‘வார்த்தைகளை குறித்து வையுங்கள்’ – ராகுல் காந்தி

ஜெ.பிரகாஷ்

பாரதிய ஜனதாக்கட்சியை காங்கிரஸ் கட்சி நிச்சயம் வீழ்த்தும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்.பியுமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்தவும், கட்சியினரிடையே எழுச்சியை ஏற்படுத்தும் வகையிலும் அக்கட்சியின் முன்னாள் தலைவரும் கேரள வயநாடு தொகுதியின் எம்.பியுமான ராகுல் காந்தி, ‘பாரத் ஜோடோ யாத்ரா’ எனும் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தைத் தொடங்கி (செப்டம்பர் 7), பல மாநிலங்களிலும் அதை நிறைவு செய்து வருகிறார்.

தற்போது அவருடைய இந்த ஒற்றுமைப் பயணம் ராஜஸ்தானில் டிசம்பர் 16ந் திகதியன்று 100வது நாளை எட்டியுள்ளது. தவுசா பகுதியில் 100வது நாள் நடைப்பயணத்தை தொடங்கிய ராகுல் காந்தியுடன் இமாச்சல் முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு, துணை முதல்வர் முகேஷ் அக்னி ஹோத்ரி மற்றும் காங்கிரஸ் தலைவர் பிரதீபா சிங் உள்ளிட்ட பலர் உற்சாகமாய் கலந்துகொண்டனர்.

இந்த நிலையில், டிசம்பர் 16ந் திகதியன்று செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, ”காங்கிரஸ் கட்சி முடிந்துவிட்டதாக நிறைய பேர் கற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் காங்கிரஸ் கட்சியை ஒருபோதும் அழிக்க முடியாது. என் வார்த்தைகளை குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.

பாரதிய ஜனதாக்கட்சியை காங்கிரஸ் கட்சி நிச்சயம் வீழ்த்தும். எனக்கு எதிராகவும், கட்சிக்கு எதிராகவும் திட்டமிட்டு அவதூறு பரப்பப்படுகிறது. காங்கிரஸ் காணாமல் போகிறது என்ற கருத்து பா.ஜ.க.வால் பரப்பப்படுகிறது.

காங்கிரஸ் ஒரு கருத்தியல் சார்ந்த கட்சி, பாசிசத்திற்கு எதிராக உறுதியாக நிற்கிறது” என்றவரிடம், ”காங்கிரஸ் கட்சியிலிருந்து பல முக்கியத் தலைவர்கள் வெளியேறுகிறார்களே” என செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.

கடந்த காலங்களில் காங்கிரஸ் கட்சி எந்த தவறும் செய்யவேயில்லை என்று நான் கூறப்போவதில்லை.

நான் உள்பட பல காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் மக்களிடமிருந்து தொலைவாக இருந்துவிட்டனர். இது வெளிப்படையான தொலைவு இல்லை என்றாலும் வலி தரக்கூடியது. தற்போது நடந்து வரும் நடைப்பயணத்தின் மூலம், மக்களின் அந்த வலியை உணர முடிகிறது.

பாரத் ஜோடோ யாத்திரையின் போது, கட்சித் தொண்டர்கள் மட்டுமல்ல, பொதுமக்களும் காங்கிரசை மிகவும் நேசிக்கிறார்கள் என்பதை நாங்கள் பார்த்தோம். ராஜஸ்தானில் கோஷ்டி பூசல் காரணமாக பாரத் ஜோடோ யாத்திரை தோல்வியடையும் என்று அரசியல் விமர்சகர்கள் கருதினர்.

ஆனால் இங்குதான் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சிக்குள் எந்த குழப்பமும் இல்லை. எங்கள் கட்சியில் சில நேரங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன, எந்த பிரச்சனையும் இல்லை. நமது தொண்டர்களை சரியாக பயன்படுத்தினால், அடுத்த தேர்தலில் ராஜஸ்தானில் காங்கிரஸ் மகத்தான வெற்றியை உறுதிசெய்ய முடியும்” என்று தெரிவித்தார்.

Tags: