ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் ஜனநாயக விரோதம்!
அரசாங்கத்தைப் பதவி விலகுமாறு கோரி கடந்த சனிக்கிழமை ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளையில், ஊடகவியலாளர்கள் தாக்குதலுக்குள்ளான சம்பவங்கள் பரவலாக நடந்துள்ளன. கடந்த வாரத்தில் இடம்பெற்ற எதிர்ப்புப் போராட்டங்களின் போது எல்லாமாக ஊடகவியலாளர்கள் பதினொரு பேர் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அவர்களில் சிலர் வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்றுள்ளனர்.
ஊடகவியலாளர்கள் தாக்குதலுக்கு உள்ளாவதோ அல்லது அடக்குமுறைக்கு உள்ளாவதோ முற்றிலும் ஜனநாயகத்துக்கு விரோதமான செயல்கள் ஆகும். உண்மை நிலைமை வெளியுலகுக்குக் கொண்டு வரப்படுவதைத் தடுப்பதற்காகவே ஊடகவியலாளர்கள் இவ்விதம் அடக்கியொடுக்கப்படுகின்றனர். அதாவது கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் நோக்குடனேயே இவ்வாறு ஊடகவியலாளர்கள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.
இலங்கையில் மாத்திரமன்றி உலகெங்கும் இவ்வாறான நீதிக்குப் புறம்பான சம்பவங்கள் நடந்தேறுகின்றன. ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறைகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக இன, மத, கட்சி பேதங்கள் பாராமல் அனைவரும் இணைந்து குரல் கொடுக்க வேண்டியது அவசியமாகும். அப்போதுதான் நாட்டில் கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாக்க முடியும்.
ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்படுவது, துன்புறுத்தப்படுவது, மிரட்டப்படுவது, சுதந்திரமாக செயற்பட விடாது தடுக்கப்படுவது போன்ற பலவிதமான சம்பங்கள் உலகில் இடம்பெற்றுக் கொண்டேயிருக்கின்றன. உலக நாடுகளில் இதுவரை கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காததாகும். அச்சம்பவங்கள் தொடர்பாக பலதரப்பினராலும் பலத்த கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்ற போதிலும், அவற்றுக்கான நீதி எட்டப்படுவதில்லை என்பதே உண்மை.
இலங்கையிலும் கடந்த காலத்தில் ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவங்கள் அதிகம் இடம்பெற்றுள்ளன. ஊடகவியலாளர்கள் தாக்குதலுக்குள்ளான சம்பவங்களும் அதிகம் நடந்துள்ளன. எனினும் அச்சம்பவங்களுக்கான நீதி நிலைநாட்டப்படவில்லை. அவ்வாறு நீதி நிலைநாட்டப்பட்டிருப்பின் மீண்டும் மீண்டும் அவ்வாறான வன்முறை சம்பவங்கள் இடம்பெறுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டிருக்காது. உரியவாறு விசாரணைகள் நடைபெற்று குற்றவாளிகள் தண்டிக்கப்படாததன் காரணமாகவே ஊடகவியலாளர்கள் மீதான வன்முறைகள் இன்றும் முடிவின்றித் தொடர்கின்றன.
ஊடகவியலாளர்கள் மீதான துன்புறுத்தல்கள் எங்கு இடம்பெறுகின்றனவோ அந்நாடு மீது சர்வதேசம் கண்டனங்கள் தெரிவிப்பது வழமை. ஊடகவியலாளர்கள் அடக்கியொடுக்கப்படுகின்ற நாட்டை ஜனநாயக நாடாக உலகம் ஏற்பதுமில்லை. உண்மைகள் மறைக்கப்பட வேண்டுமென்ற நோக்கத்துக்காகவே அவர்களின் குரல் நசுக்கப்படுகின்றது. எனவே ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக பணியாற்ற இடமளிப்பதே உண்மையான ஜனநாயகத்தின் பண்பாகும்.
இவையெல்லாம் ஒருபுறமிருக்க, மறுபுறத்தில் மற்றொரு விடயம் குறித்தும் இவ்விடத்தில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. ஊடகப் பணிக்கு சுதந்திரம் உள்ளதென்பதற்காக ஊடக ஒழுக்கநெறியை முற்றாக மீறியவாறு தான்தோன்றித்தனமாக செயற்படுவது பெரும் தவறாகும். இன்றைய ஊடகங்கள் பலவற்றின் போக்கை அவதானிக்கின்ற போது, ஊடக ஒழுக்கநெறி எவ்வாறு மீறப்படுகின்றதென்பதை மக்களால் கண்கூடாகக் கண்டுகொள்ள முடிகின்றது.
உறுதிப்படுத்தப்படாத ஆதாரமற்ற செய்திகள், படங்கள், கட்டுரைகளை வெளியிடுகின்ற ஊடகங்களை அதிகம் காண முடிகின்றது. பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், வானொலிகள், இணையத்தளங்கள் பலவற்றில் இவ்வாறான ஊடகமீறல்களை தாராளமாகவே காணக் கூடியதாக உள்ளது. இணையத்தளங்கள் புரிகின்ற விஷமங்கள் ஏராளம். இணையத்தளங்கள் பலவற்றில் ஊடகஒழுக்கமென்பது சிறிதேனும் இல்லை.
அவை செய்திகளை உறுதிப்படுத்துவதில்லை, செய்திக்கான ஆதாரங்களைக் குறிப்பிடுவதில்லை. செய்தியொன்றை எவ்வாறு பக்குவமாக வெளியிடுவதென்ற ஒழுங்குமுறையையும் அவை கடைப்பிடிப்பதில்லை. வதந்திகளாக உலவுகின்ற கதைகளை வைத்தே அவை செய்திகளை தயாரித்து வெளியிடுகின்றன. இணையத்தளங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்வதற்கான உரிய கட்டமைப்பொன்று இல்லாத காரணத்தினால் அவை சட்டநடவடிக்கையிலிருந்து தப்பி விடுகின்றன.
ஆதாரமற்ற, புனைகதை போன்ற செய்திகளை வெளியிடுவதால் குறித்ததொரு தரப்பினர் பாதிக்கப்படுகின்றனர். ஊடகங்கள் நடுநிலைமையைக் கடைப்பிடித்து செயற்படுமானால் குற்றமற்றவர்கள் பாதிக்கப்படுவதற்கு இடமேயில்லை. இணையத்தளங்கள் ஒருபுறமிருக்க, சமூக ஊடகங்களிலும் இவ்வாறுதான் ஆதாரமற்ற அபத்தமான செய்திகள் அதிகளவில் வெளியிடப்படுகின்றன. ஊகங்களை அடிப்படையாக வைத்து கற்பனையாக செய்திகள் புனையப்படுகின்றன.
இணையத்தளங்கள் மற்றும் சமூக ஊடகங்களைக் கட்டுப்படுத்துவதென்பது இலகுவான காரியமல்ல. எனவேதான் அவற்றில் கற்பனையான செய்திகள் அதிகம் வெளிவந்து கொண்டிருக்கின்றன. எனினும் மக்கள் அச்செய்திகளை நம்புவதில்லை. பொழுதுபோக்குக்காகவும், சுவாரஸ்யத்துக்காகவுமே மக்கள் அவற்றைத் தேடுகின்றனர்.
இலங்கையின் ஊடகங்களைப் பொறுத்தவரை ஒழுக்கநெறியுடன் செயற்படும் ஊடகங்களும் உள்ளன, பொறுப்பற்ற முறையில் செயற்படுகின்ற ஊடகங்களும் உள்ளன. எவ்வாறாயினும் ஊடகவியலாளர்கள் எனப்படுவோர் பலவித சவால்களுக்கு மத்தியில் தங்களது கடமைகளை ஆற்றி வருகின்றனர். அவர்களது சிரமம் நிறைந்த கடமைப் பொறுப்புக்கு மதிப்பளிக்க வேண்டியது அனைத்துத் தரப்பினரதும் கடமையாகும். ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தல் எவ்வடிவில் வந்தாலும் அது வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியதாகும்.
-தினகரன் ஆசிரியர் தலையங்கம்
2022.07.12