இன்று மாலை ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்கிறார்

க்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று (12.05.2022) மாலை புதிய பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொள்வாரென அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் நேற்று (11.05.2022) மாலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் நீண்ட நேரம் கலந்துரையாடியதுடன் தற்போதைய அரசியல் நெருக்கடிகள் குறித்து ஆழமாக பேசப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடலின் போது, பிரதமர் பதவியை பொறுப்பேற்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்கவிடம் ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளதாக அறியமுடிகிறது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க புதிய அரசாங்கத்தை அமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மையை நாடாளுமன்றத்தில் பெற்றுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், இன்று (12.05.2022) மாலை 6.30 மணிக்கு புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்பாரென அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதியாக இருந்த ரணசிங்க பிரேமதாஸ, 1993 ஆம் ஆண்டு மே முதலாம் திகதி குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டார். இதனையடுத்து பிரதமராக இருந்த டி.பி. விஜயதுங்க, அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதியானார்.

இதனையடுத்து, அக்காலப்பகுதியில் கைத்தொழில் அமைச்சராகவும், ஆளுங்கட்சியின் பிரதான அமைப்பாளராகவும் செயற்பட்ட ரணில் விக்ரமசிங்க, பிரதமராக முதல் முறையாக பதவியேற்று 1993 முதல் 1994 வரை பதவி வகித்தார்.

1994 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின்போது, காமினி திசாநாயக்க படுகொலை செய்யப்பட்டதை அடுத்து, அவர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார்.

பின்னர் 1994 – 2004 வரையான காலப்பகுதியில் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையிலான, அரசாங்கத்தில் இரு தடவைகள் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவி வகித்தார்.

2004 – 2015 வரையான காலப்பகுதிகளில் எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகித்துள்ளார்.

இந்நிலையில், 2015 ஜனவரி 8 இல், மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தில் மீண்டும் பிரதமராக ரணில் நியமிக்கப்பட்டார்.

அதன்பின்னர், 2015 ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மையுடன் மீண்டும் பிரதமராக பதிவயேற்றார்.

இதனிடையே, 2018 ஒக்டோபர் 26 ஆம் திகதி அவர் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டார்.

எவ்வாறாயினும், அதே ஆண்டு பெரும் குழப்பங்களுக்கு மத்தியில் டிசம்பர் 17ஆம் திகதி மீண்டும் பெரும்பான்மையுடன் பிரதமராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், இன்றைய தினம் 7 ஆவது தடவையாகவும் ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags: