திராவிடக் கொள்கை – ஒரு பார்வை

– ஸ்ரீராம் சர்மா

திராவிடம் என்பதை இன்று ஆளாளுக்கு மனம் போனபோக்கில் உதைத்துப் பந்தாடிக் கொண்டிருக்கிறார்கள்.

திராவிடக் கொள்கையை முற்றாக அழித்துவிடுவோம் என கங்கணம் கட்டிப் பேசுபவர்கள் கூட அது தோன்றியதற்கான காரணத்தை ஆழ உணர்ந்து கொண்டு விட்டால் அப்படி பேச மாட்டார்கள் என்பது எனது துணிபு. என்னளவில் மெல்ல விளக்க முயல்கிறேன்.

உண்மையில், “விசால ஆந்திரம்” “ஐக்கிய கேரளம்” போன்ற கோரிக்கைகள் எழுவதற்கு முன்பே, பொட்டி ஸ்ரீராமுலு மைலாப்பூரின் ஒடுக்கு வீட்டில் உண்ணாவிரதமிருந்து 1952 ல் உயிர் நீற்றதற்கும் முன்பே 1949 ல் தோன்றி நின்றது திராவிட முன்னேற்றக் கழகம் !

திராவிடக் கொள்கை என்பது என்ன? அதன் தோற்றுவாய் என்ன? அதன் வேட்கைதான் என்ன? காண்போம் !

இந்திய விடுதலைக்குப் பிறகான – அந்த நாளைய அரசியல் சூழலைக் கொண்டே திராவிட சித்தாந்தத்துக்கான காரணத்தை நாம் புரிந்து கொண்டாக வேண்டும்.

முதன் முதலில் திராவிடக் கொள்கையை அரசியலாக்கி வைத்த பெருமகனார் பேரறிஞர் அண்ணா. அந்த அரசியலை அவர்வழி கொண்டு நெடுங்காலம் அரசாட்சி கண்டவர் முத்தமிழறிஞர் கலைஞர். அவ்விருவரின் வழி கொண்டுதான் திராவிடக் கொள்கையை நாம் உணர்ந்து கொண்டாக வேண்டும்.

1949 செப்டம்பர் 18 ஆம் தேதி ராபின்சன் பூங்காவில் பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றிய அந்த பேருரை வரலாற்றுச் சிறப்புமிக்கது. அதன் சில பகுதிகள் இந்தக் கட்டுரையின் நோக்கத்துக்கு தேவையற்றது என்பதால் அதன் முத்தாய்ப்பு செய்தியை மட்டும் இன்றைய இளைஞர்களுக்காக இங்கே பதிகிறேன்.

சோவென கொட்டி நின்ற அந்தப் பெருமழைக்கிடையே உணர்வலைகளோடு கூடி நின்ற சாமானிய மக்களிடையே அண்ணா இவ்வாறு பிரகடனப்படுத்தினார்…

“சமுதாயத் துறையிலே சீர்திருத்தம், பொருளாதாரத் துறையிலே சமதர்மக் கொள்கை, அரசியலில் வட நாட்டு ஏகாதிபத்தியனின்று விடுதலை ஆகிய கொள்கைதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்பாடுகளாகும். கொள்கை பரப்புவதே நமது முதல் பணி. பகைமை உணர்ச்சியை அடியோடு விட்டொழிக்க வேண்டும்”

கவனியுங்கள் !

அண்ணாவும் கலைஞரும் உயர்த்திப் பிடித்த திராவிட கொள்கை அரசியலுக்குள் புகுந்த காலம் காங்கிரஸ் ஆண்ட காலம்.

“அரசியலில் வட நாட்டு ஏகாதிபத்தியனின்று விடுதலை” என அண்ணா முழங்கியதற்குக் காரணம், அன்றைய காங்கிரஸின் முக்கியஸ்தர்களில் பலர் ஜமீன்தாரிகளாக – பெரு முதலாளிகளாக இருந்தார்கள்.

“சுதந்திரத்தை நாங்கள்தான் பெற்றுத் தந்தோம். உங்களை எப்படி ஆள்வது என்பது எங்களுக்கு தெரியும். சொல்வதைக் கேட்டு அடிபணிந்து பிழைத்து இருங்கள்…” எனும் படியாக இறுமாப்போடு ஏகாதிபத்தியம் செய்தார்கள். வெளிப்படையாக சொல்லவில்லை எனினும் அவர்களது போக்கும், பிரகடனங்களும் அப்படியாகத்தான் இருந்தன.

“இல்லை, பிரித்தானியர்களிடம் போராடி பெற்ற சுதந்திரத்தில் எங்கள் பங்கும் உண்டு. ஜனநாயக நாடாகிவிட்ட பின்பும் எங்கள் சுயமரியாதையை புறக்கணித்து இனியும் நீங்கள் ஆண்டைகளாகவே செயல்படுவீர்கள் என்றால் அதை ஏற்க முடியாது. அரசியல் ரீதியாக எங்கள் மக்களை திரட்டிப் போராடி எங்கள் உரிமையை மீட்டெடுப்போம்..” என சூளுரைத்தார் அண்ணா !

“அடைந்தால் திராவிட நாடு ; இல்லையேல் சுடுகாடு” என்னும் முழக்கத்தை வைத்த அண்ணா பிறகு பின்வாங்கினாரே எனச் சிலர் எள்ளி நகையாடுவர். அப்படியானதொரு நிலைக்கு அன்று அவரை தள்ளியது எது என அவர்கள் சிந்தித்தாக வேண்டும்.

இன்று நாம் வயிறாற உண்ண முடிகிறது எனில், அது நமக்காக அன்று பட்டினி கிடந்து சொத்து சேர்த்து வைத்த முன்னோர்களின் உழைப்புதானே ? வருங்காலத்தை எண்ணி நலம் சேர்த்த முன்னோர்களை வாழ்த்தாமல் இகழ்வது நியாயமல்ல என்பதை இனியேனும் உணர்ந்தாக வேண்டும் !

அன்றைய நாளில், அண்ணாவின் திராவிட அரசியல் விடுதலை சிந்தனை என்பது இளைத்த முயலுக்கு ஒப்பானது. செல்வந்தர்கள் சூழ பணபலம் பொருந்திய அன்றைய காங்கிரஸோ கொழுத்த வனப் புலிக்கு இணையானது.

தெரிந்தே மோதினார் அண்ணா ! காரணம், “வலுத்தவன் வாழ இளைத்தவன் நோவது, சமூக நீதி ஆகாது” எனும் தனது கொள்கையில் நூறு சதம் நியாயமிருந்தது என அவர் உளமாற நம்பினார்.

திருவாரூரில் இருந்து புறப்பட்ட இளம்புயலாக கருணாநிதி என்பார், ஈடு இணையற்றதோர் தளபதியாக அவருக்கு வந்து வாய்த்தார்.

ஒரு பொதுக்கூட்டத்தில், “முன்னுரையை நான் எழுதிவிட்டேன். முடிவுரையை என் தம்பி கருணாநிதி எழுதுவான்” என்னுமளவுக்கு கலைஞர் மீது நம்பிக்கை கொண்ட அண்ணா மேலும் வேகமெடுத்தார்.

அனைவரையும் அரவணைத்து செல்லும் தகவும் ஆற்றலும் கொண்ட கலைஞருக்குப் பின்னால் அன்றைய திரை பிரபலங்களான எம்.ஜி.ஆர். உள்ளிட்ட பலரும் திமுகவின் இரண்டாம்கட்ட தலைவர்களாக பின்தொடர…

நாடெங்கும் மாநில சுயாட்சிக் கொள்கைகள் குறித்த திராவிட கலை நிகழ்ச்சிகள் – பேச்சுக்கள் என ஓயாமல் பரப்புரை செய்யப்பட… விடுதலை என்பதன் மாட்சியை மக்கள் உணரத் தலைப்பட… மெல்ல மெல்ல அன்றைய காங்கிரஸ் மத்திய ஏகாதிபத்தியத்தின் பகட்டுத் தூண்கள் நொறுக்கி வீழ்த்தப்பட்டன.

1957 ல் அண்ணா , கலைஞர் உட்பட 15 பேர் சட்டமன்றம் புகுந்தனர்.

தங்கள் சுகவாழ்வு பறிபோய்விடுமோ என அஞ்சிய காங்கிரஸ் செல்வந்தர்கள் அந்த நாளில் எத்துனையோ சூழ்ச்சிகளை செய்து பார்த்தனர். அத்தனைக்கும் அறிவு சார்ந்து எதிராட்டம் ஆடி வந்தார்கள் ஒருங்கிணைந்த திராவிடப் பெருந்தலைகள்.

முடிவில், ஏகாதிபத்திய சிந்தனை கொண்ட அன்றைய ஒன்றியம் தமிழகத்தில் வீழ்ந்தது.

மாநில சுயாட்சி விருப்பம் கொண்ட தமிழக மக்கள் ஒன்று திரண்டு ஓட்டளிக்க 1967ல் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைத்தே விட்டது !

குறித்துக் கொள்ளுங்கள்….

காங்கிரஸ் ஏகாதிபத்தியத்தின் போக்கை உள்ளூர எதிர்த்தபடியே குமைந்து கொண்டிருந்த அன்றைய தமிழக மக்களுக்கு ஆதர்ஸ புருஷனாக வாய்த்தார் அண்ணா!

1965 ல் ஹிந்தித் திணிப்பை எதிர்த்து நாடு பற்றி எறிந்தது. அதை தூண்டிவிட்டவர் அண்ணா என்று வரலாறு அறியாத சிலர் மிக எளிதாக இன்று சொல்லி விடுகிறார்கள். அது தவறு ! அவர் வழியே தங்கள் மனக் குமுறலை மக்கள் தீர்த்துக் கொண்டார்கள் என்பதே உண்மை.

அந்த வரலாறு இன்றைய ஆட்சியாளர்களுக்கு ஒரு பாடமாக நிற்கக் கூடும் என்பதால்தான் வலிந்து சொல்கிறேன். மக்கள் சக்தி ஏகாதிபத்திய அணுகுமுறையை என்றும் ஏற்காது.

அன்றும் ஓட்டுக்கு பணம் கொடுக்கப்பட்டது. நாலணா கொடுத்தார்கள். பெருமாள் படத்தின் மேல் சத்தியம் வாங்கினார்கள். ஒருகட்டத்தில், அந்த தப்பாட்டம் பொய்த்துப் போனது.

ஆம், எதேச்சதிகாரப் போக்கு மக்கள் மனதை சலிப்படையச் செய்துவிட்டால் காசு அவர்களுக்கு தூசு என்பதைக் காண்பித்து விடுவார்கள். குப்புறக் கவிழ்த்து விடுவார்கள்.

அந்த உண்மையை காங்கிரஸ் பெருமுதலாளிகள் புரிந்து கொண்ட தருணத்தில் நிலைமை கை மீறிப் போயிருந்தது. பண பலமற்ற அன்றைய திமுக கொண்ட கொள்கையினால், உண்மையான உழைப்பினால், மக்கள் சக்தியினால் ஆட்சி பீடமேறியது.

குறித்துக் கொள்ளுங்கள்… பெரும் செல்வம் படைத்த அன்றைய ஆட்சியாளர்களைப் புரட்டிப் போட்ட திராவிட அரசியலின் மூலகர்த்தாவான அண்ணா பெருமுதலாளியல்லர். பரம்பரை ஜமீந்தாரியல்லர்.

யார் அந்த அண்ணா ?

1909ல் – ஆவணி மாதத்தில் – வட நாட்டு கவிராஜர் காளிதாஸரால் ‘நகரேஷு காஞ்சி’ எனக் கொண்டாடப்பட்ட புண்ணிய மண்ணில் பங்காரு அம்மாளின் உதரம் உதைக்க பிறவி கொண்டு வந்த எளிய பெருமகனார்தான் காஞ்சீவரம் நடராசன் அண்ணாதுரை.

புகழுடைய சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பொருளாதாரம் மற்றும் அரசியலில் பட்டப்படிப்பு முடித்தவர். அதன்பிறகு ஆங்கில ஆசிரியராக பச்சையப்பன் கல்லூரியில் பணியாற்றினார்.

சொந்த வயிறு கழுவத்தானா இந்தப் பிறவி கொண்டேன் என்பதாக சம்பளப் பதவியை உதறித் தள்ளியவர் பத்திரிக்கைத் துறையில் ஈடுபட்டு சமூக கட்டுரைகளாக எழுதிக் குவித்தார். ஒரு கட்டத்தில் அவரது ஆற்றலைக் கண்ட பெரியார் அவரை தன்னோடு இணைத்துக் கொண்டார்.

படிப்பறிவையும் – பட்டறிவையும் ஒருங்கே கொண்ட அண்ணா ஒருகட்டத்தில் – அடிமைகளாக வாழும் தன் இனத்துக்கான பரிபூரண விடுதலை அரசியல் ஆட்சி அதிகாரத்தின் வழிதான் கிடைக்கும் என முடிவெடுத்தார்.

அதன் பின், ஆயிரக்கணக்கான மணி நேரங்களாக அவர் சுழன்றாடிப் பேசிய கூட்டங்கள் தமிழர்களை தட்டி எழுப்பின. மாநில சுயாட்சிக்கான அவரது சொற்பொழிவுகள் கோடிக் கணக்கணக்கான தமிழர்தம் செவிகளில் கொட்டிக் குவிக்கப்பட்டன.

1961ல் தபால் தந்தி ஊழியர்கள் கோவையில் நடத்திய மாநாட்டிலும் – திருவள்ளுவருக்கு திருவுருவம் கண்ட எனது தந்தையார் ஓவியப் பெருந்தகை கே.ஆர். வேணுகோபால் சர்மா அவர்களது சென்னை இல்லத்திலும் பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றிய வரலாற்று சிறப்புமிக்க அந்தப் பேருரைகள்…

அந்தக் கால “ஸ்பூல்” வடிவில் அடியேனால் 60 ஆண்டுக் காலம் காப்பாற்றி வைக்கப்பட்டது. அது, ரோசா முத்தையா நூலகத்தின் இயக்குனர் திரு சுந்தர் அவர்களின் பேருதவியால் இன்று மீட்டெடுக்கப்பட்டுவிட்டது.

பேரறிஞர் அண்ணா அவர்களது அந்த உரையில் சமூகத்தின் பால் அவர் கொண்ட பேரன்பு ததும்பி நிற்க காண முடிகின்றது. அதைக் கேட்கும் தருணம் உலகார்ந்த தமிழ் சமூகம் சிலிர்த்துக் கொண்டாடும் என்பது திண்ணம். விரைவில் வெளி வரும் !

நிற்க !

அறுபது ஆண்டுக் காலம் கடந்த போதிலும் – அண்ணா அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட திராவிட சித்தாந்தம் இன்றளவும் தன்னளவில் வீரியமாக நிலைத்து நிற்கிறது. எனினும்…

தனிப்பட்ட முறையில் அண்ணா என்பவர் புரட்சியாளர்களுக்கே உரிய வெகுண்ட தன்மை உடையவரா எனில் இல்லை. விழி சிவக்க பேசும் தன்மை உடையவரா எனில் இல்லை. எதிரியை பழிக்கும் இயல்பினரா எனில் இல்லை. குயுக்தி உடைய கலகக்காரரா எனில் இல்லை. நாட்டைக் காட்டிக் கொடுக்கும் பிரிவினையாளரா எனில் இல்லை. இல்லவே இல்லை.

உண்மையில், அவர் ஒரு குழந்தை ! அப்படிச் சொன்னவர் அண்ணாவோடு மிக நெருங்கிப் பழகிய எனது தந்தை !

உலகத் தமிழ் மாநாட்டு மலர் ஒன்றில் ‘அண்ணா ஒரு குழந்தை’ எனும் தலைப்பில் பேட்டி ஒன்றைக் கொடுத்திருக்கிறார் எனது தந்தையார். அந்த பேட்டியில் பேரறிஞர் குறித்து சில சுவாரசியங்களையும் பதிந்திருக்கிறார்.

அந்த சுவாரசியங்களை கட்டுரையின் அடுத்த பாகத்தில் ஆதாரங்களோடு பகிர்கிறேன்.

Tags: