எஸ்.ஜெய்சங்கர்: ‘தீர்வைப்பற்றி பேசிக்கொண்டே இருப்பது தீர்வாகாது!’

லங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள  இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் இன்று (20.01.2023)  கொழும்பில் உள்ள இந்திய தூதுவர் இல்லத்தில் வடக்கு -கிழக்கு தமிழ் அரசியல் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியிருந்தார். 

தமிழ்த்  தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன், சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன், மாவை சேனாதிராஜா மற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன், ஸ்ரீகாந்தா, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர். எனினும்  சி.வி விக்கினேஸ்வரன் இந்த சந்திப்பில் கலந்துகொண்டிருக்கவில்லை. 

இதன்போது அரசியல் தீர்வு குறித்து ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை, இருக்கின்ற அரசியலமைப்பு விடயங்களை உடனடியாக அமுல்படுத்தக் கூறி, அதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்தும் இன்றுவரை அவை  நடைபெறவில்லை, காணி விடுவிப்பு குறித்து தான் உத்தரவுகளை பிறப்பித்ததாக ஜனாதிபதி கூறினாலும், தொடர்ந்தும் காணி அபகரிப்பு நடந்துகொண்டே உள்ளது என்ற விடயங்களை தமிழர் பிரதிநிதிகள் எடுத்துக்கூறியுள்ளனர். 

ஒற்றையாட்சிக்கு வெளியில் செல்லாவிடின் தீர்வு சாத்தியமில்லை என்பதை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி எடுத்துக்கூறியுள்ளதுடன், 13 ஆம் திருத்தத்தை அமல்படுத்த வலியுறுத்தினால் நாம் ஒற்றையாட்சியை ஏற்றதாகிவிடும் என்பதையும்  தெரிவித்துள்ளார். அதேபோல் தெற்கின் சிங்கள மக்கள் எமது கருத்துக்களை செவிமடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது, எனவே அவர்களுடன் கலந்துரையாடி அவர்களின் மனதை மாற்றியமைக்க முடியும் எனவும்  அவர் தெரிவித்துள்ளார். அதே கருத்தினை  சுமந்திரன் எம்.பியும் முன்வைத்துள்ளார்.  

அதனை ஜெய்சங்கர் ஏற்றுக்கொண்ட போதிலும், இருக்கும் அதிகார பகிர்வு விடயங்களை இடைக்கால தீர்வாக  அமுல்படுத்தாது போனால் கிடைப்பதும் இல்லாது போய்விடும் என்பதை தமிழ் அரசியல் தரப்பிடம் சுட்டிக்காட்டியுள்ளார். தீர்வைப்பற்றி பேசிக்கொண்டே இருப்பது தீர்வாகாது. தெற்குடனான பேச்சுவார்த்தையின் மூலமாக தீர்வு காண்பதை தமிழர் தரப்பே செய்ய வேண்டும். அதில் இந்தியா தலையிட முடியாது என ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். அதை தவிர அதிகார பகிர்வுக்கு எமது ஆதரவை முழுமையாக வழங்கத்  தயாராக உள்ளோம் எனவும்  தெரிவித்துள்ளார். 

13 ஆவது அரசியலமைப்பு முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும்; மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்த வேண்டும்
– எஸ்.ஜெய்சங்கர்

லங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற்றுக் கொள்வதற்கு அவசியமான நிதி உத்தரவாதத்தை அளிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் தெரிவித்தார்.

இலங்கையை மீண்டும் மீட்டெடுப்பதற்கு கடன் வழங்குனர்கள் செயற்திறனுடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்தியா உறுதியாக நம்புவதாகவும் அதனால் ஏனைய தரப்புகளைப் பற்றி பாராமல் சரியானவை என தான் நினைக்கும் விடயங்களை நடைமுறைப்படுத்த இந்தியா தீர்மானித்ததாகவும் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (20.01.2023) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனான சந்திப்பை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட இணைந்த செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும்போதே இந்திய வெளிவிவகார அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதாரச் சவாலை வெற்றிகொள்ளுமென இந்தியா நம்புவதுடன் இந்த இக்கட்டான காலகட்டத்தில் இலங்கையின் நம்பிக்கை மிகுந்த நண்பராக இந்தியா இருக்குமென்றும் அவர் கூறினார்.

இலங்கையின் பொருளாதாரத்தை மீண்டும் மீட்பதற்கு இந்தியாவிடம் இருந்து பெற்றுக்கொள்ளக்கூடிய உதவிகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக வெகு விரைவில் இந்தியா வருமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விடுத்துள்ள அழைப்பை தான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளித்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கையின் நம்பகமான அண்டைய நாடு மற்றும் நம்பகமான பங்காளி என்ற அடிப்படையில் இந்த இக்கட்டான நேரத்தில் இலங்கையின் மீட்சிக்காக பல மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுக்க இந்தியா தயாராக இருப்பதாகவும் அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.

இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் பொருளாதாரத்தின் முக்கிய துறைகளாக விளங்கும்  வலுசக்தி, சுற்றுலாக் கைத்தொழில் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி போன்றவற்றில் முதலீடு செய்ய முதலீட்டாளர்களை ஊக்குவிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த இந்திய வெளிவிவகார அமைச்சர்….

நிலைபேண்தகு வருமானத்தைப் பெற்றுக்கொள்ளக் கூடிய மிகப்பிரமாண்டான புதுப்பிக்கத்தக்க வலுசக்தி ஆற்றல் இலங்கையில் உள்ளது. திருகோணமலையை வலு சக்தி மையமாக மாற்ற முடியும். அத்தகைய நடவடிக்கையை தொடங்குவதற்கு இலங்கையின் நம்பகமான பங்காளியாவதற்கு  இந்தியா தயாராக உள்ளது. இந்த ஒத்துழைப்பை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி கட்டமைப்புக் குறித்தும் இன்று நடைபெற்ற கலந்துரையாடல்களில் உடன்பாடு எட்டப்பட்டது.

இலங்கையில் இதுபோன்ற செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு ஊக்கமளிக்கும் வகையில் இலங்கையில் சிறந்த வர்த்தக நட்புச் சூழல் உருவாக்கப்பட வேண்டும். சட்டம் இயற்றுபவர்கள் இதன் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்வார்கள் என்று நினைக்கிறேன்.

அந்தவகையில் இன்று இலங்கை எதிர்நோக்கும் மிகப் பெரிய சவால் வலுசக்தி பாதுகாப்பாகும்.  எனவே இதுபோன்றதொரு நிலைமையில் எட்டப்படும்  தீர்வுகள் பாரிய பிராந்தியங்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். அப்போதே அதன் முழுமையான பலன் இலங்கைக்கு கிடைக்கும்.

சுற்றுலாக் கைத்தொழில்  இலங்கைப் பொருளாதாரத்தின் உயிர்நாடியாகத்  திகழும் அதேநேரம் இந்திய சுற்றுலாப் பயணிகள் இலங்கை வர விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்துவதன் மூலம் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதில் சாதகமான பலனை அடைய முடியும்.

இந்த இக்கட்டான காலகட்டத்தில் இலங்கைக்கு இந்தியாவின் ஒத்துழைப்பை வெளிப்படுத்துவதே எனது இந்த விஜயத்தின் நோக்கமாகும். பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு இலங்கைக்கு உதவியாக  இந்தியா கடந்த ஆண்டு சுமார் 4 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனுதவியாக வழங்கியது.

இலங்கையை மீண்டும் மீட்பதற்காக கடன் வழங்குனர்கள் செயற்திறனுடன் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இந்தியா உறுதியாக நம்புகிறது.

இதனால், ஏனைய தரப்புக்களைப் பற்றி பாராமல் தான் சரியென நினைத்ததை செயற்படுத்த இந்தியா தீர்மானித்தது. அதற்கமையவே, இலங்கையை மீட்பதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்கு அவசியமான  நிதி உத்தரவாதத்தை நாம் வழங்கினோம்.

இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கு ஆதரவளிக்கும் அதேவேளை, அனைத்து இருதரப்புக்  கடன் வழங்குநர்களையும் சமமாக நடத்துவதை உறுதி செய்வதே எமது எதிர்பார்ப்பாகும். இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு இந்தியா எப்போதும் ஆதரவளிக்கின்றது.

அரசியல் அதிகாரப் பகிர்வுப் பிரச்சினை மற்றும் அது தொடர்பான ஜனாதிபதியின் கருத்து என்னிடம் தெரிவிக்கப்பட்டது. 13 ஆவது அரசியலமைப்பு முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என்ற எங்களின் யோசனையையும், மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என்ற எண்ணத்தையும் அவரிடம் தெரிவித்தேன்.

நீண்ட கால நல்லிணக்கத்திற்கான முயற்சிகள் இலங்கையின் அனைத்து மக்களின் நலன்களுக்கும் சிறந்ததாகும். இந்திய வம்சாவளி தமிழ் சமூகத்தின் தேவைகளில் சிறப்புக் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று நான் நம்புகிறேன்.

இங்கு கருத்துத் தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி…..

இங்கு கருத்துத் தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி…..

கடந்த ஆண்டு, இலங்கை இதுவரை அனுபவித்திராத மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டது. அச்சந்தர்ப்பத்தில் இலங்கைக்கு இந்தியா அளித்த ஆதரவை நன்றியுடன் நினைவுகூர வேண்டும்.

இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு உதவும் வகையில் அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கும் ஏனைய மனிதாபிமான உதவிகளுக்கும் இந்தியா வழங்கிய 04 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சார்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இந்திய அரசாங்கத்திற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளில் இலங்கை தற்போது ஒரு முக்கியமான கட்டத்தில் உள்ளது. கடன் வழங்குனர் என்ற வகையில், இலங்கையின் கடன் மறுசீரமைப்பிற்காக சர்வதேச நாணய நிதியத்திற்கு இந்தியா உத்தரவாதம் அளித்துள்ளது.

இந்தியா விரைவில் அல்லது ஒருவேளை ஏற்கனவே மிகப் பாரிய மற்றும் வேகமாக வளர்ச்சியடையும் பொருளாதாரங்களில் ஒன்றாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்தியாவின் இந்த பொருளாதார வெற்றியையும் அதற்குள்ள சர்வதேச நற்பெயரையும் இலங்கை மிகுந்த அபிமானத்துடன் பார்க்கிறது என்றே கூற வேண்டும்.

இந்தியாவின் இந்த வளர்ச்சியானது, பிராந்தியத்திற்கும் அதேபோல் இலங்கைக்கும் நன்மை பயப்பதோடு, இந்தியாவின் நல்லெண்ணத்துடனும் கூட்டுறவுடனும் தற்போதைய நெருக்கடியை சமாளிக்க முடியும் என இலங்கை நம்புகின்றது.

Tags: