அராஜகத்தால் அலங்கோலமாகிய பேராதனைப் பல்கலைக்கழகத்தின் நற்பெயர்!

வசந்தா அருள்ரட்ணம்

பேராதனைப் பல்கலைக்கழக சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன குடும்பத்தினர் மீதான தாக்குதலின் பின்னணி என்ன?

இயற்கை அழகுடனும் பசுமையுடனும் அமையப்பெற்ற ஒரு கல்விச்சாலை. நெடுமரங்களும் அவற்றுடன் பின்னிக் கிடக்கின்ற கொடிகள், மலர்கள், பல்கலைக்கழகத்தினூடே பாய்கின்ற நதியோடை, வசந்தகாலத்தை வரவேற்கும் வண்ண மலர்கள், அக்பர்பாலம் என எம்மை வேறோர் உலகத்திற்கு கூட்டிச் செல்லும் ஒரு ரம்யமான சூழலில் பேராதனை பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. ஆசியாவின் முன்னணிப் பல்கலைக்கழகங்களில் ஒன்றாக அறியப்படும் பேராதனைப் பல்கலைக்கழகம் 9 பீடங்களையும் சுமார் 73 துறைகளையும் கொண்டு இயங்குகின்றது.

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தங்களின் பட்டப்படிப்பை பெற வாய்ப்பு கிடைக்காதா? தங்களுடைய இளமைக் காலத்தை அங்கு கழித்துவிட மாட்டோமா என ஏங்காத மாணவர்கள் குறைவு. அந்தளவுக்கு மாணவர்களின் வாழ்வின் சொர்க்கபுரியாக பேராதனைப் பல்கலைக்கழகம் விளங்கியது. எனினும் இன்று அந்த நிலை தலைகீழாக மாறியுள்ளது. அந்த அழகான பல்கலைக்கழகம் அராஜகம், வன்முறைகளால் அலங்கோலமாகக் கிடக்கின்றது. ஆனால் பொதுவாகவே பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகும் பிள்ளைகளை பட்டப்படிப்புக்காக அனுப்ப பெற்றோர் அஞ்சும் ஒரு துர்ப்பாக்கிய நிலை இன்று உருவாகியுள்ளது.

அதற்கு ஒரு உதாரணமாக பேராதனை பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியரும் உப பீடாதிபதியுமான அதுல சேனாரத்ன மற்றும் அவரின் குடும்பத்தினர் மீதான மாணவர்களின் மனிதாபிமானமற்ற கொடூர தாக்குதலை குறிப்பிடலாம். இச்சம்பவம் 80/89 காலப்பகுதியில் நிலவிய பயங்கரவாத யுகத்தின் இருண்ட நிழல்களை மக்களுக்கு உணர்த்தியுள்ளது. இதனாலேயே பல்வேறு தரப்பினரும் இச்சம்பவத்தை வன்மையாக கண்டித்துள்ளனர்.

புவியியல் பேராசிரியரான அதுல சேனாரத்ன 2012 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் பேராதனை உப பீடாதிபதியாக பணியாற்ற ஆரம்பித்தார். பேராசிரியர் அதுல சேனாரத்ன மீதான தாக்குதலுக்கு அவரது மகனும் ஒருவிதத்தில் காரணமாக இருந்தாலும், பேராசிரியரை அம்மாணவர்கள் எவ்வாறு தாக்கலாம் என்பதால் மாணவர்கள் மீதே இச்சம்பவத்தில் விரல் நீட்டப்படுகின்றது.

அது கடந்த 10ஆம் திகதி இரவு 9.24 மணியிருக்கும். வழமைபோல் பேராதனை பேராசிரியர் சரத்சந்திரா திறந்தவெளி திரையரங்கு அருகில் மாணவர்கள் கூடியிருந்தனர். பொதுவாக அவ்வீதியால் இரவு நேரத்தில் பெரிதாக வெளி வாகனங்கள் எதுவும் பயணிக்காது. பல்கலைக்கழக மாணவர்களின் நடமாட்டமே சிறிது காணப்படும். எனவே அங்கிருந்த மாணவர்கள் தங்கள் மோட்டார் சைக்கிள்களை வீதியை மறித்து குறுக்காக நிறுத்தி வைத்திருந்தனர். இச்சமயத்தில் தான் சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்னவின் மகன் விதுர சேனாரத்ன மத்திய மாகாணத்தில் பதிவுசெய்யப்பட்ட சீ.பீ.ஏ 2719 இலக்கத்தையுடைய காரில் அவ்வழியாய் வருகின்றார். அவர் அவ்வழியாய் பயணிப்பதற்கு சரத்சந்திரா திறந்தவெளி திரையரங்கு அருகில் வீதியின் குறுக்காக நிறுத்தப்பட்டிருந்த மாணவர்களின் மோட்டார் சைக்கிள்கள் தடையாகவிருந்தன. எனவே அவற்றை அகற்றுமாறு பல தடவைகள் ஹார்ன் அடிக்கின்றார். எனினும் மாணவர்கள் காதில் அது விழவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பேராசிரியரின் மகன் காரிலிருந்து இறங்கிவந்து வீதியின் குறுக்காக நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களில் ஒன்றை காலால் உதைக்க, அது அருகிலிருந்த மோட்டார் சைக்கிள்களையும் சேர்த்தே தரையில் வீழ்த்தியது.

இதனைத் தொடர்ந்து சத்தம் கேட்டு சரச்சந்திரா தியேட்டர் அருகிலிருந்த மாணவர்கள் ஓடி வந்தனர். இதை அவதானித்த பேராசிரியரின் மகன் அங்கிருந்தால், நிலைமை மோசமடையும் என்பதை உணர்ந்து காரில் தப்பிக்க முயற்சி செய்கின்றார். எனினும் பல்கலைக்கழக மாணவர்கள் அவரை அப்படியே விடுவதற்கு தயாராகவிருக்கவில்லை. பல்கலைக்கழக வளாகத்தை விட்டு வெளியில் செல்ல முடியாதவாறு நாலா பக்கமும் தடைகளை ஏற்படுத்துவதற்காக இதுதொடர்பில் விடுதிகளிலுள்ள ஏனைய நண்பர்களையும் தொலைபேசியில் தொடர்புகொண்டு மோட்டார் சைக்கிள்களையும் எடுத்துக்கொண்டு வருமாறு அழைத்தனர். இச்சந்தர்ப்பத்தில் தங்களுடைய மோட்டார் சைக்கிள்களை கீழே தள்ளிவிட்டு போனது பேராசிரியர் அதுல சேனாரத்னவின் மகன் என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.

பேராசிரியர் சரத்சந்திரா திறந்தவெளி திரையரங்கு

பேராசிரியர் அதுல சேனாரத்னவின் மகன் மாணவர்களிடமிருந்து தப்பித்து பேராசிரியருக்கு பல்கலைக்கழகத்தினால் வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லத்துக்கு அருகில் சென்று கேட் கதவை திறந்து உள்ளே சென்று பூட்டிக்கொள்ள முயற்சிக்கின்றார். எனினும் மாணவர்கள் அதற்கு இடமளிக்கவில்லை. அதற்கிடையில் மாணவர்களிடம் அவர் மாட்டிக்கொள்கின்றார். அவரை சுற்றிவளைத்த மாணவர்கள் சரமாரியாக தாக்க முற்படுகின்றனர். இச்சந்தர்ப்பத்தில் வீட்டுக்குள் பேராசிரியர் அதுல சேனாரத்ன, மனைவியுடன் கதைத்துக் கொண்டிருக்கின்றார். இதன்போதே பேராசிரியரின் மனைவி, மகன் ஒரு கும்பலால் தாக்கப்படுவதைக் கண்டு அவரிடம் பதற்றத்துடன் கூற, பேராசிரியர் வீட்டை விட்டு வெளியே ஒடிச் சென்று பார்த்த போது 30 பேர் கொண்ட பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று மகனை சுற்றிவளைத்து தாக்குகின்றனர்.

ஒரு தந்தையாய் இதை கண்டு மனம் துடித்துப் போனபேராசிரியர் அதுல சேனாரத்ன மகனை கட்டிப்பிடித்து ‘ நான் உப பீடாதிபதி’ என்று மாணவர்களிடம் தன்னை அடையாளப்படுத்து முகமாகக் கத்தினார். எனினும் மாணவர்கள் அது எதையுமே காதில் வாங்கிக் கொள்ளவில்லை.பேராசிரியர் என்று கூடப் பார்க்காமல் அவரை இழுத்து ஒரு ஓரமாக தள்ளிவிட்டு மீண்டும் விதுர சேனாரத்னவை தாக்க ஆரம்பித்தனர். இதனையடுத்து தடுக்க வந்த பேராசிரியரின் மனைவி மட்டுமல்லாது அங்கு வந்த வீட்டு பணிப்பெண்கள் இருவரையும் மிரட்டி ஓரமாக தள்ளிவிட்டு ஆக்ரோஷமாக நடந்து கொண்டனர்.

இச்சந்தர்ப்பத்தில் பேராசிரியர் ஆரியரத்னவும் வெளியே வந்து பேராசிரியர் அதுல சேனாரத்னவுடன் இணைந்து விதுர சேனாரத்னவை பாதுகாப்பாக வீட்டுக்குள் அழைத்துச் செல்ல உதவினார். எனினும் மாணவர்கள் அவ்விடத்தை விட்டு நகர்வதாய் தெரியவில்லை. அவர்களுக்கு இச்செயல் மேலும் ஆத்திரத்தை உண்டு பண்ணியது. வீட்டுக்குள் செல்ல முயற்சித்தனர். எனவே அதை தடுப்பதற்கு பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு அதிகாரிகள், ஒழுக்காற்று அதிகாரிகள், மற்றும் பேராதனை பொலிஸார் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டனர். மாணவர்கள் வீட்டுக்குள் செல்வதை தடுக்க பேராசிரியர் அதுல சேனாரத்ன வீட்டு வாசலில் காவலுக்கு நின்றார். எனினும் மாணவர்கள் வீட்டின் பின்புறமாகச் சென்று சமையலறை வழியாக கதவை உடைத்து வீட்டுக்குள் நுழைத்தனர். மாணவர்களின் அராஜாகத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. சுமார் 300, 400 மாணவர்கள் தங்கள் விடுதிகளிலிருந்து வந்து வீட்டை சுற்றி குவிந்தனர். பல்கலைக்கழக நிர்வாகமும், பொலிஸாரும் அவர்களை எவ்வாறு கட்டுப்படுத்துவது, என்று செய்வதறியாது தடுமாறியது.

பேராசிரியர் மகன் காரில் வந்து தங்களது மோட்டார் சைக்கிள்களுக்கு சேதம் ஏற்படுத்தியுள்ளமையால் அவர் மீது சட்டநடவடிக்கை எடுக்கவேண்டுமென்றும் தமக்கு ஏற்பட்ட சேதத்துக்கு அவர் நஷ்டஈடு செலுத்த வேண்டுமென்றும் மாணவர்கள் பலத்த குரலில் கோஷங்களை எழுப்பினர். இச்சந்தர்ப்பத்தில் மாணவர்களின் குரலுக்கு செவிசாய்ப்பதை தவிர வேறு வழியிருக்கவில்லை. அங்கிருந்த எந்த அதிகாரியாலும் வன்முறை வெறியாட்டத்திலிருந்த மாணவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. அதனால் மிகவும் சூட்சுமமான முறையில் பேராசிரியரின் மகனை கைதுசெய்வதைப் போல் கைவிலங்கிட்டு பொலிஸ் ஜீப்பில் ஏற்றி பல்கலைக்கழக வளாகத்திலிருந்து அவரை அழைத்துச் சென்றனர்.

தாக்குதலுக்கு முகம்கொடுத்த பேராசிரியர் அதுல சேனாரத்னவின் மகன் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சில மணித்தியாலங்களில் தனியார் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். பேராசிரியர் அதுல சேனாரத்னவும் மாணவர்களால் தாக்கப்பட்டதாகக் கூறி கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து பின்னர் தனியார் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

“நான் 43 வருடங்களாக பல்கலைக்கழக சேவையில் ஈடுபட்டு வருகின்றேன்.

என் வாழ்நாளில் இவ்வாறானதொரு பயங்கரமான நாளை எதிர்கொண்டதில்லை. பல்கலை மாணவர் ஒருவர் கூட திட்டியதை நான் கேட்டதில்லை.

அன்றிரவு ஆதரவற்ற நிலையில் இருந்தோம். மிகவும் வன்மையான வார்த்தைகளால் மாணவர்கள் எம்மை திட்டினார்கள். நான் இருதய நோய்க்கான மருந்து எடுத்து வருகின்றேன்.

மனைவி அதை அவர்களிடம் கூறி தாக்க வேண்டாம் எனக் கெஞ்சினார். எனினும் அவர்கள் காதில் அது விழவே இல்லை. மனைவியின் தலைமுடியை பிடித்து இழுத்து தள்ளினார்கள். அப்போது பல்கலைக்கழகத்தின் பாதுகாப்புப் பிரிவில் இருவர் இருந்தனர்.

அவர்களின் பேச்சையும் கேட்கவில்லை. போதைப் பொருள் பயன்படுத்தியதால் தான் அவ்வாறு வெறிபிடித்தவர்களைப் போல் மாணவர்கள் நடந்திருக்க வேண்டும். நான் ஓய்வு பெறும் தறுவாயில் இப்படியானதொரு சம்பவம் நடந்தமைக்கு மனம் வருந்துகின்றேன். உடலில் ஏற்படும் வலிகளை விட மனதில் ஏற்படும் வலிதான் அதிகம். பல்கலைக்கழக பேராசிரியர்கள் தாக்கப்படுவது எதிர்காலத்துக்கு ஒரு ஆபத்தான அறிகுறியாகும். இவர்கள் மாணவர்கள் அல்ல. குற்றம் செய்தவர்கள்.

இவர்களே முழுப் பல்கலைக்கழகத்தையும் கட்டுப்படுத்துகின்றனர். எனவே பல்கலைக்கழகங்களில் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும்” என மிகவும் வருத்தத்துடன் பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்தார்.

பல்கலை நிர்வாகம் பேராசிரியரின் வீட்டை தாக்கிய நபர்களை அடையாளம் காணும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றது. பாதுகாப்பு கேமராக்கள், நேரில் கண்ட சாட்சிகளின் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மாணவர் சங்கங்களின் ஆதரவையும் பல்கலைக்கழக நிர்வாகம் கோரியுள்ளது. இச்சம்பவத்தில் நேரடியாக ஈடுபட்ட 12 மாணவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதற்கமைய பல்கலைக்கழக நிர்வாகத்தின் விசாரணை அதிகாரி பேராசிரியர் திலக் பண்டாரவினால் இந்த 12 மாணவர்களுக்கும் பல்கலைக்கழக மாணவர் அந்தஸ்து தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளது. இது நிரந்தரமாக இரத்து செய்யப்படுவதற்கும் வாய்ப்புகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குற்றம்சாட்டப்பட்ட 12 மாணவர்களில் 6 பேர் பல்கலைக்கழகத்தில் தமது மாணவர் அந்தஸ்து இரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து என்ன நடக்கும் என்பதை அறிந்து பொலிஸார் தம்மை கைதுசெய்வதற்கு முன்னர் சட்ட ஆலோசனைகளுடன் 13 ஆம் திகதி காலை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தனர். அதனைத்தொடர்ந்து அன்றைய தினம் பிற்பகல் தமக்கு பொலிஸ் எந்தவித தொந்தரவுகளும் செய்யக் கூடாது என்ற சட்ட பாதுகாப்புடன் பொலிஸில் மேலும் 4 பேர் சரணடைந்தனர்.

இவர்கள் 10 பேரிடமும் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மாலை அடையாள அணிவகுப்புக்குட்படுத்தினர்.

அதுமட்டுமின்றி ஏனைய இருவரும் மாலை சரணடைந்தனர். தற்சமயம் 12 பேரும் நீதிமன்ற உத்தரவுக்கமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமாக வீட்டுக்குள் பிரவேசித்தமை, உப பீடாதிபதி பேராசிரியர் அதுல சேனாரத்ன, அவர் குடும்பத்தினர் மீதான தாக்குதல், அச்சுறுத்தல், அரச சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியமை போன்ற குற்றச்சாட்டுகள் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது.

பேராசிரியர் தங்கியிருந்த உத்தியோகபூர்வ இல்லம் பேராதனைப் பல்கலைக்கழகத்துக்கு சொந்தமான அரச சொத்து என்பதால் அதில் ஏற்பட்ட சேதம் ரூ. ஒரு இலட்சத்து 15 ஆயிரம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் பேராதனை பல்கலைக்கழக பொதுமாணவர் ஒன்றியம் ஊடக சந்திப்பொன்றை நடத்தியது. அதில்,

‘பேராசிரியர் அதுல சேனாரத்னவின் மகனே இச்சம்பவத்துக்கு ஆரம்ப காரணம். அவர் மதுபோதையில் காரை செலுத்தி பல்கலைக்கழக மாணவர்களின் மோட்டார் சைக்கிள்களை தாக்கியமையே மோதலுக்கு காரணமெனவும் அவரை கைவிலங்கிட்டு பொலிஸார் அழைத்துச் சென்றாலும் அவர் மீது சட்டம் பிரயோகிக்கப்படவில்லை’ என பொதுமாணவர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

இந்த குற்றச்சாட்டுகள் காரணமாக பல்கலைக்கழக அமைப்பில் போதைப்பொருள் பாவனை தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக செயலணியொன்றை அமைக்க அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்ற அதேநேரம், பேராசிரியர் அதுல சேனாரத்னவின் மாணவர்கள் மீதான போதைப்பொருள் குற்றச்சாட்டு, பேராசிரியரின் மகன் தொடர்பான மாணவர் ஒன்றியத்தின் குற்றச்சாட்டு என்பவற்றை கருத்திற் கொண்டு கைதுசெய்யப்பட்ட 12 மாணவர்களிடமோ, பேராசிரியரின் மகனிடமோ எந்தவித பரிசோதனைகளோ பொலிஸ் தரப்பிலிருந்து இதுவரை மேற்கொள்ளப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இது இவ்வாறிருக்க மாணவர் சங்கத்தின் தலைவர் இன்னும் தலைமறைவாக இருப்பது தனக்கு பெரும் பிரச்சினையாக இருப்பதாக பேராசிரியர் அதுல சேனாரத்ன பொலிஸாரிடம் மற்றுமொரு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

அதுமட்டுமின்றி இந்த விசாரணைகளை பேராதனை பொலிஸாரிடம் ஒப்படைக்காது வேறு பொலிஸ் குழுவினரிடம் ஒப்படைக்குமாறும் பேராசிரியர் அதுல சேனாரத்ன கோரிக்கை விடுத்துள்ளார்.

இச்சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினரும் தமது கண்டனத்தை தெரிவித்துள்ளதுடன் பணிப்புறக்கணிப்புகளும் பேராதனை பல்கலைக்கழகத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவருகின்றன.

ஏற்கனவே கொவிட் தொற்று, எரிபொருள் பற்றாக்குறை காரணமாக பாதிக்கப்பட்டிருந்த பல்கலைக்கழகக் கல்விச் செயற்பாடுகள் தற்போது வன்முறை, அராஜக சம்பவங்களினால் இன்னும் ஸ்தம்பிதமடைந்துள்ளது. எதுஎவ்வாறாயினும் நாட்டின் எதிர்காலக் கல்வி அபிவிருத்தியை கருத்திற் கொண்டு விசாரணைகள் துரிதகதியில் இடம்பெற்று பல்கலைக்கழக செயற்பாடுகள் வழமைக்கு திரும்ப வேண்டும்.

Tags: