அறத்தால் நெடிதுயர்ந்து நின்ற பெருங்கலைஞர்!

-சோழ. நாகராஜன்

லைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் நண்பர்களோடு ஒருநாள் அமர்ந்திருந்தார். எல்லோரும் சுவாரஸ்யமாகப் பேசிக் கொண்டிருந்த சமயம்தான் அந்தப் பெண் அங்கே வந்தாள். 

நேரே என்.எஸ். கிருஷ்ணன் அருகில் வந்த அவள் அழும் தொனியில் பேசினாள்: 

“ஐயா, நான் எந்த வசதியுமில்லாத ஏழை. நிறை மாத கர்ப்பிணியான எனக்கு ஏதாவது உதவி செய்யுங்களேன்…” – என்று நா தழுதழுக்கக் கேட்டாள். கலைவாணரின் கண்கள் கலங்கின. அவளிடம் எதுவும் பேசாமல் உடனே தனது சட்டைப் பைக்குள் கையை விட்டார். கையில் சிக்கிய ரூபாய் நோட்டுகளை அப்படியே எடுத்து அவளிடம் நீட்டினார். அவள்  அதை பணிந்து வாங்கிக்கொண்டாள்.  கிருஷ்ணன் அவளைப் பார்த்துச் சொன்னார்: 

“இந்தப் பணத்தில் நல்ல பழங்களை வாங்கிச் சாப்பிடும்மா. சத்தான உணவைச் சாப்பிடு. கவலைப்படாதே. சீக்கிரமே உனக்கு நல்லபடியாகக் குழந்தை பிறக்கும். சந்தோசமா போய்வாம்மா…” – இப்படி அவளுக்கு தைரியம் சொல்லி அனுப்பி வைத்தார். அவள் போனதுதான் தாமதம். உடன் இருந்த கிருஷ்ணனின் நண்பர்கள் அவருடன் சண்டை போடத் தொடங்கிவிட்டார்கள். அது எதற்குத் தெரியுமா?

நண்பர்களில் ஒருவர் கிருஷ்ணனிடம் சொன்னார்: 

“என்னண்ணே, இப்படி ஏமாந்து ஏமாந்து போறியே… அவள் உண்மையில் கர்ப்பிணியே இல்லை. நல்லா கவனிச்சா அவள் வயிற்றில் தலையணையைக் கட்டிக்கொண்டு வந்தது தெரியும். அவளைப்போய் கர்ப்பிணினு நம்பி பணம் தந்து, பிரசவமும் நல்லபடியா நடக்கும்னு வாழ்த்துறி யேண்ணே… இப்படியா ஏமாறுவாங்க?”

புன்னகைத்தபடியே இதனைக் கேட்டுக் கொண்டிருந்த கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் பேசத் தொடங்கினார்: 

“அவள் கர்ப்பிணி இல்லை என்பதும், வயிற்றில் தலையணையைக் கட்டிக்கொண்டு ஒரு கர்ப்பிணியைபோல நடித்தாள் என்பதும் எனக்கு அவள் வந்தவுடனேயே தெரிந்துவிட்டது. தேவைதானே அவளை இதுபோலப் பொய் சொல்ல வைத்திருக்கிறது. பாவம், அவள் என்ன செய்வாள்? தவிரவும் ஒரு நடிகனிடமே எவ்வளவு திறமையாக நடித்திருக்கிறாள் அவள். அந்த அற்புதமான நடிப்பைப் பாராட்டி நான் கொடுத்த வெகுமதிதான் நான் அவளுக்குச் செய்த இந்தப்  பண உதவி, நான் ஒன்றும் ஏமாறவில்லை…” – என்று சொல்லிச் சிரித்தார் அவர். எல்லோ ரும் வியந்து வாயடைத்து நின்றார்கள். மாறுபட்ட இந்த அருங்குணம்தான் அவரது சிறப்பு. 

தான் கலைத்துறையில் சம்பாதிப்பதெல்லாம் இல்லை என்று வருகிறவர்களுக்குக் கொடுப்பதற்காக மட்டும்தான் என்று அறிவித்துவிட்டு அள்ளித் தந்தவர் கலைவாணர். வறுமையானதொரு குடும்பத்திலிருந்து நாடக உலகம் வந்து சேர்ந்தவர் கிருஷ்ணன். அவரைப்போல அள்ளி அள்ளி வழங்கிய இன்னொரு கலைஞனை திரையுலகம் இன்றுவரையில் கண்டதில்லை. 

ஒருமுறை பத்திரிகையொன்றின் நிருபர் கலைவாணரிடம் கேட்டார்: 

“மிகவும் ஏழ்மையான பின்னணியிலிருந்து கலையுலகிற்கு வந்தவர் நீங்கள். நீங்கள் மிகப்பெரிய திரைப்பட நட்சத்திரம் ஆகிவிட்டீர்கள். இப்போது நீங்களும் ஒரு பணக்காரர்தானே?”  கலைவாணர் அதற்கு இப்படி பதில் சொன்னார்: 

“ஆமாம், இப்போது நான் ஒரு பணக்காரன் தான். மற்ற பணக்காரர்களைப்பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், நான் பணம் சம்பாதிப்பதற்கு ஒரேயொரு காரணம்தான். இல்லை என்று வருகிறவர்களுக்குக் கொடுப்பதற்காக மட்டும்தான்!” – என்றார். இதை அவர் தன் மரணம் வரையிலும் தொய்வில்லாமல் தொடர்ந்தார். 

இன்னொரு நாள் நாதஸ்வரக் கலைஞன் என்று தன்னைச் சொல்லிக் கொண்டு ஒருவர் வந்தார். தான் மிகவும் நன்றாக நாதஸ்வரம் வாசிப்பேன் என்றும் அதைக் கேட்டுவிட்டு ஏதாவது உதவ வேண்டும் என்றும் அந்த  நபர் கலைவாணரை வேண்டினார். கலைவாணரும் அதற்குச் சம்மதித்து அவரை வாசித்துக்காட்டு மாறு வேண்டினார். வந்தவர் நாயனத்தை வாசிக்கத் தொடங்கினார். அனைவர் முகங்களிலும் அதிருப்தி ரேகைகள். ஆனால், கலைவாணரோ  அந்த நாயனத்திலிருந்து வந்த ஒலியைக் கேட்டு ஆகா, சபாஷ், அருமை  என்று சொல்லிக் கொண்டிருந்தார். உடனிருந்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. 

நாயனத்தைச் சிறிது நேரம் அந்த நபர் வாசித்து முடித்தபோது கலைவாணர் அவரை வெகுவாகப் பாராட்டினார். வழக்கம்போல தன் கைக்கு வந்த பணத்தை எடுத்து அவரிடம் தந்துவிட்டு அவரை இன்முகத்தோடு அனுப்பி வைத்தார். உடனிருந்த நண்பர் ஒருவர் கேட்டார்:

“இவ்வளவு அபசுரமாக வேறு எவரும் வாசிக்க முடியாது. அத்தனை மோசமாக வாசித்தவனை ஆகா, ஓகோவெனப் பாராட்டிப் பணம் தருவது நியாயமா?” 

கலைவாணர் சொன்னார்: 
“அவன் அபசுரமாகத்தான் வாசித்தான். சொல்லப்போனால் அவனுக்கு வாசிக்கவே தெரிய வில்லை. இருந்தாலும் நான் ஏன் பணம் கொடுத்தேன் தெரியுமா? அபசுரமாக அவன் வாசித்தாலும் அதிலிருந்து வெளிவந்த ஓசையானது என் காதுகளில் பசி… பசி… பசி… என்றே  விழுந்தது. அதனால்தான் அவனுக்குப் பணம்  தந்தேன். அவன் மன மகிழ்ச்சியோடு போக வேண்டும் என்பதற்காகவே அவன் வாசித்ததைப் பாராட்டிவைத்தேன்!” 

உதவி செய்கிற இயல்பு என்பது கலைவாணருக்கு விருப்பச் செயல்களில் ஒன்றாகவே ஆகிவிட்டிருந்தது. அவரால் பிறருக்கு உதவாமல் இருக்கவே முடியாது என்கிற நிலைகூட வந்தது. எப்போதும் காலையில் அவர் வீட்டிலிருந்து வெளியேறுகிற போது வாசலில் பத்துப்பேர் அவரிடம் தர்மம் வாங்கும் பொருட்டு நிற்பார்கள். போகிற போது அவர்களுக்கு பண உதவிகளைச் செய்து விட்டுச் செல்வார் கலைவாணர். சொந்தமாகப் படமெடுத்ததாலும், கொலை வழக்கொன்றை எதிர்கொள்ள நேர்ந்ததாலும் வறுமை நிலையைக் கலைவாணர் மீண்டும் அடைய நேர்ந்தது. அந்தச் சமயத்தில் அப்படித்தான் ஒருநாள் காலை வாசலில் நின்று கொண்டிருந்தவர்களுக்குத் தருவதற்கு அவரிடம் பணமில்லை. என்ன செய்யலாம்? யோசித்தார் அவர். 

கார் ஓட்டுனரை வீட்டின் பின்சாலைக்கு ஓட்டிச் செல்லுமாறு கூறிவிட்டு, புழக்கடை வழியாகப் பின்சாலைக்குச் சென்ற கலைவாணர் யார் கண்ணிலும் படாமல் காரில் ஏறிக் கிளம்பினார். தர்மம் வாங்க வந்தவர்களை ஏமாற்றிவிட்டுச் செல்லத்தான் இப்படிச் செய்தாரா என்றால் அது தான் இல்லை. தயாரிப்பாளர் லேனா செட்டியாரின் வீட்டிற்கு வாகனத்தை விரைவாக ஓட்டிச்செல்லு மாறு ஓட்டுநரைப் பணித்தார். காலையிலேயே கலைவாணரை எதிர்பாராத லேனா செட்டியார் வந்த காரணம் கேட்டார். கலைவாணரோ ஒரு நூறு ரூபாய் கடனாகத் தேவை என்று அவசரப்படுத்த, செட்டியாரும் உடனே அவர் கேட்ட பணத்தை எடுத்துக் கொடுத்தார். 

வேறேதும் பேசாமல் வாகனத்தை நேராக தனது வீட்டின் வாசலுக்கு ஓட்டிச் செல்லுமாறு கூறினார் கலைவாணர். வீடு வந்துசேரு முன்னரே வழியில் தருமம் வாங்க வந்தவர்கள் ஏமாற்றத் தோடு திரும்பிப் போய்க்கொண்டிருந்தார்கள். அவர்கள் அருகே காரை நிறுத்தச்சொன்னார் கலைவாணர். கீழே இறங்கியவர் அவர்களிடம் அந்த நூறு ரூபாயைக் கொடுத்து எல்லோரும் பிரித்து எடுத்துக்கொள்ளுமாறு கூறிவிட்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்தார். வறுமையினால் கூட அவரின் உதவும்  கரங்களைக் கட்டிப்போட்டு விட இயலவில்லை.

டி.ஏ.மதுரம்கலைவாணர்

நாடகத்துறையில் அனுபவம் பெற்றபின் ஏறக்குறைய 125 படங்களில் நடித்தவர் கலைவாணர். அவற்றுள் தனது காதல் மனைவி டி.ஏ. மதுரத்துடன் ஜோடியாக சுமார் 100 படங்கள். உலகில் வேறொரு நகைச்சுவை இணை எவரும் இத்தகையதொரு சாதனையைச் செய்திடவில்லை. கணவனும் மனைவியும் இணைந்து கலைக்கு ஒரு மிகப்பெரிய மரியாதையை – கௌரவத்தை உண்டாக்கிவிட்டார்கள். பாமர ரசிகர்கள் மனங்களில் அறிவியல் சிந்தனைகளை நகைச்சுவை என்ற பெயரில் நன்கு விதைத்தமா கலைஞர் கலைவாணர். மக்களிடையே மண்டிக் கிடந்த மூடத்தனங்களை அகற்றுவதற்காகவே நடிப்புக் கலையைக் கருவியாக்கிய அறிவுக் கலைஞர் அவர். நகைச்சுவைக் காட்சிகளின் வாயிலாகவும், கருத்துள்ள பாடல்களின் வழியேயும் பகுத்தறிவுக் கருத்துக்களை மக்கள் நெஞ்சங்களில் வெள்ளமெனப் பாய்ச்சி மகிழ்ந்தார் அவர். 

பொதுவுடமை இயக்கத் தலைவர் ஜீவாவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார். சோவியத் ரஷ்யா சென்று வந்த பின் கம்யூனிசத்தின் மேன்மையைப் பிரச்சாரம் செய்தார். கம்யூனிஸ்ட் இயக்கத்துக்கு நிதி திரட்டியும் தந்தார்.

மகாத்மா காந்தி மீதும் தேசிய இயக்கத்தின் மீதும் பெருமதிப்புக் கொண்டவராய்த் திகழ்ந்தார். தேசிய, திராவிட, கம்யூனிச இயக்கங்களின் கலவையாக காலத்தின் கலைஞராக மிளிர்ந்தார். மக்கள் உள்ளங்களில் நிறைந்தார். தம் கலைப்பணி ஈட்டித்தந்த செல்வங்களையும் அதைத் தாம் அடையக் காரணமாக இருந்த எளிய மக்களிடத்திலேயே திருப்பித் தந்த வள்ளல் பெருந்தகையாகவே அவர் வாழ்ந்தார். வெறும் 49 ஆண்டுகால வாழ்க்கைதான் அவருக்கு வாய்த்தது. அதிலும் ஒரு நூற்றாண்டுகால நிறை வாழ்வை வாழ்ந்துவிட்டுப்போன ஒப்பாரும் மிக்காருமில்லாத கலை மேதை அவர். அருள் உள்ளத்தால் நெடிதுயர்ந்து நின்ற பெருங்கலைஞரான அவர் தமிழ் மக்களின் பெருமைகளுள் முதன்மையானவராவார். என்றென்றும் நினைந்து போற்றுதலுக்குரியர் கலைவாணர்!

நவம்பர் 29: கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் 115ஆவது பிறந்தநாள்! 

கலைவாணரின் மனிதநேயத்தை போற்றி வளர்த்த மதுரம் எனும் மங்கை 

விதிப்பயனால் சத்தியவான் இறந்துவிடுவான் என்று தெரிந்தும் அவனை மணக்க முடிவெடுத்தவள் புராண காலத்து சாவித்திரி. விதியின்படி அந்த நாளில் பாம்பு தீண்ட பரிதாபமாக இறந்தான் சத்தியவான்.  விதியை நொந்து  சும்மா இருந்தவிடாமல் எமலோகம்வரை சென்று தன் கணவனின் உயிரை மீட்டதாக நீள்கிறது சத்தியவான்- சாவித்திரி கதை.

நவீன காலத்திலும் சாவித்திரி போன்று துாக்குக்கயிற்றில் தொங்கவிருந்த தன் கணவனின் உயிரை லண்டன் பிரிவியு கவுன்சில் வரை சென்று மீட்டார் ஒரு நவீன சாவித்திரி. 40 களில் நிஜமாய் நிகழ்ந்த இந்த கதையின் நாயகி டி.ஏ .மதுரம். கலைவாணர் என்.எஸ் கிருஷ்ணனின் துணைவியார். இன்று அவரது நினைவுநாள்.

எல்லா ஆண்களின் வெற்றிகளுக்குப்பின்னாலும் ஒரு பெண் இருப்பார் என்பார்கள். அப்படி கலைவாணர் என்ற கலைமேதை பெற்ற வெற்றிகளுக்கெல்லாம் திரையிலும் நிஜத்திலும் பின்னால் இருந்தவர் டி.ஏ மதுரம். இறக்கும் தருவாயிலும் மகளின் திருமணத்திற்கு  உதவி கேட்டுவந்த பெரியவருக்கு தன் படுக்கையில் இருந்த வெள்ளி கூஜாவை கொடுத்த வள்ளல் கலைவாணர். சம்பாதித்ததையெல்லாம் மக்களுக்கு கொடுத்து வாழ்ந்த அந்த கலைமேதைக்கு எல்லாமுமமாக இருந்தவர் டி.ஏ மதுரம்.

திருவரங்கத்தை சொந்த ஊரான கொண்ட டி.ஏ மதுரம் சினிமாவிற்கு ‘ரத்னாவளி’ திரைப்படம் மூலம் அறிமுகமானார். ‘ரத்னாவளி’ திரைப்படத்தில் அவரது காஞ்சனமாலை என்ற அவரது கதாபாத்திரம் ரசிகர்களை கவர்ந்ததால் பிரபல இயக்குனர் ராஜா சாண்டோ, தான் அடுத்து இயக்கவிருந்த படத்திற்கு அவரை ஒப்பந்தம் செய்தார். அவருக்கு ஜோடியாக ஒப்பந்தம் செய்யப்பட்டவர் கலைவாணர் என்று பின்னாளில் புகழ்பெற்ற என்.எஸ் கிருஷ்ணன்.

திருச்சியில் நாடகம் நடத்தச் சென்றிருந்த என்.எஸ்.கிருஷ்ணனுக்கு தனக்கு ஜோடியாக நடிக்க உள்ள நடிகையான டி.ஏ.மதுரத்தின் வீடு அங்கு இருப்பதாக தகவல் போனது. அவரை சந்திக்க விரும்பினார் கிருஷ்ணன். அதுதான் என்.எஸ்.கிருஷ்ணன்- மதுரம் ஜோடியின் முதல் சந்திப்பு.

முதல் சந்திப்பிலேயே என்.எஸ்.கிருஷ்ணனின் துடுக்கான பேச்சும் செயலும் ஏனோ மதுரம் குடும்பத்திற்கு கிருஷ்ணன் மீது வெறுப்பை தந்தது. அவருடன் மதுரம் நடிக்க அவர்கள் விரும்பவில்லை. மதுரத்தின் நிலையும் அதுதான். இருப்பினும் முன்தொகை பெற்றுக்கொண்டதால் வேறுவழியின்றி படப்பிடிப்புக்குழுவுடன் புனே புறப்பட்டார் மதுரம். எதிர்பாராதவை நடந்தேறுவதுதான் வாழ்வின்  சுவாரஷ்யம். ஆம் எரிச்சலுடன் புனே பயணமான மதுரம் திரும்பிவரும்போது திருமதி என்.எஸ். கிருஷ்ணனாக திரும்பிவந்தார்.

மோதல் காதலில் முடிய  காரணம் புனே ரயில் பயணம். ஆம் படப்பிடிப்பிற்காக புனே செல்ல சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காத்திருந்த கலைஞர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவர்களின் வழிச்செலவுக்கு பணம் தரவேண்டிய தயாரிப்பு நிர்வாகி ரயில் புறப்படும்வரை வரவில்லை. ரயில் புறப்பட்டது. எல்லோரும் பதைபதைக்க கிருஷ்ணன் மட்டும் சாவகாசமாக இருந்தார். முதல்நாள் பயணத்தில் என்.எஸ்.கிருஷ்ணன் சக நடிகர்களுக்கு தன் சொந்த செலவில்  எந்த குறையுமின்றி பார்த்துக்கொண்டார். இரண்டாம் நாள் பயணத்திற்கு போதிய பணம் இல்லை. மதுரத்திடம் வந்து நின்றார் உதவி கேட்டு.

வெறுப்பாக தம்மிடம் இருந்த பணத்தை தந்தாலும் பின்னர் மதுரம் யோசனையில் ஆழ்ந்தார். ‘தயாரிப்பு நிர்வாகியின் மீது கோபம் கொண்டு பயணத்தை ரத்து செய்யவுமில்லை. அதே சமயம் பணம் இல்லையென்று தமக்கு மட்டும் வழி செய்து கொண்டு ஒதுங்கிவிடவில்லை. அனைவருக்கும் ஒரு குறையுமின்றி பார்த்துக்கொண்ட கலைவாணரின் குணம் ஆச்சர்யத்தை தந்தது அவருக்கு. படத்தின் தயாரிப்பாளருக்கு கூட இல்லாத அக்கறை ஒரு சாதாரண நடிகரான இவருக்கு மட்டும் ஏன் என தன் மனதை போட்டு குடைந்துகொண்டிருந்தார். அதற்கு புனேவில் விடை கிடைத்தது.

புனேவை அடைந்தபின் மீண்டும் உதவிக்காக மதுரம் இருந்த அறைக்கதவை தட்டினார் கிருஷ்ணன். எரிச்சலான மதுரத்திடம் மெதுவான குரலில் சொன்னார் கிருஷ்ணன், ”இத பாரு மதுரம், நாம சாதாரண நாடக நடிகருங்க… ஏதோ தவறுனால கடைசி நிமிடத்துல தயாரிப்பு நிர்வாகி பணம் கொடுக்க தவறிட்டாங்க. எப்படியும் கிடைக்கப்போகுது. அதுக்காக பழிவாங்க நினைச்சு நம்ம எதிர்காலத்தையும் கெடுத்துக்க கூடாது…வந்திருக்கிற பலபேரு இனிமேதான் சினிமா வாழ்க்கையை துவக்கப் போகிறவங்க… சின்னகோபத்துல அவங்க எதிர்காலத்தை பாழாக்கிடக்கூடாது. அவங்க யார்ட்டயும் துளி காசும் கிடையாது. பெரும் தொகை போட்டு படம் எடுக்கிற தயாரிப்பாளருக்கும் நஷ்டத்தை ஏற்படுத்தக்கூடாது…அதனால நம்ம செலவுகளை ரெண்டு நாளைக்கு நாம பார்த்துக்கிட்டா பின்னாடி அது நமக்கு கிடைச்சிடப்போகுது…இருக்கிற நாம இல்லாதவங்களுக்கு கொடுக்கறதுதான் இந்த நேரத்துல முக்கியம்” என்றார். நெகிழ்ந்துபோனார் மதுரம்.

‘இப்படி ஒரு குணமுள்ள ஆளா’ என அடுத்த நொடி தன்னிடம் இருந்த நகைகளையெல்லாம் கழற்றி கொடுத்தார் கிருஷ்ணனிடம். என்.எஸ்.கிருஷ்ணனுக்கும் நகைகளை கழற்றிக்கொடுத்த மதுரத்தின் மீது ஒரு அன்பு பிறந்திருந்தது.

இரண்டொருநாளில் கிருஷ்ணனின் துாதராக மதுரம் இருந்த அறையின் கதவை தட்டினார் ஒரு நடிகர். ‘கிருஷ்ணன் உங்களை மணக்க விரும்புகிறார்’ என்றார். தீவிர சிந்தனைக்குப்பின் தலையாட்டினார் மதுரம். படம் முடிந்த தருவாயில் இயக்குனர் ராஜா சாண்டோவின் தலைமையில் புனேவிலேயே மதுரம் கழுத்தில் தாலி கட்டினார் கிருஷ்ணன்.

கலைவாணரும் மதுரம் அம்மையாரும் இணைந்து நடித்த முதல் படமாக ‘வசந்தசேனா’ வெளிவந்தது. 1936 ல் வெளியான இந்த திரைப்படத்திலிருந்து சுமார் 1957 வரை 120 படங்கள் என்.எஸ் கிருஷ்ணன்  மதுரம் ஜோடி திரையுலகில் நகைச்சுவையில் கொடிகட்டிப் பறந்தது. உலகத் திரைப்பட வரலாற்றில் கூட இல்லாத அளவுக்கு ஆண்- பெண் என நகைச்சுவையில் கொடிகட்டிப்பறந்த முதல் ஜோடி கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்- டி.ஏ மதுரம் ஜோடிதான்.

தியாகராஜ பாகவதர் நடித்த வெற்றிப்படமான ‘அம்பிகாபதி’யின் வெற்றிக்குப்பின் கலைவாணர் மதுரம் ஜோடியின் திரையுலகின் உச்சியைத்தொட்டனர். வெறும் திரைப்பட நடிகையாக மட்டுமே இல்லாமல் பாடல் நடனம் இசைஞானம் என பன்முகத் திறமை கொண்டவர் மதுரம் அம்மையார். திரையுலகில் இணைந்து நடித்து திரைப்படங்களின் வெற்றிக்கு காரணமானது போலவே, தனிப்பட்ட வாழ்விலும் தன் கணவரின் வள்ளல்குணத்திற்கு  ஒத்துழைப்பு தந்து அவரது புகழ்வாழ்விற்கு காரணமாக விளங்கினார் மதுரம் அம்மையார்.

தி.நகர் வெங்கட்ராரமையர் வீடும் ராயப்பேட்டை இல்லமும் ஏழை எளியவர்கள், திரையுலக பிரபலங்கள் என அப்போது எந்நேரமும் பசியாற்றிக்கொண்டிருக்க காரணம் மதுரம். இருவரும் இணைந்து ஈட்டிய சம்பாத்தியங்கள் கணவரால் வள்ளல் குணத்தால் அள்ளிக் கொடுக்கப்பட்டபோதெல்லாம் எந்த மறுப்புமின்றி தானும் அதை பின்பற்றிய பெருந்தகை மதுரம்.  கலைவாணர் மதுரம் தம்பதி கலையுலகில் பாராட்டும்படியான வாழ்வு வாழ்ந்தனர். ஒருவருக்கொருவர் அபரிதமானஅன்பு கொண்டிருந்தனர்.  அந்த அன்பை தெரியப்படுத்த ஒரு மோசமான சம்பவம் நடந்தது அவரது வாழ்வில்.

1944 இல் கலைவாணர் வாழ்வில் சோதனையான ஆண்டாக அமைந்தபோது அதை மதுரம் எதிர்கொண்ட விதம் அவரது தன்னம்பிக்கை மற்றும் கலைவாணர் மீதான பெரும் அன்பை வெளிப்படுத்தியது. எதிர்பாராதவிதமாக அந்த ஆண்டு கலைவாணர், தமிழ்த்திரையுலகின் சூப்பர்ஸ்டார் தியாகராஜபாகவதர் மற்றும் பக்ஷிராஜா ஸ்டுடியோ அதிபர் ஸ்ரீராமுலு நாயுடு ஆகியோர் ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். தமிழ்த்திரையுலகம் அதிர்ச்சியில் உறைந்தது.

அக்காலத்தில் திரையுலக பிரபலங்களை இந்துநேசன் என்ற தம் பத்திரிக்கையில் பரபரப்பாக எழுதியவர் லட்சுமி காந்தன். அதில் அவருக்கு வருமானம் கிடைத்துக்கொண்டிருந்தது. எந்த பிரபலங்களும் லட்சுமிகாந்தன் பேனா முனையிலிருந்து தப்பவில்லை. இந்நிலையில் சென்னை வேப்பேரியில் நடுத்தெருவில் கத்தியில் குத்தப்பட்ட லட்சுமிகாந்தன் அடுத்த 2 தினங்களில் மரணமடைந்தார். கொலை முயற்சி, கொலைவழக்கானது. இந்த வழக்கில்தான் மேற்சொன்ன 3 பிரபலங்களும் சதி செய்ததாக கைதானார்கள்.

ஸ்ரீராமுலு நாயுடு வழக்கின் ஆரம்பநிலையிலேயே போதிய ஆதாரங்களுடன் விடுவிப்பு மனு போட்டு வழக்கலிருந்து விடுபட்டார். ஆனால் தியாகராஜபாகவதர் மற்றும் கலைவாணர் இருவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டன. பரபரப்பாக நடந்த இந்த வழக்கின் தீர்ப்பு 1945 ஆம் ஆண்டு மே மாதம் 3 ந்திகதி வெளியானது. தியாகராஜபாகவதர் மற்றும் கலைவாணர் இருவரையும் குற்றவாளிகள் என சொன்ன சென்னை செசன்ஸ் நீதிமன்றம் இருவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கியது. கலையுலகம் கலங்கி நின்றது.  பெரியார், அண்ணா உள்ளிட்ட பல்துறை பிரபலங்களும் கலைவாணரை மீட்க வழிதெரியாமல் திகைத்துநின்றனர். அடுத்த சில நாட்களில் போடப்பட்ட அப்பீல் மனுவும் தள்ளுபடி ஆக நம்பிக்கை இழந்து நின்றது கலைவாணர் குடும்பம்.

அவ்வளவுதான் இருவரது வாழ்வும் என பேசப்பட்ட நிலையில் மதுரம் அம்மையார் சோர்ந்துவிடவில்லை. கணவனை மீட்டே தீருவது என முடிவெடுத்தார். கலைவாணர் மேல் பற்றுக்கொண்ட அனைவரையும் சந்தித்து ஆதரவு கோரினார். ஒற்றைப் பெண்மணியாய் சட்டப்போராட்டம் நடத்த தயாரானார். 24 மணிநேரமும் கணவனை மீட்கும் முயற்சியிலேயே அந்த நாட்களை கழித்தார். கணவரை மீட்கும் முயற்சியில் தன் சொத்துக்களை இழக்கவும் உறுதியாக இருந்தார். வழக்கு லண்டன் பிரிவியு கவுன்சிலுக்கு அப்பீல் மறுவிசாரணைக்கு சென்றது. கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பு விபரங்களில் உள்ள முரண்பாடுகள் பிரிவியு கவுன்சில் முன்பு எடுத்துவைக்கப்பட்டன. நீதிபதிகளின் சந்தேகங்கள் தீர்த்துவைக்கப்பட்டன. 1947 ஏப்ரல்  25 ந் திகதி லண்டன் பிரிவியு கவுன்சில் முந்தைய தீர்ப்பை ரத்து செய்து பாகவதர் கலைவாணர் இருவரையும் விடுதலை செய்தது. திரையுலகம் விழாக்கோலம் கண்டது.

விடுதலையான கலைவாணருக்கு சென்னை கடற்கரையில் வரவேற்பு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தலைமை தாங்கிப்பேசிய அறிஞர் அண்ணா, “கலைவாணரை வரவேற்கும் கூட்டம் என்றாலும் உண்மையில் தன் கணவரை மீட்க கடைசி வரை கண்துஞ்சாது போராடிய மதுரம் அம்மையாரை பாராட்டும் கூட்டம்தான் இது. கலைவாணர் சிறைமீண்டதில் மதுரம் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்” என்று புகழ்ந்துரைத்தார்.

உண்மைதான்… கலைவாணர் சிறை சென்ற நாளிலிருந்து மதுரம் அடைந்த துயரங்கள் அத்தகையது. எடுத்த முயற்சிகள் அளப்பரியது. கலைவாணர் சிறையிலிருந்துபோது கலைவாணரின் விட்டுச்சென்ற நாடக பணிகளையும் அவர் கைவிடாமல் செயல்படச் செய்தார்.   சிறையில் இருந்து மீண்ட கலைவாணர் மீண்டும் திரைப்படங்களில் தலைகாட்டத் துவங்கினார். கலைவாணரின் சிறைமீட்பு முயற்சிக்கு நிதிசேர்க்க பைத்தியக்காரன் என்றொரு படத்தை தயாரித்தார். இதில் எம்.ஜி.ஆர் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ( சிறையில் இருந்துவந்தபின் கலைவாணரும் நடித்து சில காட்சிகள் இதில் சேர்க்கப்பட்டன.)

கலைவாணர் மதுரம் தம்பதிக்கு 1944 இல் ஒரு பெண்குழந்தை பிறந்து சில மாதங்களில் இறந்தது. குழந்தையில்லாத குறையில் முடங்கிவிடாமல் கலைவாணருக்கு மற்ற மனைவிகளின் மூலம் பிறந்த குழந்தைகளை தம் பிள்ளைகள் போல கண்ணும் கருத்துமாக வளர்த்தார் மதுரம். அண்ணாவின் கதை வசனத்தில் நல்லதம்பி என்ற படத்தை தயாரிக்க கலைவாணர் முன்வந்தபோது  ஒரு சுவாரஷ்யம் நிகழ்ந்தது. கலைவாணர் மனைவி மதுரம் மீது கொண்ட அன்பிற்கு இந்த சம்பவம் உதாரணம்.

புரட்சிகரமான எழுத்தாளரான விளங்கிய அண்ணாவின் கதை வசனத்தில் கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் ஒரு படம் தயாரித்தார் கலைவாணர். படத்தின் கதை முற்போக்குத்தனமானது. பிற்போக்குத்தனங்களை உடைத்தெறியும் வகையில் எழுதப்பட்டடிருந்தது. கதையில் நாயகன் புரட்சிகளை செய்யும் வாலிபன் என்பதால் அக்கதாபாத்திரத்தில் நடித்த கதாபாத்திரத்திற்கு ஜோடியாக  புதுமுகம் போடலாம் என இயக்குனர்கள் தெரிவித்தனர். அதைக்கேட்ட மதுரம் மற்றும் கலைவாணரின் முகம் இருண்டுவிட்டது. குறிப்பாக கலைவாணர் முகம் வாடியது. இந்த கதை தங்களை பிரிப்பதாக அவர்கள் கருதினர்.

கலைவாணரின் வாடிய முகத்தை கண்ட அண்ணா கதையில் ஒரு கிளைக்கதையை அவர்களுக்காகவே உருவாக்கினார். கதாநாயகி ஜமீன்தாரான கதாநாயனை விரும்புகிறாள். ஆனால் கதாநாயகன் அவளை விரும்பாமல் ஜமீன்தார் அலுவலகத்தில் பணியாற்றும் சாதாரண ஏழையை விரும்புகிறான். அந்த ஏழை வேறு யாருமல்ல; டி.ஏ மதுரம்! கலைவாணர் மதுரம் மீது கொண்ட அன்புக்கு இது சான்று.

பின்னாளில் தன் மனைவி மீது கொண்ட அன்புக்கு அடையாளமாக தான் பிறந்த ஊரான நாகர்கோவிலில் மதுரபவனம் என்ற பெரிய அரண்மனை போன்ற வீட்டை கட்டினார். பின்னாளில் கலைவாணர் ஈட்டிய சொத்துக்கள் அவரது வள்ளல் குணத்தால் கரைந்தபோதிலும் மதுரம் அம்மையார் அதை தடுத்ததில்லை. கணவரின் குன்றாத புகழுக்கு அவர் இறுதிவரை துணையிருந்தார்.

திரையுலகில் கலைவாணர் மீது பற்றுக்கொண்ட அத்தனை பிரபலங்களும் மதுரம் மீதும் அதே அன்பை செலுத்தியவர்கள். 1959 ஆம் ஆண்டு உடல்நலக்குறைவினால் சென்னை பொதுமருத்துவமனையில் உயிர்நீத்தார் கலைவாணர். கலைவாணரின் காலத்திற்குப்பின் வெளியுலகிலிருந்து தன்னை முடக்கிக்கொண்டு பிள்ளைகளை வளரப்பதில் காலத்தை செலவிட்டார் மதுரம். கலைவாணரின் பிள்ளைகள் இன்று கடல் கடந்தும் சிறப்புடன் வாழ   மதுரம் அம்மையார் முக்கிய காரணம்.

கலைவாணரின் புகழைப்போற்றி வளர்த்த மதுரம் அம்மையார் 1974 ஆம் ஆண்டு மே 23 ந்தேதி மறைந்தார். கலைவாணரின் புகழ் பேசப்படுகிறவரை மதுரம் அம்மையாரின் புகழும் நிலைத்திருக்கும்.

– எஸ்.கிருபாகரன்

Tags: