ஜனாதிபதி செயலக வாயிலிலிருந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைக்கப்பட்டனர்

ராணுவம் மற்றும் பொலிஸ் அதிரடிப்படையினர் மூலம், காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த ஜனாதிபதி செயலகம் மற்றும் அதன் பிரதான நுழைவாயிலுக்கான தடைகள் நீக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவித்தார்.

‘கோட்டா கோ கம’ போராட்டக்களத்தின் பிரதான பகுதியான ஜனாதிபதி செயலகத்தின் பிரதான நுழைவாயிலான ‘கேற் சீரோ’ (Gate Zero) பகுதி விடுவிக்கப்பட்டு, அங்கிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அகற்றப்பட்டுள்ளனர்.

இன்று (22.07.2022) அதிகாலை வேளையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அதிகாலை 1.30 மணியளவில் குறித்த பிரதேசத்தில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.

இந்நடவடிக்கையின்போது சட்டத்தரணி ஒருவர் உட்பட 10 ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த நிஹால் தல்தூவ, அதில் சிறு காயங்களுக்குள்ளான 14 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டோர் களனி, எம்பிலிபிட்டி, ஜா-எல, இரத்தினபுரி, செவணகல, வெல்லம்பிட்டி, பிட்டிகல, வாதுவை, நுகேகொடை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த, 26 முதல் 58 வயதானவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களை இன்றையதினம் (22.07.2022) நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு, கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தல்தூவ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி செயலகம் தொடர்பான விசாரணைகளுக்காக, குற்ற தல விசாரணை அதிகாரிகள் (SOCO), கைரேகை சோதனை அதிகாரிகள் உள்ளிட்ட, தேவையின் அடிப்படையில் ஏனைய விஞ்ஞான ரீதியான சாட்சியங்களை பெறுவதற்காக அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கவுள்ளதாக, நிஹால் தல்தூவ தெரிவித்தார்.

கொழும்பு மத்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கண்காணிப்பின் கீழ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், குறித்த பிரதேசத்தின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, குறித்த ஜனாதிபதி செயலாக நுழைவாயிலை இன்றையதினம் (22.07.2022) ஒப்படைக்கவுள்ளதாக போராட்டக்காரர்கள் நேற்றையதினம் (21.07.2022) அறிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதேவேளை, நாடுபூராகவும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஆயுதம் தரித்த இராணுவத்தினரை கடமைகளில் ஈடுபடுத்துவதற்காக, ஜனாதிபதி  ரணில் விக்ரமசிங்கவினால் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

. கோட்டா கோ கம’ போராட்டக்களம் முற்றுமுழுதாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், காலிமுகத்திடல் பகுதிக்கு சிவில் உடையணிந்த இராணுவத்தினர் நூற்றுக்கணக்கானோர் மற்றும் விமானப்படையை சேர்ந்தவர்கள் வருகை தந்துள்ளதாக  போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். பாதுகாப்புப் படையினருடன் மோத வேண்டாம், இல்லையெனில் அவசரச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என பாதுகாப்புப் படையினர் அறிவித்துள்ளனர். இருப்பினும் கூட்டத்தை கட்டுப்படுத்தும் போது பாதுகாப்பு படையினருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

Tags: