அண்ணாவின் சிவாஜியும், மராத்திய சிவசேனாவும்…

-ராஜன் குறை

றிஞர் அண்ணா எழுதிய நாடகங்களில் அரசியல் சிந்தனைகளைப் பொறுத்த அளவில் மிக முக்கியமானது “சந்திரமோகன் அல்லது சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்” என்பதாகும். நூறு கூட்டங்களில் பேச வேண்டிய விஷயங்களை இந்த நாடகம் ஒரே நிகழ்வில் பேசி விடுகிறது என்று பெரியாரால் பாராட்டப்பட்ட நாடகம் இது. வங்க தேச வரலாற்று ஆசிரியர் ஜாது நாத் சர்க்காரால் எழுதப்பட்ட சத்ரபதி சிவாஜி (Chhatrapati Shivaji Raje Bhosle) குறித்த வரலாற்றுத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படைப்புதான் அந்த நாடகம். துவக்கக் கால தி.மு.க கருத்தரங்குகளில், மாவட்ட மாநாடுகளில் இரவில் தவறாது நிகழ்த்தப்பட்ட கொள்கை கருவூலம் அந்த நாடகம். இன்று ஒரு இளைஞருக்குத் தோன்றலாம், அது ஏன் அண்ணா தமிழகத்து மாமன்னர்களை குறித்து நாடகம் எழுதாமல், மராத்திய சிவாஜியைக் குறித்து எழுதினார் என்று. அதற்கான காரணம் மிக முக்கியமானது. இன்றைய மராத்திய அரசியல் நிகழ்வுகளுக்கும் அந்த காரணத்துக்கும் நெருங்கிய தொடர்பும் உள்ளது என்றால் மிகையாகாது.

சிவசேனா என்பதன் பொருள் சத்ரபதி சிவாஜியின் சேனை என்பதாகும். மராத்தி மொழி தொன்மையானது என்றாலும், ஒரு மராத்திய சாம்ராஜ்யம் என்பது உருவானது சிவாஜியின் தலைமையில்தான். இந்திய உபகண்டத்தில் இறுதியாகத் தோன்றிய பேரரசு என்பதும் இதுதான். 1674ஆம் ஆண்டு சிவாஜி அரியணை ஏறியபோது நிறுவப்பட்ட மராத்திய சாம்ராஜ்யம், நூற்று நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு 1818ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களுடனான போரில் தோல்வியுற்றதுடன் முடிவுக்கு வந்தது. இந்த நூற்று நாற்பது ஆண்டுகளில் மராத்திய படைகள் டெல்லி, வங்காளம், தஞ்சாவூர் என்று இந்தியாவின் பல பகுதிகளை கைப்பற்றின. இந்தியா பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் வருவதற்கு முன்னால் உருவான மிகப் பரவலான ஒரு சாம்ராஜ்ய விரிவாக்கமாக சிவாஜியின் மராத்திய சாம்ராஜ்யம் விளங்கியது என்றால் மிகையாகாது. அதனால் சிவாஜி என்ற பெயர் மராத்திய அடையாளத்தின் இன்றியமையாத மையமாக விளங்குகிறது. இருந்தபோதும் இந்திய ஜாதீய சமூகத்தில் இந்த நூற்று நாற்பது ஆண்டுகள் மோசமான தாக்கங்களை ஏற்படுத்தவே செய்தன. அவை என்னவென்று புரிந்துகொள்வதற்கு முன்னால் அண்ணாவின் நாடகத்தின் உட்கருத்து என்னவென்று பார்ப்போம்.

சிவாஜியின் வாளும், காக பட்டரின் தர்ப்பைப் புல்லும்

சிவாஜியைக் குறித்து எத்தனை மாறுபட்ட தகவல்கள், கருத்துகளை வரலாற்று ஆசிரியர்கள் கூறினாலும் அவர்கள் யாரும் மறுக்கவியலாத உண்மை அவர் ஒரு மிகப்பெரிய போர்வீரர் என்பதுதான். தனது வாளின் வலிமையால்தான் அவர் பல்வேறு கோட்டைகளைக் கைப்பற்றி மராத்திய சாம்ராஜ்யத்தை உருவாக்கினார். ஆனால், அவர் குடியானவர் குலத்தைச் சேர்ந்தவர். சத்திரியர் அல்லர். அவர் வாளின் வலிமையால் கோட்டைகளையும், நிலப்பகுதிகளையும் கையகப்படுத்தினாலும் அந்தப் பகுதிகளில் நிலையான ஆட்சியை உருவாக்க வேண்டுமென்றால் அரியணை ஏறி சத்ரபதியாக மகுடம் சூட வேண்டும். அன்றைய மராத்திய சமூகத்தில் பார்ப்பனர்களும், காயஸ்த்துகள் அல்லது பிரபுக்கள் எனப்படும் பார்ப்பனர்களுக்கு அடுத்த நிலையில் காணப்படும் சத்திரிய ஜாதியினரும் மட்டுமே படித்தவர்களாக இருந்தார்கள். இவர்கள் ஒத்துழைக்காமல் அரசாங்கத்தை நிர்வகிக்க இயலாது. இவர்கள், குறிப்பாக பார்ப்பனர்கள் சத்திரியரல்லாத சிவாஜி சத்ரபதி ஆவதை ஏற்றுக்கொள்ள மறுத்தார்கள். அதனால் சிவாஜி வாரணாசியில் இருந்த வேத விற்பன்னரான காக பட்டர் என்பவரை தன்னை சத்திரியராக அறிவிக்கும்படி கோர வேண்டியிருந்தது. காக பட்டருக்கும், பல திசைகளிலிருந்து வந்த பார்ப்பனர்கள் அனைவருக்கும் ஏராளமான பொன்னும் பொருளும் தானமாக தந்து, பல சடங்குகளை செய்த பிறகே சிவாஜிக்கு சத்திரிய அந்தஸ்து அளிக்கப்பட்டு அவர் சத்ரபதியாக முடி சூடுவது சாத்தியமானது.

இந்த வரலாற்று நிகழ்வை மையமாக வைத்து அண்ணா பார்ப்பனர்களின் அதிகாரம் எத்தகையது என்ற கேள்வியை எழுப்புகிறார். சிவாஜியின் வீரத்தால், அவருடைய வாளின் பலத்தால்தான் சாம்ராஜ்யம் உருவானது. ஆனால், அதை ஆள்வதற்கு வெறும் தர்ப்பைப் புல்லை கையில் பிடித்து சடங்குகளை செய்யும் பார்ப்பன பூசாரி வர்க்கத்தின் தயவு தேவைப்படுகிறது. இந்த நிலைக்கு காரணம் என்ன என்பதை சந்திரமோகன் என்ற போர் வீரன் வாயிலாக சிந்திக்க முற்படுகிறார் அண்ணா. மக்களிடம் மிகுந்துள்ள அறியாமையும். பார்ப்பனர்களின் மூட நம்பிக்கைகளுக்கு ஆட்பட்டு இருப்பதும் காரணம் என்பது தெளிவாகிறது. மக்கள் விழிப்புணர்வு பெற்றால், தங்களுக்கு அரசதிகாரத்தில் பங்கேற்க வாய்ப்பிருக்கிறது என்பதை உணர்ந்தால் அரசு நிர்வாகத்திற்கு பார்ப்பனர்களின் தயவு தேவைப்படாது. அதனால் சந்தர்ப்ப வசமாக காக பட்டருடன் சமரசம் செய்துகொண்டு அவர் சொற்படி நடந்தாலும், அதைக் கண்டு வெகுண்டெழும் படைவீரன் சந்திரமோகனிடம் மக்களிடையே மன மாற்றத்தை ஏற்படுத்தும்படி பணிக்கிறார் சிவாஜி. போரில் நாம் படையெடுக்கும் அன்னியர்களை வெல்லலாம். ஆனால் நம் சமூகத்தில் வேரூன்றியுள்ள ஆதிக்க சக்திகளிடமிருந்து விடுதலை பெற அறிவாயுதமே உதவும். எனவேதான் மராத்திய புலே, அண்ணல் அம்பேத்கர், பெரியார் ஆகிய அனைவருமே கத்தியைத் தீட்டாமல், புத்தியைத் தீட்டவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்கள். சந்திரமோகன் நாடகமும் அதையே கூறுகிறது.

அண்ணாவின் நாடகம் மிக சுவாரஸ்யமான காட்சி அமைப்புகளைக் கொண்டது. பார்ப்பனர்களால் எப்படி தங்கள் வசதிக்கேற்ப தர்ம சாஸ்திரங்களை, சட்ட திட்டங்களை வளைக்க முடிகிறது என்பதையும், அந்த ஆற்றலின் மூலம் யார் போரில் வென்று அரசைக் கைப்பற்றினாலும் தங்கள் அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்கிறார்கள் என்பதையும் சுவாரஸ்யமான சிறிய எளிய வசனங்கள் மூலம் காட்சிப்படுத்தியிருப்பார் அண்ணா. துவக்கக் காலத்தில் கட்சி மாநாடுகளில் பெரும்பாலும் அண்ணாவே காக பட்டர் வேடத்தில் நடிக்கவும் செய்துள்ளார். ஏனெனில் காக பட்டரின் வசனங்களில்தான் பார்ப்பனர்களின் சுயநலமும், அதிகார வேட்கையும் வெளிப்படுகின்றன. முதல்முறை நாடகம் அரங்கேறும்போது சிவாஜி வேடத்தில் விழுப்புரம் சின்னையா பிள்ளை கணேசன் நடித்ததும், பெரியாரால் பாராட்டப்பட்டு சிவாஜி என்றே அழைக்கப்பட்டதும், அதனால் பின்னாளில் சிவாஜி கணேசன் என்றும் சுருக்கமாக சிவாஜி என்றும் அவர் அழைக்கப்பட்டதும் வரலாறு.

தாக்கரே குடும்பம்

சிவசேனையை 1966ஆம் ஆண்டு தோற்றுவித்தவர் பால் தாக்கரே (Bal Thackeray, 1926-2012). இவருடைய தந்தை கேஷவ் சீத்தாராம் தாக்கரே (Keshav Sitaram Thackeray, 1885-1973) ஒரு முக்கியமான சமூக சீர்திருத்தவாதி, மராத்திய மொழி எழுத்தாளர். இவருடைய சமூகமான சந்திரசேனீய காயஸ்த பிரபு (CKP) என்ற சமூகம் சத்திரியர்களல்ல என்று ராஜுவாடே என்ற மராத்திய சிந்தனையாளர் எழுதியபோது அவருக்கு கடுமையான மறுப்பு ஒன்றை எழுதியவர். எப்படி சிவாஜியின் சாம்ராஜ்யம் உருவாக தங்கள் சமூகம் ரத்தம் சிந்தியது என்று கூறிய அவர், பார்ப்பனர்கள் தொடர்ந்து தங்கள் சமூகத்தின் உரிமைகளை மறுத்து வந்திருப்பதை சுட்டிக்காட்டினார். பின்னாளில் சம்யுக்த மகாராஷ்டிர சமிதி என்ற அமைப்பினை தோற்றுவித்து மராத்திய மொழி பேசும் மக்கள் வாழும் பகுதிகள் தனி மாநிலமாக உருவாக்கப்பட வேண்டும் என்று போராடினார். மும்பை நகரமும் அதன் பகுதியாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கையிலும் வெற்றி கண்டார். மராத்திய அடையாளமும், பார்ப்பனரல்லாதோர் அடையாளமும் அவரால் முன்வைக்கப்பட்டது.

மராத்திய சாம்ராஜ்யத்தின் வரலாற்றிலேயே பார்ப்பனர், பார்ப்பனரல்லாதோர் உள்முரண் தீவிரமாக உள்ளது. சிவாஜி தான் ஒரு இந்து சாம்ராஜ்யத்தை உருவாக்குவதாகத்தான் கூறினார். ஆனால், அந்த இந்து மத சாஸ்திரங்களின் பேரால் பார்ப்பனர்கள் அவரை சத்திரியராக ஏற்றுக்கொள்ள மறுத்தனர். பெரும் செலவு செய்து பார்ப்பனர்களின் ஆதரவினைப் பெற்றுதான் அவர் அரியணை ஏற முடிந்தது. அவருடைய பேரன் ஷாஹூ அரியணையில் அமர்ந்தபோது, பாலாஜி விஸ்வநாத் என்ற சித்பவன் பார்ப்பனர் சக்தி வாய்ந்த பேஷ்வாவாக உருவானார். அதன் பின்னர் மன்னரை ஒரு குறியீட்டு அதிகார மையமாக மாற்றிவிட்டு, பார்ப்பன பேஷ்வாக்களே மராத்திய சாம்ராஜ்யத்தை ஆண்டனர். முன்னெப்போதும் இல்லாத அளவு ஜாதீய ஒடுக்குமுறை இவர்கள் ஆட்சியில் தீவிரமடைந்தது. சிவாஜி காலத்திலிருந்தே மராத்திய சாம்ராஜ்யம் தக்காண சுல்தான்களுடனும். மொகலாயர்களுடனும் இறுதியில் ஆஃகானியர்களுடனும் போரிட்டு வந்துள்ளதால் இந்து அடையாளமும் அதற்கு ஏற்பட்டிருக்கிறது. ஒரு வகையில் சொன்னால் பார்ப்பனர், பார்ப்பனரல்லாதோர் முரணை இந்து, முஸ்லிம் முரணால் பதிலீடு செய்வதும், மராத்திய அடையாளத்தை இந்திய அடையாளத்தினால் பதிலீடு செய்வதும் சாத்தியமாவதற்கு 140 ஆண்டுக்கால மராத்திய சாம்ராஜ்ய வரலாற்றின் முரண்களே காரணம் எனலாம்.

சிவசேனையின் கதை

சிவசேனை தோன்ற காரணம் மும்பையில் அந்நியர்களின் ஆதிக்கம் அதிகம் இருந்ததும், மராத்திய மண்ணின் மைந்தர்களுக்கு உரிய அளவு பொருளாதார வளர்ச்சியில் பங்கு கிடைக்கவில்லை என்பதுமாகும். பால் தாக்கரே உயர் வகுப்பினரானாலும் அடித்தட்டு மக்களின் அணி திரட்டுதலாகவே சிவசேனை உருவாகியது எனலாம். துவக்கத்தில் காங்கிரஸ் ஆதரவாக செயல்பட்ட சிவசேனா, பின்னர் களத்தில் முஸ்லிம் தாதாகிரி கட்டமைப்புகளுடன் ஏற்பட்ட முரண்பாட்டால் இந்து அடையாள அரசியல் பக்கம் சாயத் துவங்கியது. பாரதீய ஜனதா கட்சியுடன் இணைந்து செயல்படத் துவங்கியது.

பாரதீய ஜனதா கட்சியுடன் மதக்கலவரங்களில் பங்கேற்பு, தேர்தல் கூட்டணி, ஆட்சியை பகிர்ந்துகொள்ளுதல் என்று செயல்படும்போது இந்து, இந்தி, இந்தியா அடையாளத்தில் கரையும்போது பார்ப்பனரல்லாத, மராத்திய மாநில அடையாளம் பலவீனப்பட்டு பாரதீய ஜனதா கட்சியின் ஆதரவு தளம் அதிகரித்து தாங்கள் உள்ளிழுக்கப்படுவதை உணர்ந்தது சிவசேனா.

மற்றொருபுறம் பால் தாக்கரேவின் வாரிசு அவர் மகன் உத்தவ் தாக்கரேவா (Uddhav Thackeray), மருமகன் ராஜ் தாக்கரேவா என்ற போட்டியில் பிளவு ஏற்பட்டு ராஜ் தாக்கரே தனியே பிரிந்து சென்ற மஹாராஷ்டிர நவ நிர்மாண் சேனா என்ற அமைப்பை தோற்றுவித்தார். அதன்பின் 2012ஆம் ஆண்டு பால் தாக்கரேவும் மரணமடைந்தார். இதனாலெல்லாம் சிவசேனை பலவீனமடைந்ததாக கருதிய பாஜக, அதனை அலட்சியமாக நடத்தத் துவங்கியது. குறிப்பாக 2019 தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும், வெற்றி பெற்ற பிறகு முதல்வர் பதவியை சிவசேனாவுக்குக் கொடுக்க மறுத்தது பாஜக. தேர்தலுக்கு முன்னால் ஏற்பட்ட புரிந்துணர்வினை பாஜக மீறுவதாக கூறிய சிவசேனா பாஜகவுக்கு அரசமைக்க ஆதரவு தர மறுத்தது. பாஜக, சரத் பவாரின் கட்சியை பிளந்து அவர் மருமகன் அஜித் பவார் துணையுடன் ஆட்சியைப் பிடிக்க முயற்சி செய்து பரிதாபமாக தோற்றது. அதன்பின் சிவசேனா, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸுடனும், இந்திய தேசிய காங்கிரஸுடனும் இணைந்து ஆட்சி அமைத்தது. உத்தவ் தாக்கரே முதலமைச்சரானார்.

சிவசேனா தங்கள் பிடியிலிருந்து நழுவியதை சகித்துக்கொள்ள முடியாத பாஜக, ஆட்சிக்கு பல்வேறு அழுத்தங்களைத் தந்துகொண்டே இருந்தது. பல்வேறு வழக்குகள், விசாரணைகள் என்று சிவசேனா, கூட்டணிக் கட்சி தலைவர்கள் மீது தாக்குதல்கள் தொடர்ந்தன. சிவசேனாவின் இரண்டாம்கட்ட தலைவரான ஏக்நாத் ஷிண்டேவினை தூண்டிவிட்டு, அவர் மூலம் சட்டமன்ற உறுப்பினர்களை கவர்ந்திழுத்து உத்தவ் தாக்கரே ஆட்சியைக் கவிழ்த்துவிட்டது பாஜக. ஏக்நாத் ஷிண்டேவை முதல்வராக்கிவிட்டு, பாஜகவின் பட்னாவிஸ் துணை முதல்வராகப் பதவியேற்றுள்ளார். புதிய சபாநாயகரைத் தேர்ந்தெடுப்பதிலும் வெற்றி பெற்று விட்டனர். சிவசேனா கட்சியையும் உத்தவ் தாக்கரேவிடமிருந்து பிடுங்க வேண்டும் என முயற்சி செய்கின்றனர். இதுவரை இந்த மாற்றங்களை மிகுந்த பக்குவத்துடன் எதிர்கொண்டு வருகிறார்கள் உத்தவ் தாக்கரேவும், அவர் மகன் ஆதித்ய தாக்கரேவும்.

சிவசேனா மீண்டும் இரண்டாக பிளந்துள்ளது. இந்து – இந்திய அடையாளத்தை முன்னிலைப்படுத்தி பாரதீய ஜனதா கட்சியுடன் பயணம் செய்யும் ஏக்நாத் ஷிண்டே பிரிவு. மராத்திய, பார்ப்பனரல்லாதோர், மாநில அடையாளத்தை முன்னிலைப்படுத்தி பயணம் செய்யும் சாத்தியத்தைக் கொண்ட உத்தவ் தாக்கரே பிரிவு என இரண்டாகப் பிளந்துள்ளது. உத்தவ் தாக்கரே அணியாலும் முற்றிலும் இந்து அடையாள சொல்லாடலை தவிர்ப்பது கடினம். ஆனால், மராத்திய மண்ணின் மைந்தர் அடையாளத்தை முன்னிலைப்படுத்துவது சாத்தியம். பாரதீய ஜனதா கட்சி பார்ப்பனீய-பனியா நலன்களின் கட்சி என்பதை முக்கிய முரண்பாடாகக் கொண்டால், உத்தவ் தாக்கரே பிற மாநில கட்சிகளுடன் இணைந்து பாஜக எதிர்ப்பினை வலுப்படுத்தும் முக்கிய அரசியல் சக்தியாக மாறலாம். மும்பையில், மும்பைக்கு வெளியே மராத்திய மாநிலத்தில் மக்கள் அவர் பின்னால் நிற்பார்களா, பால் தாக்கரேவின் வாரிசாக ஏற்பார்களா என்பதை வரக்கூடிய நாட்கள் புலப்படுத்தும்.

Tags: