குஜராத் சட்டமன்றத் தேர்தல்: மீண்டும் ஜிக்னேஷ் மேவானி வெற்றி!

குஜராத்தில் சட்டமன்றத் தேர்தல் கடந்த 1, 5-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில், இன்று தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், குஜராத்தின் வட்கம் (Vadgam) சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் சார்பாகப் போட்டியிட்ட ஜிக்னேஷ் மேவானி (Jignesh Mevani) 94,765 வாக்குகள் வெற்றி பெற்றிருக்கிறார். 2017-ம் ஆண்டு வட்கம் சட்டமன்றத் தொகுதியில் நடந்த தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றிப்பெற்ற நிலையில், தற்போது காங்கிரஸ் சார்பாக வெற்றி பெற்றிருக்கிறார்.

யார் இந்த ஜிக்னேஷ் மேவானி?

ஜிக்னேஷ் மேவானி11-12-1980 அன்று, அகமதாபாத்தில் பிறந்தார். இவர் தந்தை நட்வர்லால் சங்கர்லால் பர்மர். இவரின் தாயார் சந்த்ராபென். இளங்கலை ஆங்கிலம் பயின்ற இவர், இதழியல் பயின்றுள்ளார். ‘அபியன்’ என்னும் குஜராத்தி இதழ் ஒன்றில் பத்திரிகையாளராகப் பணிபுரிந்தார். அதன் பின்பு, சட்டம் பயின்றுள்ளார். இப்போது நீதித்துறையில் வழக்கறிஞராக இருக்கும் இவர், சமூக ஆர்வலராகவும் செயல்பட்டு வருகிறார். இவர் தலித் அஸ்மிதா யாத்ரா என்னும் பேரணியை நடத்தியதன் மூலம் மிகவும் பிரபலமாக அறியப்பட்டவர்.

தலித் அஸ்மிதா யாத்ரா:

கடந்த 2016-ம் ஆண்டில், ரஜூலா என்னும் இடத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவரும், அவரின் மனைவியும் (பட்டியலினப் பெண் அல்ல) கொலைசெய்யப்பட்டனர். அதுபோல, அதே வருடம் இன்னொரு கிராமத்தில் பட்டியலினச் சிறுவன் ஒருவன் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டான். பட்டியலினத்தைச் சேர்ந்த சுமார் 30 பேர் தற்கொலை செய்துகொண்டனர். பட்டியலினத்தவர்கள் பல தீண்டாமைக் கொடுமைகளையும் அனுபவித்து வந்தனர்.

இந்த நிலையில் 2016-ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி பிரபலமான தலைவர்களோ, பேச்சாளர்களோ இல்லாமல் வன்முறை இன்றி, பட்டியலின மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சுமார் 30,000 சாமான்ய மக்கள் அமைதியான முறையில் பேரணி நடத்தினர். இது அகமதாபாத் தொடங்கி யுனா வரை நடைபெற்றது. பேரணி முழுவதும் ‘ஜெய் பீம்’, ‘ஆசாதி ஆசாதி’ என்னும் வார்த்தைகளே முழங்கின. இதில் வணிக குழுக்கள், பட்டியலின சங்கங்கள், தொழிலாளர் சங்கங்கள் உட்பட பிற மாநிலங்களான ஆந்திரா, பஞ்சாப், பீகார், தெலங்கானாவைச் சேர்ந்த மக்களும் ஏராளமாக கலந்துகொண்டனர். இந்தப் போராட்டத்துக்காக மக்களைத் திரட்டிய ஜிக்னேஷ் மேவானி கவனிக்கப்படுகிறவரானார்.

இதைத் தொடர்ந்து, கடந்த 2017-ம் ஆண்டு வட்கம் சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக முதன்முறையாக தேர்தலில் போட்டியிட்டார். சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்ட இந்த தேர்தலில் அவருக்கு ஆதரவாக காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் ஆதரவு தெரிவித்து தேர்தலில் பங்கேற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த தேர்தலில் பா.ஜ.க வேட்பாளர் விஜய்குமார் சக்கரவர்த்தியை எதிர்த்து போட்டியிட்ட இவர், 19,696 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றார்.

இதையடுத்து, கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஜிக்னேஷ் மேவானி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 2017-ம் ஆண்டிலிருந்து வட்கம் சட்டமன்றத் தொகுதியை கைப்பற்ற பா.ஜ.க-வுக்கும் காங்கிரஸுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வரும் சூழலில், 2022-ம் ஆண்டுக்கான சட்டமன்றத் தேர்தலில் குஜராத்தின் வட்கம் தொகுதியில் ஜிக்னேஷ் மீண்டும் போட்டியிட்டிருந்த நிலையில், பா.ஜ.க மணிபாய் வகேலாவை வேட்பாளராக நிறுத்தியிருந்தது. ஆம் ஆத்மி அந்த தொகுதியில் டால்ப் பாட்டியாவை களமிறக்கியிருந்தது. இந்த வட்கம் சட்டமன்றத் தொகுதியில் 2,70,000 வாக்காளர்கள் இருக்கின்றனர். 2022-ம் ஆண்டு வட்கம் சட்டமன்றத் தொகுதி தேர்தலில் 11 வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள்.

குஜராத்தின் வட்கம் தொகுதியில் காங்கிரஸ், பா.ஜ.க, ஆம் ஆத்மி என மூன்று முக்கிய கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. பா.ஜ.க வேட்பாளர் மணிபாய் வகேலாவும், காங்கிரஸ் வேட்பாளர் ஜிக்னேஷ் மேவானியும் மாறி மாறி முன்னிலை வகித்து வந்தனர். இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கையின் முடிவில் காங்கிரஸின் ஜிக்னேஷ் மேவானி, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளர் மணிபாயை விட 4,928 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றிருக்கிறார்.

Tags: