ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரிமாளிகையில் கைப்பற்றியவற்றை கையளியுங்கள்

ஜனாதிபதி மாளிகை, அலரிமாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகம் ஆகியவற்றை உரிய அதிகாரிகளிடம் கையளிக்குமாறு, ஆக்கிரமிப்பாளர்களுக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) அழைப்பு விடுத்துள்ளது.
சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸ் (Saliya Pieris) மற்றும் அதன் செயலாளர் இசுரு பாலபடபெந்தி (Isuru Balapatabendi) ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், கட்டடங்களில் இடம்பெற்ற நாசகாரச் செயல்கள் குறித்து மிகவும் கவலையடைவதாக சங்கம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி மாளிகை, அலரிமாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகம் ஆகியவை போராட்டக் குழுக்களின் உறுப்பினர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், பெருமளவிலான மக்கள் தொடர்ந்தும் அந்த வளாகத்துக்கு வருகை தருவதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்கள் மற்றும் பிற பொதுச் சொத்துக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யுமாறு அவற்றை ஆக்கிரமித்துள்ளவர்களைக் கேட்டுக் கொள்வதுடன், இந்தக் கட்டடங்களின் புனிதத்தன்மைக்கு மதிப்பளிக்குமாறு சங்கம் அவர்களை வலியுறுத்தியுள்ளது.
சுமூகமான மற்றும் அமைதியான அதிகார மாற்றத்துக்கான தனது அழைப்பை சட்டத்தரணிகள் மீண்டும் வலியுறுத்துவதுடன், கட்சித் தலைவர்களால் கடைப்பிடிக்கப்பட வேண்டிய குறுகிய காலக்கெடுவை வரவேற்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையை ஆளும் கட்டமைப்பான அரசியலமைப்பின் விதிகளை புறக்கணிப்பது நமது நாட்டுக்கும் அதன் மக்களுக்கும் சிறந்ததல்ல என்றும் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
போராட்டம் நடத்தும் பொதுமக்களின் கோரிக்கைகள் மற்றும் அபிலாஷைகளை கவனத்தில் கொள்வது முக்கியம் என்றும் ஓர் ஒழுங்கான மாற்றத்தை உறுதிப்படுத்துவதும், சட்டத்தின் ஆட்சிக்கு தொடர்ந்து மரியாதை செய்வதும் சமமாக முக்கியமானது என்றும் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
தொல்லியல் சின்னங்களை திருடினால், சேதப்படுத்தினால் சட்டநடவடிக்கை!

ஜனாதிபதி மாளிகை, அலரிமாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகம் உள்ளிட்ட இடங்களில் உள்ள தொல்லியல் சின்னங்களைத் திருடினாலோ அவற்றுக்கு சேதம் விளைவித்தாலோ, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தொல்லியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தொல்லியல் கட்டளைச் சட்டத்தின் கீழ் குறித்த நபர்களுக்கு எதிராக இவ்வாறு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அநுர மனதுங்க விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் மற்றும் அதன் பின்னரான நிலை என்பவற்றால், கொழும்பு ஜனாதிபதி மாளிகை உள்ளிட்ட இடங்களில் தொல்லியல் சின்னங்கள் சேதமாக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மாளிகை உள்ளிட்ட இடங்களில் உள்ள தொல்லியல் சின்னங்கள் சேதமாக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும்.
இதற்கமைய, அங்குள்ள தொல்லியல் மதிப்புமிக்க சின்னங்களைப் பாதுகாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம் மற்றும் அலரி மாளிகை முதலான இடங்கள் இன்றைய தினம் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டது.
தேசிய மரபுரிமைகளைப் பாதுகாக்க வேண்டியது பொதுமக்களின் பொறுப்பும், கடமையுமாகும் என தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அநுர மனதுங்க தெரிவித்துள்ளார்.
கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பட்டத்தின் பின்னர் கொழும்பு – கோட்டை பகுதியில் உள்ள ஜனாதிபதி மாளிகை உள்ளிட்ட இடங்களில் ஏற்பட்டுள்ள சேதம் தொடர்பில் மதிப்பீடு செய்யும் பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் குழு இன்று முற்பகல் ஜனாதிபதி மாளிகைக்கு சென்று குறித்த பணிகளை முன்னெடுத்திருந்தது.
இதன்போது தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அநுர மனதுங்கவும் பிரசன்னமாகியிருந்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு கோரி நாடளாவிய ரீதியில் உள்ள மக்கள் கடந்த 9 ஆம் திகதி கொழும்பை வந்தடைந்தனர்.
இதனையடுத்து அனைத்து காவல்துறை தடுப்புகளையும் மீறி ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம் மற்றும் அலரிமாளிகை என்பனவற்றை அவர்கள் கைப்பற்றியிருந்தனர்.