நைஜரில் இருந்து வெளியேறுகிறது பிரான்ஸ்!

நைஜரில் உள்ள தனது இராணுவத்தை இந்தாண்டு இறுதிக்குள் முழுவதும் திரும்பப் பெற்று விடுவோம் என்று  செப்டம்பர் 24 அன்று பிரான்ஸ் பிரதமர் இமானுவேல் மேக்ரோன் தெரிவித்துள்ளார். பிரான்சின் ஏகாதிபத்திய ஆட்சிக்கு எதிராக நைஜர் இராணுவம் கிளர்ச்சியில் ஈடுபட்டு ஆட்சியை கைப்பற்றிய பின்  தாய்நாடு பாதுகாப்பிற்கான தேசிய கவுன்சில் (CNSP) உருவாக்கப்பட்டு  அலி மஹாமனை ஜனாதிபதியாக கொண்ட ஆட்சி நடைபெற்று  வருகிறது.

நைஜரில் இருந்து பிரான்ஸ் தனது இராணுவ துருப்புகளையும் தூதரையும் திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று புதிய ஆட்சி காலக்கெடு விதித்திருந்தது. அதோடு தூதரக அதிகாரிகளுக்கான விசா உள்ளிட்டவற்றை இரத்து செய்தது. மேலும் தூதரகத்திற்கான உணவு, எரிபொருள், மின்சாரம் ஆகியவற்றையும் துண்டித்தது.

இந்நிலையில் ஆப்பிரிக்க நாடுகளின் பொருளாதார கூட்டமைப்பின் இராணுவம் (ECOWAS) மூலம் நைஜர் மீது  போர் தொடுக்க பிரான்ஸ் முயற்சித்தது. நைஜரின் அண்டை நாடாகவும் கூட்டமைப்பில் இராணுவ பலம் கொண்ட நாடாகவும் உள்ள நைஜீரியா, தன் நாட்டு மக்களின் எதிர்ப்பால் இராணுவத்தை அனுப்ப மறுத்தது. ஆப்பிரிக்க ஒன்றியத்தின் இராணுவம் மூலம் தாக்குதல் தொடுக்க முயற்சித்த போதும் மக்கள் எதிர்ப்பின் காரணமாக பிரான்ஸ் பின்வாங்கியது.

இத்தனைக்கு நடுவிலும் தனது இராணுவத்தையும் தூதரையும் நைஜரைவிட்டு வெளியேறுமாறு கூறாமல் பிரான்ஸ் முரண்டு பிடித்து வந்தது. இந்நிலையில் இம்மாத துவக்கத்தில் நைஜர் விதித்த காலக்கெடு முடிவுக்கு வந்தது. அதைத் தொடர்ந்து காவல்துறை மூலம் தூதரக அதிகாரியை கைது செய்ய நைஜர் இராணுவம் உத்தரவிட்டது. இந்நிலையில் சர்வதேச அளவில் பிரான்சுக்கு அவமானம் ஏற்படுவதை தவிர்ப்பதற்காக சில மணி நேரத்திலேயே தூதரக அதிகாரியை திரும்பப் பெற்றுக் கொள்வதாகவும், இராணுவத் துருப்புகளை முழுமையாக வெளியேற்ற  இந்த ஆண்டு இறுதி வரை கால அவகாசம் வேண்டும் என்றும் நைஜரிடம் பிரான்ஸ் கேட்டுள்ளது.

சாஹேல் உடன்படிக்கை

பிரான்ஸ், நைஜர் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்ட போது,  நைஜீரியா உள்ளிட்ட ஆப்பிரிக்கா நாடுகளிலும் நைஜரிலும்  உள்ள பிரான்ஸ் தூதரகம் முன்பும் தொடர்ச்சியாக மக்கள் போராட்டம் வெடித்தது. அதே வேளையில் பிரான்சுக்கு எதிராக இராணுவக் கிளர்ச்சி நடத்திய சாஹேல் (Sahel) நாடுகளான மாலி, பர்கினோ பாசோ உள்ளிட்ட நாடுகள் இராணுவரீதியிலான ஆதரவை நைஜருக்கு தெரிவித்திருந்தன. பிறகு இந்த மாத துவக்கத்தில் பிரான்சுக்கு எதிரான இராணுவ ஒத்துழைப்பிற்கு சாஹேல் உடன்படிக்கையையும் அவை  ஏற்படுத்திக்கொண்டன.

தீவிரவாத குழுக்களை வளர்க்கும் பிரான்ஸ் 

2022  ஆம் ஆண்டு மட்டும் ஆப்பிரிக்காவில் செயல்படும் தீவிரவாதிகளுக்கு பிரான்ஸ் இராணுவம் மாலியின் வான்வழி எல்லைக்குள் சட்டத்திற்கு புறம்பாக நுழைந்து 50 முறைக்கு மேல் ஆயுதங்களை விநியோகம் செய்ததாக செப்டம்பர் 22 அன்று நைஜரின் பாதுகாப்பிற்கான தேசிய கவுன்சில் குற்றம்சாட்டியுள்ளது. மாலியில் தீவிரவாதிகள் மற்றும் இராணுவத்திற்கு இடையிலான  தொடர் ஆயுத சண்டையால் பல இராணுவ வீரர்கள் உயிர் இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

Tags: