கியூபா மீதான அமெரிக்காவின் தடையை ஐ.நா பொதுச் சபை 30வது முறையாகக் கண்டித்து தீர்மானம்
சோசலிச கியூபா மீது அமெரிக்கா விதித்திருக்கும் சட்டவிரோத தடைகளுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் பொது அவையில் நேற்று (03/11/2022) மீண்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
60 ஆண்டுகளுக்கும் மேலாக கியூபா மீது பல்வேறு தடைகள் அமெரிக்கா விதித்து வந்துள்ளது. புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோவை 600 முறைக்கும் அதிகமாக கொலை செய்ய முயற்சிகளை மேற்கொண்டு தோற்றுப் போன அமெரிக்கா, சர்வதேச சமூகத்தின் கடும் எதிர்ப்புகளை மீறி தடைகளை விதித்ததோடு, அதிகரித்தும் வருகிறது. இது குறித்த விவாதம் ஐக்கிய நாடுகள் சபையின் பொது அவையில் வரும்போதெல்லாம் ஒட்டுமொத்த சர்வதேச சமூகமே கியூபாவின் பக்கம் நிற்கிறது.
இந்த முறையும் விவாதம் நடந்துள்ளது. விவாதத்தில் பங்கேற்ற அனைத்து நாடுகளும் கியூபாவுக்கு ஆதரவு தெரிவித்தன. நவம்பர் 3 ஆம் தேதியன்று பொது அவையில் வாக்குக்கு விடப்பட்டது. அப்போது அவையில் இருந்த நாடுகளின் பிரதிநிதிகள் வாக்களித்தனர். 185 வாக்குகள் பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா நீக்க வேண்டும் என்ற தீர்மானத்திற்கு ஆதரவளித்தனர். அமெரிக்காவும், இஸ்ரேலும் தடைகளுக்கு ஆதரவாக வாக்களித்தன. பிரேசில் மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.
இதுபோன்ற தன்னிச்சையான தடைகளுக்கு எதிராகவும் இந்தத் தீர்மானம் அமைந்துள்ளது. அனைத்து நாடுகளும் இத்தகைய சட்டங்களையோ அல்லது நடவடிக்கைகளையோ மேற்கொள்ளக்கூடாது என்றும், அடுத்த வருடாந்திரக் கூட்டத்திற்கு முன்பாக இந்தத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என்றும், அந்த வருடாந்திரக் கூட்டத்தில் விரிவான அறிக்கை முன்வைக்கப்பட வேண்டும் என்றும் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நவம்பர் 3 ஆம் தேதி அவையின் முன்பாக வைக்கப்பட்ட இந்தத் தீர்மானம், தொடர்ந்து 30வது முறையாக வைக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு வருடாந்திரக் கூட்டத்திலும் அனைத்து நாடுகளின் ஆதரவோடு இது நிறைவேறி வருகிறது. கடந்த 60 ஆண்டுகளில் இந்தத் தடைகளால் கியூபாவுக்கு ஏற்பட்ட இழப்பு சுமார் 15 ஆயிரம் கோடி அமெரிக்க டொலராக இருக்கும் என்று கணக்கிடப்படுகிறது. ஆனாலும், சோசலிச அரசைக் கவிழ்க்கும் அமெரிக்காவின் எண்ணம் நிறைவேறவில்லை.
1962ல் தொடக்கம்
1962 ஆம் ஆண்டில் முதன்முறையாக பொருளாதாரத் தடையை அமெரிக்கா விதித்தது. இதுவரையில் 243 தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. பொருளாதார, வர்த்தக மற்றும் நிதித்துறை ரீதியான தடைகள் இதில் அடங்கும். டொனால்டு டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் கியூபா மீது கடுமையான வெறுப்பை உமிழ்ந்தது. தற்போதுள்ள அமெரிக்க நிர்வாகம் ஓரிரு தடைகளை நீக்கியிருந்தாலும், பெரும்பாலான தடைகள் அப்படியே உள்ளன.
தீர்மானம் நிறைவேறியது குறித்துக் கருத்து தெரிவித்த ஐ.நா.வுக்கான கியூபாவின் தூதர் புருனோ ரோட்ரிகஸ், “படுகொலை செய்வதற்கு இணையானது இந்தத் தடைகளாகும். இந்தக் கொள்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கடந்த 30 ஆண்டுகளாக ஐ.நா. பொது அவையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. ஆனாலும் தடைகள் தொடர்கின்றன” என்றார். தீர்மானம் மீதான விவாதம் தொடங்குவதற்கு முன்பாக பொது அவையின் தலைவர் சபா கோரோசியை சந்தித்துப் பேசிய புருனோ ரோட்ரிகஸ் (Bruno Rodriguez), தடைகளற்ற வாழ்க்கை கியூப மக்களுக்குத் தேவை என்று வலியுறுத்தினார்.