ஆர்.எஸ்.எஸ் இந்திய தேசியக் கொடிக்கு எப்போதாவது விசுவாசமாக இருந்திருக்கிறதா?
-சம்சுல் இஸ்லாம் (Shamsul Islam)
ஆர்.எஸ்.எஸ் இயக்கம் 1925இல் அமைக்கப்பட்ட காலத்திலிருந்தே, பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எதிராக இந்திய மக்களின் ஒன்றுபட்ட போராட்டத்தை அடையாளப்படுத்திடும் அனைத்தையும் வெறுத்தது. மூவர்ணக் கொடியை, தேசியக் கொடியை அது எதிர்த்தே வந்திருக்கிறது என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். 1929 டிசம்பரில் லாகூரில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் மாநாட்டில் “பூரண ஸ்வராஜ்யம்” அல்லது பூரண சுதந்திரம் என்னும் லட்சியம் உயர்த்திப்பிடிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 1930 ஜனவரி 26 அன்று அந்த சமயத்தில் தேசிய இயக்கத்தின் அடையாளமாக இருந்த மூவர்ணக் கொடிக்கு வணக்கம் செலுத்தி, சுதந்திர தினத்தைக் கொண்டாடிட வேண்டும் என்றும் அறைகூவல் விடுக்கப்பட்டது. ஆனால் இதனை நிராகரித்ததுடன், அனைத்து ஆர்எஸ்எஸ் ஊழியர்களும் காவிக் கொடியைத்தான் (Bhagwa Jhanda) வணங்கிட வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ்-இன் தலைவராக இருந்த கே.பி. ஹெட்கேவார் அனைத்து ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பினார்.
இன்று வரையிலும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் எந்தவொரு நிகழ்விலும் மூவர்ணக் கொடியோ அல்லது தேசியக் கொடியோ உயர்த்தப்பட்டது இல்லை என்பதைக் கவனித்திட வேண்டும். முரளி மனோகர் ஜோஷி போன்ற ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் காஷ்மீர், ஸ்ரீநகரில் லால்சவுக்கில் 1991இல் ஜனநாயகத்தின் மீதான தங்கள் பற்றுதலைக் காண்பிப்பதற்காக மூவர்ணக்கொடியை ஏற்றியிருக்கலாம். அதேபோன்றே இஸ்லாமியர்களின் மதராசாக்களில் மூவர்ணக்கொடியை ஏற்ற வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் கோரிக் கொண்டிருக்கலாம். எனினும் ஆர்.எஸ்எ.ஸ் இயக்கமானது மூவர்ணக்கொடியை வெளிப்படையாகவே கண்டித்தும், கேவலப்படுத்தியும்தான் வந்திருக்கிறது என்பதை ஆர்.எஸ்.எஸ் தலைவர்களின் கீழ்க்கண்ட அறிக்கைகள் மூலமாகத் தெளிவாகத் தெரிந்துகொள்ளலாம்.
1946 ஜூலையில் நாக்பூரில் நடைபெற்ற குருபூர்ணிமா வைபவத்தின்போது கோல்வால்கர் பேசியதாவது:
“பாரதத்தின் கலாச்சாரத்தை முழுமையாகப் பிரதிநிதித்துவப்படுத்துவது காவிக் கொடி (saffron flag)தான். அது கடவுளின் உருவகம். இந்தக் காவிக் கொடியின் முன் ஒட்டுமொத்த தேசமும் முடிவில் தலைவணங்கிடும் என நாம் உறுதியாக நம்புகிறோம்.”
ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் சார்பில் அதிகாரபூர்வமாக வெளிவரும் ஆர்கனைசர் என்னும் அதன் ஆங்கில இதழில் 1947 ஜூலை 17 தேதியிட்ட இதழில் தேசியக் கொடி என்னும் தலைப்பில் வெளிவந்த தலையங்கத்தில், மூவர்ணக்கொடியைக் கடுமையாகச் சாடி இருக்கிறார்கள். அப்போது நடைபெற்றுக்கொண்டிருந்த அரசியல் நிர்ணய சபையில் மூவர்ணக் கொடியை தேசியக் கொடியாக அங்கீகரித்திட வேண்டும் என்று அனைத்து அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் ஒப்புக்கொண்டதாகக் கூறப்பட்டதை மூர்க்கமான முறையில் எதிர்த்தே அந்தத் தலையங்கம் எழுதப்பட்டது. அந்தத் தலையங்கத்தில் எழுதப்பட்டிருந்ததாவது:
“இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல்கட்சிகளும், அமைப்புகளும் மூவர்ணக் கொடியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை நாங்கள் எப்போதும் ஒப்புக்கொண்டதில்லை. இது முற்றிலும் முட்டாள்தனமாகும். கொடி என்பது தேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இந்துஸ்தானத்தில் ஒரேயொரு தேசம்தான் இருக்கமுடியும், அது ஐயாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக எவ்விதமான உடைசலும் இல்லாது இருந்துவரும் இந்து தேசம்தான். இதுவே நம் தேசம். இதை அடையாளப்படுத்தக்கூடிய விதத்தில்தான் கொடியும் இருந்திட வேண்டும். அனைத்து சமூகத்தினரின் ஆசைகளுக்கு ஏற்பவும், விருப்பத்திற்கு ஏற்பவும் ஒரு கொடியை நாம் தேர்ந்தெடுக்க முடியாது. அது பிரச்சனைகளைச் சிக்கலாக்கிடும், அது தேவையுமில்லை. அது முற்றிலும் அவசியமற்றதுமாகும். .. ஒரு தையல்காரரிடம் நாம் நமக்காக ஒரு சட்டையையோ அல்லது ஒரு கோட்டையோ தைப்பதற்கு உத்தரவு வழங்குவதுபோல் நாம் நம் கொடியைத் தெரிவு செய்வதற்கு உத்தரவு வழங்க முடியாது.
இந்துஸ்தானத்தில் உள்ள இந்துக்கள் ஒரு பொதுவான நாகரிகம் (civilization), கலாச்சாரம், பழக்க வழக்கங்கள், ஒரு பொது மொழி மற்றும் பொது பாரம்பர்யங்களைக் கொண்டிருந்ததைப்போல, அவர்கள் ஒரு கொடியையும் பெற்றிருந்தார்கள். உலகில் மிகவும் உன்னதமான, மற்றும் பழைமையான கொடியைப் பெற்றிருந்தார்கள். உலகில் அவர்களின் நாகரிகம் எந்த அளவுக்குப் பழைமையானதோ அந்த அளவுக்கு அவர்களின் கொடியும் பழைமையானது. அந்த வரலாற்றுக் கண்ணோட்டத்தின் அடிப்படையில்தான் நம் தேசியக் கொடியின் பிரச்சனையையும் அணுகிட வேண்டும். மாறாக இப்போது செய்திருப்பதைப்போன்று ஏனோதானோவென்று அணுகிடக்கூடாது. அந்நிய படையெடுப்புகளைத் தொடர்ந்து ஏற்பட்ட தற்காலிக துரதிர்ஷ்டங்கள் மற்றும் அனைத்துப் பயங்கரங்களும் சேர்ந்து இந்துக்களின் தேசியக் கொடியை ஓரங்கட்டிவிட்டது. ஆயினும் அந்தக் கொடி பழைமையான மகிமையையும் மகத்துவத்தையும் மீளவும் பெறும் என்று அனைவருக்கும் தெரியும். கொடியின் வர்ணம், கிழக்கே சூரியன் உதயமாகும்போது மெதுவாக ஆனால் கம்பீரமாகத் தோற்றத்தை அளிக்கும்போது என்ன வர்ணத்தை அளிக்குமோ அதேபோன்ற நிகரற்ற வர்ணத்தில், தேசத்தின் இதயத்தையும் ஆத்மாவையும் மிகவும் நேசிக்கும் விதத்தில் இருந்திடும்.
இதே வழியில், உலகத்திற்கே உயிரூட்டக்கூடிய சக்தியாக விளங்கும், இத்தகைய மதிப்புவாய்ந்த நம் கொடியை நம் முன்னோர்கள் நம்மிடம் ஒப்படைத்துச் சென்றிருக்கிறார்கள். சூரியனைப்போன்றே புகழ்பெற்ற வசீகரத்துடனும், பெருந்தன்மையுடனும், பிரம்மாண்டத்துடனும் உள்ள விநோதமான நம் கொடியைக் காண முடியாதவர்கள் அல்லது பாராட்ட முடியாதவர்கள் எதுவும் அறியாதவர்களாகவோ அல்லது தீங்கிழைப்பவர்களாகவோதான் இருப்பார்கள். இந்தக் கொடிதான் இந்தக் கொடி மட்டும்தான் இந்துஸ்தானத்தின் உண்மையான தேசியக் கொடியாக இருக்க முடியும். அதுதான், அதுமட்டும்தான் தேசத்திற்கு ஏற்புடைய ஒன்றாக இருந்திட முடியும். பொதுமக்களின் மத்தியில் இதனை வலியுறுத்துவது அதிகரித்துக்கொண்டிருக்கிறது. அரசியல் நிர்ணயசபை அவர்களின் விருப்பத்தை முன்னெடுத்துச் செல்ல அறிவுறுத்தப்படுவது நல்லது.”
இந்தியா சுதந்திம் அடைந்த சமயத்தில், இந்திய தேசம் சுதந்திர தினத்தைக் கொண்டாடும் விதத்தில் டெல்லி, செங்கோட்டையில் மூவர்ணக் கொடியை ஏற்றுவதற்கான தயாரிப்பு வேலைகளில் ஈடுபட்டிருந்த சமயத்தில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அதிகாரபூர்வ ஆங்கில இதழான ஆர்கனைசர் இதழில் (1947 ஆகஸ்ட் 14 தேதியிட்டது), மூவர்ணக்கொடியை இழிவுபடுத்தும் விதத்தில் எழுதியிருந்ததாவது:
“விதிவசத்தால் அதிகாரத்திற்கு வந்துள்ளவர்கள் நம் கைகளில் மூவர்ணக் கொடியைக் கொடுக்கலாம். ஆனாலும் அது எந்தக்காலத்திலும் இந்துக்களால் மதிக்கப்படக்கூடியதாகவோ, சொந்தம் கொண்டாடக்கூடியதாகவோ இருக்க முடியாது. மூன்று என்கிற வார்த்தையே தீங்கு பயப்பதாகும். மூன்று வர்ணங்களைக் கொண்ட கொடி நிச்சயமாக ஒரு மோசமான தீய உளவியல் பாதிப்பை ஏற்படுத்தும், நாட்டிற்குக் கேடு விளைவிக்கக்கூடியதாகும்.”
எனவே, ஆர்.எஸ்.எஸ்-இன் கூற்றுப்படி இந்தியத் தேசியக் கொடி எந்தக் காலத்திலும் இந்துக்களால் மதிக்கப்படக்கூடிய ஒன்று அல்ல. அது ஒரு மோசமான சகுனம் ஆகும், நாட்டிற்குக் கேடு விளைவிக்கக்கூடியதாகும்.
நாடு சுதந்திரம் பெற்றபின்னரும்கூட, மூவர்ணக் கொடியைத் தேசியக் கொடியே ஏற்க ஆர்எஸ்எஸ் மறுத்தே வந்திருக்கிறது. கோல்வால்கர், ‘சிந்தனைத் துளிகள்’ (‘Bunch of Thoughts’) என்னும் தன்னுடைய நூலில் மூவர்ணக் கொடியைத் தேசியக்கொடியாகத் தெரிவுசெய்திருப்பதை, கண்டித்து எழுதியிருப்பதாவது:
“நம்முடைய தலைவர்கள் நம் நாட்டிற்கு ஒரு புதிய கொடியை அமைத்திருக்கிறார்கள். அவர்கள் ஏன் அவ்வாறு செய்ய வேண்டும்? இது மிகவும் போலித்தனமான நகர்தல் ஆகும். … நம்முடைய தேசம் மிகவும் பழைமையான மற்றும் புகழ்மிக்க கடந்தகாலத்தைக் கொண்ட மாபெரும் தேசமாகும். நமக்கென்று சொந்தக் கொடி இல்லாமலா நாம் இருந்தோம்? இவ்வளவு ஆயிரமாயிரம் ஆண்டு காலமாக தேசிய சின்னம் எதுவும் இல்லாமலா நாம் இருந்தோம்? சந்தேகமேயின்றி நாம் பெற்றிருந்தோம். பின் ஏன் நம் மனதில் இந்த வெற்றிடம், முழு வெற்றிடம்?”
(கட்டுரையாளர், டெல்லிப் பல்கலைக்கழகத்தில் சமூக அறிவியல் துறைத்தலைவராக இருந்து ஓய்வுபெற்றவர்)
தமிழில்: ச.வீரமணி