இலங்கைக்கு பணம் அனுப்புவோருக்கு மேலதிக தீர்வை வரிச் சலுகை
வெளிநாட்டிலிருந்து சட்டபூர்வமான முறையில் இலங்கைக்கு பண அனுப்பல்களை மேற்கொள்வதற்கு ஊக்குவிக்கும் பொருட்டு, அவர்களால் அனுப்பப்பட்ட வெளிநாட்டுப் பணத்தொகையைக் கருத்தில் கொண்டு, நாட்டிற்கு வருகை தரும் போது மேலதிக தீர்வை வரிச் சலுகைக் (Duty Free) கொடுப்பனவை வழங்குவதற்கும் மற்றும் இலத்திரனியல் வாகனம் கொள்வனவு செய்வதற்காக குறித்த புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வசதிகளை வழங்குவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
01.08.2022 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில், தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் எனும் வகையில் தாம் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக, மனூஷ நாணயக்கார தெரிவித்தார்.
நாட்டில் நிலவுகின்ற வெளிநாட்டு செலாவணி நெருக்கடிக்குத் தீர்வாக புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டிற்கு அனுப்புகின்ற பண அனுப்பல்களை அதிகரிப்பதற்காக வழங்கப்பட வேண்டிய சலுகைகள் மற்றும் ஊக்குவிப்புக்கள் தொடர்பான விடயங்களை ஆராய்ந்து பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்காக கடந்த த ஜூன் 27ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத் தீர்மானத்தின் பிரகாரம் அலுவலர் குழுவொன்று நியமிக்கப்பட்டது.
குறித்த அலுவலர் குழுவின் அறிக்கை மூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் மூலம் எமது நாட்டிற்கு முறைசார் வழிகள் மூலம் அனுப்பப்பட்ட வெளிநாட்டுப் பணத்தொகையைக் கருத்தில் கொண்டு குறித்த புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டிற்கு வருகை தரும் போது மேலதிக தீர்வை வரிச் சலுகைக் கொடுப்பனவை வழங்குவதற்கும் மற்றும் இலத்திரனியல் வாகனம் கொள்வனவு செய்வதற்காக குறித்த புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வசதிகளை வழங்குவதற்கும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதற்கமைய, இது தொடர்பில் இன்றைய அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் மாநாட்டில் கலந்து கொண்டு இது தொடர்பில் அமைச்சர் மனுஷ நாணயக்கார் விளக்கமளித்தார்.
வெளிநாட்டிலிருந்து வருவோருக்கு இதுவரை விமான நிலையங்களில் வரிச்சலுகை (Duty Free) வழங்கப்பட்டு வருகின்றது.
அதற்காக அவர்கள் வெளிநாட்டில் தங்கியிருந்த நாட்களின் அடிப்படையில் வரிச் சலுகை வழங்கப்பட்டு வந்தது.
அதற்கமைய தற்போது நடைமுறையில்,
- 90 இற்கும் குறைவான நாட்களுக்கு 187.50 டொலர்
- 90 – 365 இற்கும் இடைப்பட்ட நாட்களுக்கு 625 டொலர்
- 365 இற்கு மேற்பட்ட நாட்களுக்கு 1750 டொலர் வரிச் சலுகை வழங்கப்படுகின்றது.
குறித்த வரிச்சலுகை மூலம் இலங்கைக்கு எந்தவிதமான நன்மையும் கிடையாது என சுட்டிக்காட்டிய வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, எதிர்காலத்தில் அதனை நாட்டுக்கு பலனுள்ள வகையில் மாற்றுவதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிவித்தார்.
அந்த வகையில், நாட்டுக்கு டொலர் அனுப்புவதன் அடிப்படையில், வெளிநாட்டில் இருந்து வருவோரை பிரிவுகளாக பிரித்து அவர்களுக்கு வரிச் சலுகை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள வரிச்சலுகளையுடன் இணைந்ததாக குறித்த திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக அவர் இதன் போது சுட்டிக்காட்டினார்.
அதற்கமைய நாட்டிற்கு குறைந்தபட்சம்,
400 டொலர்களை அனுப்பியிருந்தால் (Silver)
- 90 இற்கும் குறைவான நாட்களுக்கு 787 டொலர்
- 90 – 365 இற்கும் இடைப்பட்ட நாட்களுக்கு 1,225 டொலர்
- 365 இற்கு மேற்பட்ட நாட்களுக்கு 2,350 டொலர் வரிச் சலுகை
4,800 டொலர்களை அனுப்பியிருந்தால் (Silver Plus)
- 90 இற்கும் குறைவான நாட்களுக்கு 1,175 டொலர்
- 90 – 365 இற்கும் இடைப்பட்ட நாட்களுக்கு 1,585 டொலர்
- 365 இற்கு மேற்பட்ட நாட்களுக்கு 2,710 டொலர் வரிச் சலுகை
7,200 டொலர்களை அனுப்பியிருந்தால் (Gold)
- 90 இற்கும் குறைவான நாட்களுக்கு 1,627 டொலர்
- 90 – 365 இற்கும் இடைப்பட்ட நாட்களுக்கு 2,065 டொலர்
- 365 இற்கு மேற்பட்ட நாட்களுக்கு 3,190 டொலர் வரிச் சலுகை
12,000 டொலர்களை அனுப்பியிருந்தால் (Gold Plus)
- 90 இற்கும் குறைவான நாட்களுக்கு 2,587 டொலர்
- 90 – 365 இற்கும் இடைப்பட்ட நாட்களுக்கு 3,025 டொலர்
- 365 இற்கு மேற்பட்ட நாட்களுக்கு 4,150 டொலர் வரிச் சலுகை
24,000 டொலர்களை அனுப்பியிருந்தால் (Platinum)
- 90 இற்கும் குறைவான நாட்களுக்கு 4,985 டொலர்
- 90 – 365 இற்கும் இடைப்பட்ட நாட்களுக்கு 5,425 டொலர்
- 365 இற்கு மேற்பட்ட நாட்களுக்கு 6,550 டொலர் வரிச் சலுகை
வாகன இறக்குமதிச் சலுகை
இதன் இரண்டாவது சலுகையாக, மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதியை வழங்குவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
நாட்டின் டொலர் பிரச்சினை காரணமாக மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட எந்தவொரு வாகனத்தையும் இறக்குமதி செய்ய தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆயினும் வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு பணத்தை அனுப்புகின்ற, வெளிநாட்டில் பணிபுரிகின்ற தொழிலாளர்கள் உள்ளிட்ட வெளிநாட்டில் உள்ளவர்களுக்காக வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதியை வழங்குவதற்கான திட்டத்திற்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
நாட்டிற்கு முறையான வழியில், தங்களது அல்லது தங்களது குடும்பத்தினரின் கணக்கிற்கு வெளிநாட்டிலிருந்துபணம் அனுப்பும் எந்தவொரு நபரும் அதன் அரைவாசி பெறுமானம் கொண்ட வாகனத்தை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படுவதாக அவர் அறிவித்தார்.
அந்த வகையில்,
- 3,000 டொலருக்கும் அதிக பணத்திற்கு அதன் அரைவாசி பெறுமதியில் வரிச்சலுகையுடனான மின்சார மோட்டார் சைக்கிளை இறக்குமதி செய்ய அனுமதி.
- 20,000 டொலருக்கும் அதிகமான பணத்திற்கு அதன் அரைவாசி பெறுமதியில் உச்சபட்சமாக 65,000 டொலர் வரையான வரிச்சலுகையுடன் மின்சார வாகனத்தை இறக்குமதி செய்ய அனுமதி.
குறித்த வாகனம் 300 – 500 இடைப்பட்ட கொள்ளளவை கொண்டிருக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் குறித்த வாகனத்திற்கான மின்சாரத்தை பெறுவதற்கு, தாமாகவே ஒரு சூரிய மின்கலத் தொகுதியை நிறுவி, அதன் மூலமே அதனை மின்னேற்றம் செய்ய வேண்டுமெனவும், தேசிய மின் கட்டமைப்பிலிருந்து அதற்கான மின்சாரத்தை பெற அனுமதி வழங்கப்படமாட்டாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஆயினும் நம் நாட்டில் போதியளவு முச்சக்கர வண்டிகள் காணப்படுவதால், இவ்வசதி மூலம் முச்சக்கர வண்டிகளை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பான சுற்றுநிருபம் விரைவில் வெளியிடப்படும் எனவும் அவர் இதன் போது தெரிவித்தார்.
-றிஸ்வான் சேகு முகைதீன்