தேயிலை தோட்டத்தில் ஏன் இராணுவம்? விசாரணை ஆரம்பம்

ராகலை – மாகுடுகலை தோட்டத்தில், ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் எவ்வாறான நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளனர் என்பதைக் கண்டறிய வேண்டும் என இராணுவம் தெரிவித்துள்ளது.

ராகலை – மாகுடுகலை தோட்டத்தில், சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளை உடனடியாக அங்கிருந்து வெளியேற்றுமாறு, நுவரெலியா மாவட்ட தொழில் அலுவலகம், தோட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரைத்துள்ளது.

நுவரெலியா மாவட்ட தொழில் அலுவலகத்தினால், செரண்டிப் பெருந்தோட்ட தனியார் நிறுவனத்திற்கும், தோட்ட முகாமையாளருக்கும், நேற்று இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.

இந்த அறிவிப்பின் பிரதிகள், இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கும், மலையக மக்கள் முன்னணிக்கும் அனுப்பிவைக்கப்பட்டிருந்தன.

இந்த விடயம் தொடர்பில், இராணுவ ஊடகப் பேச்சாளர் எமது செய்திச் சேவை வினவியது.

இதன்போது பதிலளித்த அவர், நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் இது குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்ததாகவும் இதையடுத்து தாம் அது தொடர்பில் ஆராய்ந்து பார்த்த போது இராணுவத்தில் சேவையில் ஈடுபட்டுள்ள எவரும் அங்கு கடமையில் ஈடுபடுத்தப்படவில்லை என்பது தெரியவந்ததாக குறிப்பிட்டார்.

அது தனியார் தோட்டம் என்று கூறப்பட்டதால் அந்த விடயம் தொடர்பில் தாம் ஆராய்ந்திருக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இராணுவத்திலிருந்து சட்டரீதியாக வெளியேறியவர்கள், தாங்கள் விரும்பிய தொழிலில் ஈடுபடுவதற்கான உரிமை உள்ளது.

நாட்டின் சாதாரண சட்டத்திற்கு அமைய, அவர்கள் தொழில் ஒன்றில் ஈடுபட முடியும்.

தனியார் நிறுவனங்களில் சிலர் கடமைகளில் ஈடுபடுகின்றனர் என்று இராணுவ பேச்சாளர் குறிப்பிட்டார்.

எனினும், ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளை ஈடுபடுத்தி, தொழிலாளர்கள் அச்சுறுத்தி தொழிலை செய்விப்பதற்கு முயற்சிக்கப்படுவதாக தொழிலாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்ட விடயம், நுவரெலியா மாவட்ட தொழில் திணைக்கள உதவி ஆணையாளரால் சுட்டிக்காட்டியிருந்தமை தொடர்பில், இராணுவ பேச்சாளரிடம் எமது செய்திச் சேவை வினவியது.

இதற்கு பதிலளித்த அவர், குறித்த பகுதியில் உள்ளவர்களுடன் இது தொடர்பில் மேலும் ஆராய்ந்து பார்ப்பதாக குறிப்பிட்டார்.

அத்துடன், அவர்கள் எந்த வகையில் அங்கு பயன்படுத்தப்பட்டுள்ளார்கள் என்பதைக் கண்டறிய வேண்டும் என்றும், அது குறித்து ஆராய்வதாகவும் இராணுவ பேச்சாளர் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன், மலையகத்தில் இராணுவ கட்டுப்பாடு நீக்கப்படுவதற்கு

இது ஒரு அடித்தளமாக அமைய வேண்டும் என தெரிவித்தார்.

இதேவேளை, இராணுவத்தை தோட்டத்தில் சேவையில் ஈடுபடுத்தியதைக் கண்டித்து மாகுடுகல தோட்ட மக்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Tags: