ராகுல் காந்தியின் பாதை காந்தியின் பாதையா, நேருவின் பாதையா?

ராஜன் குறை கிருஷ்ணன்

ராகுல் காந்தி இந்திய தேசிய காங்கிரஸின், இந்தியாவின் முக்கிய அரசியல் தலைவர். இந்த உண்மையை யாரும் மறுக்க முடியாது.

பாரத் ஜாடோ யாத்திரை என்ற பெயரில் எழுச்சி மிக்க ஒரு நடைபயணத்தை கன்னியாகுமரி முதல், காஷ்மீர் வரை மக்களை ஒருங்கிணைக்கும் நோக்கத்துடன் நடத்தினார். ஊடகங்கள் எவ்வளவு புறக்கணித்தாலும், இந்திய அரசியலைப் பொறுத்தவரை அது முக்கியமானதொரு நிகழ்வுதான். பல்வேறு அரசியல் தலைவர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், மக்கள் இயக்கங்களைச் சார்ந்தவர்கள் அந்த யாத்திரையில் பங்கெடுத்தார்கள். ராகுல் அனைவருடனும் இணைந்து நடந்தார்; இளைப்பாறும் நேரங்களில் மக்களுடன், பல்வேறு தரப்பினருடன் உரையாடினார். அந்த பயணத்தைக் குறித்த தகவல்களை பின் தொடர்ந்தவர்கள் ஒன்றை புரிந்துகொண்டிருக்கலாம். ராகுல் காந்தி முழுமையாகத் தன்னை அரசியலுக்கு அர்ப்பணித்துக்கொண்டுள்ளார் என்பதுடன் அதற்கான ஆன்ம பலத்தையும், அறிவுத் தெளிவையும் பெற்றுள்ளார். 

அவர் வாரிசுத் தலைவர் என்று சில பொதுமன்ற சிந்தனையாளர்கள் முகம் சுளிக்கிறார்கள். பாரதிய ஜனதா கட்சி அதை பெரும் குற்றச்சாட்டாக முன்வைக்கிறது. பொதுவாகவே வாரிசுத்தலைமை என்பது இந்திய மக்களாட்சி அமைப்பில் பல்வேறு கட்சிகளில் உருவாவதை ஒரு அரசியல் யதார்த்தமாகத்தான் மானுடவியல் கோணத்தில் நான் புரிந்துகொள்கிறேன். மக்களாட்சியின் அடிப்படை முரண்களைக் கடந்து அதன் சாத்தியங்களை செயல்படுத்த ஒவ்வொரு சமூகமும் சில வழிவகைக்களைக் காணத்தான் வேண்டும். அதில் இது ஒன்று என்பதால் அதன் சாதக, பாதகங்களைக் குறித்து இந்த கட்டுரையில் பேச முடியாது. ராகுல் காந்தி வழமையான வாரிசுத் தலைவரும் அல்ல. தன் பதின்ம வயதில் பாட்டியும், பின்னர் இருபது வயதில் தந்தையும் அரசியல் காரணங்களுக்காக படுகொலை செய்யப்படுவதைப் பார்த்தவர். பெரும் அதிர்ச்சியளிக்கத்தக்க இந்த நிகழ்வுகள் அவரை அரசியலை வெறுக்கவும் செய்திருக்கலாம் அல்லது அரசியல்தான் வாழ்க்கை என்ற எண்ணத்தையும் விதைத்திருக்கலாம். 

கட்சியினரும் சரி, மக்களும் சரி அவரை தலைவராக ஏற்கிறார்கள். அவரால் தனித்துவமிக்க சில வெளிப்பாடுகளை செய்ய முடிகிறது. ஐம்பத்து மூன்று வயதான அவர் அடுத்த சில பத்தாண்டுகளின் இந்தியாவின் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் முக்கிய பங்காற்றுவார் என்பதில் பெரும்பாலோர்க்கு ஐயம் இருக்க முடியாது. ஆனால் எந்த வகையில் பங்காற்றுவார் என்பதை சிந்திக்கும்போதுதான் சில முக்கிய கேள்விகள் எழுகின்றன. குறிப்பாக இரண்டு சாத்தியங்கள் அல்லது பாதைகள் அவர் முன் இருக்கின்றன. ஒன்று காந்தியின் பாதை; மற்றொன்று நேருவின் பாதை. அந்த இரண்டில் அவர் எதைத் தேர்ந்தெடுப்பார், வரலாறு எந்த பாதையில் அவரை செலுத்தும் என்பதே கேள்வி அதைத்தான் இந்த சிறிய கட்டுரையில் விவாதிக்க விரும்புகிறேன். 

அவர் பெயரிலுள்ள காந்தி அவர் பாட்டனார் ஃபிரோஸ் காந்தியின் வம்சம் என்பதால் வருவது. அவர் உள்ளபடி ஜவஹர்லால் நேருவின் கொள்ளுப் பெயரன். ஆனால் ஜவஹர்லால் நேரு, மகாத்மா காந்தியால் தன் அரசியல் வாரிசாக அறிவிக்கப்பட்டவர். காங்கிரஸ் என்பதன் முக்கியமான வரலாற்றுப் பணி காந்தி, நேரு ஆகிய இருவரின் பங்களிப்பினால் உருவானது. காந்தியின் அரசியல் பாதை என்பது மக்களை சில இலட்சியங்களின் பால், விழுமியங்களின் பால் ஈர்க்கும் பாதை. மக்களை விழிப்புணர்வு கொள்ள வைக்கும் பாதை. நேருவின் பாதை ஆட்சியமைக்கும் பாதை. அரசதிகாரத்தினை பயன்படுத்தி மக்களின் வாழ்வை மேம்படுத்தும் பாதை. இந்த இரண்டுமே அரசியலுக்கு இன்றியமையாததுதான். முன்னது விதைப்பது என்றால், பின்னது அறுவடை செய்வது எனலாம். 

காந்தியின் அன்றாடம்  

காந்தி இந்திய அரசியலில் பங்கேற்பதற்கு முன்னால் முப்பதாண்டுகளாக இந்திய தேசிய காங்கிரஸ் இரு விதமான போக்குகளையே கொண்டிருந்தது. ஒன்று இந்தியர்களின் கோரிக்கைகளை பிரிட்டிஷ் அரசிற்கு எடுத்துரைக்கும், இந்தியர்களின் நன்மைக்காக வாதிடும், அரசதிகாரத்தில் பங்கேற்பினைக் மிதவாதப் போக்கு. மற்றொன்று பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து முற்றிலும் விடுபட்டு சுயராஜ்யம் அமைக்க வேண்டும் என்று கோரும் போக்கு. அது தீவிரவாதப் போக்கு. மிதவாதப் போக்கு கூட்டம் போட்டு பேசுவது, மனு கொடுப்பது என்பது போன்று இயங்கியதென்றால், தீவிரவாதப் போக்கு கிளர்ச்சிகளை ஆதரித்தது. இதில் வன்முறையை, தாக்குதல்களை, தனி நபர் கொலைகளை ஆதரிப்பவர்களும் இருந்தார்கள். இந்த இரண்டுமே அரசை நோக்கிய செயல்பாடுகளாக அமைந்தது.

காந்தி மக்களை நோக்கிய செயல்பாடுகளையே சிந்தித்தார். அவரது தென்னாப்பிரிக்க அனுபவங்களில் அவர் சகல விதமான மக்களும் ஒன்றிணைந்து அறவழியில் போராடுவதே சரியான வழி என்று கண்டார். மக்களின் ஆன்ம பலமே அவர்கள் ‘மனத்தின் கண் மாசிலனாதலே’ அரசியல் மறுமலர்ச்சிக்கு, விடுதலைக்கு வழி என்று நினைத்தார். தால்ஸ்தோய் எழுதிய ‘கிங்டம் ஆஃப் காட் இஸ் வித்தின் யூ’ (Kingdom of God is Within You – (1894) என்ற நூலே காந்தியின் மீது மிகுந்த தாக்கத்தைச் செலுத்தியது என்பதை அவரே குறிப்பிட்டுள்ளார். தென்னாப்பிரிக்காவில் அவர் உருவாக்கிய தால்ஸ்தோய் பண்ணையே அவரது இந்திய ஆசிரமங்களுக்கும் முன்மாதிரியாக அமைந்தது. 

காந்தி 1909ஆம் ஆண்டு ஒக்ரோபர் 24ஆம் திகதி இலண்டனில் விஜயதசமியைக் கொண்டாடும் பொருட்டு கூடிய சிறிய கூட்டத்தில் சாவர்க்கரை முதலும் கடைசியுமாக நேரில் சந்தித்தார். காந்தி ராமாயணத்தில் பத்து தலை ராவணன் கொல்லப்படுவதும், கீதையில் போர் ஆதரிக்கப்படுவதும், நமது மனதின் மாசுகளைக் களையும் போர்களுக்கான உருவகங்களே என்றார். மனதிற்குள் நற்குணங்களுக்கும், தீய குணங்களுக்கும் நடக்கும் போரின் உருவகச் சித்திரங்கள் என்று இதிகாசங்களை வாசிக்க வேண்டுமென்றார். சாவர்க்கர் திட்டவட்டமாக இதிகாசப் போர்கள் அந்நியர்களுடன், எதிரிகளுடன் நட த்தும் போர் என்றார்; வன்முறையை வீரம் என்று கொண்டாடி ஆதரித்தார். 

இந்த நிகழ்வின் தூண்டுதலால் கப்பலில் தென்னாப்பிரிக்காவிற்கு திரும்பும்போதுதான் காந்தி அவருடைய புகழ்பெற்ற ‘இந்து சுவராஜ்யம்’ நூலை எழுதினார். அதில் அவர் சுயராஜ்யம் என்றால் என்ன என்ற கேள்விக்கு விரிவானதொரு விளக்கத்தை எழுதினார். மக்கள் அவர்கள் பண்பாட்டின் அடிப்படையில் அவர்கள் விரும்பியபடி வாழ்வதே சுயராஜ்யம் என்றார். பிரிட்டஷ்காரர்களை எதிர்ப்பதோ, நாட்டை விட்டு விரட்டுவதோ, அவர்களிடமிருந்து அரசதிகாரத்தை பறிப்பதோ விடுதலை ஆகிவிடாது. நமது தேர்வின்படி வாழ முடிவதே சுயராஜ்யம் என்றார். வேறு வார்த்தைகளில் சொன்னால் அரசியலின் இறுதி இலக்கு மக்களின் அன்றாட வாழ்வில், அவர்கள் தேர்வுகளில், சுதந்திரத்தில்தான் அடங்கியுள்ளது என்பதே பொருளாகும். அதனால்தான் கதராடை என்ற அன்றாட வாழ்வியல் வடிவத்தை தன் அரசியலின் அடிப்படையாக நிறுவினார் காந்தி. 

அரசியல் தத்துவம் என்று பார்த்தால் குடியரசு என்பது என்ன? மக்களின் ஒட்டுமொத்த எண்ணங்களுக்கு, அவர்களுடைய வாழ்வியல் தேர்வுகளுக்கு வடிவம் கொடுப்பதுதானே? மக்களுக்காகத்தான் அரசே தவிர, அரசிற்காக மக்களில்லையே? எனவே உண்மையான அரசியலின் களம் என்பது மக்களின் மனங்களே. அந்த மனங்களை வெல்பவர், அவற்றின் சிந்தனைகளை வடிவமைப்பவரே தலைமையின் உண்மை வடிவமாகிறார். அதனால்தான் காந்தி தொடர்ந்து மக்களுடன் உரையாடினார். அவர்களுடன் இணைந்து வாழ்ந்தார். அவருக்கு அரசாட்சியில் பங்கேற்பதில் ஆர்வமிருக்கவில்லை. காந்தி தேர்தலில் போட்டியிடுவதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. அவரது பிரதிநிதித்துவம் தேர்தல்களுக்கு அப்பாற்பட்டது. அது மக்களின் விழைவுகளுடன் ஒருங்கிணைத்துக்கொள்வதால் தானாக உருவாவது. இத்தகைய மக்கள் பாதையே காந்தியின் பாதை. 

நேருவின் வரலாறு 

நேருவின் புகழ்பெற்ற நூல், அவர் 1942-45ஆம் ஆண்டுகளில் சிறையிலிருக்கும்போது எழுதிய ‘இந்தியாவை கண்டறிதல்’ (Discovery of India) என்ற நூலாகும். இதுவும் சரி, அவர் 1929ஆம் ஆண்டு சிறையில் இருக்கும்போது மகளுக்கு எழுதிய கடிதங்களின் தொகுப்பானாலும் சரி, ‘கிலிம்ப்சஸ் ஆஃப் வேல்டு ஹிஸ்டரி’ (Glimpses of World History) என்ற நூலானாலும் சரி, எல்லாமே வரலாற்றைக் குறித்த ஆழ்ந்த அக்கறையை வெளிப்படுத்துபவை, சிந்திப்பவை. வரலாற்றெழுதியல் என்பது அரசுருவாக்கத்தினையே மையமாகக் கொண்டது. நேருவும் பண்டைய அரசுகள், பேரரசுகள், அரசர்கள் ஆகியவர்களைப் பற்றிய ஆய்வுகளில், சிந்தனைகளில் ஆர்வம் கொண்டிருந்தார். அந்த வரலாறுகளின் தொடச்சிதான் நாம் என்று நினைத்தார். இது அவரை அடிப்படையில் ஆட்சியின் பால் அக்கறை கொள்ளச் செய்தது.

காந்தி கட்சியமைப்புடனேயே தன் உறவை அதிகாரபூர்வமானதாக வைத்துக் கொள்ளவில்லை என்றாலும், நேருவை கட்சித் தலைவராக்குவதில் முன் நின்றார். தான் மக்களை நோக்கி அரசியல் செய்தாலும், கட்சியை தலைமையேற்று வழிநடத்த, ஆட்சியமைக்க ஒரு சரியான தலைவர் தேவை என்பதை உணர்ந்ததால் காந்தி ஜவஹர்லால் நேருவைத் தேர்ந்தெடுத்தார். அதனாலேயே நேருவை தன் அரசியல் வாரிசு என்று கூறினார். அது மிகச் சரியான தேர்வாகவே அமைந்ததை வரலாறு காட்டியது.   

நேரு இந்தியாவின் முதல் பிரதமராக பதவியேற்ற நிலை என்பதற்கு ஒப்பானதான நிலை உலக வரலாற்றில் வேறு இருந்திருக்குமா என்று கூற முடியாது. ஏனெனில் தங்களை ஒரே நாடாக எந்த காலத்திலும் பார்த்திராத பல்வேறு மக்கள் தொகுதிகளின் பிரம்மாண்டமான கூட்டமைப்பை ஒரே நாடு, ஒரே தேசம் என்று நிறுவி அனைவர் ஒத்துழைப்பையும் பெறுவதும், அதையும் ஒரு மக்களாட்சி, கூட்டாட்சிக் குடியரசாக நிலைபெறச் செய்வதும் எளிதான விஷயமல்ல. அவர் கட்சியே பல்வேறுபட்ட கொள்கைப் புலங்களை, கருத்தியல் தேட்டங்களை உடைய தலைவர்களைக் கொண்டிருந்தது. அனைவரையும் ஒருங்கிணைத்து கட்சியையும், ஆட்சியையும் வழி நடத்தி, நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும், கட்டுமான வளர்ச்சியையும் உறுதி செய்து இந்திய சுதந்திரத்தைக் காத்து நிற்பது என்பது மாபெரும் வரலாற்றுச் சவால் என்றால் மிகையாகாது. 

என்னதான் காந்தி ஈட்டிக்கொடுத்த வெகுமக்கள் ஆதரவை, தன் சொந்த ஈர்ப்பு சக்தியினுடன் இணைத்து வளர்த்தெடுத்துக்கொண்டாலும், கட்சியையும், ஆட்சியையும் நிர்வகிப்பது எளிதானதல்ல. அந்த அரசியலாற்றல் நேருவுக்கு இருந்தது ஒரு நல்வாய்ப்பு. ஆனால், அவர் ஒரு அரசியலராகவே செயல்பட வேண்டி இருந்தது. காந்தியைப் போல அதிகாரத்தை துறந்த இலட்சியவாதியாகவெல்லாம் அவரால் தோற்றமளிக்க முடியவில்லை. தேர்தல் பிரசாரங்களில் காங்கிரஸிற்கு ஆதரவு தேட வேண்டி இருந்தது. பிரதிநிதித்துவ அரசியல் சமரசங்களையும், சமன்பாடுகளையும் ஏற்க வேண்டி இருந்தது. அதையெல்லாம் திறம்படச் செய்து 1947 முதல், 1965 வரையிலான பதினெட்டு ஆண்டுகளில் இந்தியாவை உலகின் மிகப் பெரிய மக்களாட்சிக் குடியரசாக நிலைபெறச் செய்தார் நேரு. அவரது பாதை மக்களாட்சிப் பாதை. அரசாட்சிப் பாதை. 

ராகுலின் பாதை எது?  

மக்களின் அன்றாட வாழ்வையும், வரலாற்றையும் பிணைப்பது மொழிதான். எனவேதான் இந்தியா பல்வேறு மொழிபேசும் மக்கள் தொகுதிகளின் கூட்டமைப்பாக உள்ளது. இந்திய அரசமைப்பின் அழிக்க முடியாத பன்மை இது. இந்த உண்மையே வெகுமக்கள் அரசியலை மொழிவாரி மாநிலம் சார்ந்ததாக வைத்துள்ளது. எழுபதாண்டுகால தேர்தல்கள் சார்ந்த வெகுமக்கள் அரசியலில் மாநிலங்களே முக்கிய களங்களாக உருவெடுத்துவிட்டன. 

காங்கிரஸ் கட்சியால் தன்னுடைய அரசியல் வலிமை மாநில அரசியல் கட்சிகளாக உருமாறுவதைத் தடுக்க முடியவில்லை. அதுதான் நேற்மறையான வரலாற்றுப் போக்காகவும் இருக்க முடியும் என்பதால் அதனை அங்கீகரித்துதான் ஆக வேண்டும். எனவே, காங்கிரஸ் மாநிலங்களில் வெற்றிபெற வலுவான மாநில தலைவர்களை உருவாக்க வேண்டும், முன்நிறுத்த வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது. சீதாராமைய்யா-டி.கே.சிவகுமாரும், அசோக் கெலாட்-சச்சின் பைலட்டும்தான் வெற்றிகளை ஈட்ட முடியும். ராகுல் காந்தி அவர்களுக்கு தார்மீக ஆதரவாக இருக்கலாம். பல்வேறு முக்கிய மாநிலங்கள் இன்று திட்டவட்டமாக மாநில அரசியல் கட்சிகளின் பிடியில் சென்றுவிட்டன. தேசியக் கட்சி என்று சொல்லிக்கொண்டாலும் அவை முழுக்கவும் மாநிலத்தன்மை கொண்டவைதான். உதாரணமாக பினரயி விஜயன் சி.பி.ஐ.(ஏம்) என்ற தேசிய கட்சி என்று சொன்னாலும், அவரும் அவர் தலைமையிலுள்ள கேரள சி.பி.ஐ (ஏம்) கட்சியும் மாநிலத்தன்மை கொண்டவைதான்.  

துவக்கம் முதலே இந்தியாவின் கூட்டாட்சித்தன்மையை மறுத்து, ஒற்றை அரசாக ஒற்றை மத அடையாளத்தின் அடிப்படையில் இந்தியாவை வடிவமைக்க நினைத்த சக்திகளின், சாவர்க்கர்-கோல்வால்கரின், வழிவந்த பாரதிய ஜனதா கட்சி, எப்படியாவது அடக்குமுறைகளின் மூலமாவது தன் பிற்போக்கு இலட்சியத்தை நிறைவேற்றத் துடிக்கிறது. அதன் வன்முறைப் போக்கிலிருந்து நாட்டை மீட்டு மீண்டும் காந்தியின் அன்பும் நல்லிணக்கமும் நிறைந்த வழியில் நாட்டை கொண்டு செல்ல விரும்பும் ராகுல் காந்தி, இயல்பாகவே தேசத்தின் பன்மையையும், கூட்டாட்சியையும் அங்கீகரிக்கிறார். இந்தியா கூட்டணி என்ற இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்க கூட்டணியில் இருபத்தெட்டு கட்சிகளை ஒருங்கிணைத்து செல்லும் முயற்சியின் முக்கிய அச்சாணியாக இருக்கிறார்.   

இங்கேதான் முக்கிய கேள்வி எழுகிறது. ராகுல் காந்தி கூட்டணியின் பிரதமர் வேட்பாளரா என்பதுதான் அது. பாஜக கட்சியைப் பொறுத்தவரை அப்படி நடந்தால் இந்தியா கூட்டணி பலவீனமடையும், வாரிசு அரசியல் என்ற குற்றச்சாட்டை பெரிதுபடுத்தலாம் என்று நம்புகிறது. காங்கிரஸ் கட்சியின் தலமைப் பொறுப்பை மல்லிகார்ஜுன கார்கேயிடம் ஒப்படைத்ததில், தான் பொறுப்புகளிலிருந்து விலகி நின்று மக்களை நோக்கி அரசியல் செய்ய நினைப்பதை உணர்த்தியுள்ளார் ராகுல் காந்தி. இந்த நிலையில் யார் பிரதமர் என்ற கேள்வியை தேர்தலுக்கு பிறகு ஆட்சியமைக்கும்போது தீர்க்கப்பட வேண்டிய கேள்வியாக இந்தியா கூட்டணி ஒத்திப்போடவே வாய்ப்பு அதிகம். 

தேர்தலுக்கு பிறகு கூட்டணி அரசிற்கு ஒருவர் பிரதமர் பொறுப்பேற்றால் நிச்சயம் அவர் ஜவஹர்லால் நேரு சந்தித்ததுபோல ஒரு சவாலான சூழலை மீண்டும் சந்திப்பார். ஒன்றிய-மாநில அதிகாரப் பகிர்வில் ஒரு புதிய சமன்பாட்டை உருவாக்காமல், ஒன்றிய பிரதமர் பதவியின், அமைச்சரவையின் முக்கியத்துவத்தைக் குறைக்க முடியாது. அவ்விதமான மாற்றங்களை அனைவர் ஒப்புதலுடனும் நிறைவேற்ற திறமை மிகுந்த தலைவர் வேண்டும். அதேசமயம், அவர் முன்னெப்போதையும்விட சமரச மனோபாவம் கொண்டவராக இருக்க வேண்டும். 

ஆனால் அது மட்டுமே சவால் அல்ல. பாஜக நாட்டின் பல பகுதிகளிலும் மத அடையாளவாத அரசியலை பதியன் போட்டுள்ளது. மக்களைப் பிரித்து அரசியல் செய்யும் அதன் பண்பாட்டு வெறுப்பரசியலை தொடர்ந்த பிரசாரத்தின் மூலம் முறியடிக்க வேண்டும். அதற்கு காந்தியைப் போல அரசை, கட்சிகளைக் கடந்து இயங்கும் ஒரு ஆற்றலும், அர்ப்பணிப்பும் கொண்ட தலைவர் தேவை. காந்தியைப் போன்ற தலைவரா, அதெல்லாம் சாத்தியமில்லை என்று காந்தியை வியந்தோதி கொண்டாடுவதில் பொருளில்லை. கடவுளின் சாம்ராஜ்யம் உங்களிடத்தேதான் உள்ளது என்று தால்ஸ்தோய் சொன்னதுபோல காந்தியும் ஒவ்வொருவரிடத்திலும் இருக்கிறார். அந்த அடிப்படையில் ராகுல் இன்றைய காந்தியாக பணியாற்றவும் தேவையும், வாய்ப்பும் அதிகம் இருக்கிறது. 

ராகுலின் பாதை எது, காந்தியின் பாதையா, நேருவின் பாதையா என்பது அடுத்த ஆண்டு தெரிந்துவிடும்.  

Tags: