அக்னிபத் திட்டம்: பற்றி எரியும் இந்திய மாநிலங்கள்!
அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து இளைஞர்கள் நடத்தும் போராட்டத்தால் இந்தியா முழுவதும் பதற்ற நிலை உருவாகியுள்ளது. இந்திய மத்திய அரசின் திட்டத்தை எதிர்த்து பா.ஜ.க அலுவலகங்கள், இந்திய மத்திய அரசு சொத்துகளான ரயில்கள், சுங்கச்சாவடிகள் ஆகியவற்றுக்கு தீ வைத்தும், கல் வீசி தாக்கியும் சேதப்படுத்தப்படுகிறது.
4 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் ராணுவத்தில் இளைஞர்களை பணியமர்த்தும் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து இளைஞர்கள் கடந்த 3 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தெலங்கானா, பாஜக ஆளும் மத்தியப் பிரதேசம், பீகார், மேற்கு வங்கம், ஒடிசா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, டெல்லி என பல்வேறு மாநிலங்களிலும் போராட்டம் தீயாய் பரவியிருக்கிறது.
திருச்சியில் கைது
நேற்று வேலூரில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் இன்று திருச்சியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி ரயில் நிலைய தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டக்காரர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். அப்போது சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் 35க்கும் மேற்பட்டோரைக் கைது செய்தனர். மேலும் சில மாணவர்களைச் சமாதானப்படுத்தி தண்டவாளத்திலிருந்து அப்புறப்படுத்தினர்.
தெலங்கானா
செகந்தராபாத் ரயில் நிலையத்தில் போராட்டக்காரர்கள் குவிந்து ரயிலுக்கு தீ வைத்துத் தாக்குதல் நடத்தியதால் பதற்றம் அதிகரித்தது. அனைத்து ரயில்களின் இயக்கத்தையும் நிறுத்தியதோடு சுமார் 3 ரயிலுக்கு தீ வைத்தனர். ரயில் நிலையத்திலிருந்த பொருட்களையும், தண்டவாளத்தையும் சேதப்படுத்தினர். இதனால் போராட்டக்காரர்களைக் கலைக்க தெலங்கானா போலீசார் வான்வழி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த சம்பவங்களால் ஒருவர் உயிரிழந்தார், 15 பேர் காயமடைந்தனர்.
பீகார்
பீகாரில் மூன்றாவது நாளாகப் போராட்டம் நடந்து வருகிறது. துணை முதல்வர் ரேணு தேவியின் வீடு மற்றும் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீது அக்னிபத் திட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்திய இளைஞர்கள் தாக்குதல் நடத்தினர். இந்தச்சூழலில், “இத்தகைய வன்முறை சமூகத்திற்கு மிகவும் ஆபத்தானது. இது சமூகத்திற்கு ஒரு இழப்பு என்பதைப் போராட்டக்காரர்கள் நினைவில் கொள்ள வேண்டும்” என்று ரேணு தேவி தெரிவித்துள்ளார்.
பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தில் ஜம்மு தாவி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. நாளந்தாவில் உள்ள இஸ்லாம்பூர் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த இஸ்லாம்பூர்-ஹதியா விரைவு ரயிலுக்கு ஒரு கும்பல் தீ வைத்தது. இதில் மூன்று ஏசி பெட்டிகள் முற்றிலும் எரிந்து நாசமானது. மேலும் பல பெட்டிகள் சேதமடைந்தன. லக்கிசராய் மாவட்டத்தில் உள்ள பாஜக அலுவலகம் தாக்கப்பட்டது.
ஹரியானா
ஹரியானாவில் இரண்டாவது நாளாக இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜிந்த் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலுக்கு தீ வைக்கப்பட்டது. போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு ஏற்படுவதைத் தவிர்க்க நாளை வரை இணையச் சேவை மற்றும் எஸ்.எம்.எஸ். சேவையை மாநில அரசு நிறுத்தி வைத்துள்ளது.
இந்த சம்பவங்களால் நாடு முழுவதும் 200 ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டிருப்பதாக ரயில்வே தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுபோன்று வன்முறையின் காரணமாக திடீரென இன்று சென்னையிலிருந்து பீகார், தெலங்கானா ஆகிய மாநிலங்களுக்குச் செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்பு ஏன்?: தரைப் படை, கடற் படை, வான் படை என முப்படைகளிலும் இளைஞர்களை வேலைக்கு அமர்த்தும் வகையில் அக்னிபத் என்ற திட்டத்துக்கு மத்திய அரசு கடந்த ஜூன் 14ஆம் தேதி ஒப்புதல் வழங்கியது,
17.5 முதல் 21 வயதுடைய ஆண்கள், பெண்கள் மருத்துவ தகுதியின் அடிப்படையில் இத்திட்டத்தின் கீழ் பணிக்குச் சேரலாம். திட்டத்தில் பணியில் சேருவோர் ‘அக்னி வீரர்கள்’ என அழைக்கப்படுவார்கள். இந்த ஆண்டு 46,000 பேர் பணியமர்த்தப்பட இருக்கிறார்கள். ஒப்பந்த அடிப்படையில் 4 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றும் அக்னி வீரர்கள் ரூ.11 இலட்சம் முதல் 12 இலட்சம் வரை நிதி உதவியுடன் வெளியேற்றப்படுவார்கள். இந்த திட்டத்தின்மூலம் 25 விழுக்காட்டினர் மட்டுமே, இந்தியப் படையில் நிரந்தரப் பணி வாய்ப்பு பெறுவார்கள். 75 விழுக்காட்டினர் வெளியேற்றப்படுவார்கள்.
அக்னிபத் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கும் நிலையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, “இது ஆர்.எஸ்.எஸ். கொள்கையை அமல்படுத்தும் திட்டம்” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
இன்று (ஜூன் 17) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தப் புதிய ஆள்சேர்ப்புக் கொள்கையின் முதன்மை நோக்கமே, இந்தியப் படையில் பெருகி வருகின்ற ஓய்வு ஊதியச் செலவுகளைத் தடுப்பதுதான் என்று ராணுவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
இது நியாயமற்ற தேர்வு முறை; இந்தியப் படையில் ஒதுக்கீடு பெற்று இருக்கின்ற பல்வேறு பிரிவினரைக் கடுமையாகப் பாதிக்கும் என முன்னாள் இராணுவத்தினர் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். எனவே இந்தத் திட்டத்திற்கு எதிராக, பிகார், ஹரியானா, ஜார்கண்ட் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களில் இளைஞர்கள் கொதித்து எழுந்து போராட்டத்தில் இறங்கி உள்ளனர். பிகாரில் ரயிலுக்குத் தீ வைத்துள்ளனர்.
நாட்டில், வேலையின்மை அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இலட்சக்கணக்கான இளைஞர்கள் இந்தியப் படையில் சேர்ந்து பணியாற்ற விரும்புகின்றனர்.
இந்த நிலையில், தொழில் நிறுவனங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை அமர்த்தி, பிறகு தூக்கி எறியும் நடைமுறை போன்று, ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்களை இந்தியப் படையில் சேர்த்துவிட்டு, தொடர்ந்து பணியாற்ற வாய்ப்பு அளிக்காமல், 4 ஆண்டுகளில் தூக்கி வீசுகின்ற நடைமுறை, ராணுவத்தின் மதிப்பையும், மரியாதையையும் குறைத்து விடும்.
அதுமட்டும் அல்ல, ஒன்றிய பா.ஜ.க. அரசின் இன்னொரு உள்நோக்கம் இதில் ஒளிந்து இருக்கின்றது. “இந்திய ராணுவத்தைக் காவி மயம் ஆக்க வேண்டும் என்கின்ற, ஆர்.எஸ்.எஸ். கொள்கையைச் செயல்படுத்துவதற்கான மறைமுகத் திட்டமே ‘அக்னிபத்’ என்ற ஐயம் ஏற்பட்டு இருக்கின்றது.
அதாவது, 21 வயதில் வெளியேற்றப்படுகின்ற அந்த இளைஞர்களுக்கு, 12 ஆம் வகுப்புத் தேர்வு சான்றிதழ் தரப்படும் என்கிறார்கள். ஆனால், அதே காலகட்டத்தில், கல்லூரிகளில் பயில்கின்ற இளைஞர்கள், 20 வயதில் பட்டப் படிப்பை முடித்து, 21 வயதில் ஓராண்டு உயர்கல்வியும் முடித்து இருப்பார்கள். 4 ஆண்டுகள் படைப்பயிற்சியை முடித்த இளைஞர்களுக்கு, அதன்பிறகு உயர்கல்வி என்பது எட்டாக் கனியாக ஆகி விடும். இதுதான் உள்நோக்கம்.
இந்தத் திட்டத்தால், இந்திய இளைஞர்களின் ஒட்டுமொத்தமான எதிர்ப்புக்கு உள்ளாக நேரிடும் என்பதை பா.ஜ.க. அரசு உணர்ந்து கொள்ள வேண்டும். ‘அக்னி பாத்’ திட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
-பிரியா