யுகப் புரட்சியும் முதலாளித்துவமும்
–என்.குணசேகரன்
2020ல் இடல்மன் (Edelman) என்ற நிறுவனம் முதலாளித்துவ முறையை ஏற்கிறவர்கள் குறித்து உலக அளவிலான கருத்துக்கணிப்பு மேற்கொண்டது. அதில் 57 சதமான மக்கள் தற்போதுள்ள “முதலாளித்துவம் நன்மையை விட பெரும் தீமையையே ஏற்படுத்தி வருகிறது” என்று கருத்து தெரிவித்தனர். அதற்கு முன்னதாக ஹார்வார்டு பல்கலைக்கழகம் 2016-ல் நடத்திய ஆய்வில் அமெரிக்காவின் 18 முதல் 29 வயதுக்குட்பட்டவர்கள் முதலாளித்துவத்தை வெறுப்பதாக தெரிவித்தனர். பசி, பட்டினி இந்தியாவில் அதிகரித்துள்ளது என்பதை உலக நிறுவனங்கள் ஆய்வுகளில் வெளிப்படுத்துகின்றன. பட்டினிக் குறியீடு பட்டியலில் 121 நாடுகளில் 107வது இடத்தில் இந்தியா உள்ளது. இதை ஆட்சியாளர்கள் நிராகரித்தாலும், மனித வளர்ச்சியை இந்திய முதலாளித்துவம் முடமாக்கி வருகிறது என்பதே உண்மை. முதலாளித்துவ அமைப்பு முறை மீதான வெறுப்பு அதிகரிப்பதற்கான காரணம்,
வாழ்வாதாரப் பறிப்பு உள்ளிட்ட அதன் தீமைகள் நாள்தோறும் வெளிப்பட்டு வருவதுதான். பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் பெருந்தொற்றுக் காலத்திலும் கூட உலகம் முழுவதும் லாபவேட்டை நடத்தியதையும், கோடிக்கணக்கான மக்கள் பெரும் துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் ஆளானதையும் கண்கூடாக மக்கள் கண்டனர். இதனால்தான் முதலாளித்துவ முறை மீது அதிருப்தி ஏற்பட்டு வருகிறது. ஆனால் முதலாளித்துவத்திற்கு மாற்று என்ன? இதுதான் இன்றைக்கு உலக உழைக்கும் மக்களுக்கு முன்னால், உள்ள பெரும் பிரச்சனை.
மார்க்சியம் காட்டும் வழி
முதலாளித்துவத்திலிருந்து உலகம் மீள்வதற்கான பாதையை மார்க்சிய, லெனினியத் தத்துவம்தான் தெளிவாக வழிகாட்டுகிறது. உலக உழைக்கும் மக்கள் சோசலிசப் பாதையில் பயணிக்க வேண்டும் என்பதே மார்க்சியம் காட்டும் வழி. முதலாளித்துவத்தை வீழ்த்தி, சோசலிசத்தைப் படைத்திடும் நோக்கோடு, உழைக்கும் வர்க்கத்தை அணிதிரட்ட வேண்டும். இதற்கு நவம்பர் புரட்சியின் மகத்தான வரலாற்று அனுபவப் படிப்பினைகள் இன்றும் தேவைப்படுகின்றன. தொழிலாளி வர்க்கம் தன்னை புரட்சியின் முன்னணிப் படையாக உயர்த்திக் கொண்டதால்தான் நவம்பர் புரட்சி சாத்தியமானது. சுரண்டல் அமைப்பைத் தகர்த்து சுரண்டலற்ற சோசலிச அமைப்பை உருவாக்க வேண்டுமென்ற புரட்சிகர தத்துவார்த்த உணர்வை தொழிலாளி வர்க்கத்திடம் ஏற்படுத்த வேண்டும். அமைப்பு ரீதியாக தொழிலாளி வர்க்கத்தை திரட்டிட வேண்டும். விவசாயிகள் உள்ளிட்ட இதர வர்க்கங்களின் நலன்களுக்காகவும் போராடுகிற வர்க்கமாக தொழிலாளி வர்க்கம் தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டும். இதன் மூலமே புரட்சிப்படையின் தலைமைப் படையாக தொழிலாளி வர்க்கம் திகழ்ந்திட இயலும். ரஷ்யப் புரட்சியின் அனுபவம் இதுவே.
சோசலிச சாதனைகள்
1917 நவம்பரில் நிகழ்ந்த ரஷ்யப் புரட்சிக்குப் பிறகு, சோவியத் நாட்டில், மக்களின் அயராத உழைப்பினால் அசுர வேகத்தில் சோசலிசம் கட்டமைக்கப்பட்டது. மிகவும் பின்தங்கிய விவசாய நாடாக இருந்த அந்த நாட்டில் கற்பனைக்கெட்டாத வளர்ச்சியை சோசலிசம் சாதித்தது. அந்த நாடு இயற்கை வளம் மிக்கதாக இருந்தாலும், அதிகமான அந்நியக் கடனில் சிக்கிய நாடாக இருந்தது. அதை பொருளாதாரத்தில் முன்னேறிய நாடாக, அறிவியல் தொழில்நுட்பத்தில் பாய்ச்சல் வேக முன்னேற்றத்தைக் கண்ட நாடாக மாற்றியது சோசலிசம். அன்றைக்கு ஏகாதிபத்தியமே ஆதிக்கம் செலுத்திய உலகில், அமெரிக்கா ஒருபுறம், சோவியத் யூனியன் மறுபுறம் என்கிற இரு துருவ உலகமாக மாறுகிற வரலாற்றுச் சாதனையை அதிவேகமாக சோவியத் யூனியன் உருவாக்கியது. 1917-லிருந்து 1991 வரை தான் சோவியத் யூனியன் இருந்தது. அது எட்டிய சிகரங்களைத் தகர்க்கும் வகையில் தற்போதைய முதலாளித்துவ ரஷ்யா பெரும் பின்னடைவை சந்தித்து வருகின்றது.
சோசலிசம் மக்கள் வாழ்வை முன்னேற்றும் என்பதும், முதலாளித்துவம் மீண்டும் வந்தால் மக்களை அதல பாதாளத்தில் வீழ்த்தும் என்பதற்கும் ரஷ்யாவே இன்றைக்கு நம்முன் உள்ள எடுத்துக்காட்டாக உள்ளது. முன்னாள் சோசலிச நாடுகளிலும் இதே நிலைதான். சோசலிசம் மனித சமூகத்தை முதலாளித்துவ கொடுமைகளிலிருந்து விடுவிக்கும் என்பதற்கு சான்றாக சீனாவின் பிரம்மாண்டமான வளர்ச்சி அமைந்துள்ளது இன்றைக்கு உலக வர்த்தகத்தில் அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகளை பின்னுக்குத் தள்ளி சீனா முதன்மை இடத்தை வகிக்கிறது. உலகிலேயே தனிநபர் வருமானம் வெகுவேகமாக உயர்ந்து நாட்டுக் குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திய உன்னத சமூக, பொருளாதார, அரசியல் அமைப்பாக சீன சோசலிசம் பிரகாசித்து வருகிறது.
முதலாளித்துவம் – தீராத நோய்கள் ஆனால், முதலாளித்துவம் சமூக ஏற்றத்தாழ்வை வளர்க்கிறது. பெரும் கார்ப்பரேட் சக்திகள் உழைக்கும் மக்களின் உழைப்பைச் சுரண்டி தங்களது மூலதனத்தை பெருக்கிக் கொள்கிற நிலை நீடிக்கிறது. இந்த எதார்த்தத்தை, உண்மைகளை மார்க்சிஸ்ட்கள் மட்டுமல்லாது, மார்க்சிஸ்ட் அல்லாத பல ஆய்வாளர்களும் எழுதி வருகின்றனர். இன்றைய நடப்புகளை துல்லிய மாக ஆய்வு செய்து முதலாளித்துவத்தின் தீமைகளை அவர்கள் விளக்கி வருகின்றனர். முதலாளித்துவத்தின் கீழ் ஏற்றத்தாழ்வுகளும் நெருக்கடிகளும் நீடிக்கும் என்று மார்க்ஸ் சொன்ன அனைத்தும் உண்மை யானது என் பதை அவர்கள் நிறுவி வருகின்றனர். 20-ம் நூற்றாண்டு முதலாளித்துவத்தை பேராசிரியர் தாமஸ் பிக்கெட்டி ஆராய்ந்து மார்க்சின் முடிவுகள் சரியானவை என்பதை தனது நூலில் விளக்கியுள்ளார். சமத்துவமின்மை என்கிற தீராத நோயுடன் சேர்ந்து, புவி வெப்பமயமாதலும் இந்த உலகப் பந்தின் இருப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது என்பதும், அதற்கு முதலாளித்துவம் தான் காரணம் என்பதையும் “முதலாளித்துவம் பற்றிய மறு சிந்தனை” என்கிற நூலில் மைக்கேல் ஜாக்கப் (Michael Jacobs), மெரினா மசுக்கேட்டா (Marina Mazzucato) ஆகிய இருவரும் நிறுவியுள்ளனர் “மேற்கத்திய முதலாளித்துவம் சமீப பத்தாண்டுகளில் ஆழமான பிரச்சனைகளை ஏற்படுத்தியுள்ளது” என்று சொல்லி அவர்கள் இதனை விளக்குகின்றனர்.
உலகப் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யப்பட்டுள்ள மொத்த பங்குகளில் 84 சதமான பங்குகளை மொத்த ஜனத்தொகையில் 10 சதமானவர்கள் வைத்துக் கொண்டுள்ளனர் என்று 2018 விவரங்கள் தெரிவிக்கின்றன. வருமான ஏற்றத்தாழ்வு என்றுமில்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது. முதலாளித்துவ அமைப்பின் மீதான வெறுப்பு அதிகரித்து வருகிற சூழலில் தான் மதவெறி அரசியலும் அடையாள அரசியலும் மேலும் தீவிரமாகிறது. நிச்சயமாக, இவை அனைத்தும் விடுதலைப் பாதையில் உழைக்கும் வர்க்கம் முன்னேற பெரும் தடைகளாக அமைந்துள்ளன. ரஷ்யப் புரட்சியின் போது இன அடிப்படையில் உழைக்கும் வர்க்கங்களை கூறு போடுவதற்கான முயற்சி நடந்தது. லெனின், மார்க்சிய அடிப்படையில் இனப்பிரச்சனைக்கு தீர்வு கண்டார். அதனால்தான் ரஷ்யப் பாட்டாளி வர்க்கத்தின் ஒற்றுமையை பாதுகாக்க முடிந்தது. எனவே இனம், மதம், சாதி உள்ளிட்ட பிரச்சனைகளில் மார்க்சியமே சிறந்த வழிகாட்டியாக அமைந்துள்ளது. இந்திய நிலைமைகளில் மார்க்சிய பொது வழிகாட்டுதல்களைப் பொருத்தி, பாட்டாளி வர்க்கங்களை அணிதிரட்ட வேண்டிய அவசியம் உள்ளது.
புரட்சிகரக் கட்சி
நவம்பர் புரட்சிக்கு முந்தைய காலக் கட்டங்களிலும் புரட்சிகரப் போராட்டங்கள் நிகழ்ந்துள்ளன. முதலாளித்துவத்திற்கு எதிராக ஜெர்மனி போன்ற நாடுகளில் புரட்சிகள் நடைபெற்ற போதும், அவை பாட்டாளி வர்க்க அரசு அமைவதற்கு வித்திடவில்லை. காரணம், புரட்சிகரக் கட்சி இல்லாததுதான். வலுவான கம்யூனிஸ்ட் கட்சியை லெனினும் போல்ஷ்விக்குகளும் உருவாக்கியதால்தான் புரட்சி சாத்தியமாயிற்று. லெனின், மகத்தான சித்தாந்தப் போராட்டத்தின் மூலம் கட்சிக் கோட்பாடுகளை உருவாக்கினார். ஜனநாயக மத்தியத்துவம், கட்சி உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் மக்களைத் திரட்ட வெகுமக்கள் அமைப்புகளில் பணியாற்றுவது உள்ளிட்ட பல கோட்பாடுகள், புரட்சியின் வெற்றிக்கு முன் நிபந்தனைகளாக அமைந்துள்ளன. உருக்கு போன்ற உறுதியான கட்சி, ஸ்தாபனக் கோட்பாடுகள் அடிப்படையில் செயலாற்றிடும் கட்சியே புரட்சியை வழி நடத்திடும் என்பதே ரஷ்யப் புரட்சியின் அனுபவம்.
மனித வரலாற்றில் மாபெரும் திருப்புமுனையாக ரஷ்யப் புரட்சி அமைந்துள்ளது என்பதை தீர்க்கதரிசனமாக உள்ளுணர்வால் உணர்ந்தவர் மகாகவி பாரதி. எனவேதான் ஆயிரம் அர்த்தங்கள் கொண்ட “யுகப் புரட்சி” என்ற பொருத்தமான சொற்றொடரைக் கையாண்டு “ஆகா வென்றெழுந்தது பார் யுகப்புரட்சி” என்று பாடினார். அந்த யுகப்புரட்சியை நோக்கி உலக வரலாறு முன்னேறிடும். பாட்டாளி வர்க்கத்திற்கு ரஷ்யப் புரட்சி என்றும் வழிகாட்டும் வரலாறாக திகழ்ந்திடும்.