இந்தியாவின் சுதந்திர தினம் ஓகஸ்ட் 15 ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டது?

– நந்தன்

1929 இல் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த ஜவாஹர்லால் நேரு, பிரிட்டிஷ் காலனி ஆட்சியிலிருந்து பூரண சுதந்திரத்துக்கு அழைப்புவிடுத்தார்.

அதையொட்டி 1930 ஜனவரி 26 இந்திய சுதந்திர நாளாகக் கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெறும்வரை ஒவ்வோர் ஆண்டும் காங்கிரஸ் கட்சி ஜனவரி 26ஐ அடையாளபூர்வ சுதந்திர நாளாகக் கொண்டாடி வந்தது.

இந்த நிகழ்வின் வரலாற்று முக்கியத்துவத்தை நினைவுகூரும் விதமாகவே ஜனவரி 26 இந்தியக் குடியரசு நாளாகப் பின்னர் தேர்ந்தெடுக்கப்பட்டது.

அதே நேரம், ஓகஸ்ட் 15 சுதந்திர நாளாக எப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டது? அன்றைய பிரிட்டிஷ் இந்தியாவின் வைஸ்ராயும் கவர்னர் ஜெனரலுமான மவுண்ட் பேட்டன் (Mountbatten)1948 ஜூன் 30க்குள் ஆட்சிநடத்தும் அதிகாரத்தை இந்தியர்களுக்கு வழங்கும் அதிகார மாற்றம் நிகழ்ந்துவிட வேண்டும் என்று பிரிட்டிஷ் நாடாளுமன்றத்திடம் கூறியிருந்தார்.

ஆனால் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை உறுதியாகிவிட்டதால், அது தொடர்பான வன்முறையையும் இரத்தம் சிந்துதலையும் இதற்கான தருணத்தில் தவிர்க்க விரும்பினார். எனவே, 1948 ஜனவரி 30 வரை காத்திருக்காமல் முன்னதாகவே இந்தியாவுக்கான அதிகார மாற்றத்தை நிறைவேற்றிவிட முடிவெடுத்தார்.

இந்தியாவுக்குச் சுதந்திரம் அளிப்பதற்கான மசோதா பிரிட்டிஷ் நாடாளுமன்றமான ஹவுஸ் ஆஃப் காமன்ஸில் (House of Commons) 1947 ஜூலை 4 அன்று நிறைவேறியது. ”விரைவில் சுதந்திரம் கொடுத்தாக வேண்டும். ஓகஸ்ட் அல்லது செப்டம்பரில் ஏதேனும் ஒரு தேதி என்று நினைத்தேன். பிறகு ஓகஸ்ட் 15ஐத் தேர்ந்தெடுத்தேன். ஏனென்றால் இரண்டு ஆண்டுகளுக்கு முன் அதே நாளில்தான் இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் சரணடைந்திருந்தது” என்று மவுண்ட் பேட்டன் கூறினார்.

இரண்டாம் உலகப் போரில் தோல்வியுற்று பிரிட்டனை உள்ளடக்கிய நேச நாடுகளிடம் சரணடைவதாக 1945 ஓகஸ்ட் 15 அன்று ஜப்பானிய பேரரசர் ஹிரோஹிடோ (Hirohito) அறிவித்திருந்தார். அதை நினைவுகூரும் விதமாக அந்தத் தேதியை மவுண்ட் பேட்டன் அறிவித்தார்.

Tags: