சாதி ஆணவமும் ஆணாதிக்க மனப்பான்மையும்!

எஸ்.வி.ராஜதுரை

ண்மைக்காலமாக  திமுக அரசாங்கத்திலுள்ள சில அமைச்சர்களும் முக்கிய நிர்வாகிகளும் பொதுவெளிகளில் பொறுப்பற்ற முறையிலும் பண்புக்குறைவாகவும் பேசிவந்ததையும் நடந்துகொண்டதையும் கருத்தில்கொண்டு அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள்,

அத்தகைய பேச்சுகளையும் நடத்தைகளையும் (உடல் மொழி) கண்டனம் செய்யும் வகையில் நேற்று (04.10.2022) அறிக்கை விடுத்திருப்பது வரவேற்கத்தக்கது.

தமிழகத்திலுள்ள ஊடகங்கள் மட்டுமல்லாது சங் பரிவாரமும் அவர்களது கூட்டாளிகளும் “எப்போ, எப்போ” என்று 24 மணி நேரமும் காத்திருப்பதற்குத் தோதாக, சில மாதங்களுக்கு முன்பு  அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தன்னிடம் மனு கொடுக்க வந்த ஓர் இளம்பெண்ணின் தலையில்  காகிதக் கட்டுகளைக் கொண்டு அடித்த காட்சி மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பப்பட்டது.

அந்தப் பெண்,  அமைச்சரின் உறவினர் என்றும், உரிமையோடும் செல்லமாகவும்தான் அவர் அந்தப் பெண்ணின் தலையைத் தட்டினார் என்றும் விளக்கம் சொல்லப்பட்டது.

தன் சொந்தபந்த உறவுகளைத் தனியாக வைத்துக்கொள்ளாமல், பொதுவெளியில் அப்படி வெளிப்படுத்தியது திமுகவின் எதிரிகளுக்கு சாதகமாயிற்று.

இதுபோன்ற புகார்கள் அவ்வப்போது கிளம்பிக்கொண்டுதான் இருந்தன. அதற்கும் சில மாதங்களுக்கு முன்பு  இன்னொரு திமுக பிரமுகரான ஆர்.எஸ்.பாரதி, உச்ச நீதிமன்ற நீதிபதியாக ஒரு தாழ்த்தப்பட்டவர் நியமிக்கப்பட்டது, திராவிட இயக்கம் இட்ட பிச்சை என்று கூறி வசமாக மாட்டிக்கொண்டு, அதற்காக மன்னிப்பும் கேட்டுக் கொண்டார்.

அண்மையில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தமிழக முதல்வர் தமிழகப் பெண்களுக்கென நடைமுறைப்படுத்திய முதல் நலத்திட்டத்தை மட்டுமல்லாமல் பேருந்தில் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யும் பெண்கள் அனைவரையும் இழிவுபடுத்தியுள்ளார்.

தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கிடைத்துள்ள சில உரிமைகள், சலுகைகள் ஆகியவற்றை பெரியார் இட்ட பிச்சை என்று கூறி தந்தை பெரியாரை மட்டுமல்லாது, ரெட்டைமலை சீனிவாசன் முதல் அண்ணல் அம்பேத்கர் வரையிலான தலைவர்கள், அவர்களுக்குப் பின்னால் அணி திரண்டு நின்ற ஒடுக்கப்பட்ட மக்கள் ஆகியோரையும் சேர்த்து இழிவுபடுத்தியுள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன்  வைகோ, கலைஞர் கருணாநிதியின் சாதியைக் குறிப்பிட்டு இழிவாகப் பேசியதையும் பிறகு கலைஞரிடமும்  பொதுமக்களிடமும் மன்னிப்புக் கேட்டதையும் நாம்  நினைவுகூர வேண்டும்.

வைகோவின் பேச்சு சாதிரீதியாக மட்டுமல்ல, பாலினரீதியாகவும் கலைஞரின் குடும்பத்தை இழிவுபடுத்தியதாக அமைந்திருந்தது.

எனினும், சாதியும் ஆணாதிக்கமும்  கழற்றி எறிய முடியாத இரண்டாம், மூன்றாம் தோலாக திராவிடக் கட்சித் தலைவர்கள் பலரிடம் இருந்து வருகிறது என்பதைத்தான் நீண்ட காலம், ‘தாய்க் கட்சி’யான திராவிடர் கழகத்திலிருந்தவரும் ‘பெரியார் பாசறையில்’ பயின்றவராகவும் தன்னைக் காட்டிக்கொள்பவருமான பொன்முடியின் பேச்சு காட்டுகிறது.

தந்தை பெரியார் சாதி ஒழிப்பில் எவ்வளவு தீவிரம் காட்டினாரோ அதற்குச் சற்றும் குறையாத வகையில் ஆணாதிக்கத்துக்கு எதிராகவும் பெண்களின் கெளரவத்துக்கு ஆதரவாகவும் பேசியும் எழுதியும் வந்தார் என்பதை பெரியார் பாசறையில் பயின்றதாகத் தம்பட்டம் அடித்துக்கொள்பவர்களுக்கு நினைவூட்ட விரும்புகிறோம்.

1937-39இல் சென்னை மாநிலத்திலிருந்த, தெரிவு செய்யப்பட்ட பள்ளிகளில் இந்தி கட்டாயப் பாடமாக்கப்பட்டதற்கு எதிராக நடந்த போராட்டங்களின் பகுதியாக அன்றைய முதலமைச்சர் சி.ராஜகோபாலாச்சாரியாரின் வீட்டுக்கு முன்னால் நாட்கணக்கில் தொடர் மறியல் போராட்டம் நடந்தது.

அந்த மறியல் போராட்டத்தின்போது  சி.ராஜகோபாலாச்சாரியார் வீட்டுப் பெண்களையும் பார்ப்பனப் பெண்களையும் போராட்டக்காரர்கள் சிலர் இழிவாகப் பேசுவதாக காங்கிரஸ் தரப்பில் பிரச்சாரம் செய்யப்பட்டது.

அது பொய் பிரச்சாரம்தான் என்றாலும் அதற்கு எதிர்வினையாக பெரியார் எழுதினார்:

“…பெண்டு பிள்ளைகளைப் பற்றிப் பேசுவது என்பது குற்றம்தான். கூடாததுதான். ஆச்சாரியார்(ரின்) பெண்டு பிள்ளைகளைப் பற்றி மாத்திரம் அல்ல. விவசாரத்தையும் குச்சுக்காரத் தொழிலையும் குடும்பத் தொழிலாய் கொண்டிருக்கும் பெண்டு பிள்ளைகளைப் பற்றிப் பேசினாலும் குற்றம் என்றுதான் சொல்லுகிறோம்.

அவர்கள் பெண்டு பிள்ளைகள் வேறு, அவர்களுக்கு வரும் அவமானம் இழிவு வேறு என்று நாம் கருதவில்லை, கருதுவதுமில்லை என உறுதிபடக் கூறுகிறோம். அப்படிப்பட்ட பேச்சு பேசியவனையும் கூப்பாடு போட்டவனையும் எப்படி தண்டிப்பதிலும் எவ்வித அடக்குமுறை கையாளுவதிலும் நமக்கு சிறிதும் ஆட்சேபமில்லை.

ஆனால் அப்படி இதுவரை யார் சொன்னார்கள், அது எங்கே பதிவு செய்யப்பட்டது. அது உண்மையானால் ஏன் அதற்கு தனிப்பட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதை வெளிப்படுத்த வேண்டாமா என்று கேட்கின்றோம். அதற்கு யார் பொறுப்பாளி என்று கண்டுபிடிக்க என்ன முயற்சி செய்யப்பட்டது என்று கேட்கின்றோம்” (குடி அரசு, 28.8.1938, தலையங்கம்).

ஆக,  உயர் கல்வித்துறை அமைச்சராக இருக்கும் தகுதியைத் தன் பேச்சின் மூலம் முற்றிலுமாக இழந்துவிட்டார் அமைச்சர் பொன்முடி என்றே கூற முடியும்.

இல்லாவிட்டால், 2006-2011ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சியின்போதே மிகவும் ஆணவத்துடன் நடந்துகொள்கிறவர் என்ற பெயரை ஈட்டியவர் பொன்முடி என்றும்,

பதவியைவிட மானமே பெரிதென நினைத்த திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தரொருவர்  பதவி விலகியதற்கு  அப்போது உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்த பொன்முடி அத்துணைவேந்தரிடம் ஆணவத்துடனும் மரியாதைக் குறைவுடனும் நடந்துகொண்டதுதான் காரணம் என்றும் சொல்லப்படுவது உறுதிசெய்யப்பட்டதாக ஆகிவிடும்.

அமைச்சர் பொன்முடியிடம்  மக்கள் குறைந்தபட்சமாக எதிர்பார்ப்பது, தனது பேச்சுக்கு அவர் தெரிவிக்கும் வருத்தம்தான். இல்லாவிட்டால்,  ஆட்சி அதிகாரத்திலிருந்தவர்கள் பயணம் செய்த ஹெலிகாப்டரைப் பார்த்துத் தரையில் விழுந்து  ‘நமஸ்கரித்தும்’, தவழ்ந்து தவழ்ந்து சென்று பெண்களின் காலைத் தொட்டுக் கும்பிட்டும் ’பெண்களுக்கு மரியாதை கொடுத்தவர்களாலும்’,

பெண்களை இழிவுபடுத்தும் மனுஸ்மிருதியைத் தூக்கிப் பிடிக்கும் சங்கிகளாலும் அவர்களது ஊடக நண்பர்களாலும் திமுக அரசாங்கம் தொடர்ந்து தாக்குதலுக்குள்ளாகி வரும். மிகச் சிக்கலான அரசியல் சூழலிலும் கடும் பொருளாதார நெருக்கடியிலும்கூட அது நடைமுறைப்படுத்தி வரும் நல்ல திட்டங்கள்கூட மக்களிடம் எடுபடாமல் போகும்.

Tags: