ஜூன் 9:பிர்சா முண்டா நினைவு நாள்

ப.கா.ரேவந்த் அன்ரனி

ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே பழங்குடி இன மக்களுக்காக ஒருவர் போராடி வாழ்ந்தார் என்பது நமக்கு வியப்பாகவே இருக்கும். 25 வயது வரை மட்டுமே வாழ்ந்த பழங்குடி மக்களுக்கான போராளி அவர். அவர்தான் `பிர்சா முண்டா’ (Birsa_Munda). பழங்குடி மக்களால் `மண்ணின் தந்தை’ என்று அழைக்கப்பட்டவர் பிர்சா முண்டா.

மனித நாகரிகம் பல வளர்ச்சிகள் அடைந்தபோதும் விளிம்பு நிலை மக்களின் வாழ்வாதாரம் பெரிதாக முன்னேற்றம் அடைந்ததாகத் தெரியவில்லை. குறிப்பாக, பழங்குடிகளின் வளர்ச்சி என்பது இன்னும் கேள்விக் குறியாகவே உள்ளது. அவர்கள் தங்கள் வாழ்வில் சந்தித்து வரும் சவால்களும் போராட்டங்களும் அதிகம். அதற்கு சிறந்த உதாரணமாக நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கேரள மாநிலத்தில் பாலக்காடு அருகில் உள்ள அட்டப்பாடி எனும் பகுதியில், மது எனும் மனநலம் பாதிக்கப்பட்ட பழங்குடி இளைஞர் தன் வயிற்றுப் பசிக்காக அரிசி திருடியதாகச் சொல்லி அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தைச் சொல்லலாம். அவ்வளவு எளிதில் அதை நாம் மறக்க முடியாது. அதை ஒரு குற்றத்துக்கான தண்டனை என்று மட்டும் சொல்லி விட முடியாது. அதிகார வர்க்கம் என்றும் தன் அதிகாரத்தை எளியவர்களிடமே ஏவும் என்பதை வெட்ட வெளிச்சமாக்கிய சம்பவம் அது. பல தொலைத் தொடர்பு சாதனங்கள் பெருகிவிட்ட இந்த நூற்றாண்டிலேயே பழங்குடிகள் இவ்வளவு கொடுமைகளையும் துயர்களையும் சந்திக்கும் வேளையில், சில பல நூற்றாண்டுகளுக்கு முன்பு எவ்வுளவு துயர்களை அவர்கள் அனுபவித்திருப்பார்கள் என்பதை, நாம் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியவில்லை.

சாதியின் பெயரால் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள், இனத்தின் பெயரால் ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் மக்கள், தங்கள் வாழ்விடங்கள் பறிக்கப்பட்டு வஞ்சிக்கப்படும் பழங்குடிகள் என இன்றைய நவீன உலகில் விளிம்புநிலை மக்களாக மாற்றப்பட்டவர்கள் எதிர்கொள்ளும் ஒடுக்குமுறைகள் அநேகம். என்றாலும், இவர்களுக்காகக் குரல் கொடுக்கவும், இவர்களின் உரிமைகளை மீட்டெடுக்கவும் ஏராளமான போராளிகளும், செயற்பாட்டாளர்களும் இன்று களத்தில் நிற்கின்றனர்.

இவர்களுக்கெல்லாம் முன்னோடியாகச் சுமார் 130 ஆண்டுகளுக்கு முன்பே, தன்னுடைய புரட்சிகரச் சிந்தனையாலும், தீரமிக்கப் போராட்டத்தினாலும் பழங்குடிகள் வாழ்வில் மாற்றத்தைக் கொண்டுவர விரும்பினான் ஓர் இளைஞன்; இறந்து 120 ஆண்டுகளாகிவிட்ட போதும், இன்றளவும் பழங்குடிகள் மத்தியிலும், செயற்பாட்டாளர்கள் மத்தியிலும் ஆழ்ந்த தாக்கம் செலுத்துக் கொண்டிருக்கும் அந்த இளைஞன்தான் பிர்சா முண்டா.

யார் அந்த பிர்சா முண்டா?

அநீதிக்கு எதிரான பழங்குடி மக்கள் உரிமைப் போராட்டத்தின் முதல் குரல் பிர்சா முண்டாவுடையதே. ‘பிர்சா’ என்றால் வியாழன், ‘முண்டா’ என்றால் ஆதிவாசி என்று பொருள். 1875-ம் ஆண்டு அன்றைய பீகார் மாநிலதில் தந்தை சுக்ணா முண்டா, தாயார் கர்மி ஹட்டு முண்டா ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார் பிர்சா முண்டா. அப்போதைய காலகட்டத்தில் பிரிட்டிஷ் படையால் இந்தியாவில் பழங்குடி மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்ட நிலை இருந்து வந்தது. அதைத் துணிச்சலோடு எதிர்த்துப் போராடினார் பிர்சா முண்டா. அப்போதைய பிரிட்டிஷ் அரசாங்கம் “காடுகளின் ஒவ்வொரு சதுர அடியும் பிரிட்டிஷ் அரசுக்கே சொந்தம்” எனும் சிறப்புச் சட்டத்தைக் கொண்டு வந்தது.

இதை எதிர்த்து பிர்சா முண்டா “நீர் நமது! நிலம் நமது! வனம் நமது” எனும் கோஷத்தை எழுப்பி பழங்குடி மக்களிடம் கிளர்ச்சியை ஏற்படுத்தினார். 1895-ம் ஆண்டு நடைபெற்ற இந்தப் போராட்டத்தின்போது பிர்சா முண்டாவின் வயது வெறும் 19-தான். அதுவே பழங்குடிகள் வரலாற்றின் முதல் போராட்டமாகும். பண்ணையார்கள் மற்றும் ஜமீன்தார்கள் உதவியுடன் பிரிட்டிஷ் அரசாங்கம் பழங்குடிகளின் நிலங்களைப் பறித்தபோது “ஒரு குரலைவிட, ஒட்டு மொத்த மக்களின் குரலே அதிகாரத்தை அசைக்கும்” என முழங்கி, பழங்குடி மக்களை ஒன்று சேர்த்து படை திரட்டிப் போராடினார்.

“உழைப்பவனுக்கே நிலம் சொந்தம்” எனும் கோட்பாட்டுக்கு அப்போதே செயல் வடிவம் தந்தார் பிர்சா முண்டா. இதனால் பழங்குடிகள் இவரை `தார்தி அபா’ என்று அழைத்தனர். தார்தி அபா என்றால் `மண்ணின் தந்தை’ என்று பொருள். 1899-ம் ஆண்டு பிரிட்டிஷ் படையை எதிர்த்து, கொரில்லா போர் முறையில் மறைந்திருந்து தாக்கும் தந்திரத்தைப் பயன்படுத்தி வில், அம்புகளை மட்டுமே கொண்டு எதிரிகளை வீழ்த்தினார் பிர்சா முண்டா. இந்தப் போராட்டத்துக்கு `உல்குலான்’ என்று பெயர்.

பிரிட்டிஷ் படையை எதிர்த்துப் போராடிய குற்றத்துக்காக பிர்சா முண்டா 1900-ம் ஆண்டு மார்ச் 3-ம் திகதி பிர்சா முண்டா கைதுசெய்யப்பட்டுச் சிறையிலடைக்கப்பட்டார். சிறையிலிருந்த மூன்று மாதங்களில், இரத்த வாந்தியெடுத்து, கடும் நோயால் பிர்சா முண்டா பாதிக்கப்பட்டிருந்தார். 1900-ம் ஆண்டு ஜூன் 9-ம் திகதியன்று காலரா பாதிப்பால் அவர் இறந்ததாக அறிவித்தனர். அப்போது அவருக்கு வயது வெறும் 25 மட்டும்தான். பிர்சா முண்டா இறந்து சரியாக எட்டு ஆண்டுகள் கழித்து சோட்டாநாக்பூர் சட்டம் (Chotanagpur Tenancy Act 1908) கொண்டுவரப்பட்டது. ஆதிவாசிகளின் நிலத்தை வேறு யாரும் பயன்படுத்த முடியாது என்பதை இந்தச் சட்டம் உறுதி செய்தது.

பிர்சா முண்டா மறைந்து நூறாண்டுகள் கடந்த பின்பும் ஆதிவாசிகள் தங்கள் அடிப்படை உரிமைகளுக்காகப் போராடியே வருகின்றனர். இதற்கு ஓர் உதாரணமாக இரண்டு வருடங்களின் முன்னர் அமேசான் காட்டுத் தீ விபத்தில் பல்லாயிரகணக்கான ஆதிவாசிகள் பாதிக்கப்பட்டனர். அவர்கள் காட்டைவிட்டு வெளியேற அரசால் பலவகையில் நிர்பந்திக்கப்பட்டனர். இன்னமும் அவர்களுக்கான உரிமையும் உடமையும் உறுதி செய்யப்படாத நிலையே உள்ளது. உலகின் ஒவ்வொரு மூலையிலும் மனிதன் சக மனிதனாலேயே அடக்குமுறைக்கும் ஒடுக்குமுறைக்கும் உள்ளாக்கப்படுகிறான்.

இதற்குச் சமீபத்தில் அமெரிக்காவில் இரண்டு வருடங்களுக்கு முன் நடந்த சம்பவத்தையே உதாரணமாகக் கூறலாம். ஜோர்ஜ் ஃப்ளாயிட் எனும் கறுப்பினத்தைச் சேர்ந்த ஒருவரை வெள்ளைக் காவலர் ஒருவர் கழுத்தில் கால் வைத்து மிதித்துக் கொன்ற சம்பவம் இன்னும் போராட்டமாக வெடித்துக்கொண்டிருக்கிறது. “என்னால் மூச்சு விட முடியவில்லை, தயவு செய்து என்னை கொல்லாதீர்கள்” என்று அவர் அந்தக் காவலரிடம் கெஞ்சும் குரல் இன்னும் நம் காதுகளுக்குள் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது.

மனிதன் சக மனிதனை சாதி, மதம், மொழி, இனம், நிறம் என எவ்வகையிலும் பிரிக்காமல் ஒருவரோடு ஒருவர் சமத்துவத்தோடு வாழும் நாளே மனித சமூகத்தின் விடுதலை நாளாகும். பிர்சா முண்டா போன்ற போராளிகளை வரலாறு நமக்கு அடையாளம் காட்டியது நாம் அவர்களின் இலட்சிய பயணத்தில் பங்குகொள்ளத்தான் என்பதை நாம் உணர வேண்டும். இந்திய பாராளுமன்றத்தில் இருக்கும் ஒரே பழங்குடி இனப் போராளியின் படம் பிர்சா முண்டாவின் படம் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அதுமட்டுமன்றி விமான நிலையம் முதல் பல்கலைக்கழகம் வரை அவர் பெயரை சூட்டி அவரை பெருமைப்படுதியுத்தியுள்ளது கவனிக்கத்தக்கது. பிர்சா முண்டாவின் வரலாறு `வேற்றுமை களைந்து ஒற்றுமை காண்போம்’ என்பதை நமக்கு உணர்த்துகிறது.

Tags: