ஆன்மீகப் புரட்சியாளர் வள்ளலார்!

-சாவித்திரி கண்ணன்

பார்ப்பதற்கு சாது! அருள் சிந்தும் மலர்முகம்! கருணையிலோ கடல்! ஆனால், பாடும் கவிதையில் சூறாவளி! அநீதியை எதிர்ப்பதில், மூட பழக்கவழக்கங்களை, சனாதனத்தை எதிர்ப்பதில் தீப்பந்தம்! பெரியாரின் குரு! சமதர்ம சித்தாந்தத்தின் கரு! ஐயகோ, கொடுமை! காந்தியைப் போலவே இவரையும் நாம் காக்கத் தவறினோமே.

ஆதிகாலத்தில் சமணம், சார்வாகம், ஆஜீவகம் போன்ற மரபினர் வேதங்கள், சடங்குகளை எதிர்த்து நாத்திகம் பேசினர். அவர்களில் உத்தாலகர், விருஷப தேவர், பிரகஸ்பதி, அஜிதகேச கம்பளன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்! ஆனால், வள்ளலார் நாத்திகவாதியல்ல, உருவ வழிபாடுகள், சமயச் சடங்குகளை தவிர்த்து, தனக்குள் ஒளிரும் உள்ளொளியை கண்டவர்!

முயன்றுலகில் பயன் அடையா மூட மதமனைத்தும்

முடுகி அழிந்திடினும் ஒரு மோசமும் இல்லையே!

என பகிரங்கமாக ”மதங்கள் அனைத்தும் மூடத்தனங்களால் பின்னப்பட்டவை, பயனற்றவை, அவை அழிந்திடில் நாட்டுக்கு ஒரு மோசமும் நிகழ்ந்திடாது” என்றார்!

ஆன்மீகப் புரட்சியாளர் வள்ளலார் என ஏன் சொல்கிறோம் என்றால், அவர் சனாதாவாதிகளிடம் இருந்து கோவில்களை விடுவிக்க போராடினார். சனாதனவாதிகள் எந்தப் பெயரிலான மாயையில் இந்த மக்களை ஆட்டுவித்தார்களோ அவை பொய் என பிரகடனப்படுத்திய முதல் புரட்சியாளர் வள்ளலார் தான்!

வேத ஆகமங்கள் என்று வீண்வாதம் ஆடுகின்றீர்

வேத ஆகமத்தின் விளைவறியீர் – சூதாகச்

சொன்னதல்லால் உண்மை உரைத்தலில்லை

என்ன பயனோ இவை!

என பறையறித்துச் சொன்ன வள்ளலார்,

உலகறி, வேத ஆகமத்தை பொய் எனக் கண்டுணர்வாய்!

என்றார்.

தன் ஆன்மீக ஆற்றலால் இறை சக்தியை உணர்ந்தவர் வள்ளலார்! இறைவனை நெருங்க மனத் தூய்மை ஒன்றே போதுமானது! ஆகவே, கொல்லாமை, பொய்யாமை, சூதுவாதின்மை இவையே இறைவனை நெருங்கும் வழியென தன் பிரச்சாரத்தில் வலியுறுத்திய வள்ளலார்,

நால் வருணம், ஆசிரம், ஆசாரம் முதலா

நவின்ற கலை சரிதமெல்லாம் பிள்ளை விளையாட்டே

என்றார்.

சாதியும், மதமும், சமயமும் பொய்யென

ஆதியில் உணர்த்திய அருட் பெரும் ஜோதி!

என தான் உணர்ந்ததை நமக்கும் உரைத்தார்!

சைவம்(சிவ வழிபாடு),வைணவம்(பெருமாள் வழிபாடு), சாக்யம்( சக்தி வழிபாடு) ,கெளமாரம்(முருக வழிபாடு) காணபத்யம் (பிள்ளையார் வழிபாடு),செளரம் (சூரிய வழிபாடு) என பற்பல தெய்வங்களும், மதங்களும் இருந்தது நம் நாடு! சதா சர்வகாலமும் அன்றைக்கும் சிவ பக்தர்களும், பெருமாள் பக்தர்களும் சண்டையிட்ட காலம் அது! சித்தர்களை பகையாளிகளெனக் கருதி அவர்களை அரசன் துணையுடன் சனாதனிகள் நாடு கடத்திய காலகட்டமெல்லாம் இருந்துள்ளது!

இவர்களை எல்லாம் ஒட்டுமொத்தமாகச் சாடினார் வள்ளலார்!

தெய்வம் பற்பல சிந்தை செய்வாரும்

சேர்கதி பற்பல செப்புகின்றாரும்

பொய்வந்த கலை பல புகன்றிடுவாரும்

பொய்ச்சமயாதியை மெச்சுகின்றாரும்

மெய்வந்த திருவருள் விளக்கம் ஒன்றிலார்

என அப்பட்டமாக அவர்களின் தோலுரித்தார். அவரது ஆறாம் திருமுறையில் உருவ வழிபாட்டை முற்றிலும் தவிர்க்கச் சொல்லி ஜோதியை வழிபடச் சொன்னார்! அதாவது உள் ஒளிரும் ஜோதியை உணரத் தூண்டினார்! இப்படி பாடிய வள்ளலாரை எப்படி விட்டு வைப்பார்கள்?

மேலும்,

சாதியிலே, மதங்களிலே, சமய நெறிகளிலே

சாத்திரச் சந்தடியிலே, கோத்திரச் சண்டையிலே

ஆதியிலே அபிமானித்து அலைகின்ற உலகீர்

அலைந்தலைந்து நீர் அழிதல் அழகலவே!

என வருத்தத்தை வெளிப்படுத்தினார்.

புராணங்கள், இதிகாசங்கள் இவற்றை உண்மையென நம்பி கற்பனை கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்து பூஜிப்பதைக் கடுமையாகச் சாடினார்! அந்த வகையில் ராமர், கிருஷ்ணர் போன்றவர்களை தெய்வமாக்கி கும்பிடுகிறவர்களை தான் அவர் குறிப்பிடுகிறார் என நாம் புரிந்து கொள்ளும் அதே வேளையில் இதனால் அவருக்கு எத்தகைய எதிரிகள் உருவாகி இருப்பார்கள் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

”கலையுரைத்த கற்பனையே நிலையெனக் கொண்டாடும்

கண்மூடி வழக்கமெல்லாம் மண் மூடிப் போக’’ என்றார்!

யாகங்கள், வேள்விகள், பரிகார பூஜைகள் என பணத்தை அள்ளி இறைத்து வீணடிப்பவர்களைக் கண்டு, ”பசியில் வாடும் ஏழைகளுக்கு உணவளியுங்கள்” என வேண்டுகோள் விடுத்தார். உலகத்திலே பிறர் பசித் தீர்ப்பதே ஆகப் பெரும் அறமாகும்’’ என்றார்!

சொல்லியதோடு நில்லாமல் வடலூரிலே மே 23, 1867 ஆம் ஆண்டு முதல் அன்னதானம் செய்ய ஆரம்பித்தார். அந்த அடுப்பு இன்னும் அணையாத அடுப்பாக கோடிக்கணக்கானோருக்கு உணவளித்து வருகிறது!

வள்ளலார் மாபெரும் சித்த மருத்துவராகவும் இருந்தார்! அபூர்வ மூலிகைகளை அடையாளம் காட்டினார்! பல்லாயிரக்கணக்கான மக்களின் நோய்ப் பிணிகளையும் தீர்த்தார்.

”வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்

வாடினேன். பசியினால் இளைத்தே

வீடுதோறும் இரந்தும் பசியாறாது அயர்ந்த

வெற்றாரைக் கண்டுளம் பதைத்தேன்.

நீடிய பிணியால் வருந்துகின்றோர் என்

நேர் உறக் கண்டுளம் துடித்தேன்.

ஈடின்மானிகளாய், ஏழைகளாய் நெஞ்சு

இளைத்தவர் தமைக் கண்டே இளைத்தேன்”

இப்படிப்பட்ட வள்ளலாரைத் தான் சனாதனிகள் சாய்த்துவிட்டனர்! அவரை நம்ப வைத்து மோசடி செய்தனர். மிக மென்மையான அந்த ஞானி நெஞ்சு பொறுக்காமல் துடித்தார்! துவண்டார்! அவர் முடிவு மிகத் துன்பகரமானது! அதை பேசவும் துணிவின்றி, அவர் ஜோதியில் கலந்ததாக நம்ப வைக்கப்பட்டனர் மக்கள்! அப்படி நம்புவதிலும் பல செளகரியங்கள் உள்ளன!

(ஒக்ரோபர் 5ந் திகதி வள்ளலாரின் 199வது பிறந்ததினம்)

Tags: