சுயமாக உணவு உற்பத்தியில் ஈடுபடுவதால் நெருக்கடியை பெருமளவில் தவிர்க்கலாம்
அநுராதபுரத்தில் மனைப் பொருளாதார பாதுகாப்பு வேலைத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல்
‘ஹரித தெயக் சௌபாக்யா’ வீட்டுத்தோட்ட வேலைத்திட்டத்திற்கு சமாந்தரமாக நடைமுறைப்படுத்தப்படும் மனைப் பொருளாதார பாதுகாப்பு வேலைத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல் அண்மையில் அநுராதபுரம் மாவட்ட செயலகத்தில் அநுராதபுரம் மாவட்ட செயலாளர் ஜனக்க ஜயசுந்தர தலைமையில் விவசாய அமைச்சின் அனுசரணையுடன் நடைபெற்றது.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்கு ஏற்ப சொந்த தேவைக்கான உணவுப் பொருட்களை தாமே உற்பத்தி செய்து அவற்றை இலகுவாக பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு இதன் மூலம் ஏற்படும் என்று அநுராதபுரம் மாவட்ட செயலாளர் ஜனக ஜயசுந்தர இதன் போது தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் நாட்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டாலும், ஏற்படாவிட்டாலும் எமது தேவைக்கு ஏற்ப உள்நாட்டுப் பொருளாதாரப் பாதுகாப்பு என்பது நமது சொந்தத் தேவைகளைத் தயாரித்து பூர்த்தி செய்வதன் மூலம் ஏற்படுகின்றது. இதற்காக பல தொடர் வேலைத்திட்டங்கள் அமுல்படுத்தப்பட வேண்டுமென அரசாங்க அதிபர் இதன் போது தெரிவித்துள்ளார்.
பசுமை செழுமை வீட்டுத் தோட்டத் திட்டத்தை மனைப் பொருளாதாரப் பாதுகாப்புத் திட்டத்துடன் இணைப்பதில் பல நோக்கங்கள் உள்ளன. அதிலும் குறிப்பாக மக்களின் உணவுத் தேவைகளை வழங்குவதுடன், மக்களின் வாழ்வாதாரத்தையும் வழங்குவது மிகவும் அவசியமானது. ஏற்கனவே மக்களின் வாழ்வில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. இதை நிவர்த்திக்க, இதன் ஊடாக நம்மை நாமே உருவாக்கிக் கொள்ள இது ஒரு சிறந்த வாய்ப்பு ஆகும். இது நமது எதிர்கால உணவு நெருக்கடிக்கு ஒரு தீர்வாகவும் மற்றும் நமது பொருளாதாரத்திற்கு ஒரு தீர்வாகவும் அமையும் என்று அவர் மேலும் கூறினார்.
இந்த வேலைத்திட்டத்தை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது குறித்தும், சம்பந்தப்பட்ட உற்பத்தியாளர்கள் மற்றும் இதில் ஈடுபட்டுள்ளவர்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. உருளைக்கிழங்கு உட்பட ஏனைய காய்கறிகள் உற்பத்தி மீதும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. குறிப்பாக இரசாயனப் பசளைகள் இல்லாமல், இவை இலகுவில் விளைவிக்கக் கூடிய மரக்கறி வகைகள் என்பது குறித்து இதன் போது கவனம் செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் மேலதிக மாவட்ட செயலாளர் சந்தியா அபேசேகர, மாவட்ட விவசாயப் பணிப்பாளர் லலித தேனுவர, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் சுகத் நயனந்தா, மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் டபிள்யூ.ஏ. வசந்த, மாவட்ட உர உதவிப் பணிப்பாளர் ஏ.டி.அஜித் குமார, மாகாண பிரதி விவசாயப் பணிப்பாளர் ஜே.கே.எஸ். சமரவீர, மாகாணங்களுக்கு இடையிலான பிரதி விவசாயப் பணிப்பாளர் டி.பி மாலா ரம்யலதா, உதவி ஆணையாளர் (கமநல சேவைகள், அநுராதபுரம்) குலதுங்க, மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.
வீட்டு மனைப் பொருளாதார அபிவிருத்தி மூலம் வறுமையை ஒழித்து, பொருளாதார மற்றும் போசணைக் கூறுகள் கொண்ட பயனுள்ள மரக்கறி மற்றும் பழங்களை உற்பத்தி செய்யும் வகையில் ஏற்கனவே காணப்படுகின்ற வீட்டுத் தோட்டங்களைஅபிவிருத்தி செய்தலும் இத்திட்டத்தின் நோக்கமாகும். பயன்படுத்தப்படாத வீட்டுத் தோட்ட அபிவிருத்தியை சிறப்பாக பேணிச் செல்வதன் மூலம் மக்களைப் பழக்கப்படுத்துவதும் இத்திட்டத்தின் ஒரு எதிர்பார்ப்பாகும். வீட்டுத் தோட்டங்களை அபிவிருத்தி செய்வதனால் குடும்பங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தி வலுவூட்ட முடியும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
வீட்டுத் தோட்டங்களை அபிவிருத்தி செய்வதன் நோக்கங்கள் வருமாறு:
1. மக்களது சுய பங்கேற்புடன் கூடிய பலமான வீட்டுப் பொருளாதார இலகுகள் ஊடாக குடும்பங்களை வலுவூட்டுதல்.
2. நஞ்சற்ற உணவு உற்பத்தியை அதிகரித்து உணவுப் பாதுகாப்பினை உறுதிப்படுத்துதல்.
3. சூழல் நட்பான வாழ்க்கை ஒழுங்கொன்றுக்கு மக்களைப் பழக்கப்படுத்தல்.
4. நஞ்சற்ற போசாக்குள்ள புதிய மரக்கறிகள் மற்றும் பழங்களையும் உடைய உணவு வேளையொன்றை உருவாக்கி கொடுத்து மக்களின் சுகாதார நிலமையை மேம்படுத்தல்.
வீடுகளில் வீட்டுத் தோட்டங்களை உருவாக்கிக் கொள்கின்ற போது ஆரோக்கியமான நஞ்சற்ற மரக்கறிகளைப் பெற்றுக் கொள்ளலாம். அத்துடன் சிறு வருமானம் கூட பெற்றுக் கொள்ளலாம். தேக ஆேராக்கியம், நஞ்சற்ற உணவு, அன்றாட வாழக்கைச் செலவிற்கான சிறு வருமானம், சுகாதார மேம்பாடு, தன்னிறைவடைந்த வீட்டுப் பொருளாதாரம் போன்ற பயன்களை இந்த தேசிய மனைப் பொருளாதார அலகு அபிவிருத்தி திட்டத்தினூடாக பெற்றுக் கொள்ள முடிகின்றது.