தமிழகத்தின் கும்பல் மனநிலைக்கு சில கேள்விகள்
–அரவிந்தன் கண்ணையன்
ஒரு வாரமாக தமிழகமே திருவிழாக் கோலம் பூண்டு ஒரு கொண்டாட்ட மன நிலையில் இருப்பதுபோல் தோன்றுகிறது. ஊடகங்களும், ஊடகர்களும் போட்டிப் போட்டு தலையங்கங்கள், பேட்டிகள், கலந்துரையாடல்கள் என்று பேரறிவாளனைக் கொண்டாடுகின்றன. முத்தாய்ப்பாக மாநில முதல்வர் முதல் – சிலரைத் தவிர – தமிழகத்தின் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் பேரறிவாளன் சந்திக்கிறார், அவர்களால் ஆரத் தழுவப்படுகிறார். இதையெல்லாம் வெளியிலிருந்து யாரேனும் பார்த்தால் பேரறிவாளன் சமகாலத்தில் தோன்றிய மாபெரும் நெல்சன் மண்டேலா என்று நினைக்கலாம். இது தொடர்பாக ஒரு மாற்று தரப்பின் சில கருத்துகளை முனவைக்க இக்கட்டுரை மூலமாக முயல்கிறேன்.
யாருக்காக இக்கட்டுரை?
இன்று பேரறிவாளனின் விடுதலைக் கொண்டாட்டங்களில் பங்கெடுக்காதவர்களைத் ‘தமிழ்ச் சமூகத்தின் பெரும்பான்மை எண்ண ஒட்டத்துக்கு எதிராக நிற்கும் மக்கள் விரோதிகள்’ என்று சித்திரிக்கும் போக்கு இருக்கிறது. அப்படியாயின் இக்கட்டுரை யாருக்கானது?
இந்த இடத்தில் அண்ணாதுரையின் இரங்கல் கூட்டத்தில் ஒலித்த ஜெயகாந்தனின் குரல் நினைவுக்கு வருகிறது. அந்த உரை யாருக்கானது என்று ஜெயகாந்தன் தெளிவுறச் சொல்கிறார். அதுவே இக்கட்டுரைக்கும் பொருந்தும். “கும்பல் என்பது கூடிக் கலைவது; கூட்டம் என்பது கூடி வாழ்வது… கலைகின்ற கும்பல் கரைந்த பிறகு அந்தக் கும்பலில் பங்கு கொண்ட, அந்தக் கும்பலால் பாதிக்கப்பட்ட மனிதர்களை ஒரு கூட்டமாகச் சந்திப்பதற்கு நான் இங்கு அழைக்கிறேன். இது எனது தனித்த குரலே ஆயினும் இது காலத்தின் குரல் என்பதனைக் கண்டுகொள்ளுங்கள். இந்தக் குரலுக்கு வந்து கூடுகின்ற இந்தக் கூட்டம், பதற்றமில்லாதது; நாகரிக மரபுகள் அறிந்தது; சிந்தனைத் தெளிவுடையது!”
ராஜீவ் கொலை, ராஜீவுடன் இறந்த மற்றவர்கள் ஆகியவற்றை நினைவுகூர்ந்து உணர்ச்சித் தளத்தில் நின்று அணுகக் கூடாது; மாறாக, நிதானமாக நீதிப் பரிபாலனம், விசாரணையிலுள்ள தவறுகள், தண்டனை, கருணை ஆகியவற்றைப் பற்றி சற்றே சலனங்களிலிருந்து விலகி விவாதிக்க வேண்டும் என்று பேரறிவாளனின் விடுதலையைக் கொண்டாடுபவர்கள் சொல்கிறார்கள். நல்லது. ஆனால், அதேபோல் அவர்கள் எதிர்த்தரப்பு இக்கொண்டாட்டங்கள் குறித்து எழுப்பும் மாற்றுக் கருத்துக்கும் சற்றே செவி சாய்க்கலாமே? அப்படியானவர்களுக்குதான் இக்கட்டுரை.
இக்கட்டுரையில் ஒட்டுமொத்த ஈழப் பிரச்சினை, பிரபாகரன் செயல்பாடுகள், ராஜீவின் முன்னெடுப்புகள், இந்திய-இலங்கை ஒப்பந்தம், ராஜீவ் கொலையின் சதி வலைகள் ஆகியன பற்றி நீண்ட விவாதமெல்லாம் எழுத எண்ணம் இல்லை. தேவையான அளவே அவற்றைத் தொட்டுச் செல்கிறேன்.
விடுதலை பற்றிய என் கருத்து
நான் சாதாரண பார்வையாளன், ஒரு சராசரி உலக பிரஜை. அவ்வளவே. அந்த இடத்திலிருந்து என்னுடைய பார்வை என்னவென்றால், மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் கருணை மனுக்களை 11 வருடங்கள் எந்தப் பதிலும் சொல்லாமல் கிடப்பில் போட்டிருந்தது அக்கிரமம். அதனையே காரணமாகக் கொண்டு உச்ச நீதிமன்றம் தண்டனைக் குறைப்பு செய்தது. ஆயுள் தண்டனை என்று மரண தண்டனையைக் குறைத்ததுமே எத்தனை ஆண்டுகள், ஏற்கனவே இருந்த ஆண்டுகளோடு, சிறையில் இருக்க வேண்டும் என்ற கேள்வி எழுந்தது. அப்போதே குற்றவாளிகள் எழுவரும், 14-15 ஆண்டுகள் சிறை வாழ்வை அனுபவித்திருந்தார்கள்.
ஆயுள் தண்டனை ஆயுளுக்குமான தண்டனை இல்லையா என்று விவாதிக்கலாம். இந்தியாவில் அப்படியான வழக்கம் இல்லை. கம்யூனிஸ்ட் லீலாவதி கொலை வழக்கு, மேலவளவு முருகேசன் கொலை வழக்கு, தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு மூன்றும் மிகக் கொடூரமானாவை. மூன்றிலுமே திமுக, அதிமுக அரசுகள் சில பிறந்தநாள் விழாக்களை முன்னிட்டு ஆயுள் தண்டனைக் கைதிகளை சீக்கிரமாகவே விடுவித்தன.
ஆயுள் தண்டனைக் குறைப்புப் பெற்ற பேரறிவாளன் அதன் பிறகு 8 ஆண்டுகள் சட்டப் போராட்டதின் பின் தற்போது விடுதலையாகி இருக்கிறார். குற்றத்தில் அவர் பங்களிப்பின் தீவிரம் எப்போதும் விவாதிக்கப்பட்டிருக்கிறது. அவருடைய விடுதலை நியாயத்தில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. என் விவாதமெல்லாம் அவரை நேரடியாக நிரபராதி என்று வாதிடுபவர்களோடுகூட அல்ல, மாறாக மறைமுகமாக அவர் நிரபராதி என்றும் அவர் பங்களிப்பிற்கு அவர் என்றோ ஒரு சிறு குற்றம் புரிந்தவர்போல் விடுதலையாகி இருக்க வேண்டும் என்றும் இன்றைய கொண்டாட்டங்களை நியாயப்படுத்துகிறவர்களோடுதான்!
பேரறிவாளனின் பங்கு
பேரறிவாளன் குற்றமற்றவர் என்றோ பதின்ம பருவத்தில், 18 வயதில் சதியின் முழுப் பரிமாணம் தெரியாமல் சுழலில் சிக்கிய இளந்தளிர் என்றோ பலரும் எண்ணுகிறார்கள். அதனால்தான் அவர் விடுதலையையும் அதற்காகவே உழைத்த அவருடைய தாயின் அர்ப்பணிப்பையும் கனிவுடன் ஏற்கிறார்கள். மேலும் ராஜீவ் கொலையுடன் நேரடித் தொடர்புடையவர்கள் – தனு, சிவராசன், சுபா, ஹரிபாபு – கொல்லப்பட்டுவிட்டார்கள். எஞ்சியவர்கள் நேரடித் தொடர்பு அற்றவர்கள், சதியின் வீச்சரியாத பங்கேற்பாளர்கள் அல்லது நிரபராதிகள் என்று கடந்த பல வருடங்களாக பொதுப் புரிதலில் உறைந்துவிட்டது. அது ஒரு பெரும் பிரச்சாரத்தின் விளைவே.
முன்னாள் நீதிபதி சந்துரு ‘அருஞ்சொல்’ பத்திரிக்கையில் எழுதிய கட்டுரையில், “அக்கொலையில் சம்பந்தப்பட்ட நேரடிக் குற்றவாளிகள் அனைவரும் சிறப்புப் புலனாய்வுக் குழு மேற்பார்வையில் சுட்டுக் கொல்லப்பட்டுவிட்டார்கள். பின்னர் தடா சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றவாளிகள் எவரும் இந்தக் கொலையில் நேரடிப் பங்கு வகித்தவர்கள் அல்லர்!” என்கிறார். அத்தகைய கூற்றின் நோக்கம் மிகச் சாதாரணர் ஒருவர் அதீதமான தண்டனையை அனுபவித்த பின் விடுதலையாகி இருக்கிறார் என்று வாசகர்களை நினைக்க வைப்பதாக இருக்கும்.
நீதிமன்றத்தில் சட்ட விவாதங்களில், ‘நேரடித் தொடர்பு’ என்பது மிகக் குறுகலாகவே நிறுவப்படும். நளினியையும், முருகனையும் நேரடித் தொடர்பற்றவர்கள் என்று பொதுவில் அப்படிச் சொல்ல இயலுமா? பேட்டரியை எதற்காக வாங்கி வரச் சொன்னார்கள் என்று பேரறிவாளன் சொன்னதை வாக்குமூலத்தில் தான் பதிவுசெய்யவில்லை; அந்தச் சில வார்த்தைகளை விட்டுவிட்டேன் என்று ஒரு பேட்டியில் சொல்லப்போய் சூறாவளி அடித்தது. இன்றும் எல்லா விவாதங்களிலும் அது சுட்டிக் காட்டப்படுகிறது. அதனாலேயே பேரறிவாளன் நிரபராதி இல்லை என்று சொல்லிவிட முடியாது என்றாலும், ராஜீவ் கொலையில் அவர் பங்கு மிக மெலிது; அதற்கான தண்டனையை அவர் அதீதமாகவே அனுபவித்துவிட்டார் என்று பலரும் நினைக்கிறார்கள்
உண்மை என்னவென்றால், தியாகராஜனின் அந்தப் பேட்டியை முன்வைத்தே பேரறிவாளன் தான் குற்றவாளி என்று அளிக்கப்பட்ட தீர்ப்பைத் திரும்ப பெற்றுக்கொள்ள 2018இல் வழக்குத் தொடர்ந்தார். அவர் கூற்றை மறுத்த சிபிஐ அவர் சதித் திட்டத்தில் உள்ளார்ந்த பங்காற்றினார் என்றது. பேட்டரி வாங்கியதோடு அல்லாமல் ஒரு வயர்லெஸ் கருவி செய்வதற்கும் கொலைக்குப் பின்னர் தடயங்களை அழிக்க முற்பட்டதையும் சிபிஐ சுட்டிக்காட்டியது. வழக்கில் சொல்லப்பட்ட தீர்ப்பு அதி முக்கியம். “வழக்கின் எல்லாத் தரவுகளையும் சூழலையும் பார்த்தோமானால், பேரறிவாளன் எலக்டிரானிக்ஸ் பொறியாளர், பேட்டரி எதற்குப் பயன்படும் என்று அறிந்தவர், வேலூர் கோட்டை மீது தாக்குதல் நடத்த முயன்ற சதித் திட்டத்தில் பங்காற்றியவர், புலிகள் இயக்கத்தின் உறுப்பினர் என்று ஒப்புக்கொண்டவர், ஒருவரை நோக்கி வெறுப்பு கொண்டவர். இதையெல்லாம் வைத்து இந்த நீதிமன்றமே ஒரு முடிவுக்கு வர இயலாதா?” என்று கேட்டு பேரறிவாளனின் வழக்கை தள்ளுபடி செய்தது.
ஒரு முன்னாள் பிரதமரான ராஜீவைக் கொல்வதற்கு முன் இரண்டு ஒத்திகைகள் பார்க்கப்பட்டன. ஒன்று, ஏப்ரல் 1991இல் ஜெயலலிதாவும் ராஜீவும் பங்கெடுத்த தேர்தல் கூட்டத்திற்கு மற்ற சதிகாரர்களுடன் பேரறிவாளனும் சென்றிருந்தார். அடுத்தது, வி.பி.சிங் பங்கெடுத்த கூட்டத்தில் ஒரு முன்னாள் பிரதமரை எவ்வளவு நெருங்க முடியும் என்று நளினி, முருகன், தனுவோடு பேரறிவாளனும் பங்கெடுத்த ஒத்திகை. ஒரு முன்னாள் பிரதமரின் கூட்டத்தில் ஒத்திகை பார்க்கும் உடனிருந்தவருக்குத் தெரியாதா உண்மையான குறி எத்தகையவருக்கு என்று?
இன்று பேரறிவாளனும் அவரோடு தொடர்புடையவர்களும் பல ஊடகங்களுக்குப் பேட்டிகள் கொடுக்கிறார்கள். எல்லாப் பேட்டிகளிலும் அவர் நிரபராதி என்று சொல்லப்படுவதைப் பேட்டி எடுக்கும் ஊடகர்கள் எந்தக் குறுக்கீடும் இல்லாமல் ஆமோதித்துக் கேட்டுக்கொள்கிறார்கள். ஒருவராவது, “சார் உச்ச நீதிமன்றம் உங்களை நிரபராதி என்று சொல்லவேயில்லையே!” என்று கேட்பதில்லை.
ராஜீவ் கொலை பயங்கரவாதமா?
நீதிபதி சந்துரு, ‘அருஞ்சொல்’ கட்டுரையில் ராஜீவ் கொலை தடா ஷரத்துகளின்படி ‘தீவிரவாத செயல் அல்ல!’ என்று தீர்ப்பு வழங்கியதைச் சுட்டிக்காட்டுகிறார்; மேலும், ‘தற்போது பேரறிவாளனை விடுதலை செய்தது, காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் சொல்வதுபோல், தீவிரவாதத்தை ஊக்குவிக்காது; ஏனென்றால் அந்தக் கொலையே தீவிரவாதமல்ல!’ என்று நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது என்கிறார்.
1999இல் தடா சட்டத்தின்படி, தீவிரவாத செயலுக்குக் கொடுக்கப்பட்டிருந்த வரையறையின் கீழ் ராஜீவின் கொலை தீவிரவாதமல்ல என்று உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டது. தடா சட்டத்தின்படி ஒரு அரசாங்கத்தையே செயலற்றுப்போக வைக்கக்கூடிய செயலை (overawe) குற்றவாளிகள் செய்யவில்லை என்ற அவர்களுடைய தரப்பு நியாயத்தை ஏற்றது. காரணம், ராஜீவ் ஒரு முன்னாள் பிரதமர், மேலும் வேறு எந்த அரசமைப்பு சார்ந்த ஒன்றின் மீதும் குற்றவாளிகள் தாக்குதல்கள் நடத்தவில்லை என்றது உச்ச நீதிமன்றம். இத்தீர்ப்பே விவாதத்துக்குறியது ஆயினும் தீர்ப்பு தீர்ப்புதான்!
எந்தச் சட்டத்தின் ஷரத்துகளின் மீது குற்றவாளிகள் மீது குற்றம் சுமத்தப்பட்டதோ அதன் நுட்பமான விளக்கத்தின்பாற்பட்டது அத்தீர்ப்பு. ஆனால், ‘ஒரு முன்னாள் பிரதமரை, அவர் மீண்டும் பிரதமர் ஆகக் கூடும் என்று அஞ்சி அவரைக் கொன்றது தீவிரவாதமே இல்லை!’ என்பதல்ல அத்தீர்ப்பின் அர்த்தம். நீதிமன்றத்தில் சட்ட நுணுக்கங்களின் மீது வழக்கு நடத்தி அதன் மீது கிடைக்கும் தீர்ப்புகளையும் நாம் அந்த நுட்பத்துடன்தான் பொதுவெளியில் வைக்க வேண்டும். சராசரி இந்திய பிரஜை என்றல்ல; எந்த நாட்டின் பிரஜையும் ஒரு முன்னாள் பிரதமரைக் கொல்வது பயங்கரவாத நடவடிக்கை என்றே கருதுவர்.
முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்ஷை ஈராக் யுத்தத்திற்காகக் கொல்லவிருந்த இருந்த சதியை அமெரிக்கா இன்று முறியடித்திருக்கிறது. அப்படி ஒரு கொலை நடந்திருந்தால் அமெரிக்கா அதனை பயங்கரவாதமாகவே பார்த்திருக்கும். ராஜீவ் கொலையானது மக்களுடைய பொதுப் பார்வையில், கொடூரமான பயங்கரவாத நடவடிக்கை. 14 பேரைக் ஒரு கூட்டம் திட்டமிட்டுக் கொல்வதை ஒரு தேசம் வேறெப்படியும் பார்க்காது.
ராஜீவ் மீதான வெறுப்பு
தமிழகத்தில் மெத்த படித்தவர்கள் இடையிலும் ஓரளவேனும், ராஜீவ் மீதும் காங்கிரஸ் மீதும், இந்திய-இலங்கை ஒப்பந்தம் மற்றும் பின்விளைவுகள் சார்ந்து ஒவ்வாமை உண்டு. ராஜீவ் கொலையைப் பற்றிப் பேச்செடுத்தாலே “கொலை செய்தது தவறு; ஆனால்…” என்று ஆரம்பித்து அந்த ஆனாலுக்குப் பிறகு அந்தக் கொலை ஏன் தவறல்ல என்றோ அல்லது பிரபாகரனின் நிலையில் இருந்து பார்த்தால் புரிந்துகொள்ளக் கூடிய செயல் என்றோ வாதிடுவார்கள். ராஜீவ் கொலை தொடர்பான எந்த உரையாடலும் இந்திய அமைதிப் படையின் அட்டூழியங்களைத் தொட்டுப் பேசாமல் தமிழகத்தில் நகராது. இதில் பலர் செய்யும் தவறுகள் சில உண்டு.
இந்திய – இலங்கை ஒப்பந்தத்தைச் செயல்பட விடாமல் ஒட்டுமொத்தமாக கிழித்துப் போடும் சூழலை உருவாக்கி அந்தத் தீர்மானத்தைச் செல்லாததாக்கி, போரைத் துவக்கியவர் பிரபாகரன். போரில் இரண்டு தரப்புகளும் போரியல் தர்மங்களை மீறினர் என்பதே உண்மை. அமைதிப் படையினரால் தமிழர்கள் பாதிக்கப்பட்டனர் என்போர் சௌகரியமாக பிரபாகரனால் அப்போதும் அதற்கு முன்னரும் பின்னரும் பாதிக்கப்பட்ட அநேகரும் தமிழர்களே என்பதை மறந்துவிடுகிறார்கள்.
இலங்கையின் உள்நாட்டுப் போரில் இந்தியா ஏன் கையெழுத்திட்டது என்கிறார்கள். ஏன் இந்தியாவுக்கு அந்த உரிமை இல்லையா? போராளிகளுக்கான உதவிகள், தளவாடங்கள், லட்சக்கணக்கான அகதிகளை ஏற்றுக்கொள்வதற்கு எல்லாம் பாத்தியதை உடைய நாட்டுக்கு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் உரிமை மட்டும் கிடையாதா? வங்கதேசப் போரில் கையெழுத்திட்டதும் இந்தியாதான்.
ராஜீவ் ஒன்றும் அமைதிப் படையைத் தமிழர்களுக்கு எதிராகச் செயல்படுங்கள் என்று சொல்லி அனுப்பவில்லை. தமிழர் நலன் காப்பதற்காகத்தான் இந்தியா முனைந்தது. மேலும் உள்நாட்டில் காவல் துறையோ வெளிநாட்டில் ராணுவமோ அத்துமீறல்கள் செய்யும்போது அந்த அத்துமீறல்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்க நிறைய வழிமுறைகள் உண்டு. ஒரு மாநிலத்தில் காவல் துறை நடத்திய வெறியாட்டத்துக்கு அரசிடம் கேள்வி கேட்பார்கள்; தார்மீகப் பொறுப்பேற்க சொல்வார்கள். அதுதான் வாடிக்கை. ஆனால், யாரும் முட்டாள்தனமாக மாநில முதல்வரை நேரடிப் பொறுப்பேற்க சொல்ல மாட்டார்கள்.
பிரபாகரன் மீதான மையல்
ராஜீவை வெறுக்கிறார்களோ, இல்லையோ; பிரபாகரன் மீது அவர் செய்த அத்தனை பயங்கரவாதச் செயல்களையும் தாண்டி, சிறிதாவது மையல் கொண்டவர்கள் தமிழகத்தில் அதிகம். பத்மநாபாவோடு 12 பேரை மாநிலத் தலைநகரிலேயே பிரபாகரன் கொன்றபோதுகூட தமிழகத்தில் விடுதலைப் புலிகள் மீது எந்த பெரிய விமர்சனமும் எழவில்லை. அப்போது நடந்த இரங்கல் கூட்டத்தில் சிங்கம் என்று கர்ஜித்தது ஜெயகாந்தன். அப்போதே ஆரூடம் சொன்னார் விடுதலைப் புலிகளால் பேரழிவு நிகழும் என்று! விடுதலைப் புலிகளின் வன்முறை மோகத்தைக் காட்டமாகச் சாடி பாசிஸ்ட்டுகள் என்றார். புலிகளின் அந்தக் கொலைக்காகத் தமிழர்கள் நாணுகிறார்கள் என்றார் (அப்படியான பெரும்பான்மை அப்போது இல்லை என்பதே உண்மை).
இன்னொரு பிரபலமான பல்லவி, “ராஜீவ் கொலைச் சதியில் மற்றவர்கள் அடையாளம் காணப்படவில்லை, இவர்களே அகப்பட்டுக்கொண்டார்கள்!” என்பது. ‘அருஞ்சொல்’ ஆசிரியர் சமஸும்கூட இதை வழிமொழிகிறார். ஒரு தேசத் தலைவர் கொலையில் காலாகாலத்துக்கும் சந்தேகங்கள் எழுந்துகொண்டே இருக்கும். கென்னடி கொலையில் சதி வலைகளை விவரித்து பல ஆண்டுகளுக்குப் பின் சினிமாவே வந்தது. வேறு யாரெல்லாம் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று விவாதிக்கலாம்; ஆனால், இவர்கள் சம்பந்தப்பட்டவர்கள் என்று நீதிமன்றம் மீண்டும் மீண்டும் உறுதிசெய்திருக்கிறது என்பதை மறக்கலாகாது.
இந்திய நீதித் துறையின் செயல்பாடு
யாகூப் மேமோனுக்குத் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு இறந்தபோது அவர் இறுதி ஊர்வலத்தில் நூற்றுக்கணக்கான இஸ்லாமியர் கலந்துகொண்டது பல்வேறு தரப்புகளிலிருந்தும் கண்டனத்தை வரவழைத்தது. அப்போதும் இதோ பேரறிவாளன் விஷயத்திலும் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு ஆதரவான நிலையெடுக்கக் காரணம் நீதித் துறையும், விசாரணை அமைப்புகளும் பாரபட்சமானவை என்ற நம்பிக்கையே.
பேரறிவாளனின் விடுதலை ஏன் கொண்டாடப்படுகிறது என்று வாசகர்களுக்கு அளித்த பதிலில் சமஸ், “ஒரு முன்னாள் பிரதமரின் படுகொலை வழக்கைகூட நம்முடைய விசாரணை அமைப்புகள் எவ்வளவு மட்டியாகக் கையாண்டன; அவர்கள் கைக்குக் கிடைத்த ஆட்களை வைத்து அதற்கேற்ப கதை எழுதி வழக்கை எப்படி ஜோடித்து முடித்திருக்கிறார்கள் என்பதைத் தன் பிள்ளைக்கு இழைக்கப்பட்ட அநீதியின் ஊடாகவே வெளிக்கொண்டுவந்திருக்கிறார்!”
இது உண்மையா?
இந்திய நீதித் துறையின் மீது அநேக விமர்சனங்களை முன்வைக்கலாம். கீழவெண்மணி வழக்கில் நீதிமன்றங்களின் செயல்பாட்டினை சந்துருவே விமர்சித்து எழுதியிருக்கிறார். தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்த நீதிமன்றம் குற்றவாளிகள் உணர்ச்சி வேகத்தில் செய்தது என்று சமாதானம் சொன்னதெல்லாம் நடந்தது. பலர் அமர்ந்திருக்கும் பேருந்துக்குத் தீ வைத்தால் என்ன ஆகும் என்று குழந்தைக்கும் தெரியும்.
ஒரு தேசியத் தலைவரின் கொலை வழக்கில் விசாரணை அமைப்புகளும் நீதிமன்றங்களும் தவறிழைக்க அநேக வாய்ப்புகள் உண்டு. முதல் தீர்ப்பில் வகை தொகையில்லாமல் 26 பேருக்குத் தூக்கு தண்டனை வழங்கியதில் ஆரம்பித்தது வினை. உச்ச நீதிமன்றம் அதில் பெரும்பாலோருக்குத் தண்டனையைக் குறைத்தபோது பலருக்கும் தண்டனை குறைக்கப்படாதவர்களின் தண்டனை மீதே சந்தேகம் எழுந்தது இதன் மோசமான விளைவுகளில் ஒன்று.
நால்வருக்கு மரண தண்டனையை உறுதி செய்த நீதிமன்ற பெஞ்சின் நீதிபதி ஒருவரான கே.டி. தாமஸ், அந்தத் தண்டனை வழங்கப்பட்டிருக்கக் கூடாது என்று சமீபத்தில் சொன்னதும் இப்போது சுட்டிக் காட்டப்படுகிறது. அந்தத் தீர்ப்பை அளித்த மற்ற நீதிபதிகள் அவர்கள் தீர்ப்பில் இருந்து பின்வாங்கவில்லை என்பது ஏனோ பேசப்படுவதில்லை.
இந்தச் சறுக்கல்களையெல்லாம் தாண்டி பார்த்தால் இந்திய நீதித் துறை, குறிப்பாக உச்ச நீதிமன்றம், வரலாற்று சிறப்புமிக்க வழக்கில் சிறப்புறவே செயல்பட்டிருக்கிறது. 11 வருட கருணை மனு காத்திருப்பைக் காரணம் காட்டி மரண தண்டனையைக் குறைத்தது, ஆயுள் தண்டனையிலிருந்து அரசு அமைப்புகளின் இழுத்தடிப்பைக் கண்டித்து இப்போது விடுதலை செய்தது உள்பட எல்லா விஷயங்களிலும் தன்னுடைய மேன்மையை வெளிப்படுத்தி இருக்கிறது.
ஒரு முன்னாள் பிரதமரின் கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் நாளை நம் சமூகத்தில் சராசரி பிரஜைகளாக உலா வருவார்கள் எனும் சூழல் வேறு எந்த நாட்டிலும் நடந்திருக்கிறதா என்று தெரியவில்லை. ராபர்ட் கென்னடியைக் கொன்றவர் இன்னமும் சிறையில் இருக்கிறார். இத்தனைக்கும் கொல்லப்பட்டபோது ராபர்ட் கென்னடி முன்னாள் ஜனாதிபதிகூட கிடையாது; வெறும் நாடாளுமன்ற உறுப்பினர்தான்.
சிபிஐ மீதும் விசாரணை அமைப்புகள் மீதும் பல குற்றச்சாட்டுகள். ஆனால், நாம் மறப்பது குற்றத்தை நிரூபிக்கவே முடியாது என்று நினைத்த முதல் சில நாட்களிலிருந்து 20 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு வழக்குகளில் உச்ச நீதிமன்றம் மீண்டும் மீண்டும் வழக்கின் ஆதாரங்களை ஏற்றுக்கொள்ளும் வகையில் ஆணித்தரமாக கட்டமைத்தது. “ஒரு கடுமையான சட்டத்தின் கீழ்தான், பல்வேறு சித்திரவதைகளுக்கு ஆட்படுத்தப்பட்ட குற்றவாளிகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்” என்று சந்துரு எழுதும்போது நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பல தரவுகளையும் கடந்து போய்விடுகிறார். தடா சட்டத்தில் வாக்குமூலத்தை ஏற்றுக்கொள்ளலாம் என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டும்போது அதோடு இயைந்த பல ஆதாரங்களையும் விசாரணை அமைப்புகள் முன்வைத்ததால்தான் மொத்தமாக வழக்கு தள்ளுபடியாகவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
பெரும் பயங்கரவாத கொலைக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மரண தண்டனையில் இருந்து தப்பித்தற்கே, ‘தண்டனையை எடுத்தேன் கவிழ்த்தேன்!’ என்று நிறைவேற்றாததுதான் காரணம். நிர்பயா வழக்கின் கொலைக்காரர்கள், யாகூப் மேமோன், அப்ஸல் குரு முதலானோரின் தண்டனைகள் சீக்கிரமாக நிறைவேற்றப்பட்டன. இவ்வழக்கில் பல தருணங்களில் குற்றவாளிகள் முக்கியமான வெற்றிகளை அடைந்திருப்பதே இவர்கள் விஷயத்திலாவது நீதிமன்றங்கள் அவ்வப்போதேனும் நியாயத்தைச் செய்திருக்கின்றன எனக் காட்டுகிறது.
தடா சட்டம் விவாதிக்கப்பட்டபோதே அது மனித உரிமை மீறல்களுக்கு வித்திடும் என்று எச்.எம்.சீர்வை போன்ற வல்லுநர்கள் கட்டுரைகள் எழுதி எதிர்த்தனர். வாசித்திருக்கிறேன். அப்போது தமிழகத்தில் இருந்து எந்த பெரிய விவாதமும் எழவில்லை. பொது நீதிமன்றத்தில் விசாரிக்காமல் ‘இன் காமிரா விசாரணை’, பெயில் கிடைக்காதது என்று பல ஷரத்துகளை அப்போதே பலர் எதிர்த்தனர்.
இந்தியாவில் எப்போதும் ஏதோ ஒரு தீவிர அடக்குமுறைச் சட்டம் அமலில் இருந்திருக்கிறது. மிசா, தடா, பொடா என்று இவற்றின் பெயர்களை வரிசைப்படுத்தலாம். வைகோ பொடாவுக்கு ஆதரவாக இருந்ததெல்லாம் ஒரு காலம். இச்சட்டங்களைப் பற்றி எப்போதும் தமிழகத்தில் பெரிய அறிவு விவாதங்கள் நடைபெற்றதில்லை. இப்போதும் தடா மீதான விமர்சனங்கள் தமிழகம் அரசியல்ரீதியாக விரும்புகிறவர்கள் தண்டிக்கப்பட்டார்களே என்பதற்காகத்தான்.
கடைசியாக இப்போது வந்திருக்கும் தீர்ப்பு மாநில அரசு, ஆளுநரின் உரிமைகள் பற்றியும், தண்டனைக் காலம் பற்றியும் இன்னும் பல வருடங்களுக்கு எதிரொலிக்கும். இதனைச் சரியாக சந்துருவும், சமஸும் சுட்டிக்காட்டுகிறார்கள். இப்படி ஒரு தீர்ப்பைக் கொண்டாடுவது வேறு; விடுவிக்கப்பட்ட குற்றவாளியைக் கொண்டாடுவது வேறு. கட்டுரையாளர்கள் இருவரும் அந்த வித்தியாசத்தைப் பார்க்க தவறியிருக்கிறார்கள்.
காங்கிரஸின் எதிர்வினை நியாயமற்றதா?
நீதிபதி சந்துருவும், ஆசிரியர் சமஸும், இப்படிப் பலரும் காங்கிரஸின் எதிர்வினைகளை எள்ளி நகையாடுவதுடன் காங்கிரஸ் தமிழகத்தில் செல்வாக்கிழந்ததே மாநில உணர்வுகளைப் புரிந்துகொள்ளாத தேசிய கட்சியாக இருப்பதால்தான் என்றும் வாதிடுகிறார்கள். இதில் கொஞ்சமும் உண்மையில்லை என்பதோடு இந்தக் கண்டனங்கள் அநியாயமானவையும்கூட.
“தமிழ் மக்களால் 1971க்குப் பிறகு முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சி மீண்டும் ஒரு கோமாளித்தனமான வேலையில் ஈடுபட்டுள்ளது!” என்று சந்துரு தன் கட்டுரையைக் காட்டமாக ஆரம்பிக்கிறார். இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பான மிகைப்படுத்தல்.
1980 தேர்தலில் இந்திரா காங்கிரஸோடு கை கோர்த்த மு.கருணாநிதி, “நேருவின் மகளே வருக நிலையான ஆட்சித் தருக!” என்ற கோஷத்தோடு திமுகவைவிட காங்கிரஸுக்கு அதிக சீட்டுகளை ஒதுக்கி தேர்தலைச் சந்தித்தார். அப்போது குமரி அனந்தன் தலைமையில் இன்னொரு காங்கிரஸ் தரப்பு அதிமுக அணியில் இருந்தது. இரண்டு அணிகளும் சேர்ந்து 37 இடங்களில் ஜெயித்தனர். திமுக ஜெயித்த இடங்கள் 31. 2000 வரைகூட காங்கிரஸ் வலுவான வாக்குவங்கியோடுதான் இருந்தது.
தமிழக காங்கிரஸார் தங்கள் எதிர்ப்பின் மூலம் சோனியா குடும்பத்தினர் நளினியை மன்னித்ததையும், பேரறிவாளனின் விடுதலை குறித்து ஏதும் எதிர் கருத்துகள் சொல்லாததையும் பொதுமக்கள் மத்தியில் கவனம் பெறாமல் செய்துவிடும் என்று சமஸ் கண்டிக்கிறார்.
கொல்லப்பட்டவர் ஒரு கட்சியின் தலைவர் மட்டுமல்ல, இந்தியாவின் முன்னாள் பிரதமர். அவர் மீண்டும் பிரதமராகிவிடுவாரோ என்று விடுதலைப் புலிகளுக்கு ஏற்பட்ட அச்சத்தில்தான் கொல்லப்பட்டார். இதனைக் கட்சி அரசியலாகச் சுருக்கியது காங்கிரஸா, மற்றவர்களா? தமிழ்நாட்டில் தமிழர்களால் நாட்டின் முன்னாள் பிரதமர் கொல்லப்பட்டதற்கு இன்றும் தமிழர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள், ஜெயகாந்தன் சொன்னதுபோல், நாண வேண்டும்.
2014இல், ‘தமிழினத்தின் ஏழு மண்டேலாக்கள்!’ என்று எழுதிய கட்டுரையில், கொலைக் குற்றவாளிகள் எழுவரையும் ஏதோ நெல்சன் மண்டேலாபோல் சிலர் கொண்டாடுவதை காத்திரமாகச் சாடுகிறார் சமஸ். “என் தந்தையை இழந்தேன். இனி, அவர் திரும்பிவரப்போவதில்லை. ஒரு முன்னாள் பிரதமரான என் தந்தைக்கே நீதி கிடைக்கவில்லை என்றால், இந்நாட்டின் சாமானியனுக்கு எப்படி நீதி கிடைக்கும்?’ என்கிற ராகுல் குரலின் வலி கேலிக்குரியதாகிறது என்றால், நாம் யார்?” என்று அந்தக் கட்டுரையில் சமஸ் கேட்கிறார். இன்று அவரே நடக்கும் கேலிக்கூத்துகளைக் கண்டும் காணாத மாதிரி காங்கிரஸைக் காய்ச்சுகிறார்.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காமல் பேரறிவாளனின் விடுதலையை தமிழக காங்கிரஸ் எதிர்க்கிறது என்று நகைக்கிறார் சந்துரு. ஐயா, உச்ச நீதிமன்றம் நீட் பரீட்சை தேவை என்கிறது; ஆளும் கட்சியும் தமிழர்கள் பலரும் இன்றும் அதனைப் புரட்டிப் போட நினைக்கிறார்கள். அது மட்டும் சரியா? இடஒதுக்கீடு 50% தாண்டக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் சொன்னது. தமிழகம் அரசமைப்புச் சட்டத்தின் 9ஆவது ஷரத்தை வைத்து அதனை மீறுகிறது. அது சரியா?
தமிழகம் இந்தளவு விடுதலையான குற்றவாளியைக் கொண்டாடியிராவிட்டால் ஒருவேளை தமிழக காங்கிரஸும் அமைதி காத்திருக்கும் என்றே நினைக்கிறேன்.
தன்னுடைய ‘தமிழினத்தின் ஏழு நெல்சன் மண்டேலாக்ள்’ கட்டுரையின் முடிவில் சமஸ் கேட்கிறார், “இன்றைக்கு, ராஜீவ் கொல்லப்பட்டிருக்கக் கூடாது என்று அவருடைய கட்சியினர் கூட்டங்கள் நடத்தும்போது, அவர்களை நோக்கிக் கல் வீசப்படுகிறது; ராஜீவ் சிலைகளின் முகம் சிதைக்கப்பட்டு, தலை தகர்க்கப்படுகிறது. எனில், நாம் சொல்ல விழைவதுதான் என்ன?”
2014இல் காங்கிரஸின் மீது கல் எறியப்பட்டதற்கும் ராஜீவ் சிலைகள் சிதைக்கப்பட்டதற்கும் என்ன காரணம்? பேரறிவாளன் பதின்ம வயதில் ஈடுபட்ட உணர்ச்சிகரமான அரசியல்தானே அவரை ஒரு கொலைச் சதியில் ஈடுபட வைத்தது. அது போன்று இளைஞர்களை தூண்டி உணர்ச்சிகரமான அரசியலுக்கு தமிழகத்தில் கால்கோள் விழா நடத்தியவர்கள் யார்? இதையெல்லாம் நுட்பமான அரசியல் அவதானிப்புகள் கொண்ட சமஸ் விரித்து எழுதியிருக்கலாம்.
இன்று பேரறிவாளனை கட்டித் தழுவுகிறார் திருமாவளவன். மேலவளவு கொலைக்காரர்கள் விடுதலை செய்யப்பட்டதை தலித் விரோத நடவடிக்கை என்றவர் அவர். காங்கிரஸின் எதிர்வினையைவிட விவாதிக்கப்பட்டிருக்க வேண்டியது மற்றவர்கள் கொண்டாட்டங்கள்.
குரலற்றுப் போன அனுசுயாக்கள்
பேரறிவாளன் இன்று அடைந்திருக்கும் ஏகோபித்த ஆதரவின் முக்கியக் காரணம் அவருடைய தாய். மரண தண்டனையை எதிர்நோக்கும் மகனுக்கு எதிராக பெரும் சட்ட யுத்தத்தையும் பிரச்சார யுத்தத்தையும் முன்னெடுத்த சாதாரண ஏழைத் தாயின் கண்ணீர் அளித்த பாவ மன்னிப்பு மிகப் பெரிது. உலகத்தின் பாரமெல்லாம் தன் தோளின் மீது அழுத்த தன் மகன் நிரபராதி என்று வாதிட்ட தாயின் புகைப்படங்கள் மனமுள்ள யாரையும் அசைக்கும். அசைத்தன.
ஒரு தாயாக அத்தனை முன்னெடுப்புகளையும் செய்ய அவருக்கு சட்டமும் சமூகமும் இடம் அளித்தன. அது அவரின் உரிமை. அவர் தனியராக இவ்வெற்றியைப் பெற்றார் என்பது பாதிதான் உண்மை. தமிழக அரசியலும், விடுதலை புலி ஆதரவும், ராஜீவ் கொலைக்குப் பின்னும், சில பிரபலமானவர்கள் உறுதுணையை அவருக்கு வகை செய்தது.
இதுநாள் வரை நாம் கேட்காத குரல் காவலர் அனுசுயாவின் குரல். ராஜீவின் அருகில் காவலுக்காக நின்றவர் அவர். கை விரல்களை இழந்துள்ளார். உடலிலும் வெடிகுண்டின் துகள்கள் இன்னும் பல இடத்திலும் புதைந்து உபத்திரவம் அளிக்கிறது என்கிறார்.
இன்னொருவரின் தாய் ஒரு பொட்டலமாக அவருக்குக் கிடைத்தார். பேரறிவாளனைப் பற்றி பேசும்போதெல்லாம் 31 வருடங்களாக சிறையிலிருக்கிறார் என்று தவறாமல் குறிப்பிடப்படுகிறது. அனுசுயா போன்றவர்களுக்கு அது பொருந்தாதா? அடுத்து வரும் பல வருடங்களும் அனுசுயாவுக்கு நரகம்தானே? அதற்காகக் குற்றம் செய்தவர் காலத்துக்கும் சிறையில் இருக்க வேண்டுமா என்பது வேறு கேள்வி. அப்படி இருக்க வேண்டாம் என்று சொல்லலாம். ஆனால், விடுதலையானவரைத் தமிழகமே கொண்டாடுவதைப் பார்க்கையில், அனுசுயா போன்றவர்கள் எத்தகு மனத் துயர் கொள்வார்கள்?
மரண தண்டனையே தவறா? ஆயுள் தண்டனையின் காலம் என்ன?
மேலவளவுக் கொலைகள், கண்ணகி-முருகேசன் கொலைகள், லீலாவதி கொலை, நிர்பயா கொலை, ஆசிபா கொலை என்று அடுக்கிக்கொண்டே போகலாம்; திட்டமிடப்பட்ட கொடூர நிகழ்வுகளை. கொலைக்குக் கொலை சரியாகுமா என்றெல்லாம் நாம் கேட்கலாம். தனிப்பட்ட முறையில் மரண தண்டனையை ஆதரிப்பவன் நான். சில குற்றவாளிகள் பொதுச் சமூகத்தில் வாழும் உரிமையைத் தங்கள் செயல்களால் இழக்கிறார்கள்; இதற்கு அவர்களே முதன்மைக் காரணம் என்று எண்ணுகிறேன்.
மரண தண்டனைக்கு எதிராக இரண்டு வாதங்களைத்தான் ஏற்றுக்கொள்ளலாம். தவறான குற்றவாளிக்கு அளிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டால் திரும்பிப் பெறவே முடியாத தீர்ப்பு மரண தண்டனை. நீதிமன்றங்களின் தவறுகள், ஏழை-பணக்காரன் ஏற்றத்தாழ்வினால் விளையும் வாய்ப்பு வசதிகளில் வித்தியாசம் ஆகியவை இரண்டாவது காரணம்.
அமெரிக்காவில் சில குற்றங்களுக்கு ஆயுள் தண்டனை பரோல்கூட இல்லாத ஆயுளுக்குமான தண்டனையாகும். பெரும் பண மோசடி செய்த பெர்னி மேடாஃபுக்கு 150 வருட சிறை தண்டனை அளிக்கப்பட்டது. வெறும் பண மோசடிதான். ஆனால், அதனால் மொத்த வாழ்வாதாரமும் இழந்தவர்களில் முதியோர் பலர் இருந்தார்கள்; அவர்களில் சிலர் தற்கொலையும் செய்துகொண்டார்கள். மேடாஃப் சிறையிலேயே மாண்டார். இது ஓர் உதாரணம்தான்.
திராவிட இயக்க வட்டாரத்தில் பிரபலமான மருத்துவர் பூவண்ணன் கணபதி ரொம்ப கேஷுவலாக ஒரு பேட்டி அளித்திருக்கிறார். “மரண தண்டனையே கூடாது, ஆயுள் தண்டனை ஆயுளுக்குமாக இருக்கக் கூடாது, குற்றவாளியைத் திருத்தி மீண்டும் சமூகத்தின் மைய நீரோட்டத்தில் சேர்ப்பதே சிறைவாசத்தின் நோக்கமாக இருக்க வேண்டும்!” என்றெல்லாம் அவர் சொல்கிறார். ஓர் இதழோரப் புன்னகையோடு தர்மபுரி பஸ் எரிப்புப் போன்ற ஒரு வழக்கில், 20 பேர் மாண்டதாகச் சொல்கிறார்; ஆனால், குற்றவாளிகள் மன்னிக்கப்பட்டார்கள் என்கிறார். இந்தப் போக்கு எவ்வளவு ஆபத்தானது! குற்றவாளி மட்டுமே மனிதன்; அக்குற்றவாளியின் செய்கையால் கொடூர பாதிப்புக்குள்ளானவர்கள் கிள்ளுக்கீரைகள் என்பதான அணுகுமுறை தடித்தனம் இல்லையா?
மீண்டும் மீண்டும் பலரும், ‘மன்னிப்பு ஒரு சட்ட அமைப்பின் அம்சமாக இருக்க வேண்டும்!’ என்று வலியுறுத்துகிறார்கள். அதுதான் மனிதாபிமானம் என்கிறார்கள்.
குற்றம் செய்தவரை மன்னிப்பது நல்லதுதான். அவர்கள் மனம் திருந்தி வாழ்வதற்கும் சமூகம் இடம் அளிக்க வேண்டும்தான். அந்த வாதங்களை எல்லாம் ஏற்கிறேன். ஆனால், குற்றவாளிகளின் மீது காட்டப்படும் கருணை மழையில் சில துளிகளையாவது குற்றங்களால் பாதிக்கப்படும் அபலைகளுக்கான நியாயத்தின் மீதும் காட்டுங்கள். சட்டம் என்பது தண்டிக்க மட்டுமேயல்ல என்று ஏற்கலாம்; ஆனால், பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் குற்றத்தின் தீவிரத்தைப் பொறுத்து தண்டனை அளிக்க வேண்டியதும் நீதி அமைப்பின் பிரதான கடமை என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
குற்றவாளி மன்னிக்கப்பட வேண்டும் என்கிறார்கள். ஆமாம். ஆனால், குற்றவாளி அதற்கு முதலில் குற்றத்தை ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கோர வேண்டுமே? நான் சொல்வது சட்டரீதியாக தாக்கல் செய்யும் கருணை மனுக்களை அல்ல; மனப்பூர்வமான மன்னிப்புக் கோரல். இன்று வரை பேரறிவாளன் அத்தகைய மன்னிப்புக் கோரலை செய்யவே இல்லை. சிறையில் பேரறிவாளன் ஒரு முன்மாதிரிக் கைதியாக இருந்து பட்டதாரியானதைப் பாராட்டக்குரியதாகவே நான் பார்க்கிறேன். ஆனால், விடுதலையான உடன் அனுசுயா போன்ற ஒருவரைச் சந்தித்து அவர்கள் கைகளைப் பற்றி மன்னிப்புக் கோரி இருந்தால் அவரைக் கொண்டாடும் முதல் ஆள் நானாக இருந்திருப்பேன்.
தமிழகத்தில் மரண தண்டனைக்கு எதிரான குரல் இந்த நால்வருக்கு மரண தண்டனை கிடைத்த பின்பே ஓங்கி ஒலித்தது. ஆக இங்கு எழுந்திருப்பது கள்ளம் கபடமற்ற அறம் சார்ந்த குரல் அல்ல. மாறாக ஒரு பயங்கரவாதச் செயலை ஏதோ ஒரு வகையில் தங்கள் சித்தாந்தரீதியான சாய்வுக்கு ஆதரவாக இருப்பதால் நியாயப்படுத்த கிடைத்திருக்கும் வேஷக் குரல் என்பதாகவே அதைப் பார்க்க வேண்டி இருக்கிறது.
ஆயுள் தண்டனை ஆயுளுக்கும் அல்ல என்கிற வாதமும் கவனமாகக் கையாள வேண்டியது ஆகும். 14 வருடங்களில் அட்டோமேடிக்காக பரோலும், தொடர்ந்து விடுதலையும் கிடைக்கும் என்றால் எத்தகைய கொடூரமான கொலயையும் யாரும் செய்துவிடலாம்.
நாவரசு என்கிற சக மாணவனை மிகக் கொடூரமாக கொன்ற ஜான் டேவிட்கூட நாளை இவ்வழக்கைச் சுட்டிக் காட்டி விடுதலையாகலாம். நாவரசுவின் பெற்றோர் எத்தனை இரவுகள் துடித்திருப்பார்கள், தர்மபுரி பஸ்ஸில் கருகிய மாணவிகளின் பெற்றோர் எக்காலத்திலேனும் நிம்மதியாக உறங்க முடியுமா? ஆயுள் தண்டனை ஆயுளுக்குமல்ல என்று வாதிடும்போது கொஞ்சம் கொடூர குற்றங்களையும், பாதிக்கப்பட்டவர்களையும் மனத்தில் கொண்டு வாதிடுங்கள்.
உண்மையிலேயே அறம் சார்ந்த சமூகச் செயல்பாடு என்றால், தமிழகத்தில் இஸ்லாமியர் அநீதியாகக் கைதுசெய்யப்படும்போதும், சிறையிலேயே வதைக்கப்படும்போதும் எழும் எதிர்ப்பிலிருந்தே பேச வேண்டும். எத்தனை பேர் அப்படிப் பேசுகிறார்கள்?
கொலைக்காரர்களைக் கொண்டாடும் சமூகமா?
குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தற்காத்துக்கொள்ளும் உரிமைகள், நீதிமன்றத்தில் வழக்காடும் உதவிகள், தண்டனை பெற்றால் அதீதமான தண்டனையாக அல்லாமல் பொருத்தமான தண்டனைக்காகக் குரல் கொடுக்கும் உரிமைகள், திருந்தி சமூகத்தில் கலக்கும் வாய்ப்புகள் போன்றவற்றை வழங்குவதே ஒரு சமூகத்தின் நல் அடையாளங்கள். அதேசமயம், பாதிக்கப்பட்டவர்களுக்குப் பாதிப்புக்கு ஏற்ற வகையில் குற்றவாளி தண்டிக்கப்படுவதும், பாதிக்கப்பட்டவர்களின் காயமும் முக்கியம் என்று எண்ணுவதும்கூட முக்கியம்; அப்படியான சமூகமே நாகரீக சமூகம்.
கொலைக்காரர்களை கொண்டாடும் முதல் சமூகம் தமிழ்ச் சமூகம் அல்ல. இந்தியாவில் வேறு தரப்பினரும் இதனை செய்திருக்கிறார்கள். சமஸே முன்பு பஞ்சாப் முதல்வர் பியாந்த் சிங் கொலைக்கார ரோஜனாவும், மணீந்தர்ஜீத் பிட்டா கொலைக்காரர் புல்லரும் கொண்டாடப்பட்டதைச் சாடி, “மரண தண்டனையிலிருந்து விடுவிக்கப்படுவதாலேயே ரோஜனாவும் புல்லரும் குற்றமற்றவர்கள் ஆகிவிடுவார்களா? இதற்கும் ‘எழுவர் விடுதலை, தமீழீழ விடுதலை நோக்கிய பயணத்தின் முதல் வெற்றி’ என்ற கொண்டாட்டத்துக்கும் என்ன வேறுபாடு?” என்று கேட்டவர்தான். ஆனால், இன்றோ பேரறிவாளன் விடுதலையைக் கொண்டாடுபவர்களைக் கண்டிப்பவர்களைச் சாடுகிறார்.
கடைசியாக, காந்தியின் கொலையைக் கொண்டாடி கோட்ஸேவைப் போற்றும் கூட்டத்தைக் கண்டிக்கும் தார்மீக உரிமையையும் தமிழகம் இழந்துகொண்டிருக்கிறதோ என்று தோன்றுகிறது!