இந்தியாவை நேசித்த லெனினும் லெனினை நேசித்த இந்தியாவும்!

-அ.அன்வர் உசேன்

2024 ஜனவரி 21 லெனின் நூற்றாண்டு நினைவு தினம். லெனின் மறைந்து 100 ஆண்டுகளுக்கு பின்னரும் உலகமெங்குமுள்ள புரட்சி போராளிகளுக்கு இன்றும் வழிகாட்டும் கலங்கரை விளக்கமாக அவர் விளங்குகிறார் எனில் மிகை அல்ல. லெனினுக்கும் இந்திய மண்ணுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனக்கூறி லெனினின் சிலைகளை சங் பரிவாரத்தினர் தகர்த்தனர். பிரிட்டிஷ் காலனியாதிக்கம் இந்தியாவில் அரங்கேற்றிய கொடூரங்களையும் அதனை எதிர்த்து இந்திய மக்களும் தொழிலாளர்களும் நடத்திய போராட்டங்கள் குறித்தும் ஆழமான கவனம் செலுத்திய லெனின் அது குறித்து ஏராளாமான கட்டுரைகளை எழுதினார்.  லெனின் தலைமையில் நடந்த மகத்தான நவம்பர் சோசலிச புரட்சி இந்திய விடுதலை போராளிகளிடம் பெரும் உத்வேகத்தை உருவாக்கியது. விடுதலை போராட்டத்தில் துரும்பு கூட அசைக்காத சங் பரிவாரத்தினர் இதனை உணர முடியாததில் ஆச்சரியமில்லை. மறுபுறத்தில் வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா போன்றவர்கள் லெனின் ஒரு சர்வாதிகாரி என இகழ்கின்றனர். வரலாற்றை கற்ற குஹா லெனினையும் அவரது செழுமையான ஜனநாயக பண்புகளையும் கற்காமல் போனது பரிதாபகரமானதுதான்!

செங்கிஸ்கான்களாக மாறிய பிரிட்டிஷார்

1897ஆம் ஆண்டிலிருந்தே லெனின் தனது பல்வேறு ஆய்வுகள் மற்றும் கட்டுரைகளில் இந்தியா குறித்து குறிப்பிட்டாலும் 1908 ஆம் ஆண்டு அவரது “உலக அரசியலில் அனல் கக்கும் நிகழ்வுகள்” (Inflammable Material in World Politics) எனும் கட்டுரையில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் கொள்ளையையும் அடக்குமுறைகளையும் கீழ்க்கண்டவாறு தோலுரித்து காட்டுகிறார்:  “தமது தேசத்தில் வலிமை பெருகி வரும் தொழிலாளர் இயக்கத்தினால் கோபமுற்றுள்ள பிரிட்டன் முதலாளிகள்,  இந்தியாவில்  வளர்ந்துவரும் புரட்சிகரப் போராட்டத்தை கண்டு பீதி அடைந்துள்ளனர். இதன் விளைவாக மேலும் மேலும் வெளிப்படையாக கூர்மையாக தனது மிருக குணத்தை வெளிப்படுத்துகின்றனர்”

மேலும் லெனின் எழுதுகிறார்:

“இந்தியாவில் பிரிட்டிஷ் நிர்வாகத்தில் வன்முறைக்கும் தீவிர சுரண்டலுக்கும் கொள்ளைக்கும் எந்த முடிவும் இல்லை. இந்தியாவில் உள்ளது போல உலகத்திலேயே வேறு எங்கும், ரஷ்யாவை தவிர, இத்தகைய கொடிய வறுமையையும் பசி பட்டினியையும் மக்களிடையே பார்க்க முடியாது. சுதந்திர பிரிட்டனின் ஜோன் மோர்லி போல தீவீர ஜனநாயகவாதிகள் கூட முற்போக்கான பத்திரிகையாளர்கள் கூட இந்தியாவை நிர்வகிக்க நியமிக்கப்பட்டால் கொள்ளைக்கார செங்கிஸ்கான்களாக மாறிவிடுகின்றனர். அரசியல் எதிர்ப்பாளர்களை சவுக்கடியால் தாக்கும் அளவுக்கு காட்டுமிராண்டிகளாக மாறிவிடுகின்றனர்”  செங்கிஸ்கான் 12 ஆம் நூற்றாண்டில் மங்கோலிய பேரரசை நிறுவிய மன்னன். செங்கிஸ்கான் எங்கு படையெடுத்தாலும் அந்த பகுதி இரத்தக்களரியாக மாறியது என்பது வரலாறு. கொலையும் கொள்ளையும் அதீத அளவுக்கு இல்லாமல் செங்கிஸ்கான் படையெடுப்பு இருந்ததே இல்லை. அத்தகைய செங்கிஸ்கான்களாக இந்தியாவை நிர்வகிக்கும் பிரிட்டிஷ் அதிகாரிகள் மாறிவிடுகின்றனர் என்பதை லெனின் குறிப்பிடுகிறார். 

பிரிட்டிஷ் ஆட்சியின் அழிவை கணித்த லெனின்

குறைந்தபட்ச ஜனநாயகத்தை கூட பிரிட்டிஷ் ஆட்சி அனுமதிப்பது இல்லை என்பதை கீழ்க்கண்ட உதாரணங்கள் மூலம் லெனின் விவரிக்கிறார்: “பிரிட்டன் சமூக ஜனநாயகவாதிகளால் வெளியிடப்பட்ட  சிறு வாரப்பத்திரிகை “ஜஸ்டிஸ்”. இந்த பத்திரிகை கூட மோர்லி போன்ற அயோக்கியர்களால் இந்தியாவில் தடைசெய்யப்பட்டுவிட்டது. கீர் ஹார்டி எனும் சுயேச்சையான தொழிலாளர் கட்சியை சேர்ந்த பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் இந்தியாவுக்கு சென்று இந்தியர்களின் மிகக்குறைந்த ஜனநாயக உரிமைகள் குறித்து பேசியவுடன் பிரிட்டனின் அனைத்து முதலாளித்துவ பத்திரிகைகளும் ஹார்டியை “கருங்காலி” எனவும் “பிரிட்டன் எதிரி” எனவும் சாடி ஊளையிட்டன. இப்பொழுது மிகவும் செல்வாக்கு மிக்க பிரிட்டன் பத்திரிகைகள் கூட “இந்தியாவின் அமைதியை” குலைக்கும் “கிளர்ச்சியாளர்களை” ஜனநாயக இந்திய பத்திரிகையாளர்களை சாடுகின்றனர். அவர்களுக்கு தரப்படும் காட்டுமிராண்டி தண்டனைகளை வரவேற்கின்றனர்.” மேலும் லெனின் கூறுகிறார்:

“ஆனால் இந்திய தெருக்களில் மக்கள் தமது அரசியல் தலைவர்களுக்காகவும் எழுத்தாளர்களுக்காகவும் போராட ஆரம்பித்துவிட்டனர்” யார் இந்த தலைவர்கள்? லெனின் யாரை குறிப்பிடுகிறார்? பாலகங்காதர திலகர் கைது செய்யப்பட்டதும் அவருக்கு கொடுக்கப்பட்ட மோசமான தண்டனையையும்தான் லெனின் குறிப்பிடுகிறார். திலகரின் பிற்போக்கான சமூக கருத்துக்கள் மீது நமக்கு  விமர்சனங்கள் உண்டு. அதே சமயத்தில் விடுதலைப் போராட்டத்தில் அவர் காட்டிய தீவிரம் குறைத்து மதிப்பிட முடியாது. திலகருக்கு தரப்பட்ட 6 ஆண்டு பர்மா சிறைத் தண்டனை குறித்து லெனின் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்: “பிரிட்டன் குள்ள நரிகளால் இந்திய ஜனநாயகவாதியான திலகருக்கு தரப்பட்ட மோசமான நீண்டகால நாடு கடத்தும் தண்டனை என்பது பணப்பைகளின் பின்னால் அலையும் அடிவருடிகளின் பழிவாங்கும் செயல். இந்த வழக்கில் நடுவர்களாக (ஜூரிக்கள்) இருந்த இந்தியர்கள் அவரை விடுதலை செய்ய வேண்டும் என வாக்களித்ததாகவும் பிரிட்டன் ஜூரிக்கள் வாக்குகள்தான் அவருக்கு தண்டனை பெற்று தந்தது என்பதும் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் வெளிவந்தது. ஆனால் இந்த தண்டனை பம்பாயின் தெருக்களில் ஆர்ப்பட்டங்களையும் வேலை நிறுத்தங்களையும் விளைவித்தது”

பாலகங்காதர திலகர்

ஆம்! இந்திய தொழிலாளி வர்க்கம் முதன்முறையாக தனது பொருளாதார கோரிக்கைகளுக்காக அல்லாமல் ஒரு அரசியல் தலைவருக்கு விதிக்கப்பட்ட அநீதியான தண்டனையை எதிர்த்து வீதிக்கு வந்தது. 1908 இல் ஏ.ஐ.டி.யூ.சி. உதயமாகவில்லை என்பது கவனிக்கத்தக்கது. தொழிலாளி வர்க்கப் போராட்டத்தின் முக்கியத்துவம் குறித்து லெனின் குறிப்பிடுகிறார்: “இந்தியாவிலும் கூட தொழிலாளி வர்க்கம் ஏற்கெனவே அரசியல் போராட்டத்துக்காக தனது உணர்வை வளர்த்து கொண்டுள்ளது.” இதன் விளைவு என்ன? “இதுதான் நிலைமை எனில் இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி அழியப்போவது உறுதி” விடுதலைக்கு 37 ஆண்டுகளுக்கு முன்பே பிரிட்டஷ் ஆட்சியின் அழிவையும் அதற்கு காரணம் தொழிலாளி வர்க்கத்தின் அரசியல் போராட்டம் என்பதையும் கணித்துச் சொன்னார் லெனின். 1908 ஆம் ஆண்டுக்கும் சோசலிசப் புரட்சி நடந்த 1917 இற்கும் இடையே பலமுறை இந்தியா பற்றி லெனின் தனது கட்டுரைகளில் குறிப்பிடுகிறார். 

லெனினை சந்தித்த இந்தியர்கள்

1917 நவம்பர் புரட்சி இந்தியாவில் பெரும் உத்வேகத்தை விளைவித்தது. அந்த மாபெரும் சமூகப் புரட்சியினால் உந்தப்பட்ட பலர் ஆப்கானிஸ்தான் வழியாக இமயமலையை கடந்து ரஷ்யா சென்றனர். லெனினை சந்தித்தனர். அப்படி சந்தித்தவர்களில் முக்கியமானவர்கள்:

*    23.01.1918 – சகோதரர்கள் அப்துல் சத்தார் கைரி மற்றும் அப்துல் ஜப்பார் கைரி ஆகிய இரு டெல்லி கல்லூரி ஆசிரியர்கள்.
*    07.05.1919 – மகேந்திர பிரதாப் மற்றும் பரக்கத்துல்லா
*    1919 ஜூலை – அப்துல் ராப்/எம்.பி.டி.  ஆச்சார்யா/ திலிப் சிங் கில்/ இப்ராகிம்/ மகேந்திர பிரதாப்/ பரக்கத்துல்லா. 
*    1920 – எம்.என்.ராய். 
*    1920 –  ஒக்ரோபர் – விரேந்திரநாத் சட்டோபாத்யாயா. 
*    1920 இறுதி- மீண்டும் சட்டோபாத்யாயாவுடன் பாண்டுரங் காங்கோஜே, புபேந்திரநாத் தத்தா. (புபேந்திரநாத் தத்தா  விவேகானந்தரின் இளைய சகோதரர்). 
*    1920 – எம்.என்.ராய்/ எம்.பி.டி. ஆச்சார்யா/ ஜி.ஏ.கான்/ லுஹானி/ டாக்டர் மன்சூர்/ பரக்கத்துல்லா/ முகம்மது ஷஃபிக் இணைந்து உருவாக்கிய “இந்திய புரட்சி சங்கத்தை” வாழ்த்தி லெனின் கட்டுரை எழுதினார்.
*    இந்திய விடுதலையை ஆதரித்த லெனினை வாழ்த்தி 1920 ஆம் ஆண்டு காபூலில் உள்ள இந்திய புரட்சியாளர்கள் கடிதம் அனுப்பினர். இந்த கடிதத்துக்கு மே 10ஆம் திகதி எழுதிய பதிலில் “மிக தீவிரமான விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இந்தியர்களை” லெனின் பாராட்டினார். 
*    1920-21ஆம் ஆண்டுகளில் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்துப் போராட சிலருக்கு ஆயுதப் பயிற்சி தர எம்.என்.ராயும் அபானி முகர்ஜியும் விரும்பினர். அதற்கான உதவிகளை தருமாறு சோவியத் இராணுவ அதிகாரிகளுக்கு லெனின் ஆணையிட்டார். 

போல்ஷேவிக் கட்சி உறுப்பினர்களுடன் எம்.என்.ராய் (இடமிருந்து நான்காவதாக நின்று கொண்டிருக்கிறார்)

இந்த சந்திப்புகள் மூலம் லெனின்/சுவர்டுலோவ்/டிராட்ஸ்கி உட்பட பல தலைவர்கள் இந்தியச் சூழல்கள் குறித்து ஆழமாக விவாதித்து துல்லியமான மதிப்பீடுகளை உருவாக்கினர். இந்த மதிப்பீடுதான் கம்யூனிஸ்ட் அகிலத்தில் இந்தியா உட்பட காலனி நாடுகளில் அரசியல் அணுகுமுறை உருவாக்க வழிவகுத்தது. 

Tags: