போராட்டமும் சிறையும் : சங்கரய்யாவின் தியாக வரலாறு!

மோகன ரூபன்

1947 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம். இந்தியத் திருநாடு விடுதலை அடைவதற்கு சரியாக 12 மணிநேரம் முன்பு சிறையில் இருந்து விடுதலையானார் அந்த இளைஞர். Sankarayaa legacy getting wide in his 102 years old death

அந்த இளைஞரின் வாழ்க்கையில் ரயில், ஜெயில் இரண்டும் ஒன்றையொன்று எப்போதும் தொடர்ந்து வரும். ஓம். அவர் ரயில் ஏறினால் ஒரு போராட்டத்தில் கலந்து கொள்ளப் போகிறார் என்று அர்த்தம். ரயிலைத் தொடர்ந்து அடுத்ததாக ஜெயில் அவருக்காகக் காத்திருக்கும்.

யார் அந்த இளைஞர் என்று கேட்கத் தோன்றுகிறதா?  அவர்தான் 102 வயது இளைஞரான என்.சங்கரய்யா.

அவரைப் பற்றி சின்னதாக ஒரு பிளாஷ்பேக்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆத்தூர்தான் சங்கரய்யாவின் தந்தையின் ஊர். அப்பா நரசிம்முலு. அப்பா அந்த காலத்திலேயே பம்பாயில், கொதிகலன் தொடர்பான பொறியியல் படிப்பு படித்தவர். கோவில்பட்டியில் ஜப்பான் நாட்டு நிறுவனம் ஒன்றில் நரசிம்முலு பணியாற்றிபோது,  1921 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15ஆம் திகதியன்று பிறந்தார் சங்கரய்யா. பெற்றோர் அவருக்கு வைத்த பெயர் பிரதாப சந்திரன். பிறகு பெயர் மாற்றப்பட்டு, தாத்தா சங்கரய்யாவின் பெயர் பேரனுக்குச் சூட்டப்பட்டது.

அப்பா, மதுரை ஹார்வி மில்லில் பணியாற்றியதால் சங்கரய்யாவின் குடும்பம் மதுரைக்கு இடம் மாறியது.

மெட்ரிகுலேசன் முடித்து, 1937 ஆம் ஆண்டு மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இண்டர்மீடியட் வகுப்பில், வரலாற்று மாணவராகச் சேர்ந்தார் சங்கரய்யா. வரலாறு படைக்கப்போகும் ஒருவர், வரலாறு படிக்க வந்திருக்கிறார் என்பது அப்போது யாருக்கும் தெரியாது.

கல்லூரி படிப்புக்கு விழுந்த முற்றுப்புள்ளி!

அது சுதந்திரப் போராட்டம் சூடுபறந்து கொண்டிருந்த காலம். பிரிட்டிஷ் இந்திய அரசு, மக்களைப் பிழிந்து கொண்டிருந்த நேரம்.

மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவர்களைத் திரட்டி, பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக கண்டனக் கூட்டங்களை நடத்தினார் சங்கரய்யா. மாணவர்களைத் திரட்டி, மதுரை குலுங்க மாபெரும் ஊர்வலத்தை நடத்தினார். சென்னை மாகாண பிரதமராக இருந்த ராஜாஜி, இந்தியை கட்டாய பாடமாக்கியபோது அதையும் எதிர்த்து கண்டனக் கூட்டம் நடத்தியவர் சங்கரய்யா.

சென்னை மாணவர் சங்கம் போலவே, தேசிய விடுதலைப் போராட்டத்தை மனதில் கொண்டு மதுரையிலும் மாணவர் சங்கம் உருவாக்கப்பட்டது. அதன் செயலாளராக இருந்தார் சங்கரய்யா.

அவர் நடத்திய பல்வேறு கண்டனக் கூட்டங்களால் கலகலத்துப்போன கல்லூரி முதல்வர் பிளிண்ட், ‘வேறு கல்லூரிக்கு மாறிக்கோப்பா’ என்றபோது, அதை காதில் வாங்கவேயில்லை சங்கரய்யா. 1941 ஆம் ஆண்டு அண்ணாமலை பல்கலை மாணவர்கள் சிலர் விடுதலைப் போராட்டத்தில் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து கண்டனக்கூட்டம் நடத்தினார் சங்கரய்யா. கல்லூரி இறுதித்தேர்வுக்கு சரியாக 15 நாட்கள் இருந்தபோது, பிப்ரவரி 28 ஆம் திகதி ஆய்வாளர் தீச்சட்டி கோவிந்தன் என்பவரால் கைது செய்யப்பட்டார். அவரது படிப்புக்கு அத்தோடு முற்றுப்புள்ளி விழுந்தது.

சிறை பறவையின் போராட்ட வாழ்க்கை!

வேலூர் சிறை என்.சங்கரய்யாவை ‘வா வா’ என்று அழைத்தது. சிறையில் ப.ஜீவானந்தம், சுப்பைய்யா, பி.சீனிவாசராவ், எம்.ஆர்.வெங்கட்ராமன், வி.பி. சிந்தன் ஆகியோரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்துது. கர்மவீரர் காமராஜரை, சங்கரய்யா சந்தித்த இடமும் வேலூர் சிறைதான்.

18 மாத சிறை வாழ்க்கைக்குப்பிறகு 1942 ஆம் ஆண்டு விடுதலையானார் சங்கரய்யா. இந்த விடுதலை வாழ்க்கை வெகுகாலம் நீடிக்கவில்லை.

அதே 1942 ஆம் ஆண்டு காந்தி, நேருவின் கைதைக் கண்டித்து பாளையங்கோட்டையில் ஒரு மாபெரும் மாணவர் பேரணியை சங்கரய்யா நடத்த, காவல்துறையின் அடி உதை தாக்குதலுக்குப் பிறகு கைதானார். இந்தமுறை கேரளாவில் உள்ள கண்ணனூர் சிறை அவருக்காக காத்திருந்தது.

1944 இல் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளராக ஆனார். சங்கரய்யா காலத்து மதுரை மாவட்டத்துக்குள் தற்போதுள்ள  மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் எல்லாம் அடக்கம்.

1946 ஆம் ஆண்டு கடற்படை எழுச்சி நடந்தபோது அதற்கு ஆதரவாக, மதுரையில் கம்யூனிஸ்ட் கட்சி பேரணியை நடத்தினார் சங்கரய்யா. பேரணியை நிறுத்தச் சொல்லி துப்பாக்கி முனையில் மிரட்டப்பட்டார். பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக சதி செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பிறகு என்ன? வழக்கமான கைது படலம். இந்தமுறை வேலூர்.

எட்டு மாத சிறைவாசத்துக்குப்பின் 1947 ஓகஸ்ட் மாதம் இந்தியா சுதந்திரமடைவதற்கு சரியாக 12 மணிநேரம் முன்னதாக விடுதலை ஆனார்.

அதே ஆண்டு கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த நவமணி என்ற ஆசிரியையை பி.ராமமூர்த்தி தலைமையில் கலப்புத் திருமணம் செய்து கொண்டார் சங்கரய்யா.

விடுதலைக்கு பின்பும் கைது!

இந்தியா விடுதலை அடைந்த நிலையில் இனி சங்கரய்யா போன்றவர்களுக்கு சிறை வாழ்க்கை இருக்காது என்று சிலர் நினைத்தார்கள். அந்த நம்பிக்கை பொய்யாகப் போனது.

1948 ஆம் ஆண்டு, கல்கத்தாவில் நடந்த கம்யூனிஸ்ட் கட்சியின் 2 ஆவது அகில இந்திய மாநாட்டில் சங்கரய்யா பங்கேற்றார்.  அதையடுத்து இந்தியப் பிரதமர் நேரு, கம்யூனிஸ்ட் கட்சியைத் தடை செய்தார். கல்கத்தாவில் பல தலைவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், அங்கிருந்து தப்பித்து ரயில் ஏறி புறப்பட்ட சங்கரய்யா, ஒரிசாவில் இறங்கிக் கொண்டார். அங்கிருந்து வேறு வழியாக தமிழகம் வந்து சேர்ந்தார். பிறகு தலைமறைவு வாழ்க்கை.

1948 இற்கும் 1951 ஆம் ஆண்டுக்கும் இடையில் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் மீது அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டது. பாலு தூக்கிலிடப்பட்டார். ஐ.வி. சுப்பைய்யா சிறையில் உண்ணாநோன்பு இருந்து உயிர்நீத்தார். உமாநாத், கல்யாண சுந்தரம் போன்றவர்கள் கைதானார்கள். 1951 ஆம் ஆண்டு சங்கரய்யாவும் கைதானார். 6 மாதம் சிறை. அதன்பின் விடுதலை.

எம்.எல்.ஏ தேர்தலில் மூன்று முறை வெற்றி!

அதன்பிறகு, கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் செயற்குழு உறுப்பினர் ஆனார் சங்கரய்யா. குடும்பத்துடன் சென்னைக்கு வந்து குடியேறினார். 1961 இல் மீண்டும் கைது. 6 மாதம் கழித்து மீண்டும் விடுதலை.

1957, 1962 ஆம் ஆண்டுகளில் மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக நின்று தோல்வியைப் பரிசாகப் பெற்றார் சங்கரய்யா.

1964 ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக எஸ்.ஏ. டாங்கே இருந்தபோது, தேசிய கவுன்சில் கூட்டத்தில் பிளவு ஏற்பட்டது. அப்போது கட்சியில் இருந்து விலகிய 32  தேசிய கவுன்சில் உறுப்பினர்களில் சங்கரய்யாவும் ஒருவர்.

1964 இல் சி.பி.எம் எனப்படும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கப்பட்டது. 1965 ஆம் ஆண்டு மீண்டும் கைது. 16 மாதங்கள் சிறை வாழ்க்கை.

1967 ஆம் ஆண்டு மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதியில் சங்கரய்யா நின்று வென்று எம்.எல்.ஏ. ஆனார். பன்னிரண்டு உறுப்பினர்களைக் கொண்ட சி.பி.எம் சட்டமன்றக் குழுவின் தலைவராக உருமாறினார். மதுரை கிழக்குத் தொகுதியில், 1977, 1980 ஆம் ஆண்டு தேர்தல்களில் வென்றார். அவர் 3 முறை சட்டமன்றத் தேர்தல்களில் வென்று, 11 ஆண்டுகாலம் எம்.எல்.ஏ.வாக இருந்தவர்.

1995 ஆம் ஆண்டு சி.பி.எம் கட்சியின் மாநிலச் செயலாளர் பதவி சங்கரய்யாவைத் தேடி வந்தது. 2002 வரை அந்தப் பதவியில் அவர் நீடித்தார். 2002 ஆம் ஆண்டு தனது முதிய வயதை கணக்கில் கொண்டு கட்சிப் பதவியில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டார்.

தகைசால் தமிழர் சங்கரய்யா

எண்பது ஆண்டு கால நீண்ட நெடிய அரசியல் வாழ்க்கையில் 8 ஆண்டுகளை சிறையில் கழித்தவர் சங்கரய்யா. அவர் 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தனது நூறாவது வயதை எட்டினார்.

பாரதியார் பாடல்களிலும், நற்றிணை புறநானூறு போன்ற சங்க இலக்கியங் களிலும்  சங்கரய்யா அதிக ஆர்வமுள்ளவர். எப்போதும் கதர் ஆடை அணியும் எளியவர். சிறந்த பேச்சாளர் என்பதுடன் நேதாஜி, ராஜாஜி, சத்தியமூர்த்தி, பசும்பொன் முத்துராமலிங்க தேவர் உள்பட பலரை வரவழைத்து மேடையில் பேச வைத்த பெருமைக்குரியவர். Sankarayaa legacy getting wide in his 102 years old death

விடுதலைப் போராட்ட வீரர், பொதுவுடைமை இயக்கத் தலைவர், முதுபெரும் இடதுசாரி அறிஞர் என்ற நிலையில் தமிழக அரசின் தகைசால் தமிழர் விருதை 2021 ஆம் ஆண்டு பெற்றார் என்.சங்கரய்யா. ஒருமுறை கொரோனாவின் கொடுங்கரங்களில் இருந்தும் சங்கரய்யா தப்பி இருக்கிறார்.

அவர் போன்ற தலைவர்கள்இனி அரிதிலும் அரிது!

முதுபெரும் தமிழகத் தலைவர்களில் ஒருவரான சங்கரய்யாவுக்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்க மதுரை காமராஜ் பல்கலைக்கழக ஆட்சிப் பேரவைக் கூட்டம் முன் வந்தது. அதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு,  தமிழக அரசும் ஒப்புதல் தந்த நிலையில், முனைவர் பட்ட சான்றிதழில் வேந்தர் என்ற முறையில் கையெழுத்திட வேண்டிய ஆளுநர் ஆர்.என்.ரவி, கையொப்பமிட மறுக்க, கௌரவ முனைவர் பட்டம் பெறாமல் போய்விட்டார் சங்கரய்யா.

நாட்டின் விடுதலைக்காக பட்டப்படிப்பை பாதியில் விட்ட அந்த பெருமகன், கௌரவ முனைவர் பட்டத்தை பெற முடியால் போனது பெரிய வருத்தம். சங்கரய்யா ஒருவேளை அந்த முனைவர் பட்டத்தைப் பெற்றிருந்தால் அந்த பட்டத்துக்கும் பெருமை கிடைத்திருக்கும்.

முதுபெரும் தலைவர் சங்கரய்யா, சளி காய்ச்சலால் மூச்சுவிட முடியாமல் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். தேச விடுதலைப் போராட்டத்துக்கு மூச்சுக்காற்றாய் இருந்தவரின் மூச்சு, அவரது 102ஆவது வயதில் நின்றுபோகும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. Sankarayaa legacy getting wide in his 102 years old death

விடைபெற்றுக் கொண்டார் என்.சங்கரய்யா. அவர் போன்ற தலைவர்களை காண்பது இனி அரிதிலும் அரிது.

Tags: