரைனிய படையினர் சரணடைந்து உக்ரைன் தேசியவாத அரசு பேச்சுவார்த்தைக்கு வரவில்லை. அமெரிக்காவின் எக்ஸ்சான்மொபில் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்களை ரஷ்யாவில் இருந்து வெளியேற்றி ரஷ்யாவின் வெளியுலக அரசியல் ஆதரவையும் இந்த எண்ணெய் கும்பல் அந்தந்த நாட்டு அரசியலில் காட்டிவந்த எதிர்ப்பை உடைப்பதிலும் மேற்குலக நாடுகள் வெற்றி பெற்றாலும் ரஷ்யாவில் உள்நாட்டுக் குழப்பத்தை ஏற்படுத்தி ரஷ்ய படைகளைச் சிதறடித்து புட்டினை வெளியேற்றும் முயற்சியில் தோல்வியடைந்தன. அடுத்து நேட்டோ உக்ரைனுக்கு ஆயுதங்கள், போரிடுவதற்கு ஆட்கள், கண்காணிப்பு மற்றும் உளவுத்தகவல்கள் ஆகியவற்றை அனுப்பி ரஷ்யாவை போர்க்களத்தில் தோற்கடிக்கும் வேலைகளில் ஈடுபட்டது. இவ்வளவு செய்த பிறகும் நேரடியாக நேட்டோ ஏன் இறங்கவில்லை?

நேட்டோவின் பெயரில் நேரடியாக இறங்கினால் அப்படி ஈடுபடும் நாடுகள் மீது ரஷ்யா தாக்குதல் தொடுக்கும். ஒரு நேட்டோ நாடு தாக்கப்பட்டால் அனைத்து நாடுகளும் தாக்கப்பட்டதாகக் கருதி போரில் ஈடுபட வேண்டும். அது ரஷ்யாவை பலகீனமான இடத்துக்குக் கொண்டுசென்று அணு ஆயுதத்தின் மூலம் தீர்வு காண்பதை நோக்கி நகர்த்தும். நிலைமை கைமீறிப்போய் மூன்றாம் உலகப் போராக மாறும். ஆகையால் இருவருமே இந்த ஆட்டத்தை கவனமாக ஆடுகிறார்கள். ஒருவர் எவ்வளவு தூரம் செல்கிறார் என்பதைப் பொறுத்து அடுத்தவர் தனது நகர்வைத் (Escalation and Counter Escalation Tactics) தீவிரமாக்குவார். வெளிநாடுகளில் இருந்து போரிடுபவர்களின் எண்ணிக்கை 6824 என்கிறது ரஷ்யா. இதில் பெரும்பகுதி போலந்து மற்றும் மேற்குலக நாடுகளைச் சேர்ந்தவர்கள். இதனோடு அமெரிக்காவால் பயிற்றுவிக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட ஆப்கானிய படைப்பிரிவு, துருக்கியின் 1500 வலதுசாரி படைப்பிரிவு எனப் பலரும் இதில் பங்கேற்கிறார்கள் என்கிறார்கள். இவற்றோடு டாங்கிகளை அழிக்கும் ஜாவலின், தோளில் வைத்து போர் விமானத்தைச் சுட்டு வீழ்த்தும் ஸ்டின்ஜர் ஏவுகணைகளை அமெரிக்கா வழங்கி வருகிறது. இதனால் அமெரிக்க கையிருப்பில் இருந்த ஸ்டின்ஜர் ஏவுகணைகள் வேகமாக தீர்ந்து வருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

ரஷ்யாவின் உத்திகள்

இதை எதிர்கொள்ளும் விதமாக ரஷ்யா இந்த ஆயுதங்களைத் துல்லிய ஏவுகணைகள் கொண்டு தாக்கி அழித்ததோடு எந்த ஏவுகணை எதிர்ப்பு அமைப்பாலும் தடுத்து நிறுத்த முடியாத அணு ஆயுதத்தைத் தாங்கிச் செல்லும் புதிய கிந்ஜால் (Kinzhal) ஏவுகணையைச் செலுத்தி எச்சரிக்கை விடுத்தது. மேலும் மேற்கின் ஆயுதங்கள் கியேவை அடையமுடியாதபடி தலைநகரைச் சுற்றி வளைக்க ஆரம்பித்தது. இராணுவ, பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த நேட்டோவைச் சேர்ந்தவர்களால் வழிநடத்தப்படும் நவநாசிச அசோவ் படைப் பிரிவால் பாதுகாக்கப்படும் மரியோபோல் நகரை சுற்றி வளைத்துக் கைப்பற்றும் நடவடிக்கையைத் தீவிரமாக்கியது. ரஷ்யா ஏன் இப்படி படிப்படியாகத் தாக்குதலைத் தீவிரப்படுத்தி எதிரிகளுக்கு ஏன் காலத்தையும் திருப்பி அடிக்கும் வாய்ப்பையும் வழங்க வேண்டும்?

அமெரிக்கா ஈராக்கின் பஃலூஜா நகரை தரைமட்டமாக்கி மக்கள் பெரும் எண்ணிக்கையில் கொல்லப்பட்டதைப் போன்று ரஷ்யா செய்து அல்லது ஐரோப்பாவுக்குச் செல்லும் எரிவாயுவைத் துண்டித்து மேற்கை மண்டியிட வைக்கலாம். அது ஏற்கனவே உலக அளவில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் ரஷ்யாவை அரசியல் ரீதியாக மேலும் தனிமைப்படுத்தும். ஐரோப்பாவின் ரஷ்ய எரிவாயு சார்பை எந்த விலை கொடுத்தேனும் உடைக்க வேண்டும் என்ற கருத்தாக்கத்தை மக்கள் மனதில் ஏற்படுத்தும். அது எதிரி என்ன நோக்கத்தில் இந்தப் போரை நடத்துகிறானோ, அதை ரஷ்யாவே கையில் கொண்டுபோய் கொடுத்ததுபோல் ஆகிவிடும். இந்த போரில் ரஷ்யா ஈடுபடுவதன் நோக்கம் எரிபொருள் வாயுவை நிறுத்துவதல்ல; மாறாக தடையின்றி தொடர்ந்து பாயவைப்பது. ஆதலால் அது கவனமாக அதிக செலவு பிடிக்கும் துல்லிய ஏவுகணைத் தாக்குதலைக் கொண்டு இந்தப் போரில் மக்கள் பலியாவதைக் குறைத்து அரசியல் ரீதியாக தனிமைப்படுவதைத் தவிர்க்கிறது.

கலப்பின போரில் ரஷ்ய நகர்வுகள்

பொருளாதாரம், இராணுவம், திரிபுத்தகவல் தொடர்பு என எல்லாம் கலந்த இந்த புதியவகை கலப்பினப் போரை (Hybrid War) ரஷ்யா முதன்முறையாக எதிர்கொள்கிறது. குறைவான மக்கள் பலியுடன் ராணுவத் தாக்குதலைத் தொடுக்கும் அதேவேளை, தன்மீது ஏவப்பட்ட பொருளாதாரத் தாக்குதலை வட்டிவிகித்தை 20 விழுக்காடாக உயர்த்தியும், மூலதன வெளியேற்றத்துக்குத் தடைவிதித்தும், ருபிளின் மதிப்பை தங்கத்துடன் இணைத்தும், மற்ற நாடுகளுடன் ஏற்கனவே தயாராக வைத்திருந்த பணப் பரிமாற்று அமைப்பான சிப்ஸ்(SIPS) அமைப்பின் மூலம் பரிவர்த்தனை ஏற்பாடுகளைச் செய்தும், சீன, இந்திய நாடுகளுடன் பேசி, பொருட்களின் தட்டுப்பாட்டைக் குறைத்தும் இயல்புநிலைக்குக் கொண்டுவந்தது. அடுத்து ஐரோப்பிய நாடுகளுடன் இனி சொந்த நாணயமான ருபிளில் மட்டுமே வர்த்தகம் செய்வோம் என அறிவித்து தன்மீது தொடக்கப்பட்ட பொருளாதாரத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க ஆரம்பித்தது.

கியேவ் கிட்டத்தட்ட சுற்றி வளைக்கப்பட்டு மரியோபோல் நகரும் ரஷ்யாவிடம் வீழ்ந்துவிடும் நிலையை எட்டியதும் உக்ரைன் பேச்சுவார்த்தைக்கு வந்தது. பேச்சுவார்த்தையின்போது 1. இருபக்கமும் சாராத நடுநிலை 2. அணு ஆயுத முயற்சிகளைக் கைவிடுவது 3. கிரிமியாவை ரஷ்ய பகுதியாக அங்கீகரிப்பது 4. டொன்பாஸ் பகுதியின் சுதந்திரத்தை அங்கீகரிப்பது ஆகிய நிபந்தனைகளை ரஷ்யா முன்வைத்தது. துருக்கியில் நடந்த வெளியுறவுத் துறை அமைச்சர்களின் சந்திப்பில் இதுகுறித்த முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில் நல்லெண்ண நடவடிக்கையாக கியேவ் சுற்றிவளைப்பை ரஷ்யா விலக்கிக்கொள்வதாக அறிவித்தது. மேற்கின் ரஷ்ய ஆட்சி மாற்ற நோக்கம் தோல்வியடைந்து ரஷ்யாவின் இராணுவ மற்றும் நாசிச நீக்க (Demilitarization and Denazification) இலக்கை அடையும் தருவாயை அடைந்திருந்த நிலையில் மேற்குலகம் தனது தோல்வியை ஒப்புக்கொண்டு உக்ரைனை ரஷ்ய நிபந்தனைக்கு உட்பட அனுமதித்து போரை முடிவுக்குக் கொண்டுவந்திருக்க வேண்டும்.

போரை முடிக்காமல் இழுக்கும் நேட்டோ

ஆனால், அது ரஷ்யாவை பலப்படுத்தி அமெரிக்காவின் நேட்டோ வழியான ஐரோப்பிய ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டுவரும். ஆப்கானிஸ்தான் போரில் அமெரிக்கா கண்ட அவமானகரமான தோல்வி அதன் ஆசிய ஆதிக்கத்தை கேள்விக்குள்ளாகி மத்திய கிழக்கு நாடுகள் அதன் பிடியிலிருந்து விலகிச் சென்றுகொண்டிருக்கும் நிலையில் ஐரோப்பிய நாடுகளும் அவ்வாறே விலகிச் சென்றால் அது அமெரிக்க ஒற்றைத்துருவ டொலர் மேலாதிக்கத்தின் இறுதியாக இருக்கும். இதைத் தடுக்கும் விதமாக இந்த உக்ரைன் போரை பனிப்போர்கால – நீண்ட ஆப்கானிஸ்தான் ரஷ்ய – அமெரிக்கப் போராக மாற்ற அமெரிக்கா முடிவெடுத்தது. இந்த நோக்கத்தை அடைய உலக நாடுகள் அனைத்தையும் தன் பின்னால் அணிவகுக்கச் செய்யும் வேலைகள் ஆரம்பமானது.

தொடரும்….

Tags: