ஹிந்தியா, இங்கிலீஷா?

எஸ்.வி.ராஜதுரை

ந்தியாவில் வசிக்கும் 35 கோடி ஜனங்கள், சுமார் 200 பாஷைகளைப் பேசிவருகின்றனர். பாஷை வேறுபாடேயன்றிப் பல்வேறு மதப் பிரிவினைகளும் ஆயிரக்கணக்கான ஜாதிப் பாகுபாடுகளும் இருந்துவருவதால், 35 கோடி எண்ணிக்கையுள்ள இப்பெருஞ்சமூகம், தனித்தனி சிறு சமூகங்களாகப் பிளக்கப்பட்டு, ஒன்றிற்கொன்று சம்பந்தமில்லாது, நெல்லிக்காய் மூட்டை போல் இருந்துவருகிறது. ஒரு குடையின் கீழ் வாழ்ந்துவருகிற ஒரு காரணத்தாலேயே இந்நாட்டில் உள்ள பலச் சமூகங்களும் ‘இந்திய சமூகம்’ என்னும் ஒரு தனிச் சமூகமாக எண்ணப்படுகிறது.

காஷ்மீரம் முதல் கன்னியாகுமரி வரையுள்ள மக்கள் எல்லோரும் ஒரு நாட்டினர் என்ற தேசீய உணர்ச்சியை உண்டாக்கி வளர்த்து வருவதற்குப் பெரிதும் துணையாயிருப்பது ஆங்கிலேயரின் ஏகச் சக்ராதிபத்ய ஆட்சியும், அவ்வாட்சியின் நிர்வாக பாஷையான இங்கிலீஷ் பாஷையுமாகும். அந்நிய ஆட்சியினின்றும் விடுதலை பெற்றுச் சுதந்தரம் பெறுவதற்காகச் செய்யப்படும் முயற்சிக்குத் துணையாக, ஹிந்தியைத் தேசத்தின் பொது பாஷையாக்க வேண்டுமென்று சொல்லப்பட்டு, தேசபக்தர்களால் சென்ற 15 வருஷங்களாகப் பலமான முயற்சிகள் செய்யப்பட்டுவருகின்றன. இந்தியா சுதந்தரம் பெற வேண்டியதைப் பற்றி யாருக்கும் ஆக்ஷேபணையில்லை. ஆனால் அதற்காக ஹிந்தியைத் தேசப் பொதுப்பாஷையாக ஒப்புக்கொள்ள வேண்டியது அவசியமா? அவ்வாறு செய்வதால் ஏற்படும் நன்மை தீமைகள்என்ன? என்பதை ஆராய்ந்தறிய வேண்டும். 

தென் இந்தியர் கடமை

தேச விடுதலைக்காகத் தென் இந்தியவாசிகள் ஹிந்தியை விரைவில் கற்றுக்கொள்ள வேண்டும் என்று தோழர் காந்தி சொல்லுகிறார். தென் இந்தியாவில் ஹிந்திப் பிரசாரத்திற்காக வட இந்தியப் பிரபுக்கள் பணம் கொடுக்கிறார்கள். தேசாபிமான உணர்ச்சி கொண்ட சிலர், ஹிந்தியைக் கற்றுவருகிறார்கள். நம்மில் வேறு சிலர், ஹிந்திப் பிரசாரத்திற்குத் தங்களாலான உதவியைத் தாராளமாகச் செய்துவருகின்றனர். ஹிந்தியபிமானம், நம்மில், படித்த கூட்டத்தினர் இடையே நாளுக்குநாள் விருத்தியடைந்து வருகிறது. சில ஆயிரம் பேர் ஹிந்தி கற்றுக்கொள்வதால், ஒன்றும் முழுகிப் போவதில்லை.

ஆனால் நாக்கு நீண்ட இக்கூட்டம் தாங்கள் ஹிந்தி கற்றுக்கொண்டதன் மூலம், ஹிந்தியைத் தேசப் பொதுப்பாஷையாக்க வேண்டுமென்று கூச்சல் போடுவார்களானால் அக்கிளர்ச்சியை வளரவிட்டுக் கொண்டு போவது தென் இந்தியர் கடமையாகாது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு முதலிய திராவிட பாஷைகளைத் தாய்மொழியாகக் கொண்டுள்ள நாம், ஹிந்தியைப் பொதுப்பாஷையாக ஒப்புக்கொள்வதால், எவ்வாறு பாதிக்கப்படுவோம் என்பதைத் தேசாபிமானம் என்ற மருளுணர்ச்சியில்லாமல், நடுநிலையிலிருந்து நிதான புத்தியுடன் ஆராய்ந்தால்தான் உள்ளபடி உணரமுடியும். இவ்விஷயத்தில், நேர்மையும் நன்மையும் கொண்ட ஒரு முடிவு காண வேண்டிய காலம் வந்துவிட்டது.

இன்றைய நிலை

நமது தாய்பாஷையுடன், இங்கிலீஷ் பாஷையை நாம் இரண்டாவது பாஷையாகக் கற்றுவருகிறோம். நமது பாடசாலைகளில் இங்கிலீஷ் கட்டாய பாடமாகக் கற்பிக்கப்பட்டுவருகிறது. 

இங்கிலீஷ் படிப்பின் மூலம், நாம், அரசாங்க உத்தியோகங்கள் பெறுவதற்கும், கைத்தொழில், வியாபாரத் துறைகளில் சிறப்படைவதற்கும், பொதுவாக நாகரீக வாழ்க்கை நடத்துவதற்கும், தகுதிபெற்று வருகிறோம். அரசியலில் ஜனநாயக தத்துவத்தையும், சமூகவியலில் சமதர்ம தத்துவத்தையும், இந்திய மக்களின் குறிக்கோளாக்கியதும், சென்ற ஒரு நூற்றாண்டாக நம்மிடை பரப்பப்பட்ட இங்கிலீஷ் கல்வியின் பயனேயாகும். இங்கிலீஷ் படிப்பின் மூலம், மேற்கத்திய அரசியல் ஸ்தாபனங்களைப் பற்றிய அறிவும், விஞ்ஞான சாஸ்திரப் பயிற்சியும் ஐரோப்பிய சமூகங்களின் அமைப்பு, நாகரீக நடை முதலியவற்றின் பழக்கமும், நமக்கு ஏற்பட்டுவருகிறது. இத்தொடர்பு நமக்குக் கூடாது, கெட்டது என்று அபிப்பிராயங்கொள்பவர் சிலர். ஆகையால் இங்கிலீஷ் படிப்பை ஒழிக்கவேண்டும் என்று சொல்லி, ஹிந்தியை இங்கிலீஷுக்குப் பதிலாகக் கற்கச் செய்கின்றனர்.

பொதுப் பாஷையின் அவசியம்

வேறுவேறு பாஷைகளைப் பேசும் சமூகங்கள் ஒரு நாட்டில் தங்கி வாழ்க்கை நடத்தும்போது, இவர்களுக்குள் சமூக வாழ்க்கை நடப்பதற்கு ஒரு பொதுப் பாஷை அவசியமாகிறது. ஒவ்வொரு சமூகமும் தங்கள் தாய் பாஷையுடன் இரண்டாவதாக ஒரு பாஷையைக் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. இப்பொதுப் பாஷை அந்நாட்டில் வாழ்பவர்களில் பெரும்பான்மையோருடைய தாய்பாஷையாகவோ, அல்லது அந்நாட்டை ஆள்பவர்களின் தாய்பாஷையாகவோ இருக்கும். பெரும்பாலும் ஒரு தேசத்தை ஆள்பவர்களுடைய பாஷையே அத்தேசத்தின் பொதுபாஷையாக இருந்து வந்திருக்கிறது. நமது நாட்டில் இங்கிலீஷ் பொதுப்பாஷையாக ஏற்படுத்தப்பட்டதன் முக்கிய காரணம், இங்கிலீஷ்காரர் நாட்டை ஆளும் ஜாதியாராக ஏற்பட்டதேயாகும். ஆயினும் இங்கிலீஷைப் பொதுப் பாஷையாக ஏற்படுத்தியவர்கள் அவ்வாறு தீர்மானித்ததற்கு வேறு சில முக்கிய காரணங்களையும் குறிக்கொண்டிருந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது.

இங்கிலீஷ் ஆட்சியும் இந்தியர் கல்வியும்

வியாபாரஞ்செய்ய வந்த ஈஸ்ட் இந்திய கம்பெனியார், சில நாடுகளைப் பிடித்துக் கம்பெனி பஹதூராகி அரசாளத் தொடங்கியபோது, தங்கள் ஆளுகைக்குட்பட்ட மக்களின் கல்வியைப் பற்றி அதிக கவலையெடுத்துக்கொள்ளவில்லை. வர்த்தகக் கூட்டத்தின் வழிவந்த கிறிஸ்தவ பாதிரிச் சங்கங்கள், அங்கங்கே பாடசாலைகளையேற்படுத்தினர். அக்காலத்தில் தேசத்தின் சிறப்பான பாஷைகளாகக் கொள்ளப்பட்டிருந்தவை அரபியும், சமஸ்கிருதமும். மொகலாய அரசாங்க பாஷை பாரசீகம். ஆகையால், உயர்தரக் கலைகள், சாஸ்திரங்க ள்என்பவையெல்லாம், சமஸ்கிருதம் அல்லது அரபி, பாரசீகம் ஆகிய பாஷைகளின் மூலம், வேதபாடசாலைகளிலும் மதரஸாக்களிலும் கற்பிக்கப்பட்டுவந்தன. ஹிந்தி, வங்காளி, மராத்தி, குஜராத்தி, தெலுங்கு, தமிழ் முதலிய தேச பாஷைகளுக்கு மதிப்பிருக்கவில்லை. இப்பாஷைகளுக்கு அரசாங்க ஆதரவு கிடையாது. தேச பாஷைகளை எழுதவும் படிக்கவும் கற்பிக்கக்கூடிய திண்ணைப் பள்ளிக்கூடங்கள் கிராமங்களில் இருந்தன. ஆனால், நவாபுகளும் மகாராஜாக்களும், தங்களுடைய அரசாங்க ஆதரவை, சமஸ்கிருத பாடசாலைகளுக்கும், அரபி மதரஸாக்களுக்குமே அளித்துவந்தனர். ஆகையால் வெளிநாட்டிலிருந்து வந்து நாடு பிடித்து ஆளத் தொடங்கிய வெள்ளைக்காரக் கம்பெனி பஹதூரும், சுதேச மன்னர்களைப் பின்பற்றி, சமஸ்கிருதம் அரபி பாஷைகளையும், அவை போதிக்கப்படும் கலாசாலைகளையும், அப்பாஷைகளில் பாண்டித்யம் பெற்ற பண்டிதர்கள், உலாமாக்களையும் ஆதரிக்கத் தொடங்கினர். தேச பாஷைகளைப் பற்றி அவர்கள் நினைக்கவேயில்லை.

முதற் கலாசாலை

கம்பெனியாரின் முதற் கவர்னர் ஜனராலான வாரன் ஹேஸ்டிங்ஸ் பிரபு, கல்கத்தாவில் மகமதியர்களுக்காக 1732ல் ஒரு மதரஸாவை ஏற்படுத்தினார். அரசாங்கத்தாரால் ஏற்படுத்தப்பட்ட முதற் கலாசாலை இதுவே. 9 வருஷங்கழித்து 1791ல் இந்துக்களுக்காகக் காசியில் ஒரு சமஸ்கிருத கலாசாலை ஏற்படுத்தப்பட்டது. இவ்விரண்டு கலாசாலைகளை ஏற்படுத்தியதன் நோக்கம், கீழ்தேசப்பாஷைகளிற் சிறந்தவைகளான அரபி, சமஸ்கிருதம் இரண்டையும் போதிக்கவும், அவற்றின் மூலம் கீழ்நாட்டுக்கலைகளை வளர்க்கவுமேயாகும். ஆனால் வெகு சீக்கிரத்தில், கம்பெனியாரின் இந்தக் கொள்கைக்குப் பலமான எதிர்ப்பு ஏற்பட்டது.

கல்வி மான்யத்திற்கு சட்டம்

கம்பெனியின் ஆட்சியில் உள்ள இந்திய பிரஜைகளின் கல்வியபிவிருத்திக்காக, கம்பெனி வருமானத்தில் ஒரு பாகத்தைச் செலவிட வேண்டுமென்ற சட்டபூர்வமான நிர்ப்பந்தம் 1813ல்தான் முதன்முதல் ஏற்பட்டது. ஈஸ்ட் இந்திய கம்பெனிக்கு பிரிட்டிஷ் பார்லிமெண்டால் 1813ல் கொடுக்கப்பட்ட வர்த்தக சன்னத்தில், “கம்பெனியாட்சியில் உள்ள இந்திய பிரஜைகளின் கல்விக்காக, கவர்னர் ஜனால், கம்பெனி பிடித்துள்ள நாடுகளின் வரிவசூல் வியாபாரலாபம் முதலிய வருமானத்தில், கம்பெனியின் சிவில், மில்டெரி, வர்த்தக சிப்பந்திகள் செலவுபோக மீதியுள்ள தொகையில் “ஒரு லக்ஷ ரூபாய்க்குக் குறையாமல் படித்த இந்தியர்களை ஆதரிக்கவும் இவர்களிடை விஞ்ஞானக் கலையைப் பரப்புவதற்கும் செலவு செய்யலாம்” என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது.மேற்படி ஒரு லக்ஷ ரூபாய் மான்யத்தைச் செலவு செய்ய ஒரு கமிட்டி நியமிக்கப்பட்டு அதன் மூலம் அத்தொகை வினியோகிக்கப்பட்டது. ஆரம்பத்தில் மேற்படி கமிட்டியார், மான்யம் முழுவதையும், சமஸ்கிருதம், அரபி, பாரசீக பாஷைகளைப் போதிக்கும் கலாசாலைகளுக்கும், இப்பாஷைகளில் நூல்கள் வெளியிடுவதற்கும், இப்பாஷைகளில் பாண்டித்தியம் பெற்ற புலவர்களை ஆதரிப்பதற்குமே செலவு செய்துவந்தனர். 

கீழ்நாட்டுக் கலைகளுக்கு எதிர்ப்பு

அரபி சமஸ்கிருத பாஷைகளையும் கீழ்நாட்டுக் வளர்க்கும் கொள்கை சீமையிலிருநத கம்பெனி முதலாளிகளுக்குப் பிடிக்கவில்லை. ஆக்ரா, டில்லி முதலிய இடங்களில் ஓரியண்டல் காலேஜ்கள் ஏற்படுத்துவதற்குச் செலவு செய்ததைக் குறித்து, கம்பெனியின் Court of Directors என்கிற முதலாளிகள், கீழ்கண்ட அபிப்பிராயத்தைத் தெரிவித்தார்கள்.

“In professing to establish seminaries for the purpose of teaching mere Hindu or Mere Muhammadan literature, you bound yourself to teach a great deal of what was frivolous, not a little of what was purely mischivous and a small remainder, indeed, in which utility was not in any way coneerned”

கீழ்தேச பாஷைகள் மூலம் கீழ்நாட்டுக் கலைகளை வளர்க்கும் கொள்கைக்கு இந்தியர்களிடமிருந்தும் பலமான எதிர்ப்பு ஏற்பட்டது. மேற்கத்திய கல்வியையும் நாகரீகத்தையும் விரும்பிய உயர்ஜாதி இந்துக்கள், தங்கள் நாட்டின் பழமையான, வளர்ச்சியற்றுப் போன கலைகளையும் சாஸ்திரங்களையும் கற்பது வியர்த்தம் என்று அறிந்து, நாள்தோறும் மேலோங்கி வளரு ம்இங்கிலீஷ் பாஷையையும், மேற்கத்திய கலைகளையும் கற்றுக்கொள்ள ஆசைப்பட்டனர். சீர்திருத்தத்தில் ஆர்வங்கொண்ட இந்தக் கட்சிக்குத் தலைவர், புகழ்மிக்க ராஜா ராம்மோஹன்ராய் ஆவார். வேறு சிலர், இங்கிலீஷ்காரர் ஆட்சியில், இங்கிலீஷ் பாஷையைப் படிப்பதுதென்று கண்டதால், இங்கிலீஷ் கற்க ஆரம்பித்தனர். 

இரண்டு கட்சி

நாட்டு மக்களிடையிலும், கம்பெனி முதலாளிகளிடத்திலும் ஏற்பட்டுள்ள அபிப்பிராயங்கள், கவர்ன்மெண்டில், கல்விக் கமிட்டி மெம்பர்களிடையிலும் ஏற்பட்டு அக்கமிட்டியில் கீழ்நாட்டுக் கலையை ஆதரிக்கும் கட்சியும், இங்கிலீஷையும், மேல்நாட்டுக் கலைகளையும் ஆதரிக்கும் கட்சியுமாக இரண்டு கட்சிகள் ஏற்பட்டன. இந்த நிலையில் கம்பெனியின் வர்த்த கசாஸனம் 1833இல் பிரிட்டிஷ் பார்லிமெண்டால் மீண்டும் 20 வருஷங்களுக்குப் புதுப்பிக்கப்பட்டது, அப்போது கவர்னர் ஜனரலின் முதற் சட்ட மெம்பராக ‘தாமஸ் பாபிங்டன் மகாலே’ T.B.Macaulay, என்ற ஓர் சிறந்த அறிவாளி இங்கிலாந்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டார். இந்திய ஆட்சியின் சட்டதிட்டங்களைச் சீர்படுத்தி ஆட்சிமுறையை லாத்துறைகளிலும் நன்கு அமைக்கும் பொருட்டே இலக்கியத்திலும் சட்ட ஞானத்திலும் சிறந்து விளங்கிய இப்பெரியார் அனுப்பப்பட்டார்.

மகாலேயும் இந்தியக் கல்வியும்

இந்த “மகாலே” துரையைப் பற்றி இந்த நூறு வருஷங்களாகக் கூறப்படும் வசைமாரிக்கு அளவேயில்லை. இந்திய நாட்டின் புராதன பாஷைகள், புராதன கலைகள், சாஸ்திரங்கள் இவைகள்லாம் அழிவுற்றதற்கும், இந்தியக் கல்வி உலகாயத மார்க்கத்தில் புகுத்தப்பட்டு இந்திய மக்கள், மேற்கத்திய நாகரீகத்தில் பற்றுக்கொண்டதற்கும், காரண புருஷர் இவரேயென்று சொல்லப்படுகிறது. நல்லதோ, கெட்டதோ இந்திய அரசாங்கத்தின் கல்விமுறை தற்போதிருக்கும் மாதிரி ஏற்படுவதற்குக் காரணமாயிருந்தவர் இவரே என்பதில் ஆட்சேபணையில்லை.

மகாலே இந்தியாவுக்கு வந்ததும், “பப்ளிக் இன்ஸ்ட்ரக்ஷன் கமிட்டி’த் தலைவர்என்ற ஹோதாவில், கமிட்டியில் அப்போது வாதத்திலிருந்த, “அரபியா சமஸ்கிருதமா? – இங்கிலீஷா? – கீழ்நாட்டுக் கலைகளா? மேல் நாட்டுக் கலைகளா?” என்கிற பிரச்சினையை முடிவுசெய்ய வேண்டியவரானார். இந்த விவகாரத்தைக் குறித்து 2.2.1835 தேதியிட்டு இவர் எழுதிய ‘மினிட்’ அபிப்பிராயம், சரித்திரப் பிரசித்தி பெற்றது. இவருக்குக் கீழ்தேச பாஷைகளில் பயிற்சியில்லை. அப்படியிருந்தும், கீழ்த்தேச பாஷைகளைப் பற்றியும், இலக்கியத்தைப் பற்றியும், அதிதீவிரமான அபிப்பிராயங்களை, வெகுவேகமான நடையில் தயவுதாட்சண்யமின்றி எழுதியிருக்கிறார். பாஷைகளைப் படியாமலே, “a single shelf of a good European library was worth the whole native literature of India. and Arabia” என்று ஒரேயடியாய்க் கீழ்நாட்டு இலக்கியத்தை இழிவுபடுத்திக் கூறியது நியாயமாகாது. பாசி பிடித்துப்போன பழய கலைகளைக் கற்பிப்பது சர்க்காரின் கடமையல்லவென்பதைத் தெளிவுபடுத்திவிட்டு நாட்டு மக்களுக்கு உபயோகமான படிப்பு எது, எந்தப் பாஷையைக் கற்பதன் மூலம் அறிவு விசாலமுற்று ஜனங்கள் நாகரீகமடைவார்கள் என்பதை ஆராயும்போது அவர் எடுத்துக்காட்டிய நியாயங்கள் பெரும்பாலும் ஒப்புக்கொள்ள வேண்டியவைகளே. பாமர ஜனங்கள் நாள்தோறும் பேசுகிற நாட்டு மொழிகளில் எல்லாக் கலைகளையும் கற்பிக்கக்கூடிய வகையில், நாட்டு மொழிகள் அக்காலத்தில் (இன்றுங்கூட) வளர்ச்சியடைந்திருக்கவில்லை. ஆகையால், ஜனங்களுக்குத் தெரியாத அரபி அல்லது சமஸ்கிருதம் மூலமாகக் கற்பிப்பதைவிட இங்கிலீஷ் பாஷையைக் கற்பிப்பதே மேல் என்று அவர் அபிப்பிராயப்பட்டார்.

“…the dialects commonly spoken among the natives of this part of India, contain neither literary nor scientific information and are moreover so poor and rude, that until they are enriched from some other quarter, it wil not be easy to translate any valuable work into them. It seems to be admmitted on all sides that the intellectual inprovement of those classes who have the means of pursuing higher studies, can at pre- sent be effected only by means of some language vernacular amongst them.

What then shall that language be? One half of the committee maintains that it should be English. The other half strongly recommends the Arabic and Sanskrit. The whole question seems to me to be, which language is the best worth knowing?

“We have to educate a people who cannot at present be educated by means of their mother-tongue we must teach then some foreign language.

தாய்பாஷையின் மூலம் கல்வி கற்பிக்கத் தற்போது முடியாது. ஏதாவது அந்நிய பாஷை கற்றுத்தான் ஆக வேண்டும். இங்கிலீஷைப் போலவே அரபியும், சமஸ்கிருதமும் ஜனங்களுக்கு அந்நியமே. ஆகையால், உலகத்தின் கலைகளையெல்லாம் தன்னிடம் கொண்டுள்ள இங்கிலீஷ் பாஷையே, இந்திய நாட்டு மக்களுக்கு நன்மை பயக்கக்கூடியது என்று அபிப்பிராயப்பட்டார். இங்கிலீஷ் பாஷையின் சிறப்பைப் பற்றி அவர் எழுதியிருப்பதாவது: 

“It abounds with works of imagination not inferior to the noblest which Greece has bequeathed to us; with models of every species of eloquence; with historical composition, which consid- ered nearly as narratives have seldom been surpassed. and which considered as vehicles of ethical and political instruction, have never deen equalled; with just and lively representations of human life and nature; with the inost profound speculations on metaphysics, morals, government jurisprudence, and trade with and corect information respecting every experimental science which tend to preserve the health, to increase the comfort; or to expand the intellect of man. Whoever knows that language has ready access to all the vast intellectual wealth which, all the wisest nations of the earth have created and hoarded course of ninety generations. It stands preeminent. even among the languages of the west… Hence of all foreign tongues, the English tongue is that which would be the most useful to our native subjects.”

நம்முடைய சரித்திரம், பூகோளம், வைத்திய வான சாஸ்திரங்களைக் குறித்து அவர் எழுதியுள்ள கேவலமான அபிப்பிராயம் நமக்கு ஆத்திரத்தை உண்டுபண்ணும். ஆனால், ஓரளவுக்கு ஒப்புக்கொள்ள வேண்டியதே.

“The question before us is simply whether, when it is in our power to teach this (English) language, we shall teach languages in which, by universal confession, there are no books on any subject which deserve to be compared to our own; whether when we can teach European Science, we shall tech systems, which by universal confessin, whenever they differ from those of Europe, differ for the worse; and whether when we can patronise sound philosoply aud true history, we shall countenance at the public expense, medical doctrine: which would disgrace an Euglish farrier; Astronomy which would move laughter in. a girl at an English boarding school; History abounding with kings thirty feet high and reigns thousands of years long and Geography made up of seas of treacle and seas of butter.”

நம்முடைய புராதன சாஸ்திரங்களைப் பற்றி ஒரு “மிலேச்சன்” இவ்வாறு எழுதினால் நமக்கு ஆத்திரம் வருவது சகஜமே.

“It is confessed that a lauguage is barren of useful knowledge We are to teach it because it is full of monstrous superstitions. We are to teach false history false astronom, and false medicine, because we find them in company with a false religion. We abstain-and I trust shall always abstain, from giving any public encouragement to those who are engaged in the work of con- verting natives to Chnstianity. And while we act thus, can we reasonably and decently bribe men out of the revenues of the state. to waste their youth in learning how they are to purify the nselves after touching an ass or what test of the Vedas they are to repeat to expiate the crime of killng a goat.”

இங்கிலாந்திலுள்ள ஒரு லாடக்காரக் கொல்லன்கூட ஒப்புக்கொள்ள வெட்கும்படியான வைத்திய முறைகளும், இங்கிலீஷ் பெண் பாடசாலைகளில் படிக்கும் சிறுமியர்க்கும் சிரிப்பையுண்டாக்கும் விபரீதமான வான சாஸ்திரமும், முப்பதடி உயரமுள்ள அரசர்கள் அறுபதாயிரம் வருஷம் ஆண்ட வரலாறுகளைக் கொண்ட சரித்திரமும், பாற்கடலும், நெய்க்கடலும் கொண்ட பூகோள சாஸ்திரமும் கற்பித்தல் நாகரீக அரசாங்கத்தின் கடமையாகாதென்றும், ஒரு கழுதையைத் தொட்டுவிட்டால் எத்தனைதரம் குளிக்க வேண்டும், என்ன மந்திரம் சொல்லிச் சுத்தி செய்துகொள்ள வேண்டுமென்றும், ஒரு ஆட்டைக் கொன்ற பாவத்திற்குப் பிராயச்சித்தமாக எந்த வேதத்தை எத்தனை தரம் பாராயணம் செய்யவேண்டுமென்றும் தெரிந்துகொள்வதற்காக, சர்க்கார் வரிப்பணத்தில் கலாசாலைகள் நடத்துவது வாலிபர்களின் இளமையை வீணாக்குவதாகுமென்றும் “The Sanskrit system of education வௌல்து be the best calculated to keep the would country in darknees” “சமஸ்கிருதக் கல்வி தேசத்தை அந்தகாரத்தில் எப்போதும் ஆழ்த்தி வைக்கக்கூடியது” என்றும் முடிவுகட்டி இந்தியர்களிடை இங்கிலீஷ் பாஷையையும் மேற்கத்திய கலைகளையும் பரவச் செய்வதே சர்க்காரின் கடமையாகும் என்று ஸ்தாபிதம் செய்து தன் அபிப்பிராயத்தை கவர்னர் ஜனரல் ஒப்புக்கொள்ளாவிடில் கல்விக் கமிட்டிக்குத் தான் தலைமை வகிக்கவோ, அதன் வேலையில் கலந்துகொள்ளவோ முடியாதென்றும் உறுதியாகத் தெரிவித்துக்கொண்டார்.

2.2.1835ந் தேதியில் T.B.மகாலே எழுதிய கல்விமுறை சம்பந்தமான இந்த மினிட் (குறிப்பு) சீர்திருத்தத்தில் ஆர்வங்கொண்ட ஒவ்வொரு இந்தியனும் படிக்க வேண்டிய ஒன்றாகும்.

மகாலேயின் அபிப்பிராயம்

கவர்னர் ஜனரல் வில்லியம் பென்டிங் பிரபு, மகாலேயின் அபிப்பிராயத்தை அப்படியே ஒப்புக்கொண்டு, இங்கிலீஷை அரசாங்க பாஷையாகவும், இங்கிலீஷ் மூலம் மேற்கத்திய கலைகள் கற்பிக்கப்பட வேண்டுமென்றும் இங்கிலீஷ் கல்விக்கே, கவர்ன்மெண்டு மான்ய ம்செலவிடப்பட வேண்டுமென்றும் 7.3.1835ல் உத்திரவு செய்தார்.

இவ்விதம் அமுலுக்குக் கொண்டுவரப்பட்ட இங்கிலிஷ் கல்வி சென்ற நூறு வருஷங்களி ல் நாடெங்கும் பரவி, நம்முடைய சமய, சமூக பொருளாதார, அரசியல் முதலிய எல்லாத் துறைகளிலும் ஓர் மகத்தான புரட்சியை உண்டாக்கியிருக்கிறது.

மகாலே செய்த தவறு

இந்தியர்களில் உயர் ஜாதிக்காரர் சிலருக்கு இங்கிலீஷ் பாஷையையும் மேற்கத்திய கலைகளையும் கற்பித்து, இவர்களுடைய மனப்பான்மையை மாற்றி நாகரீகத் துறையில் முன்னேறச் செய்துவிட்டால், இவர்கள் மூலம் மேல்நாட்டுக் கலைகளும், நாகரீகமும் பாமர ஜனங்களுக்கும் பரவிவிடும் என்று மகாலே எதிர்பார்த்தார். ஆகையால், அப்போது தேச பாஷைகளின் மூலம் கல்வி கற்பிக்க வேண்டிய அவசியத்தையும், பாமர ஜனங்களுக்கு நேரடியாகக் கல்வி கற்பிக்க வேண்டிய ஏற்பாட்டையும் சர்க்கார் கவனிக்கவில்லை. இதன் பலனாக, சர்க்கார் ஆதரவு பெற்ற கலா சாலைகளில், தேசபாஷைகளுக்கு இடமிருக்கவில்லை. இங்கிலீஷ் பாஷைக்கு அளவுகடந்த மதிப்பும் கவனமும் கொடுக்கப்பட்டது. இந்தக் கலா சாலைகளில் படித்த இந்தியர்கள் இங்கிலீஷின் மேலுள்ள மோகத்தில் தங்கள் தாய்பாஷைகளைப் புறக்கணித்தனர். இங்கிலீஷ் பட்டதாரிகள் தங்கள் தாய்பாஷைகளில் பேச எழுதக்கூட மறந்தனர். மகாலே எதிர்பார்த்தபடி இவர்கள், மேல்நாட்டு நாகரீகத்தையும், முன்னேற்ற மனப்பான்மையையும் பெற்றனர். ஆயினும், தாங்கள் பெற்ற அறிவைச் சாமான்ய ஜனங்களுக்குப் பிரயோஜனப்படுத்தவோ, சாமான்ய ஜனங்களிடை பரப்பவோ சக்தியற்றவராயினர். இங்கிலீஷ் தெரியாத பாமர மக்களுக்கும் இங்கிலீஷ் படித்த கூட்டத்திற்கும் இடையில் மிகுந்த வித்தியாசம் ஏற்பட்டது. இரு கூட்டங்களும் கலந்துகொள்ள முடியாதபடி, இவர்களுடைய வாழ்க்கை முறையும் நடையுடை பாவனைகளும் பெருந்தடைகளாகவிருந்தன. படித்த கூட்டம், பாமர மக்களினின்றும் பிரிந்து, தனிப்பட்ட கூட்டமாக வாழ்ந்தது. சாமான்ய ஜனங்களின் அறியாமையும் அந்தகாரமும் என்றும்போல் இருந்துவந்தன.

தேசபாஷைகளும் பொதுஜனக் கல்வியும்

ஒரு சிலர் மட்டும் உயர்ந்த கல்வி பெறுவதனால் தேசத்திற்கு யாதொரு நன்மையும் உண்டாவதில்லையென்பதைச் சர்க்கார் வெகு சீக்கிரத்தில் கண்டனர். தேச மக்களில் பெரும்பாலார் இங்கிலீஷ் பாஷை கற்றுக் கலாஞானம் பெறுவது முடியாதென்றும் அறிந்தனர். பாமர ஜனங்களின் அறியாமையைத் தேசபாஷைகளின் மூலம் கல்வி கற்பிப்பதால்தான் போக்க முடியும் என்பதையும் தெரிந்தனர். தேச மக்களுக்கு அவர்களுடைய தாய்மொழிகளின் மூலம் ஓரளவு கல்வி கற்பிக்க வேண்டியது சர்க்காரின் கடமை என்பதையும் உணர்ந்தனர். இதன் பலனாக 1854ம் வருஷம் முதல், தாய்மொழிகளின் மூலம் பொதுஜனங்களுக்கு ஆரம்பக் கல்வியும் நடுத்தரக் கல்வியும் கற்பிக்கப்பட வேண்டும் என்ற கொள்கை ஒப்புக்கொள்ளப்பட்டது. இதற்கப்புறமே, எல்லாச் சமூகங்களிடையும் கல்வி பரவத் தொடங்கியது.

இங்கிலீஷ் படிப்பின் விளைவு

ஆங்கில ஆட்சியில், தேச மக்களின் கல்வி விஷயமாய், அரசாங்கத்தின் கொள்கை ஆரம்பத்தில் எவ்வாறு இருந்தது, பின் எவ்வாறு மாறிற்று என்பதையும் மேலே சுருக்கமாகச் சொன்னோம். இக்கொள்கையின் பலனாய் ஏற்பட்டிருக்கும் மாறுதல்களையும் சிறிது கவனிப்போம்.

பேச்சு வழக்கில் இல்லாத சமஸ்கிருதம், பிற நாட்டிலிருந்து வந்த அரபி பாஷைகளை ஒழித்து, இங்கிலீஷ் பாஷை மூலம் கற்பித்ததனால், உயர்தரப் படிப்பு இந்நாட்டில் உள்ள மக்களில் எல்லா சமூகத்தவர்களிலும் சிற்சிலருக்குப்யன்பட முடிந்தது. இந்து சாஸ்திரப்படி சமஸ்கிருதம் படிக்கி ஜாதி, படிக்கக்கூடாத ஜாதி, கற்பிக்கிற ஜாதி, கற்பிக்க யோக்கியதையில்லாத ஜாதி என்று இருந்துவந்த கட்டுப்பாடுகள் ஒழிந்தன. முன்கேட்டு அறியாத சுதந்தரம், சகோதரத்துவம் என்கிற உணர்ச்சிகள், பாமர மக்களிடை பரவ முடிந்தது. மேல் நாடுகளிலிருப்பது போன்ற தேசீய உணர்ச்சியும் தேச அபிமானமும் ஓரளவுக்கு உருக்கொள்ள முடிந்தது.

இங்கிலீஷும் தேச பாஷைகளும்

நம்நாட்டில் பேசப்படும் பாஷைகள்எல்லாம் இங்கிலீஷ் பாஷையின் சம்பந்தத்தால் அதிகவிருத்தியடைந்தன. சமஸ்கிருதம் அரபி பாஷைகளின் சம்பந்தத்தால் அடைந்ததைவிட அதிகமான பிரயோஜனத்தைத் தேசபாஷைகள் இங்கிலீஷ் சம்பந்தத்தால் அடைந்துள்ளன என்பது மிகையாகாது. தேச பாஷைகளின் சொற்றொகுதி (Vocobulary) பெரிதும் விரிவடைந்திருப்பது ஒன்று, சிறப்பாக அரசியல், விஞ்ஞானம், வியாபாரம், கைத்தொழில் துறைகளில்தான் இங்கிலீஷ் பாஷையின் கூட்டுறவால் விளைந்த பயன் நன்குதெரியும். உதாரணமாக, தேசபாஷைகளில் பிரசுரிக்கப்படும் எந்த ஒரு தினசரிப் பத்திரிக்கையை எடுத்துக்கொண்டாலும் இங்கிலீஷிலிருந்து நாம் எடுத்தாளும் வார்த்தைகள் எவ்வளவென்பதும், அவ்வார்த்தைகள் குறிக்கும்க ருத்துக்களை மொழிபெயர்ப்பு வார்த்தைகளால் தெரிவிப்பது எவ்வளவு கஷ்டமானது என்பதும் காணலாம். உதாரணத்திற்குச் சில பதங்களை (தினமும் வழக்கத்தில் உள்ளவற்றை) கீழே தருகிறோம்.

அரசியற்சொற்கள் – காங்கிரஸ்; வொர்க்கிங் கமிட்டி; பார்லிமெண்டரி கமிட்டி; சேர்மென்; டெபுடி; பிரசிடண்டு; அசௌம்பிளி; கௌன்சில்; வோட்; போல்; ஆர்டர்; கமிஷன்; ஜஸ்டிஸ்; etc.

கலைச் சொற்கள்: ரேடியோ; புரோகிராம்; டெலிபோன், ப்ராட்காஸ்ட்; செட்; ரிகார்டு etc.

வியாபாரச் சொற்கள்: ஹார்பர்; ஸ்டீமர்; மார்க்கட் பீஸ் (ஜவுளி) ஆவரேஜ்; சிமிட்டி; பேல்; லாட்; ஸ்பெஷல்; கண்டிராக்ட் etc.

கைத்தொழில் சம்மத்தமானவைகள்: லேபர்; யூனியன்; போனஸ்; சிம்னி; இன்ஜின்; பவர்; மானேஜர்; டிரைவர் etc.

மேற்கண்ட சொற்களில் சிலவற்றிற்குத் தேசபாஷைகளில் சொற்கள் தேடிப் பிடிக்கக்கூடுமென்றாலும், இங்கிலீஷ் சொற்கள் தெரிவிக்கும் உணர்ச்சிகளை, மொழிபெயர்ப்பு வார்த்தைகள் உண்டாக்குவது சாத்தியமில்லை, மேற்படி சொற்களைப் போன்ற நூற்றுக்கணக்கான சொற்களைத் தினந்தோறும் தேசபாஷைப் பத்திரிக்கைகள் உபபோகித்துவருகின்றன.

பாஷை நடையில் மாறுதல்

சொற்பெருக்கம் மட்டும் அன்றிப் பாஷை நடையிலும் இலக்கிய அமைப்பிலும் தேசபாஷைகள், இங்கிலீஷின் சம்மந்தத்தால் பெரிய மாறுதல்களையடைந்து வருகின்றன. உதாரணமாகத் தமிழில் 100 வருஷங்களுக்கு முன், வசனநடையில் நூல்களே இருக்கவில்லை. ஒன்றிரண்டு இருந்தாலும், அவைகள் செய்யுள் நூல்களின் உரைநூல்களாகவும் வியாக்கியானங்களாகவும் இருந்தன. இவைகளும், படிப்போர் பல்லை உடைக்கும் கடின நடையில் எழுதப்பட்டிருந்தன. அரும்பெருங் கருத்துக்களைச் செய்யுளிற் போலவே, வசனத்திலும் அமைத்து இலக்கியங்கள் எழுதலாம் என்று தேச பாஷைப் பண்டிதர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. வசன நூல்களின் மூலம்தான், பாமர ஜனங்கள் அறிவுபெறமுடியும் என்பதையும் சமீபகால் ம்வரை ஒப்புக்கொள்ளவில்லை. வழக்கத்தில் இல்லாத வார்த்தைகளைக் கொண்டு கருத்துக்களை எவ்வளவுக்கெவ்வளவு மறைத்து எழுத முடியுமோ, அவ்வளவுக்கவ்வளவு நூலின் மதிப்பு உயர்வதாகப் பண்டிதர்கள் எண்ணினர். இந்தக் கொள்கை மாறி, வெள்ளைச் சொற்களால் எல்லாருக்கும் எளிதில் விளங்கும்படி எழுதுவதுதான் சிறந்தநடையென்று ஒப்புக்கொள்ளப்பட்டதும், இங்லீஷ் பாஷையின் இலக்கியப்போக்கையும், நடையையும் பின்பற்றியேயாகும்.

இலக்கியப் பொருளிலும் மாறுதல்

நமது தேசபாஷைகளில் உள்ள இலக்கியங்களின் பொருளும், சமீபகாலம் வரை மதம், கடவுள், பக்தி, முதலிய ஒன்றிரண்டு துறைகளிலேயே சுழன்று தேங்கிக் கிடந்தது. கீழ்நாட்டு இலக்கியங்களில் 100க்கு 99, மத சம்மந்தமானவைகளாகவேயிருந்தன. இயற்கைப் பொருள்களைப் பற்றியும், ஜனசமூக வாழ்க்கைக் காட்சிகளை உள்ளபடி சித்தரித்தலையும், விஞ்ஞான சம்மந்தமான ஆராய்ச்சிகளையும், பல்வேறு கலைகளின் வளர்ச்சியைப் பற்றியும் இலக்கியங்கள் எழுதப்பட ஆரம்பித்திருப்பதும் இங்கிலீஷ் இலக்கியங்களைப் பின்பற்றியேயாம்.

மேற்கூறிய மூன்று வகைகளிலும் தேச பாஷைகள், கூட்டுறவால் நன்மையடைந்திருப்பதாகச் சொல்லலாம்.

இங்கிலீஷே இரண்டாவது பாஷை

நம்முடைய உள்ளக் கருத்தைப் பிறருக்குத் தெரிவிப்பதற்கும், பிறர் கருத்துக்களை நாம் அறிந்துகொள்வதற்கும் பாஷை உதவுகிறது. நம்முடைய மனத்தில் எழும் உணர்ச்சிகளைத் தங்குதடையின்றித் தாராளமாய் வெளியிடுவதற்கு நாம் பிறந்தது முதல் பேசிவரும் தாய்பாஷையே ஏற்றதாகும். ஆகையால் இலக்கியப் பயிற்சிக்கும் கவிதையின்பத்திற்கும் ஒருவரது தாய்மொழியே சிறந்த சாதனமாகும். ஆனால், வேறு பாஷை ஜனங்களுடன் கூட்டுறவு கொண்டு ராஜீய வியாபார சம்பந்தப்பட்ட உலக விவகாரங்களில் ஈடுபடுவதற்கு, நம்முடைய தாய்மொழி பயன்படுவதில்லை. இரண்டாவது பாஷையைக் கற்க வேண்டிவருகிறது. இந்த இரண்டாவது பாஷையானது, உலகில் உள்ள பெரும்பாலானவர்களுக்குப் பொதுவானதும் நாகரீக வளர்ச்சிக்குத் துணையாக இருப்பதும், இலக்கியச் சிறப்பு வாய்ந்ததும் ஆக இருத்தல் அவசியம். இந்த வகையில் பார்க்கும்போது நம் நாட்டின் தற்கால நிலைமைக்கும், உலக நிலைமைக்கும் பொருத்தமான பொதுப் பாஷை இங்கிலீஷேயாகும். இங்கிலீஷையே நாம் இரண்டாவது பாஷையாகக் கற்பது பயன்தரும்.

இங்கிலீஷுக்கு மதிப்புக் குறையவில்லை

தேசீய இயக்கத்தில் தீவிரமாய் ஈடுபட்டுள்ள சிலருக்கு, இங்கிலீஷ் பாஷையிடத்தில் உள்ள வெறுப்பு நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. இங்கிலீஷ்காரபிடத்தில் உள்ள துவேஷமும், சுதேச பாஷையிடத்துள்ள பிரேமையும், இங்கிலீஷ் பாஷையின் சிறப்பையும், அதனால் ஏற்பட்ட நன்மைகளையும் மறைத்துவிடுகின்றன. ஆயினும் ஹிந்திப் பைத்தியம் பிடித்த தேசபக்தர்கள்கூடத் தங்கள் மக்களுக்கு இங்கிலீஷ் கல்வி கற்பிக்காமல் நிறுத்திவிடவில்லை. காலேஜ்களிலும், உயர்தர பாடசாலைகளிலும் இடத்திற்கு மும்முரமான போட்டி இருந்துவருகிறது. இங்கிலீஷ் கல்வி கற்று அதன்மூலம் பெருமையடைந்த ஒரு கூட்டம், தங்கள் பிள்ளைகுட்டிகளுக்கு வீட்டில் பேசுவதுகூட இங்கிலீஷில் பழக்கி, இங்கிலீஷ் பாடசாலைகளுக் குஅனுப்பிக்கொண்டு, மேடைகளில் வந்து, ஹிந்தியை எல்லாரும் கற்றுக்கொள்ளுங்கள் என்று பிரசாரம் செய்வதென்றால், அது ஏமாற்றுப் பிரசாரம் அல்லவா என்று கேட்கின்றோம். இவர்கள் பேச்சை நம்பி இங்கிலீஷை வெறுத்துக் கற்காமல் விடுவது முட்டாள்தனம் அல்லவா என்றும் கேட்கின்றோம்.

ஆயினும் சாமான்ய ஜனங்கள் இவர்கள் பேச்சை ஏற்றுக்கொள்ளவில்லை. இளவயதில் இங்கிலீஷ் கற்கும் பாக்கியம் பெறாதவர்கள், வயதுவந்து ஏதோவொரு தொழிலை நடத்திவருகிற போதுகூடச் சிறிதாவது இங்கிலீஷ் எப்படியாவது படித்துக்கொள்ள வேண்டும் என்று பெரு முயற்சி செய்கிறார்கள். சாமான்ய ஜனங்களிடத்தில் வளர்ந்துள்ள இந்த இங்கிலீஷ் பாஷா விருப்பத்தை அறிந்து, புஸ்தக வியாபாரிகள் ‘ஆங்கில போதினி’யென்றும் ‘ஆங்கில ஆசான்’ என்றும் ‘இங்கிலீஷ் ஸ்வயபோதினி’ என்றும் தமிழ் மூலம் இங்கிலீஷ் கற்பிக்கும் புஸ்தகங்களை வெளியிட்டு, இரண்டு ரூபாய், மூன்று ரூபாய் விலைபோட்டுப் பதினாயிரக்கணக்கான பிரதிகளை வருஷா வருஷம் விற்றுவருகிறார்கள். இதிலிருந்து, இங்கிலீஷ் பாஷைக்குள்ள மதிப்பு அதன் பிரயோஜனத்திற்குத் தகுந்தபடி வளர்ந்துவருகிறது தெரியக்கூடும்.

உலக இலக்கியங்களின் பொக்கிஷம்

கவி ரவீந்தரநாத் தாகூர் வங்காளியில் பல சிறந்த நூல்களை எழுதியிருக்கிறார். ஆனால், அவரை உலகம் மதிக்கச் செய்தது, அவருடைய நூல்களின் இங்கிலீஷ் மொழிபெயர்ப்புக்களே. தாகூரின் கவித் திறமையை நாம் (தமிழர்) அறிந்ததும், அவர் நூல்களின் இங்கிலீஷ் மொழிபெயர்ப்புகளின் மூலமேயாகும். ஆனால், தாகூரின் சொந்த மொழிகளைப் படித்து இன்புற வேண்டுபவர்கள் வங்காளி பாஷையைப் படிக்கட்டும். அதுபோல, துளசிதாஸர் இராமாயணத்தை கிரந்தகர்த்தாவின் சொந்த வார்த்தைகளில் படித்து இன்பம் பெற விரும்புபவர்கள் ஹிந்தி கற்றுக்கொள்ளட்டும். உமாரின் ரூபாயத்தைப் பாரஸீக பாஷையில் படிக்க விரும்புபவர், பாரசீக பாஷைகற்கட்டும்; கத்தேயின் ‘பாஸ்ட்’ (Goethe’s Faust) என்னும் உலகிற் சிறந்த காவியத்தை ஜர்மன் பாஷையில் படிக்க விரும்புபவர் ஜர்மன் பாஷை கற்றுக்கொள்ளட்டும்; ஹோமரின் இலியத்தை கிரேக்க பாஷை கற்றுப் படிப்பவர் படிக்கட்டும்; ஆனால் உலகின் பல பாஷைகளில் உள்ள சிறந்த இலக்கியங்களை, அவ்வப் பாஷைகளைக் கற்றுப் படிப்பது எந்த ஒரு தனிநபருக்கும் சாத்தியமான காரியம் அல்ல. உலக இலக்கியங்களில் பொறுக்குமணிகள் போன்றுள்ள சிலவற்றைக்கூட, நம் நாட்டு பாஷைகளில் மொழிபெயர்த்துவிடுவதும் உடனே கைகூடும் காரியமல்ல. ஆனால், ஒருவன் இங்கிலீஷ் பாஷை ஒன்றைக் கற்றுக்கொள்வதன் மூலம், உலக இலக்கியப் பொக்கிஷத்திற்குத் திறவுகோலைப் பெற்றுவிடுகிறான். உலகத்தின் சிறந்த நூல்கள் எல்லாவற்றையும் வாசிக்க வசதியடைந்துவிடுகிறான்.

ஹிந்திக்கு ஆட்சேபணை

இந்தியாவில் சுமார் 9 கோடி மக்களுக்கு ஹிந்தி தாய்பாஷையாக இருப்பதுஉண்மை. ஆனால் மீதி 26 கோடி மக்களும் ஹிந்தியைக் கற்றுக்கொள்வதென்பது என்றும் முடியாத காரியம். எங்கும், சமூகத்தின் ஒரு சிலர்தான் தாய்பாஷையுடன் இரண்டாவது பாஷை கற்க முடியும். இப்போது இந்தியா முழுவதிலும் இங்லீஷ் பாஷை பொதுப் பாஷையாக இருந்துவருகிறது. ஹிந்தி பேசப்படும், ஐக்கிய மாகாணம், பீகார் மாகாணங்களிலும் இங்கிலீஷ்தான் பொதுப் பாஷையாகவிருக்கிறது. இங்கிலீஷ், இந்தியர்கள் ஒருவருக்கும் தாய்பாஷையாக இல்லாத காரணத்தால், இங்கிலீஷ் கற்பதில் எந்த ஒரு சமூகத்திற்கோ, ஒரு மாகாணத்திற்கோ விசேஷ சௌகரியம் அல்லது சலுகையிருக்க இடமில்லை. இங்கிலீஷ் கற்பதில் உள்ள சௌகரியமும், கஷ்டமும், எல்லா சமூகங்களுக்கும், எல்லா மாகாணங்களுக்கும் ஒரே தன்மையில் இருப்பதால், யாருக்கும் ஆட்சேபிக்க இடமில்லை. ஆனால் ஹிந்தியைப் பொதுபாஷையாக ஏற்படுத்துவதில், ஹிந்தி வழங்கும் மாகாணவாசிகளுக்கும், ஹிந்தியைத் தாய்பாஷையாகவுள்ள சமூகங்களுக்கும், விசேஷ சௌகரியங்களும், சலுகைகளும் ஏற்பட்டுவிடும். இதுபற்றி மற்ற மாகாணவாசிகளும், மற்ற சமூகங்களும் பொறாமைப்படுவதும் நியாயமாகும். ஹிந்தியைத் தாய்மொழியாகக் கொள்ளாதவர்களுக்கு, இங்கிலீஷைவிட அந்நியமான பாஷையாகவே இருக்கிறது. ஆனையால், ஹிந்தி பேசாத ஜனங்கள் ஹிந்தியைப் பொதுப் பாஷையாக்க உடன்பட மாட்டார்கள். மற்ற பாஷைகள் சம்மதிக்கா. 

ஹிந்தியும் மகம்மதியரும்

பேச்சு வடிவத்தில், ஹிந்திக்கும், இந்துஸ்தானிக்கும் ஓரளவு ஒற்றுமை இருப்பதிலிருந்து, மகம்மதியர் ஹிந்தியை ஒப்புக்கொள்வார்கள் என்று எதிர்பார்ப்பது தப்பு. அரபி, பாரஸீகச் சொற்கள் மிகுதியும் கலந்த இந்துஸ்தானியைப் பேசும் மகம்மதியர் சமஸ்கிருதச் சொற்கள் மலிந்த ஹிந்தியைப் பேச்சுவழக்கிற்கூடத் தங்கள் மொழியாக ஒப்புக்கொள்வதில்லை. வரி வடிவத்தில், ஹிந்தியின் தேவநாகரி லிபியை, மகம்மதியர், என்றும் ஒப்புக்கொள்ளப் போவதில்லை. இந்துஸ்தானியும் சிறிது ஹிந்தியும் கலந்த கிராமிய பாஷையாக வட இந்தியர்களில் பெரும்பாலார் பேசிவரும் ஹிந்தி- இந்துஸ்தானி பாஷைக்கு தேவநாகரி லிபியும், இந்துஸ்தானி லிபியும் இல்லாமல், ரோமன் லிபியை (இங்கிலீஷ் எழுத்து) ஏற்படுத்தினால், ஒருவேளை வட இந்தியாவுக்கு, ஹிந்தியும் இந்துஸ்தானியும் கலந்த இந்த கிராமிய பாஷை பொதுமொழியாகக்கூடும். இந்த நிலைமையில், திராவிட தேசத்தவர்கள், சமஸ்கிருதச் சார்பில் முளைத்த, தேவநாகரி லிபியில் வரையப்படும் இலக்கிய ஹிந்தியைப் பொதுப்பாஷையாக ஏற்றுக்கொள்வது எப்படி முடியும்?

கால நிலை

விஞ்ஞான வளர்ச்சியின் பயனாக, உலகம் நாளுக்குநாள் சிறியதாகி வருகிறது. காலம், தூரம் ஆகிய இரண்டு தடைகளும் தகர்க்கப்பட்டுவருகின்றன. உலகின் பற்பல நாடுகளும் விரைவில் இணைக்கப்படுகின்றன. பரந்த கடல்களையும், உயர்ந்த மலைகளையும், தாண்டி, மனிதன் குரல் உலகின் ஒரு கோடியிலிருந்து மற்ற கோடிக்குக் கேட்கிறது. ரேடியோ, கிராமபோன், டாக்கி, டெலிவிஷன் முதலிய சாதனங்கள், எழுத்துப் படிப்பின் அவசியத்தைக் குறைத்து எல்லா விஷயங்களையும் கேட்டுத் தெரிந்துகொள்ளும்படி, செய்துவிட்டன. மேற்கண்ட நவீன சாதனங்களின் முழுப் பிரயோஜனத்தையும் நாம் அடைய வேண்டுமானால், நாகரீக உலகத்தில் செல்வாக்குப் பெற்றுள்ள இங்கிலீஷ் பாஷையை நாம் அறிந்துகொண்டால்தான் பயன் உண்டு.

நியூயார்க்கிலிருந்து டெலிபோனில் பேசுவதையும், லண்டனிலிருந்து ரேடியோவில் சொல்வதையும், பாரிஸிலிருந்து பிராட்காஸ்ட் செய்வதையும், இங்கிலீஷும் ஹிந்தியும் தெரிந்தது விபாஷிகளைக் கொண்டு முதலில் ஹிந்தியில் மொழிபெயர்த்துப் பின் நம் தாய்பாஷைகளில் மொழிபெயர்த்துத் தெரிந்துகொள்ள வேண்டிய நிலைமை விரும்பத்தக்கதாவென்பதைத் தமிழர்கள் யோசிக்க வேண்டும். இங்கிலீஷையைப் புறக்கணித்து, ஹிந்தியைப் பொது மொழியாக நாம் ஒப்புக்கொள்வோமானால், நாகரீக உலகத்துடன் நேரடியாகச் சம்பந்தம் வைத்துக்கொள்வது சாத்தியமில்லாமற் போகும். ஹிந்தி மூலமாகவே வெளியுலகச் சம்பந்தம் வைத்துக்கொள்ள முடியுமா என்பதையும் யோசித்தறியும்படி கேட்கிறோம்.

உலகப் போக்கு

சுமார் 3,000 பாஷைகள் வழங்குகிற உலகம் முழுவதற்கும் ஒரு பொதுப் பாஷையை ஏற்படுத்த வேண்டுமென்று, நாகரீம் பெற்ற ஜனங்கள் பலரும் முயற்சித்து வருகிறார்கள். ‘எஸ்பிராண்டோ’ (Esperanto) என்ற ஒரு பாஷை உலகப் பொதுப் பாஷையாக தற்காலம் இருந்துவருகிறது. ஆனால், இப்பாஷை பெருவாரியான மக்களால் பயிலப்படுவதில்லை. இதற்குப் பதில், செல்வாக்குள்ள மேல்நாட்டுப் பாஷைகளில் ஒன்றே உலகப் பொதுப் பாஷையாக ஏற்படும் என்று அறிவாளிகள் அபிப்பிராயப்படுகின்றனர். இங்கிலீஷ், பிரஞ்சு அல்லது ருஷியன் ஆகிய மூன்றில் ஒரு பாஷை, உலகப் பொதுப் பாஷையாகக்கூடும் என்று எச்.ஜி.வெல்ஸ் (Wells) சொல்லுகிறார். உலகத்தில் மொத்தம் சுமார் 180 கோடி ஜனங்கள் இருக்கின்றனர். இவர்களில் 18 கோடிப் பெயர் இங்கிலீஷும், 10 கோடி பெயர் ருஷிய பாஷையும், 7 கோடி பெயர் பிரஞ்சு பாஷையும் பேசுவதாகக் கணக்கு. தற்காலம் ஐரோப்பாவில் சர்வதேசக் கூட்ட நடவடிக்கைகள் பெரும்பாலும் பிரஞ்சு பாஷையிலும், சிறுபாகம் இங்கிலீஷ் பாஷையிலும் நடைபெறுகின்றன.

நாம் ஹிந்தியைப் பொதுப் பாஷையாக்கத் தீர்மானிப்பதற்குள்ளாகவே, உலகம் இங்கிலீஷைப் பொதுப் பாஷையாக ஒப்புக்கொண்டுவிடும். உலகம் உள்ள இந்த நிலையில், ஹிந்தியைப் பொதுப் பாஷையாக ஆக்க வேண்டுமென்று கருதி, உலகத்தில் ஒப்பற்ற செல்வாக்குப் படைத்திருக்கும் இங்கிலீஷ் பாஷையைப் புறக்கணிப்பது, நமக்குச் சிறிதும் நன்மையுண்டாக்காது.

ஹிந்தியைப் பொதுப் பாஷையாக்குவதால்,

  1. நம் தாய்மொழிகளின் வளர்ச்சியும் ஆக்கமும் குறையும். 
  2. நாகரீக வளர்ச்சியும், முற்போக்குணர்ச்சியும் தடைப்படும். 
  3. நாகரீக உலகத்துடன் நேர்முகமாக நமக்குள்ள தொடர்பு நீங்கிவிடும்.
  4. பிற்போக்குணர்ச்சியும் பௌராணிக மனப்பான்மையும் ஊக்கம் பெறும்.
  5. விஞ்ஞானக் கலைகளின் வளர்ச்சியும், நவீன சாதனங்கங்களால் அடையக்கூடிய நன்மைகளும் குறையும்.
  6. பாமர மக்கள் மனத்தில் முளைத்துள்ள சமூக, சுதந்தர, சுயமரியாதையுணர்ச்சிகள் பரவிவளர்வது கஷ்டமாகிவிடும். 
  7. இங்கிலீஷ் பாஷையுடன் தோன்றி வளர்ந்துள்ள அரசியல் கொள்கைகளும், ஜனநாயக உணர்ச்சியும், ஸ்தாபனங்களும் ஒழிந்து, பழமை விலங்குகளை மக்கள் பூட்டிக்கொள்ளச் சாதகமாகும்.

தீவிர தேசீயவாதிகள் கனவு காண்பதுபோல, இங்கிலீஷ் ஆட்சியும், இங்கிலீஷ் சம்பந்தமும் நாளைய தினமே ஒழிந்துவிடப் போவதில்லை. அப்படி ஒழிந்த காலத்திலும்கூட, சுதந்தரம் பெற்ற இந்தியா, நாகரீக உலகத்தின் சம்பந்தத்தை அறுத்துவிட்டுத் தனித்து வாழ முடியாது. சுதந்தரம் பெற்ற பின்னும் இங்கிலீஷே, நமக்கு மிகுதியும் பயன்தரும் பொதுப் பாஷையாகும். எனவே, இப்போது ஒருசிலர் செய்துவரும் ஹிந்திப் பிரசாரத்திற்குத் தமிழர் எவரும், செவி சாய்க்கலாகாது; எவ்வித உதவியும் செய்யக் கூடாது. அவ்வாறு செய்வது தமிழர் முன்னேற்றத்திற்குத் தடைசெய்வதாகும்.

“இந்தியாவின் பல பாகங்களிலும், உயர்ந்த விஞ்ஞானக் கலையாராய்ச்சிக்குப் பொது மொழியாக ஆங்கில மொழி அமைதலும், ஒவ்வொரு மாகாணத்திலும் ஏழை மக்கள் எளிதிற் பயின்றுகொள்ள வேண்டிய கலைத் துறைகள் அனைத்தும் நாட்டுமொழிகளில் அமைந்து நிற்பதும் பொருத்தமாகும்.” (20.9.36இல் கலைச்சொல் ஆக்க மகாநாட்டுத் தலைவர் சாமி விபுலானந்தர்)   

‘பகுத்தறிவு’ மாத ஏடு, நவம்பர் 1936, குடி அரசுப் பதிப்பகம், ஈரோடு.

எஸ்.வி.ராஜதுரையின் குறிப்பு 

இந்தக் கட்டுரையை எழுதியவர் யாரென்று தெரியவில்லை. சுயமரியாதை இயக்க ஏடுகளில் வெளிவந்த கட்டுரைகளில் கணிசமானவை அவற்றை எழுதியவர்களின் பெயர்கள் குறிப்பிடப்படாமலேயே வெளியிடப்பட்டன. அதற்கு முதன்மையான காரணம், அந்த இயக்கம் கருத்துகளுக்குத்தான் மதிப்புக் கொடுத்துவந்ததே அன்றி தனிப்பட்ட மனிதர்களுக்கல்ல. இரண்டாவது காரணம், அன்று அந்த இயக்கம் எதிர்கொண்டிருந்த கடினமான சூழலில், சில கட்டுரைகளை எழுதியவவர்களில் பெயர்களை வெளியிடுவது அவர்களுக்குப் பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தக்கூடும் என்று அவ்வியக்கத்திற்குத் தலைமை தாங்கி நடத்திவந்த பெரியார் மற்றும் பல முன்னணிச் செயல்பாட்டாளர்கள் கருதியிருக்கக்கூடும். ‘குத்தூசி’ குருசாமி எழுதிய பல கட்டுரைகள், தலையங்கங்களைக்கூட அவரது எழுத்துநடையைக் கொண்டே அடையாளப்படுத்த முடிகிறது.

‘குடி அரசு’ போன்ற சுயமரியாதை ஏடுகளில் வெளிவந்த தலையங்கங்கள் எல்லாவற்றையும் பெரியாரே எழுதினார் என்பதற்கான எழுத்துபூர்வமான சான்றுகளோ வேறு வகையில் அனுமானித்துக்கொள்வதற்கான சாத்தியப்பாடுகளோ இல்லை. சில முக்கிய தலையங்கங்கள் பெரியாரின் கையெழுத்துடனேயே வெளிவந்துள்ளன. அவற்றின் முக்கியத்துவம் கருதியும், சில கருத்துகளைத் தானே அழுத்திக் கூறுவதற்கும் அவர் தன் கையெழுத்தைப் பயன்படுத்தியிருக்கக்கூடும். இது ஆழமான ஆராய்ச்சிகுரியது. எனினும் ‘ஹிந்தியா? இங்கிலீஷா?’ என்ற கட்டுரை அறிவாழம் மிக்கவரும் உலக இலக்கியங்களை நன்கு அறிந்தவருமான ஒருவரால்தான் எழுதப்பட்டிருக்க முடியும் என்பதை அதைப் படிப்பவர் உணர்ந்துகொள்வர். 

இந்தக் கட்டுரையின் முடிவில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் கலைச்சொற்கள் ஆக்கக் குழுவின் தலைவராக் இருந்த இலங்கைத் தமிழ்ப் பேரறிஞர் விபுலாநந்த அடிகளாரின் கூற்றொன்று இரட்டை மேற்கோள் குறிகளில் தரப்பட்டுள்ளது. அதை சரியாகக் கவனிக்காததாலோ, அக்கட்டுரை அவரது பரந்து விரிந்த அறிவைப் பிரதிபலிப்பதாலோ அதனை எழுதியவர் அவர்தான் என்ற ஊகத்திற்கு என்னையும் இட்டுச் சென்றது. எனினும் இக்கட்டுரையை எழுதியவரின் பெயர் நமக்குத் தெரியாமல் போனது ஓர் அவப்பேறு.

அக்கட்டுரையில் என்னென்ன வரிகளுக்கும் பெயர்களுக்கும் அழுத்தம் கொடுக்கப்பட்டிருந்தனவோ அவை உள்ளது உள்ளபடியே தக்கவைத்துக்கொள்ளப்பட்டுள்ளன. இதன் வெளியிடுவதற்கு ஏற்ற வகையில் தட்டச்சு செய்து சரிபார்த்துக் கொடுத்த தந்தை பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் கவுசல்யா, பரத் ஆகியோருக்கு என் நன்றி. 1937-39இல் கட்டாய இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டம் நடந்தபோது, சுயமரியாதை இயக்க ஏடுகளில் அந்த இயக்கத்தின் கொள்கைகளை முழுமையாக ஏற்றுக்கொண்டிராத பல்வேறு அறிஞர்கள் கட்டுரைகள் எழுதியுள்ளனர் அல்லது அவரது சொற்பொழிவுகள் வெளியிடப்பட்டன. அவர்களுடைய பெயர்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

‘தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட்’ என்று அழைக்கப்படுவரும் மாபெரும் அறிஞருமான ம.சிங்காரவேலர் எழுதிய கட்டுரைகள் கிட்டத்தட்ட அனைத்தும் அவர் பெயராலேயே வெளியிடப்பட்டன. ஓராண்டாண்டுக் காலத்திற்கும் மேலாக அவர் ‘குடி அரசு’ இதழில் தலையங்களும் எழுதியிருக்கிறார். எழுதியவர்களின் பெயர்கள் குறிப்பிடப்படாத கட்டுரைகளும் தலையங்கங்களும் ஏராளம். அவை உண்மையில் யாரால் எழுதப்பட்டவை   என்பதை மேற்கு நாட்டு வராலாற்றாசிரியர்கள், மொழியியல் வல்லுநர்கள் முதலியோர் பின்பற்றும் வழிமுறைகளைக் கொண்டு ஆராய்ந்தறிதல் என்று சாத்தியமோ?

Tags: