ஈரானுக்குள் மோதல்களைத் தொடங்க மேற்கு நாடுகள் திட்டமிடுகின்றன
ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் உருவாக்கியுள்ள சூழ்நிலையை ஈரானிலும் உருவாக்க மேற்கத்தேய நாடுகள் முயல்கின்றன. நாட்டை அழித்து அதன் வளங்களை கொள்ளையடிக்கவே இவ்வாறு குழப்பத்தை உருவாக்குகின்றன என்பது தெளிவு.
இவ்வாறு கூறுவது வேறு யாருமல்ல, முன்னாள் அமெரிக்க இராணுவ சிறப்பு நடவடிக்கை அதிகாரி ஸ்கொட் பென்னட் (Scott Bennett) என்பவராவார்.
‘ஆப்கானிஸ்தானிலும் பின்னர் ஈராக்கிலும் செய்தது போன்று, ஈரானிலும், இராணுவத் துறைகளிலும் குழப்பமான சூழ்நிலையை ஏற்படுத்த மேற்கு நாடுகள் முழுமூச்சாக செயல்படுகின்றன. ஈரானின் தேசிய வளங்களைத் சூறையாட வேண்டுமாயின், அதற்கு வசதியாக நாட்டுக்குள் குழப்பங்களை உருவாக்கி, பிரச்சினைகளை ஏற்படுத்த வேண்டும்’ என்று ஸ்காட் பென்னட் தெஹ்ரான் டைம்ஸிடம் கூறியுள்ளார்.
மேற்குலகு தமது திட்டங்களை நிறைவேற்றும் நோக்கத்தோடு லெபனான், சிரியா மற்றும் ஈராக்கில் பதற்றங்களைப் பயன்படுத்தி, தாக்குதல்களை நடத்தி வருகின்றது. ‘மனித உரிமைகளை பாதுகாப்பதாகக் கூறிக்கொண்டு, போராட்டங்கள் என்ற போர்வையில் ஈரானுக்கு எதிராக உள்நாட்டுப் பயங்கரவாதம் ஒன்று கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.
ஈரானில் இஸ்லாமிய ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் வரை இவர்களது திட்டம் நிறைவேறாது என்று அறிந்து வைத்துள்ள இந்த சக்திகள் ஈரானிய ஆட்சியை மாற்றும் முயற்சியில் இதே முறைகளையும் அதே கூலிப்படையையும் பயன்படுத்துகின்றன.
பலதரப்பட்ட மக்கள் கலந்து வாழும் பிரதேசங்களை இலக்காக்கி, மோதல் மற்றும் வன்முறையைத் தூண்டுவதற்கு இவர்கள் பயங்கரவாதிகளை பயன்படுத்தி வருவதில் இருந்து இவர்களது திட்டம் துல்லியமாகத் தெரிகிறது. இதற்காக கையடக்கத் தொலைபேசிகள், சமூக ஊடகங்கள் என்பன பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன. மேற்கத்தேய கட்டுப்பாட்டில் இயங்கும் ஊடகங்கள் இதற்கு ஒத்தாசையாக இருக்கின்றன. பொலிஸ் சித்திரவதையின் காரணமாக ஒரு பெண் இறந்ததாகக் கூறப்படும் பொய்யான குற்றச்சாட்டின் பேரில் எதிர்ப்பு இயக்கத்தின் தோற்றம் ஆரம்பமானது, உண்மை என்னவெனில் அவர் ஏற்கனவே பீடிக்கப்பட்டிருந்த கடுமையான நோயினால் உயிரிழந்துள்ளார் என்று மருத்துவ ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.
ஒரு சாதாரண சிறிய பிரச்சினை பூதாகாரமாக்கப்பட்டு, ஈரானுக்கு எதிரான இராஜதந்திர, பிரசார, இராணுவ மற்றும் பொருளாதார நடவடிக்கைகளின் வடிவத்தை எடுத்திருப்பதானது, ஸ்காட் பென்னட் வாதிடுவது போன்று, அரசாங்கத்தை சீர்குலைக்கவும் ஈரானில் குழப்பத்தை உருவாக்கவும் கருவியாக பயன்படுத்தப்பட்டுக்கொண்டு இருக்கிறது.
நெதன்யாகு ஆட்சியின் கீழ் இஸ்ரேல் எவ்வாறு சிரியாவிற்கு எதிரான ஆக்கிரமிப்பு வான்வழித் தாக்குதல்களை முடுக்கிவிட்டதோ அவ்வாறே ஈரானுக்கு எதிரான சூழ்ச்சிகளை செய்வதற்காக ஈராக் மற்றும் பாரசீக வளைகுடா வான்வெளியில் தொடர்ந்து ஆக்கிரமிப்பு நடவடிக்கை எடுத்து வருவதையும் காணக்கூடியதாக இருக்கிறது. சமீபத்திய ஆண்டுகளில், இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் மற்றும் அமெரிக்க மத்திய கட்டளை ஏற்கனவே ஈரானுக்கு எதிரான தாக்குதலுக்காக பல கூட்டுப் பயிற்சிகளை மேற்கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு ஜூலை மாதம், ஜெருசலேம் பிரகடனம் என்றும் அழைக்கப்படும் அமெரிக்க-இஸ்ரேலிய மூலோபாய கூட்டாண்மை குறித்த கூட்டுப் பிரகடனத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் இஸ்ரேலிய பிரதமர் Yair Lapid உம் கையெழுத்திட்டனர். ஈரான் அணுவாயுதத்தைப் பெற ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது, அதை உறுதிப்படுத்த அதன் தேசிய சக்தியின் அனைத்து கூறுகளையும் பயன்படுத்த அது தயாராக உள்ளது என்ற அமெரிக்க உறுதிப்பாட்டை அது வலியுறுத்துகிறது.
அடுத்த ஆண்டு ஈரான் மீதான தாக்குதல்கள் தொடர்பான இராணுவ நடவடிக்கைகளுக்காக IDF இன் NIS 58 பில்லியன் ($17 பில்லியன்) பாதுகாப்பு பட்ஜெட்டில் இருந்து NIS 3.5 பில்லியன் ($1 பில்லியன்) ஒதுக்கப்பட்டுள்ளது.
மேற்கத்தேய பகைமை மற்றும் ஈரானுக்கு எதிரான சூழ்ச்சியின் முக்கிய காரணி இஸ்ரேல்தான் என்ற வாதத்தை மேற்கூறிய அனைத்தும் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன. மேலும் இந்தக் கொந்தளிப்பு நிலையை பயன்படுத்தி லெபனான், சிரியா, ஈராக் ஆகிய நாடுகளில் தாக்குதல்களை நடத்துகின்றன.
இனவாத வண்ணப் புரட்சிகள் பொதுவாக மேற்குலகின் ஆக்கிரமிப்பு பிரசாரங்களின் இலக்காகும். ஊடக போர்கள் குழப்பம் மற்றும் பதற்றங்களை உருவாக்குவதற்கு கவனச்சிதறல்கள் ஏற்படுத்தி இந்த இனவாத வண்ண புரட்சிகளை தொடங்குவதற்காகவும் ஆகும். ஈராக்கில் உருவாக்கிய பல்வேறு கோத்திர மற்றும் மதப் பிரிவுகளுக்கு இடையே மோதலும் இவர்கள் மூட்டிய போர்களில் அடங்கும். இதற்காக லிபியா மற்றும் சிரியாவில் குழப்பங்களை ஏற்படுத்த வெளிநாட்டு கூலிப்படையினர் பணியமர்த்தப்பட்டு, நிதியுதவி மற்றும் பயிற்சியளிக்கப்பட்டனர். இந்நடவடிக்கைகளின் நோக்கம் பிராந்தியங்களில் உள்ள மக்களிடையே பதற்றம், குழப்பம், மோதல் மற்றும் பகைமை ஆகியவற்றை உருவாக்கி, இயற்கை செல்வங்களை கொள்ளையடிப்பதாகும். இவர்களது திட்டத்தை அறிந்துகொள்வதற்கு கடந்த 20 ஆண்டுகளில் ஆப்கானிஸ்தான், ஈராக், சோமாலியா, லிபியா, சிரியா, லெபனான், யேமன் ஆகிய நாடுகளில் இவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளின் வரலாற்றைப் பார்த்தால் போதுமானது. எனவே இத்தகைய விரோத நடவடிக்கைகளை எதிர்கொள்ள ஒரு சர்வதேச கூட்டணி அவசியமாகும்.
மூலம்: Scott Bennett: The West plans to set off conflicts inside Iran
தமிழில்: தாஹா முஸம்மில்