பாரதீய ஜனதா கட்சி: அலங்கோல ஆட்சி, அர்த்தமற்ற அரசியல், ஆளுநர் ரவி

ராஜன் குறை

ந்த ஓர் அரசாக இருந்தாலும் அதன் முக்கிய பொறுப்பு என்ன? சட்டம், ஒழுங்கை சீராக நிர்வகிப்பது, குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது. ஆனால், மணிப்பூர் என்ற சிறிய மாநிலத்தில் பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சியால் முழுமையான சட்டம், ஒழுங்கு சீர்குலைவைத் தடுக்க முடியவில்லை. மாநிலத்தில் கடும் வன்முறையும், மோதல்களும் தலைவிரித்து ஆடுகின்றன. மாநில அமைச்சரின் வீடே கொளுத்தப்படுகிறது. நாட்டுக்குப் பெருமை தேடித்தந்த விளையாட்டு வீரர்கள் கண்ணீர் மல்க ஒன்றிய அரசிடம் அமைதியை மீட்டிட வேண்டுகோள் விடுக்கிறார்கள்.

ஆனால், பிரதமர் ஒரு வார்த்தை கூட மணிப்பூர் குறித்து பேசாமல் மெளனம் காக்கிறார். எதிர்க்கட்சியின் முக்கிய தலைவர் ராகுல் காந்தி கடந்த வாரம் மணிப்பூருக்கு நேரிலேயே சென்று அகதி முகாம்களில் தங்கியுள்ளோருக்கு ஆறுதல் கூறி, அமைதி திரும்ப வேண்டும் என அனைத்து தரப்பினருக்கும் வேண்டுகோள் விடுத்தார். பிரதமரோ ஓர் அறிக்கை கூட வெளியிட மறுக்கிறார்.

பாரதீய ஜனதா கட்சியின் மாநில அரசும் சரி, ஒன்றிய அரசும் சரி… கலவரத்தை தடுக்க வழியில்லாமல் இருக்கின்றன. அதற்கு முக்கிய காரணம், கலவரத்தில் அவர்கள் கட்சிக்கே முக்கிய பங்கு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. சுருக்கமாகச் சொன்னால் மணிப்பூர் மக்கள் தொகையில் மூன்று பிரிவுகள் இருக்கின்றன. சமவெளியில் வசிக்கும் மெய்தி இனத்தவர் ஐம்பது சதவிகிதத்துக்கும் அதிகமானவர்கள். இவர்கள் பழைய மன்னராட்சி காலத்திலிருந்து செல்வாக்கு மிக்கவர்களாய் இருக்கிறார்கள்.

மெய்தி மன்னர்கள் பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்து கெளடீய வைஷ்ணவ பார்ப்பனீய இந்து மதத்தைப் பின்பற்றினர். இவர்களைத் தவிர தொன்றுதொட்டு மலைப்பகுதியில் வாழ்ந்துவரும் பழங்குடி மக்கள் உள்ளார்கள். அவர்களில் குகி எனப்படும் இனமும், நாகா எனப்படும் இனமும் குறிப்பிடத்தக்கவை. மலைவாழ் மக்களில் கணிசமானோர் கிறிஸ்துவ மதத்தை தழுவியவர்கள்.

கலவரத்துக்கு இரண்டு முக்கிய காரணங்கள் கூறப்படுகின்றன. மலைகளில் குகி இனத்தவர் வசிக்கும் நிலப்பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்று கூறி அவர்கள் இருப்பிடங்களிலிருந்து வெளியேற்றப்படுவது. இரண்டாவது, மெய்தி இனத்தவரையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. இரண்டுமே குகி இனத்தவரை பாதிக்கும் பிரச்சினைகள்.

அதனால் அவர்கள் ஊர்வலமாகச் சென்றபோது கலவரம் மூண்டது. கிறிஸ்துவ வழிபாட்டுத் தலங்கள் குறிவைத்து தாக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இன அடையாளங்களுக்கு இடையே இருந்த முரண் இப்போது மத அடையாளம் சார்ந்ததாக மாற்றப்படுவதாகக் கூறுகிறார்கள். இது பாரதீய ஜனதா கட்சியின் மீது ஐயத்தை அதிகரிக்கிறது. ஏனெனில் அவர்கள் அரசியல் எப்போதுமே மதப் பெரும்பான்மைவாத அரசியலாகத்தான் இருந்திருக்கிறது.

கலவரத்தில் ஈடுபடுபவர்கள் முன்னேற்பாட்டுடன், அணி திரண்டு, ஆயுதங்களுடன் செல்வதாக குற்றம்சாட்டப்படுகிறது. உதாரணமாக ஐம்பது இருசக்கர வாகனங்களில் அவர்கள் ஒரு படையாக நீண்ட தூரம் பயணம் செய்து தாக்குதலில் ஈடுபடுவதாகக் கூறப்படுகிறது.

பரகால பிரபாகர் ராவ்

பரகால பிரபாகர் ராவ் என்பவர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பொருளாதார நிபுணர், அரசியல்வாதி, விமர்சகர். ஒரு காலத்தில் பாஜக கட்சியிலும் இருந்துள்ளார். அதன்பின் பிரஜா ராஜ்யம் கட்சியில் இருந்தார். அதிலிருந்தும் விலகிவிட்டார். அவர் சமீபத்தில் “The Crooked Timber of New India” என்றொரு நூலை எழுதியுள்ளார்.

ஒரு மரப்பலகை வளைந்து போய்விட்டால், கோணலாகி விட்டால் அது எந்த பொருளும் செய்ய பயன்படாது. இந்தியா அப்படி வீணாகிப் போகிறது என்பதுதான் அவர் விமர்சனம். அந்த நூலிலும் சரி, அவர் “The Wire” தளத்துக்கு அளித்த நேர்காணலிலும் சரி, நரேந்திர மோடியும் அவரது அமைச்சர்களும் முற்றிலும் திறமையற்றவர்கள், ஆளத் தெரியாதவர்கள் என்று சாடுகிறார்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மோடி அரசு கடுமையாகத் தேக்கமடையச் செய்துள்ளது என்று அவர் குற்றம் சாட்டுகிறார். இவர் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா பாதிப்பால் உருவான தேக்கத்தைச் சரி செய்ய உற்பத்தியில் கவனம் குவிக்கும் அரசு, மக்களின் வாங்கும் சக்தியை மேம்படுத்த எதுவும் செய்வதில்லை என்பதை அவர் முக்கிய குற்றச்சாட்டாக வைக்கிறார். இது பல்வேறு பொருளாதார நிபுணர்கள் பாஜக அரசின் மீது வைக்கும் குற்றச்சாட்டாகும்.

பாரதீய ஜனதா கட்சிக்கென்று பொருளாதார கோட்பாடோ, அரசியல் பொருளாதார தத்துவமோ கிடையாது என்று பரகலா பிரபாகர் கூறுகிறார். முன்னொரு காலத்தில் அவர்கள் பொருளாதாரக் கொள்கை காந்தீய சோஷலிசம் என்றார்கள். சுதேசி பொருளாதாரம் என்றார்கள். இன்றைக்குக் கட்டுப்பாடற்ற முதலீட்டிய வளர்ச்சியை, கார்ப்பரேட் நலன்களை, குறிப்பாக அதானி போன்ற தகிடுதத்தக்காரர்களை ஆதரிக்கிறார்கள்.

பாரதீய ஜனதா கட்சியின் அரசியல் வெறுமை

மணிப்பூரில் நடப்பவற்றையும், பரகால பிரபாகர் கூறுவதையும் இணைத்துப் பார்க்கும்போது நமக்கு ஒரு திட்டவட்டமான கேள்வி எழுகிறது. பாரதீய ஜனதா கட்சியிடம் உண்மையிலேயே அரசியல் என்று ஒன்று உள்ளதா என்பதே அந்தக் கேள்வி. அரசியல் என்பதை நாம் இரண்டு விதமாகப் புரிந்து கொள்ளலாம்.

ஒன்று, அனைத்து மக்களையும் ஒருங்கிணைக்கும், ஒரு பெரிய உரையாடலை, சகவாழ்வைக் கட்டமைக்கும் தேசிய அரசியல். இந்த அரசியலை காந்தி, நேரு காலத்திலிருந்து காங்கிரஸ் கட்சி செய்து வருகிறது. சமீபத்தில் அந்த பாரம்பரியத்தின் தொடர்ச்சியாகத்தான் ராகுல் காந்தி பாரத் ஜாடோ யாத்ரா என்று தேசத்தை ஒருங்கிணைக்கும் நடைப்பயணத்தை மேற்கொண்டார்.  

மற்றொன்று சமூகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வை நீக்க முன்னுரிமை கொடுக்கும், வலியோருக்கு எதிராக எளியோரை அணிதிரட்டும் சமூக நீதி அரசியல். விவசாயிகள், தொழிலாளர்கள், ஏழை எளியவர்கள் ஆகியவர்களின் நலன்களை முதன்மைப்படுத்தும் அரசியல். ஆதிக்க ஜாதியினருக்கு எதிராக பிற்படுத்தப்பட்டவர்களை, தாழ்த்தப்பட்டவர்களை அணிதிரட்டி சாமானியர்கள் அரசியல் அதிகாரத்தைப் பெற வகை செய்யும் அரசியல். அதை தி.மு.க, ஆர்.ஜே.டி, வி.சி.க, கம்யூனிஸ்டு கட்சிகள் உள்ளிட்ட பல மாநிலக் கட்சிகள், வெகுஜன அரசியல் கட்சிகள் செய்கின்றன.

பாரதீய ஜனதா கட்சி இந்த இரண்டு வகையிலும் சேராது. அவர்கள் அரசியல் என்பது முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள் ஆகிய சிறுபான்மை மத அடையாளங்களுக்கு எதிராக பெரும்பான்மை மத அடையாளமாக இந்துக்களைக் கட்டமைப்பது, அணிதிரட்டுவது. இது உள்ளபடி அரசியலே கிடையாது. ஏனெனில் இந்துக்களுக்கும், பிற மதத்தவருக்கும் எந்த அரசியல் முரணும், வர்க்க முரணும் கிடையாது. நாட்டின் அனைத்து துறைகளிலும், பொருளாதார வாழ்விலும், கலாச்சார வாழ்விலும் அனைத்து மதத்தினரும் இணைந்துதான் பங்கேற்கிறார்கள்.

அதில் இன்னொரு முக்கிய பிரச்சினை என்னவென்றால், நாட்டின் முக்கியமான அரசியல் முரணே இந்துக்கள் என்று அடையாளமாகும் மக்களுக்குள் உள்ள ஜாதி முரண்தான். ஜாதி ரீதியாகப் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களைப் பிறருடன் சமமானவர்களாக,சம வாய்ப்புள்ளவர்களாக மாற்றும் சமூக நீதி அரசியலுக்கும், அதை எதிர்க்கும் பிற்போக்கு சக்திகளுக்கும் இடையிலான முரணே இந்திய மக்களாட்சியின் முக்கிய அரசியல் முரணாக உள்ளது.

மராத்திய பார்ப்பனர்களால் தோற்றுவிக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ், இந்து மகாசபா ஆகியவற்றின் உருவாக்கமான பாரதீய ஜனதா கட்சி சமூக நீதி அரசியலை எதிர்கொள்ள எந்த ஒரு கொள்கையையும், கோட்பாட்டையும் வகுக்கவில்லை. முன்னுக்குப் பின் முரணாக நாங்கள் ஜாதி பார்ப்பதில்லை என்பார்கள்; ஆனால் பார்ப்பனர்களின் பிற்போக்கு கொள்கைகளை ஆதரிப்பார்கள். சமஸ்கிருதத்தை படிக்கத் தெரியாமலேயே கொண்டாடுவார்கள். பிள்ளையாருக்கு யானைத் தலையைப் பொருத்தியது பிளாஸ்டிக் சர்ஜரி என்று பிதற்றுவார்கள்.

இத்தகைய காரணங்களால் பாரதீய ஜனதா கட்சியால் நேர்மறையாக ஓர் அரசியல் அணி திரட்டலைச் செய்யவே முடியாது. அவர்களின் உண்மையான ஆதரவு தளம் என்பது பிற்போக்கு மனோபாவம் கொண்ட பார்ப்பன, உயர்ஜாதி சக்திகளும், தடையின்றி பொருளாதார சுரண்டலை மேற்கொள்ள விரும்பும் பனியா முதலீட்டிய சக்திகளுமாகத்தான் இருக்க முடியும்.

ஆனால், அது வெகுஜன அரசியலுக்கு போதாது என்பதால் மற்ற கட்சிகளைப் பிளப்பது, கட்சி அணியினரையும், சட்டமன்ற உறுப்பினர்களையும் விலைக்கு வாங்குவது என்பது போன்ற வழிமுறைகளில்தான் அவர்கள் பல மாநிலங்களில் ஆட்சியைப் பிடிக்க முடிகிறது. சமீபத்திய செய்தி மீண்டும் தேசியவாத காங்கிரஸை பிளந்து அஜித் பவாரை மராத்திய அரசில் சேர்த்திருப்பதுதான்.

முழுக்க முழுக்க சந்தர்ப்பவாத அரசியல் என்பதைத்தவிர இதில் கொள்கையோ, லட்சியமோ எதுவும் கிடையாது. ஒவ்வொரு மாநிலத்திலும் பிற கட்சியினரை விலைக்கு வாங்குவதையே அரசியலாகக் கொண்டுள்ளார்கள். இதன் காரணமாகத்தான் கர்நாடகாவில் வரலாறு காணாத ஊழல் ஆட்சியை எடியூரப்பா, எஸ்.ஆர்.பொம்மை தலைமையில் உருவாக்கினார்கள். மத்தியப் பிரதேசத்தில் பூதாகாரமான வியாபம் ஊழலை அனுமதித்தார்கள்.

ஆளுநர் ஆர்.என்.ரவியின் அடாவடி செயல்பாடுகள்

இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம், அதன் சுயாட்சி நிறுவனங்கள், நிர்வாக நெறிமுறைகள் அனைத்தையும் திட்டமிட்டுச் சீர்குலைத்து வருகிறது பாரதீய ஜனதா கட்சி. அதன் மிகச் சிறந்த உதாரணமே தமிழ்நாட்டு ஆளுநர் ரவியின் அத்துமீறிய செயல்பாடுகள்.

சென்ற வாரம் ஆர்.என்.ரவி நடத்திய அத்துமீறல் நாடெங்கும் கண்டிக்கப்பட்டது. அமுலாக்கத் துறையால் நீதிமன்றக் காவலில் எடுக்கப்பட்ட நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அமைச்சர் செந்தில் பாலாஜியை தமிழ்நாட்டு அமைச்சரவையிலிருந்து நீக்குவதாக தான்தோன்றித்தனமாக அறிவித்தார். ஒரு சில மணி நேரங்களிலேயே உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தல்படி அந்த உத்தரவை நிறுத்திவைப்பதாகக் கூறினார்.  

மாநில முதல்வர் ஸ்டாலின், அவரது இரண்டு கடிதங்களுமே அரசியலமைப்புச் சட்டத்துக்குப் புறம்பானது என்பதால் மாநில அரசால் புறக்கணிக்கப்படுவதாகப் பதில் எழுதினார். மாநிலத்தின், நாட்டின் பல்வேறு அரசியல் கட்சிகளும் முதல்வருக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

ஆளுநர் தன் நடவடிக்கைக்குச் சொல்லும் காரணம் வேடிக்கையானது. அமைச்சர் செந்தில் பாலாஜி மீது விசாரணை நடைபெறுவதால் அவர் பதவியில் நீடித்தால் சாட்சியங்களைக் கலைத்து விடுவாராம். இது போன்ற ஓர் அபத்தமான வாதத்தை எப்படிக் கூற முடிகிறது என்பதுதான் வியப்புக்குரிய செய்தி.

மத்திய  உள்துறை அமைச்சர் அமித் ஷா 2014ஆம் ஆண்டு பதவியேற்றபோது அவர் மீது சி.பி.ஐ தொடர்ந்த கிரிமினல் வழக்கு, போலி என் கெளண்டரில் ஷஹாபுதீன் கொல்லப்பட்ட வழக்கு, பம்பாய் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது. கிரிமினல் வழக்கை எதிர்கொண்டுள்ளவர் உள்துறை அமைச்சராகலாமா என்று யாராவது கேட்டார்களா?

பின்னர் 2019 தேர்தலுக்குப் பிறகு அமித் ஷாவுக்கு துணை மந்திரிகளாக (Ministers of state) மூன்று பேரை நியமித்தார் மோடி. அதில் அஜய் மிஸ்ரா தேனி என்ற லக்கிம்பூர் புகழ் அமைச்சர் மீது கொலை வழக்கு ஒன்று நிலுவையில் இருந்தது. உள்துறை அமைச்சகத்தில் இணைய எப்படிப்பட்ட தகுதி அது என்று வியக்காமல் இருக்க முடியாது.    

அடுத்து நிதிஷ் பிர்மானிக் என்பவர். இவர் தேர்தலின் போது கொடுத்த தகவலின்படி இவர் மீது பல்வேறு கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருந்தன. கொலை வழக்கு, கொலை செய்ய முயற்சி, கொள்ளையடிப்பதற்கான தயாரிப்பில் ஈடுபட்டது, பெண்களை இழிவாக நடத்தியது, ஏமாற்று என ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் இவர் மீது பதியப்பட்டு வழக்குகள் நடந்துகொண்டிருந்தன.

மூன்றாவதாக நித்தியானந்த் ராய் என்பவர் மீதும் மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் நிலுவையில் இருந்தன. ஆக, உள்துறை அமைச்சகம் என்பதே பல்வேறு கிரிமினல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பணியாற்றும் இடமாக மாறியதாக பத்திரிகை செய்திகள் கூறின.

இப்படிப்பட்ட பின்னணியில்தான் ஆர்.என்.ரவி, செந்தில் பாலாஜி விஷயத்தில் எடுத்த நடவடிக்கையை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அத்துமீறி அடாவடியாகச் செயல்படும் நோக்கத்தைத் தவிர நாம் வேறு எதையாவது அதில் பார்க்க முடியுமா என்பதே கேள்வி.

இது ஒரு புறமிருக்க, ஆர்.என்.ரவியின் ஓயாத சனாதன பிரச்சாரம் இன்னொரு சுவாரஸ்யம். சங்கராச்சாரியார் கூட இப்படி தினசரி சனாதனத்துக்குப் புது விளக்கம் கூற மாட்டார். இதை ஏன் ஆர்.என்.ரவி செய்கிறார் என்பதையும் நாம் பரிசீலிக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் பாஜக-வை வளர்க்க பார்ப்பனரல்லாதோர் தலைமை முக்கியம் என்று கருதி மாஜி ஐ.பி.எஸ் அண்ணாமலையை மாநில தலைவராக்கியுள்ளார்கள். அவர் கட்சியிலுள்ள செல்வாக்கான பார்ப்பனர்கள் பலரை ஓரம் கட்டி வருகிறார். அவருக்கு எதிராக எஸ்.வி.சேகர் போன்ற பார்ப்பன பிரமுகர்கள் கடுமையாக போர்க்குரல் எழுப்பி வருகிறார்கள்.

இந்த நிலையில், பார்ப்பனர்களை மகிழ்விக்கவே ஆளுநர் தினமும் சனாதன புகழ் பாடுகிறாரோ என்று எண்ணாமலிருக்க முடியவில்லை. சனாதனம் என்றால் என்னவென்று திட்டவட்டமாகக் கூறாமல் வள்ளுவரும் சனாதனம், வள்ளலாரும் சனாதனம் என்றெல்லாம் அடித்து விடுவதன் மூலம் சனாதனம் என்ற வார்த்தையை எப்படியாவது நல்ல வார்த்தையாக மாற்றிவிட வேண்டும் என்ற பார்ப்பனர்களின் தவிப்புக்கு ஆர்.என்.ரவி வடிகாலாக விளங்குகிறார்.

பாரதீய ஜனதா கட்சியின் உள்ளீடற்ற வெற்று அரசியலின் முக்கிய வெளிப்பாடுதான் ஆர்.என்.ரவியின் சனாதன பிரச்சாரம். பார்ப்பனீயத்தையும் காப்பாற்ற வேண்டும், பார்ப்பனரல்லாதோரையும் இந்து என்று அணிதிரட்ட வேண்டும் என்றால் என்ன தான் செய்வார்கள் பாவம். அர்த்தமற்ற அரசியலும், அலங்கோல ஆட்சியுமாக பாஜக செயல்பாட்டின் அங்கமே ஆர்.என்.ரவி.    

”ஆளுநர் பதவி வகிக்க தகுதியற்றவர் ஆர்.என்.ரவி” – முர்முவுக்கு மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தின் முழு விவரம்

ர்.என். ரவி, தனது நடத்தை மற்றும் செயல்பாடுகள்மூலம், தான் ஒருதலைப்பட்சமானவர் மற்றும் ஆளுநர் பதவியை வகிக்க தகுதியற்றவர் என்பதை நிரூபித்துள்ளதாக குடியரசு தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின், குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் இது தொடர்பாக தனது 10-1-2023 நாளிட்ட கடிதத்தினை 12-1-2023 அன்று டெல்லியில், தமிழக அரசின் சட்ட அமைச்சர் மற்றும் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரிடம் அளித்ததை நினைவுகூர்வதாகவும், அதன் தொடர்ச்சியாக, தமிழகம் மற்றும் தமிழக மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பொருள் குறித்து குடியரசுத் தலைவரின் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். அந்தக் கடிதத்தின் முழு விவரம்:

ஆளுநர் என்பவர், முக்கியமான அரசியலமைப்பு கடமைகளைச் செய்பவராகவும், பாரபட்சமற்றவராகவும், அப்பழுக்கற்ற நேர்மையான நபராகவும் இருக்க வேண்டும். மக்களாட்சி தத்துவம் என்பது நமது அரசியல் சாசனத்தின் உயிர்நாடி என்றும், அந்த மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அரசை நிறுவுவதற்காகவே, நமது சுதந்திரப் போராட்ட வீரர்கள் காலனிய சக்திகளை எதிர்த்துப் போராடி, தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்தனர்.

அரசியல் சாசனத்தின் மீதும், அது பிரதிநிதித்துவப்படுத்தும் கொள்கைகள் மீதும் ஆளுநருக்கு முழு நம்பிக்கை இருக்க வேண்டும். அரசியலமைப்பின் லட்சியங்கள் முகவுரையில் தொகுக்கப்பட்டுள்ளன. இந்தியா ஒரு இறையாண்மை மிக்க, சோசலிச, மதச்சார்பற்ற, ஜனநாயக குடியரசு நாடு. இந்த அடிப்படைக் கொள்கைகளில் ஏதேனும் ஒன்றில் நம்பிக்கை இல்லாத ஆளுநர், அரசியலமைப்பு பதவியை வகிக்கத் தகுதியற்றவர்.

அரசியல்வாதியாக மாறும் ஒரு ஆளுநர், அப்பதவியில் தொடரவே கூடாது என்றும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் கொள்கை, செயல்பாடுகள், முடிவுகளுக்கு சவால் விடும் வகையில் ஆளுநர் அரசியல் களத்தில் இறங்க வேண்டும் என்பது அரசியல் சாசனத்தின் நோக்கமல்ல. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் கொள்கைக்கு ஆளுநர் வெளிப்படையாக முரண்படுவது அல்லது சட்டமன்றம் நிறைவேற்றும் சட்டமுன்வடிவுகளுக்கு ஒப்புதல் வழங்குவதில் தேவையற்ற காலதாமதம் செய்து முட்டுக்கட்டை போடுவது அல்லது கூட்டாட்சி மற்றும் மதச்சார்பின்மை போன்ற அரசியலமைப்பின் அடிப்படை அம்சங்களுக்கு எதிராகச் செயல்படுவது போன்றதொரு சூழ்நிலையை அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் ஒருபோதும் கற்பனை செய்திருக்க மாட்டார்கள்.

2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், தமிழகத்தை சமூகப் பொருளாதார வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல, திராவிட முன்னேற்றக் கழகத்திற்குத் தமிழக மக்கள் தங்களது உறுதியான ஆதரவை வழங்கி தேர்ந்தெடுத்துள்ளதை குடியரசுத் தலைவர் நன்கு அறிவார்கள். திராவிட முன்னேற்றக் கழக அரசு பதவியேற்ற நாள் முதல் மாநிலத்தின் வளர்ச்சிக்காகவும், தமிழக மக்கள் அரசின் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு ஏற்ப செயல்பட்டு வருகிறோம்.

ஆனால், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளிப்படையாகத் தமிழக அரசின் கொள்கைகளுக்கு முரணாகச் செயல்பட்டு, தமிழக அரசும், சட்டமன்றமும் செய்து வரும் பணிகளுக்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறார். சட்டமுன்வடிவுகள் மற்றும் கோப்புகளுக்கு ஒப்புதல் அளிப்பதில் தேவையில்லாமல் காலதாமதம் செய்து வருகிறார்.

இதற்கு முன்பு நாகாலாந்து ஆளுநராக ஆர்.என். ரவி பொறுப்பு வகித்தபோதும் அவரது செயல்பாடுகள் திருப்திகரமாக அமையவில்லை. உண்மையில் நாகாலாந்து ஆளுநர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்ட பிறகுதான் நாகாலாந்திற்கு ஒரு நிம்மதி ஏற்பட்டுள்ளதாக, நாகாலாந்து தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சியின் (என்.டி.பி.பி) தலைவர் கூறியுள்ளார். சட்டத்தால் நிறுவப்பட்ட அரசாங்கத்தைக் கலந்தாலோசிக்காமல், அதற்கு இணையாக, மாநில தலைமைச் செயலாளருக்கு உத்தரவுகளை திரு. ஆர்.என். ரவி வழங்கி, தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கத்தின் விவகாரங்களில் தலையிட்டதாக என்.டி.பி.பி தலைவர் சிங்வாங் கொன்யாக் தெரிவித்தார்.

ஆளுநரின் இத்தகைய செயலுக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பரவலான கண்டனத்தைத் தெரிவித்தனர். இந்தப் பின்னணியில்தான், ஆர்.என்.ரவி 2021-செப்டம்பரில் தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டார். அவர் பொறுப்பேற்றது முதல், சட்டபூர்வமாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழக அரசுடன் கருத்தியல் மற்றும் அரசியல் போரில் ஈடுபட்டு வருகிறார். தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பல்வேறு நடவடிக்கைகள், அவர் ஆளுநர் பதவியை வகிக்கத் தகுதியற்றவர் என்பதைப் பின்வரும் நிகழ்வுகள் புலப்படுத்துகின்றன.

சட்டமுன்வடிவுகளுக்கு ஒப்புதல் அளிப்பதில் தேவையற்ற காலதாமதம்: தமிழ்நாடு சட்டமன்றம் பல முக்கியமான சட்டமுன்வடிவுகளை இயற்றி அவற்றை ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டமுன்வடிவுகளுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் தேவையற்ற காலதாமதம் ஏற்படுத்தி வருவது வேதனை அளிக்கிறது. இது மாநிலத்தின் நிர்வாகத்தில் தலையிடுவதற்கும், சட்டமன்றத்தின் அலுவல்களில் தலையிடுவதற்கும் ஒப்பானதாகும். ஆளுநரின் இத்தகைய செயல், ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கம் மக்களுக்குச் சேவை செய்வதைத் தடுக்கிறது. இது அரசியலமைப்பிற்கு முரணானது.

நமது அரசியலமைப்புச் சட்டத்தின்படி, அமைச்சரவை அல்லது சட்டமன்றத்தின் முடிவின் மீது, ஒரு ஆளுநர் மேல்முறையீட்டு அதிகாரியாக இருக்க முடியாது. சட்டமுன்வடிவின் நோக்கக் காரணம், தேவை மற்றும் சட்டமுன்வடிவின் அவசியம் குறித்து ஆளுநர் விசாரிக்க முடியாது. இது சட்டமுன்வடிவின் அவசியத்தை விரிவாக விவாதிக்கும் சட்டமன்றத்தின் முழு உரிமைக்கு உட்பட்டது.

இந்தச் சூழ்நிலையில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட சட்டமுன்வடிவுகள் தொடர்பாக ஆளுநர் கோரிய அனைத்து விளக்கங்களையும் தமிழக அரசு அளித்துள்ளது. சட்டமன்றத்தில் சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டவுடன் அது மக்களின் விருப்பமாகக் கருதப்பட்டு, ஆளுநர் அரசியலமைப்பின் கட்டமைப்பிற்குள் செயல்பட வேண்டும். சட்டமுன் வடிவுகளுக்கு ஒப்புதல் அளிப்பதற்கு காலக்கெடு வகுக்கப்படவில்லை என்பதை ஆளுநர் தவறாகப் பயன்படுத்தக் கூடாது. இப்படிப்பட்ட உயர் பதவிகளில் இதுபோன்ற செயல்கள் நடக்கும் என்று அரசியல் சாசனத்தை உருவாக்கியவர்கள் நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டார்கள்.

குற்றவாளிகள் மீது வழக்குத் தொடர அனுமதி வழங்குவதில் தேவையற்ற தாமதம்: ஊழல் புரிந்த முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது வழக்கு தொடர அனுமதி வழங்குவது தொடர்பான கோப்புகளை ஆளுநர் ஆர்.என். ரவி கிடப்பில் போட்டுள்ளார். சென்னை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு உத்தரவிட்ட குட்கா வழக்கில் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது வழக்குத் தொடர சிபிஐ கோரிய அனுமதியைக்கூட வழங்காமல், ஆளுநர் கிடப்பில் போட்டு வைத்திருப்பது விசித்திரமாக உள்ளது. ஆளுநரின் ஒப்புதலுக்காக ஊழல் வழக்குகள் தொடர்பான பின்வரும் கோப்புகள் நிலுவையில் உள்ளன.

● திரு.பி.வி.ரமணா @ பி.வெங்கட்ரமணா – முன்னாள் பால்வளத் துறை அமைச்சர் – கோப்பு எண் AC/495/2022, நாள் 12.9.2022.
● டாக்டர் சி. விஜயபாஸ்கர் – முன்னாள் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் – கோப்பு எண் AC/495/2022, நாள் 12.9.2022.
● திரு. கே.சி. வீரமணி – முன்னாள் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் – கோப்பு எண் AC/454/2021, நாள் 12.9.2022.
● திரு. எம்.ஆர்.விஜயபாஸ்கர் – முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் –கோப்பு எண் AC/351/2021, நாள் 15.5.2023.

தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் அரசியல் மற்றும் கருத்தியல் எதிராளியாக செயல்படுதல்: ஆர்.என்.ரவி தனிப்பட்ட முறையில், தனது அரசியல் மற்றும் மதக் கருத்துகளைத் தொடர்ந்து பொது வெளியில் தெரிவித்து வருவது, அவர் வகிக்கும் ஆளுநர் பதவிக்கு மிகவும் பொருத்தமற்றது. ஒரு மாநில ஆளுநராக, அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கு சங்கடத்தை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், சட்டப்படி நிறுவப்பட்ட அரசாங்கத்தின் மீது அவமதிப்பு, வெறுப்பு, அதிருப்தி மற்றும் தவறான எண்ணத்தைத் தூண்ட முயல்கிறார்.

அமைதியாகவும், நல்லிணக்கத்துடனும் வாழும் பல்வேறு மதங்கள், மொழிகள், இனங்களைச் சேர்ந்தவர்களுக்கு தமிழகம் சொர்க்கம் போன்றது. மதச்சார்பற்ற கொள்கைகள் மற்றும் பாலின சமத்துவம் ஆகியவற்றில் மாநில அரசு தனது முழு நம்பிக்கையை கொண்டுள்ளது. கெடுவாய்ப்பாக, ஆர்.என். ரவி, இந்த நாட்டின் மதச்சார்பற்ற கொள்கைகளில் தனக்கு நம்பிக்கை இல்லை என்பதை அடிக்கடி தனது பிளவுபடுத்தும் பேச்சுகளின் மூலம் பகிரங்கமாக வெளிப்படுத்தி வருகிறார்.

ஆர்.என்.ரவி, விரும்பத்தகாத, பிளவுபடுத்தும், மதரீதியான கருத்துக்களைப் பொதுவெளியில் பரப்பி வருவது அவரது ஆளுநர் பதவிக்குப் பொருத்தமற்றது. 9-11-2022 அன்று ஆர்.என். ரவி, “உலகின் பிற பகுதிகளைப் போலவே இந்தியாவும் ஒற்றை மதத்தைச் சார்ந்துள்ளது” என்று ஒரு கருத்தை வெளியிட்டுள்ளது இந்திய அரசியலமைப்பை அவமதிக்கும் செயலாகும். இந்தியா, அதன் அரசியலமைப்பு மற்றும் சட்டங்களைச் சார்ந்துள்ளதையும், எந்த மதத்தையும் சார்ந்ததல்ல என்பதை குடியரசுத் தலைவர் நன்கு அறிவார்கள்.

இந்தியாவின் வலிமையும், அழகும், அதன் பன்முக கலாச்சாரங்களைக் கொண்ட சமூகத்திலும், பல நூற்றாண்டுகளாக கட்டமைக்கப்பட்ட மத நல்லிணக்கத்திலும் உள்ளது. 13.06.2022 அன்று ஆர்.என்.ரவி சனாதன தர்மத்தைப் புகழ்வது, தமிழ் இலக்கியத்தின் ரத்தினமான ‘திருக்குறளை’ வகுப்புவாதப்படுத்துவது, திராவிட பாரம்பரியத்தையும் தமிழ்ப் பெருமையையும் கண்டிப்பது போன்ற வகுப்புவாதக் கருத்துக்களை தெரிவித்திருக்கிறார். இதுபோன்ற தேவையற்ற அறிக்கைகள் மற்றம் பேச்சுக்களின் மூலமாக ஆளுநர் ஆர்.என். ரவி, தமிழக மக்களின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளார்.

தமிழக மக்களுக்கு எது நல்லது என்பதை முடிவு செய்ய ஆர்.என். ரவி, தமிழகத்தில் எந்தத் தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெறவில்லை என்பதை அவர் மறந்துவிட்டார். அவர் மக்களின் தலைவர் அல்ல; நியமனம் செய்யப்பட்ட ஒரு நிர்வாகி. 5-1-2023 அன்று நடைபெற்ற காசி தமிழ் சங்கமம் என்ற விழாவில், மீண்டும் தமிழ் மக்களையும், பண்பாட்டையும், இலக்கியத்தையும், திராவிடக் கருத்தியலையும், அரசியலையும் இழிவுபடுத்தும் வகையிலும், அவதூறாகவும் அறிக்கைகளை வெளியிட்டார். அவை பின்வருமாறு செய்தித்தாளில் வெளிவந்தன.

● “துரதிர்ஷ்டவசமாக தமிழகத்தில், நாங்கள் திராவிடர்கள், எங்களுக்கும் இதற்கும் (பாரதம்) எந்தத் தொடர்பும் இல்லை என்ற பிற்போக்குத்தனமான அரசியல் நடந்து வருகிறது -”.
● “அதனால்தான் கூட்டாட்சி பற்றி வெளிப்படையாகப் பேசுகிறார்கள். மாநிலங்கள் உருவாக்கப்படுவதற்குப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாரதம் இங்கே இருந்தது என்பதை அவர்கள் உணரவில்லை”.
● “மாகாணங்கள் என்ற கருத்தாக்கம் நிர்வாக நோக்கங்களுக்காக உள்ளது. எனவே, நமது ஒன்றியம் அமெரிக்காவைப் போலன்றி இயற்கையானது; கருத்தியல் சார்ந்தது அல்ல என்பதை நாம் உணர வேண்டும்”
● “இங்கே தமிழகத்தில் ஒரு வித்தியாசமான கதையாடல் உருவாக்கப்பட்டுள்ளது; நாடு முழுமைக்கும் பொருந்தும் அனைத்தையும் தமிழகம் மட்டும், ‘இல்லை, நாங்கள் உடன்படவில்லை’ என்று சொல்லும். இது ஒரு பழக்கமாகிவிட்டது, கல்விப்புலம் உட்பட அனைத்துத் தரப்பினராலும் இந்தப் பழக்கம் வலுப்படுத்தப்பட்டுள்ளது”.
● “மிகவும் மோசமான இலக்கியங்கள் உருவாக்கப்பட்டு, மக்களுக்கு போதிக்கப்பட்டுள்ளன. இது உடைக்கப்பட வேண்டும், உண்மை வெல்ல வேண்டும். நாம் அனைவரும் ஒன்று, பாரதத்தின் ஓர் அங்கம் என்பதே அந்த உண்மை”.

திராவிட அரசியல் பிற்போக்குத்தனமானது என்று ஆர்.என். ரவி கூறியிருப்பது அவதூறானது மட்டுமல்ல; அது அறியாமையில் தெரிவிக்கப்பட்டுள்ளதுமாகும். 50 ஆண்டுகளுக்கும் மேலான திராவிட அரசு மற்றும் அரசியலின் விளைவாகவே, இன்றைக்கு வளர்ச்சியில் இந்திய அளவில் முதல் 3 இடங்களில் தமிழகம் உள்ளது. வளர்ச்சியும், சமூகநீதியும் கைகோர்த்துச் செல்லும் ஒரே மாநிலம் தமிழகம்தான். பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு வெளியிட்டுள்ள 2022ம் ஆண்டின் சமூக முன்னேற்றக் குறியீட்டில், தேசிய சராசரியான 60.19-க்கு எதிராக, தமிழகம் 63.33 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

திராவிட அரசியல் பிற்போக்கானதா அல்லது முற்போக்கானதா என்பதை நடுநிலையாளர்களால் இந்தத் தரவுகளைக் கொண்டு கணிக்க முடியும். தமிழகத்தில், தொடர்ந்து திராவிட ஆட்சி நடப்பதால்தான் பொருளாதார வளர்ச்சியிலும், மேம்பாட்டிலும் தமிழகம் மற்ற மாநிலங்களை விட முன்னணியில் உள்ளது. அதிக தொழிற்சாலைகள் உள்ள மாநிலங்கள் குறித்த புள்ளிவிவரத்தில், தமிழகம் 38,837 தொழிற்சாலைகளுடன் முதலிடத்திலும், குஜராத் மாநிலம் 28,479 தொழிற்சாலைகளுடன் 2-ஆவது இடத்திலும் உள்ளன. 2020-2021ம் ஆண்டில், ரூ.13,641 கோடியாக இருந்த மின்னணு ஏற்றுமதி, கடந்த 2 ஆண்டுகளில் 223 விழுக்காடு அளவிற்கு வளர்ச்சியைப் பதிவு செய்து, 2022-2023ம் ஆண்டில் ரூ.44,044 கோடியாக உயர்ந்து, தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

எனவே, தமிழகத்தில் திராவிட அரசியல் பிற்போக்குத்தனமானது என்று சொல்பவர்களின் பார்வையில்தான் குறைபாடு உள்ளது. ஆளுநர் என்ற அரசியலமைப்புப் பதவியை வகிக்கும் ஒரு நபரின் பொருத்தமற்ற அரசியல் போக்கையே இது அம்பலப்படுத்துகிறது. அரசியல் சாசனத்தின் அடிப்படைக் கட்டமைப்பின் முக்கிய அங்கமான கூட்டாட்சித் தத்துவம், நிர்வாக நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டது என ஆளுநர் ஆர்.என். ரவி விமர்சித்து, அவதூறாகப் பேசியிருப்பதுதான் அதைவிட அதிர்ச்சியளிக்கும் விஷயம். கூட்டாட்சி என்பது நிர்வாக நோக்கங்களுக்காக உருவாக்கப்படவில்லை; மாறாக அரசியலமைப்பின்கீழ் இந்தியா இவ்வாறாக அமைக்கப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 1-இல் இந்தியாவை “மாநிலங்களின் ஒன்றியம்” என்று வரையறுக்கிறது; இதன் மூலம் மாநிலங்கள் ஒன்றிணைந்து ஒன்றியத்தை உருவாக்குகின்றன என்று குறிப்பிட்டுள்ளது.

ஆளுநர் ஆர்.என்.ரவி “இலக்கியம் மக்களுக்கு மோசமாக போதிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்து தமிழ் இலக்கியத்தை இழிவுபடுத்தியுள்ளார். இதுபோன்ற அவரது அறிக்கைகள் அரசியலமைப்பை அவமதிக்கும் வகையில் உள்ளன. அவரது இதுபோன்ற செயல்கள், இந்திய அரசமைப்பின் 156 (1)-ஆவது பிரிவின்கீழ், அரசியலமைப்பை நிலைநிறுத்துவதற்கும், இணங்குவதற்கும் தான் ஏற்றுக் கொண்ட உறுதிமொழியை மீறியுள்ளதையே காட்டுகிறது.

மேற்கூறியவற்றைத் தவிர, ஆர்.என். ரவி, தமிழ்நாட்டு மக்களின் நெஞ்சங்களில் நிலைத்திருக்கும் “தமிழ்நாடு” என்ற பெயரை, “தமிழகம்” என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று ஏற்கவியலாத அதிர்ச்சியை அளிக்கும் கருத்தைத் தெரிவித்தார். ஆளுநரின் இந்தச் செயல் தமிழ்நாட்டின் மீது அவருக்குள்ள அதீத வெறுப்பை காட்டுவதாக அமைந்துள்ளதோடு, திராவிடத்தின் அடையாளமும், முன்னாள் முதல்வரும், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளின் அடையாளமாகத் திகழ்பவருமான பேரறிஞர் அண்ணாவால் ‘தமிழ்நாடு’ எனச் சூட்டப்பட்ட பெயரைக் களங்கப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.

ஆர்.என். ரவி தமிழர்களின் நலனுக்கு எதிரானவர் என்பதும், தமிழ்நாடு, தமிழ் மக்கள், தமிழர் பண்பாடு ஆகியவற்றின் மீது விவரிக்கமுடியாத, ஆழமாக வேரூன்றிய பகைமை கொண்டவர் என்பதும் தெளிவாகிறது. ஆளுநர் ஆர்.என். ரவி மேலே விவரிக்கப்பட்ட சொற்களும், பேச்சுகளும், ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை செயல்படவிடாமல் தடுப்பது மட்டுமல்லாமல், சட்டத்தால் நிறுவப்பட்ட அரசாங்கத்தின் மீது வெறுப்பு, அவமதிப்பு மற்றும் அதிருப்தியையும் அவர் தூண்டுகிறார் என்பதையே காட்டுகிறது

9-1-2023 அன்று, தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளுநர் உரை நிகழ்த்தியபோது ஆர்.என். ரவியின் எதேச்சதிகாரம் உச்சக்கட்டத்தை அடைந்தது. பிரிவு 163(1)-இன்படி, ஆளுநர் என்பவர் அமைச்சரவையின் வழிகாட்டுதல் மற்றும் அறிவுரையின்படி தனது கடமைகளைச் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆளுநர் தன்னிச்சையாகவோ, தனது அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்பவோ செயல்பட முடியாது. இருப்பினும், 9-1-2023 அன்று, ஆர்.என்.ரவி, அரசியலமைப்புச் சட்டத்தின்கீழ், தான் எடுத்துக் கொண்ட உறுதிமொழியை முற்றிலுமாக மீறும் வகையில், தமிழ்நாடு அரசால் தயாரிக்கப்பட்டு, 7.1.2023 அன்று தான் ஒப்புதல் அளித்த உரைப் பகுதியை வாசிக்காமல், திருத்தப்பட்ட பதிப்பை வாசித்தார். இதன்மூலம், அவருடைய அரசியல் நோக்கம் தெளிவாகத் தெரிந்தது.

வரைவு உரையில் குறிப்பிடப்பட்டிருந்த ‘சமூகநீதி’, ‘சுயமரியாதை’, ‘அனைவருக்குமான வளர்ச்சி’, ‘சமத்துவம்’, ‘பெண்ணுரிமை’, ‘மதநல்லிணக்கம்’, ‘மனிதநேயம்’ மற்றும் ‘திராவிட மாடல் ஆட்சி’ போன்ற சொற்களை அவர் வாசிக்காமல் புறக்கணித்தார். ஒருவேளை இவற்றில் எல்லாம் ஆளுநருக்கு நம்பிக்கை இல்லை என்பதால், அவர் அவற்றைப் புறக்கணித்திருக்கலாம். அதோடு, ‘தந்தை பெரியார்’, ‘அம்பேத்கர்’, ‘பெருந்தலைவர் காமராஜர்’, ‘பேரறிஞர் அண்ணா’, ‘கருணாநிதி’ போன்ற தலைவர்களின் பெயர்களைக் குறிப்பிடுவதையும் ஆளுநர் தவிர்த்தார்.

இதன்மூலம், மாநிலத்தின் மற்றும் அரசாங்கத்தின் நெறிமுறைகளை ஆளுநர் பகிரங்கமாக கேள்விக்குள்ளாக்கி உள்ளார். இந்தியாவின் இத்தகைய மகத்தான தலைவர்களின் பெயர்களைக் குறிப்பிட அவர் மறுத்தது, தமிழக மக்களை மட்டுமல்ல; ஒட்டுமொத்த நாட்டையும் அவமதிக்கும் செயலாகும். அதோடு, ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட வரைவு உரைக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்த நிலையில்கூட, இதுபோன்ற வாக்கியங்களைப் படிக்காமல் தவிர்த்தது அதிர்ச்சியளிக்கிறது.

இது ஒருபுறமிருக்க, பொதுவெளியில் அவர் தெரிவிக்கும் கருத்துகள் அவர் வகிக்கும் பதவிக்கு ஏற்றதாக இல்லை. எடுத்துக்காட்டாக, தமிழகத்தை மேம்படுத்தவும், தமிழகத்தின் வளர்ச்சிக்காக முதலீடுகளை ஈர்க்கவும் கிழக்காசிய நாடுகளுக்கு நான் பயணம் மேற்கொண்டிருந்தபோது, ஆளுநர் ஆர்.என்.ரவி, வெளிநாட்டுப் பயணங்களால் முதலீடுகள் வருவதில்லை என்று சீண்டுவதுபோல குறிப்பிட்டார். ஆர்.என்.ரவி, அரசியலமைப்புச் சட்டத்தால் நியமிக்கப்பட்ட கண்ணியமான ஆளுநராகச் செயல்படுவதை விட, மலிவான அரசியலில் அதிக ஆர்வம் கொண்டவர் என்பது தெளிவாகியுள்ளது.

குற்றவாளிகளை ஆதரித்தல் மற்றும் காவல்துறை விசாரணையில் தலையிடுதல்: இவை தவிர, கிரிமினல் குற்றங்கள் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி ஆதாரமற்ற மற்றும் தவறான அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார். 2022ம் ஆண்டு செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையில், சிதம்பரம் நடராஜர் கோயிலைச் சார்ந்த இரண்டு தீட்சிதர்கள், குழந்தைத் திருமணப் புகார்களைத் தொடர்ந்து சிதம்பரம் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். ஆதாரங்களின் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 366 (ஏ) மற்றும் குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம், 2006-இன்கீழ் நான்கு வழக்குகள் காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்டன. இது தொடர்பாக 8 ஆண்கள், 3 பெண்களை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், மே 4ம் தேதி, டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்குப் பேட்டியளித்த ஆளுநர் ஆர்.என். ரவி, சிதம்பரத்தில் குழந்தைத் திருமணம் நடைபெறவில்லை என்றும், பழிவாங்கும் நோக்கில் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் மீது மாநில அரசின் சமூக நலத்துறை 8 பொய்யான புகார்களைப் பதிவு செய்துள்ளதாகவும் கூறியியுள்ளார். மாநிலத்தின் முக்கியப் பொறுப்பில் உள்ள ஆளுநரின் இத்தகைய அறிக்கை, விசாரணையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதுடன், காவல்துறையினரின் நியாயமான விசாரணைக்கு இடையூறாக இருந்தது. இது பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்தது.

பின்னர், சிறுமிகளின் திருமணம் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி, ஆர்.என்.ரவி தனது பேட்டியில் கூறிய கருத்துகள் பொய்யானவை என்பது தெரியவந்தது. தீட்சிதர்களின் மகள்களான 6 மற்றும் 7ம் வகுப்பு மாணவிகளை வலுக்கட்டாயமாக மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் சென்று அரசு மருத்துவர்கள், தடை செய்யப்பட்ட இருவிரல் பரிசோதனைக்கு உட்படுத்தியதாகவும், இதன் காரணமாக சில பெண் குழந்தைகள் தற்கொலைக்கு முயன்றதாகவும் ஆளுநர் ஆர்.என். ரவி தனது பேட்டியில் குற்றம் சாட்டியிருந்தார். ஆளுநரின் இந்தக் கருத்துக்கள் தவறானவை என்று பின்னர் கண்டறியப்பட்டன.

இதுபோன்ற கருத்துக்களை குற்றவியல் விசாரணைக்கு இடையூறாகவும், சாட்சியங்களைச் சிதைக்கும் வகையிலும் ஒரு சாதாரண நபர் வெளியிட்டிருந்தால், அந்த நபர் மீது உரிய சட்டப் பிரிவுகளின் கீழ், காவல்துறையினர் நிச்சயம் வழக்குப்பதிவு செய்திருப்பார்கள். குழந்தைத் திருமணம் என்ற கொடிய குற்றத்தில் இருந்து காப்பாற்றும் வகையில், கருத்துத் தெரிவிப்பதை நல்ல மனசாட்சி உள்ள யாராலும் அனுமதிக்கமுடியாது.

ஒரு கடுமையான அரசியலமைப்பு மீறல்: 15-6-2023 அன்று, எனது அமைச்சரவை சகாக்களில் ஒருவரான வி.செந்தில்பாலாஜிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு, அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதால், அவர் வகித்து வந்த மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறைகளை எனது அமைச்சரவையில் உள்ள வேறு இரண்டு அமைச்சர்களுக்கு ஒதுக்கீடு செய்ய விரும்பி, செந்தில்பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக தக்க வைக்க விரும்பி, இலாகா மாற்றம் தொடர்பான கடிதம் 15.6.2023 அன்று ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இலாகா மாற்றத்தை ஏற்றுக்கொண்டு 16.6.2023 அன்று ஆளுநர் எனக்குக் கடிதம் எழுதினார். அதில் செந்தில்பாலாஜி குற்றவியல் நடவடிக்கைகளை எதிர்கொள்கிறார் என்பதால், இலாகா இல்லாத அமைச்சராக அவர் தொடர்வார் என்ற எனது பரிந்துரையை ஏற்க முடியாது என்று ஆளுநர் தெரிவித்தார். ஆளுநரிடமிருந்து மேற்கண்ட கடிதம் கிடைத்ததும், செந்தில்பாலாஜி அமைச்சரவையில் நீடிப்பது தொடர்பான எனது பரிந்துரையை வலியுறுத்தி அன்றே பதில் அனுப்பினேன். அமைச்சர்கள் நியமன விவகாரத்தில் 164(1) பிரிவுக்கு முரணாகவும், எனது ஆலோசனைக்கு முரணாகவும் ஆளுநர் ஆர்.என். ரவி செயல்படுகிறார் என்பதையே இச்செயல்கள் காட்டுகின்றன.

இது ஒருபுறமிருக்க, முன்னதாக 31-5-2023 அன்று வி. செந்தில்பாலாஜி மீதான “கிரிமினல் நடவடிக்கைகள்” அவருக்கு சாதகமாக முடிவடையும் வரை, அவரை அமைச்சரவையில் இருந்து உடனடியாக நீக்குமாறு ஆளுநர் கடிதம் அனுப்பிய நிலையில், அதற்கு உடனே 1.6.2023 தேதியிட்ட ஒரு கடிதத்தை நான் எழுதினேன். அக்கடிதத்தில் சட்டப்படி, ஒரு அமைச்சர் கைது செய்யப்படுகிறார் அல்லது ஒரு விசாரணை அமைப்பால் விசாரிக்கப்படுகிறார் என்பதற்காக அவர் பதவி வகிக்கத் தகுதியற்றவர் ஆகமாட்டார் என்பதை விரிவாக விளக்கினேன்.

அந்த வகையில், (1) விசாரணையை எதிர்கொள்ளும் நபர், (2) குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்பட்ட நபர் மற்றும் (3) நீதிமன்றத்தால் குற்றவாளி எனத் தண்டிக்கப்பட்ட நபர் ஆகியவற்றுக்கு இடையிலான வேறுபாட்டை நான் குறிப்பிட்டேன். லில்லி தாமஸ் எதிர் இந்திய ஒன்றியம் (2013) பிரிவு 7, உட்பிரிவு 653 என்ற வழக்கில், உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டால் மட்டுமே ஒருவர் அமைச்சர் அல்லது சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்படுவார் என்று சுட்டிக்காட்டினேன். ஒரு அமைச்சரை நியமிப்பது அல்லது நீக்குவது முதல்வரின் தனிப்பட்ட விருப்பம் என்றும், ஆளுநரின் இத்தகைய பரிந்துரை சட்டவிரோதமானது என்றும் கடிதம் மூலம் ஆளுநருக்குத் தெரிவித்தேன்.

இந்தச் சூழ்நிலையில், அனைவரையும் அதிர்ச்சியிலும், ஆச்சரியத்திலும் ஆழ்த்தும் வகையில், 29.6.2023 அன்று இரவு 7:45 மணியளவில் ஆளுநர் ஒரு கடிதத்தை எனக்கு அனுப்பினார். அதில், இந்திய அரசியலமைப்பின் 154, 163 மற்றும் 164- ஆவது பிரிவுகளை மேற்கோள் காட்டி, அமைச்சர் வி. செந்தில்பாலாஜியை உடனடியாக அமைச்சரவையில் இருந்து ஆளுநர் நீக்கியதாகக் குறிப்பிட்டிருந்தார். ஆளுநரின் அந்தக் கடிதத்துக்குப் பதில் அளிப்பது தொடர்பாக நான் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தபோது, திடீரென அன்றிரவு 11:45 மணிக்கு, 29.6.2023 தேதியிட்ட ஆளுநரின் கடிதத்தை “நிறுத்திவைக்கும்” மற்றொரு கடிதம் ஆளுநரிடமிருந்து எனக்குக் கிடைத்தது. அந்த இரண்டாவது கடிதத்தில், இந்தியத் தலைமை வழக்கறிஞரின் கருத்தைப் பெறுமாறு உள்துறை அமைச்சர் அறிவுறுத்தியுள்ளதாக ஆளுநர் தெரிவித்து இருந்தார்.

இப்பிரச்சினை தொடர்பாக நாடு முழுவதும் பரவலாக விவாதங்கள் எழுந்தன. அனைத்து முன்னணி நாளிதழ்களும் தங்கள் தலையங்கங்களில் ஆளுநர் ஆர்.என். ரவியின் முறையற்ற செயல்பாட்டைக் கண்டித்துக் கடுமையாக விமர்சித்திருந்தன. தனது இத்தகைய நடவடிக்கைகளின் மூலம் ஆளுநர் பதவியை ஆளுநர் ஆர்.என். ரவி சிறுமைப்படுத்தியுள்ளார்.

ஆளுநரின் 29-6-2023 தேதியிட்ட இந்த இரண்டு கடிதங்களுக்கும், நான் 30.6.2023 அன்று அனுப்பிய கடிதத்தில், “சட்டப்பிரிவு 164 (1)-இன்கீழ், முதல்வரின் ஆலோசனையின் பேரில் மட்டுமே ஆளுநர் அமைச்சர்களை நியமிக்கிறார் மற்றும் நீக்குகிறார். அந்த வகையில் அமைச்சரவையில் யார் இடம்பெற வேண்டும் அல்லது யார் இடம்பெறக் கூடாது என்பதை முடிவு செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை” என்பதை மீண்டும் வலியுறுத்தினேன். 29-6-2023 தேதியிட்ட ஆளுநரின் கடிதங்கள், அரசியலமைப்பிற்கு முரணானவை, செல்லாதவை மற்றும் சட்டத்திற்கு புறம்பானவை என்பதால் தான் அவற்றைப் புறக்கணித்தேன்.

ஆளுநர் என்பவர் அரசியல் விருப்பு வெறுப்புகள், கட்சி அரசியல் அல்லது எதிர்கால நியமனங்கள் குறித்த எதிர்பார்ப்புகள் அற்றவராக இருக்க வேண்டும் என்ற எனது கருத்தை நீங்கள்(குடியரசுத் தலைவர்) ஏற்றுக்கொள்வீர்கள் என நம்புகிறேன். ஆளுநர் அலுவலகம் என்பது அரசியல் சார்பற்றதாகவும், ஆளுநர் தனது செயல்பாட்டிலும், பார்வையிலும், உண்மையாகவும் மதச்சார்பற்றவராக இருக்க வேண்டும். ஒரு நல்ல ஆளுநர் தன்னைப் பற்றிய ஒரு உயர்வான கருத்தை அரசாங்கத்திற்குள்ளும், மாநில மக்கள் மத்தியிலும் உருவாக்க வேண்டும். அவர் மாநில மக்கள் மீதும், திறமையான நிர்வாகத்தின் மீதும் அக்கறை கொண்டவராக இருக்க வேண்டும். ஏதோ ஒரு கட்சி அல்லது கருத்தியலின் நலனை வளர்ப்பதற்காக ஆளுநர் செயல்படக் கூடாது. அவர் மாநிலத்தின் நலனுக்காகத் தனது அரசியலமைப்புக் கடமைகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தி, அரசியலமைப்புக் குறிக்கோள்கள் மற்றும் நெறிமுறைகளுக்கு ஏற்ப செயல்பட வேண்டும்.

மததிய ஆளும் கட்சியை எதிர்க்கும் ஒரு கட்சியின் கைகளில் மாநில ஆட்சி இருக்கும்போது, மாநிலத் தலைநகர்களில் அமர்ந்துகொண்டு, அந்த மாநில அரசை கவிழ்க்கும் வாய்ப்பைத் தேடும் ஆளுநரை வெறும் மத்திய அரசின் முகவராகத்தான் கருதமுடியும். ஆளுநரின் இத்தகைய செயல் நமது கூட்டாட்சித் தத்துவத்தை சிதைத்து, இழிவுபடுத்தி, இந்திய ஜனநாயகத்தின் அடிப்படைத் தத்துவங்களையே அழித்துவிடும். தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

அரசியல் சாசனத்தையும், சட்டத்தையும் பாதுகாப்பதற்கும், தமிழக மக்களின் சேவைக்கும், நல்வாழ்விற்கும் தன்னை அர்ப்பணித்துக் கொள்வதற்கும், 159-ஆவது பிரிவின்கீழ் எடுத்த உறுதிமொழியை ஆளுநர் ஆர்.என். ரவி மீறியுள்ளார் என்பது தெளிவாகிறது. அவர் வகுப்புவாத வெறுப்பைத் தூண்டிவிட்டு, மாநிலத்தின் அமைதிக்கு அச்சுறுத்தலாக இருக்கிறார். அதுமட்டுமல்லாமல், அதிமுக முன்னாள் அமைச்சர்கள்மீது வழக்கு தொடர சிபிஐ வேண்டுகோள் விடுத்தும், அதற்கு அனுமதி தராமல் காலம் தாழ்த்தி வருகிறார். அதோடு, எனது அமைச்சர் ஒருவர் மீது வழக்கு விசாரணை தற்போது தொடங்கியுள்ள நிலையில், அவரை “டிஸ்மிஸ்” செய்ய அவசர கதியில் செயல்படுவதன் மூலம் தனது அரசியல் சார்புகளை வெளிப்படுத்தியுள்ளார்.

ஆர்.என். ரவி, தனது நடத்தை மற்றும் செயல்பாடுகள்மூலம், தான் ஒருதலைப்பட்சமானவர் மற்றும் ஆளுநர் பதவியை வகிக்க தகுதியற்றவர் என்பதை நிரூபித்துள்ளார். அவர் உயர் பதவியில் இருந்து நீக்கப்படுவதற்கு தகுதியானவர். அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 156(1)-இல், குடியரசுத் தலைவர் விரும்பும் காலம் வரை ஆளுநர் பதவியில் இருப்பார் என்று உள்ளது. தமிழக மக்களின் நலன் கருதியும், தமிழக அரசின் நலன் கருதியும் மேற்குறிப்பிட்டுள்ள அனைத்து உண்மைகளையும் குடியரசுத் தலைவரின் கனிவான பார்வைக்கு வைக்க விரும்புகிறேன். நமது இந்திய அரசியலமைப்பை உருவாக்கிய முன்னோர்களின் உணர்வையும், மாண்புகளையும் பாதுகாக்கும் வகையில், ஆளுநர் போன்ற உயர்ந்த அரசியலமைப்புப் பதவியில் ஆர்.என். ரவி நீடிப்பது விரும்பத்தக்கதாகவோ அல்லது பொருத்தமானதாகவோ உள்ளதா என்பதை குடியரசுத் தலைவரின் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்.

Tags: