சுபஸ்ரீயின் மரணம்: ஜக்கி ஈஷாவின் மீது தான் சந்தேகம் வலுக்கிறது!
-சாவித்திரி கண்ணன்
நினைத்துப் பார்க்கும் போது நெஞ்சை உலுக்கி எடுக்கிறது இந்த மரணம்? ஆன்மீக மையங்களே ஆபத்தானவையாக பார்க்கப்படுவது பேரவலம்! இது அரசாங்கங்களை மிஞ்சிய அதிகார மையமா? ஈஷா மையத்தில் (Isha Foundation) காணாமல் போன பெண் 13 நாட்கள் சென்று சடலமாக மீட்கப்பட்டுள்ளது பல வலுவான சந்தேகங்களை எழுப்புகிறது!
கிணற்றில் மிதந்த சுபஸ்ரீயின் சடலம் கைப்பற்றப்பட்ட செம்மேடு, ஈஷாவில் இருந்து மூன்றே கி.மீ தொலைவில் தான் உள்ளது!
மன அமைதி வேண்டி தான் அனைவரும் ஈஷா போன்ற ஆன்மீக மையங்களுக்கு செல்கிறார்கள்! அப்படி மன அமைதி வேண்டி சென்ற பெண் ஏன் மன அமைதி இழந்து தலை தெறிக்க பதற்றத்துடன் ஓடியுள்ளார் என்பது ஆச்சரியமளிக்கிறது.
ஏழு நாள் சைலன்ஸ் எனப்படும் அமைதி பயிற்சிக்குச் சென்ற அவர் பயிற்சி முடிந்து வீட்டிற்கு செல்ல வேண்டிய நாளன்று தன்னை அழைத்துச் செல்ல கணவர் வருவார் என்ற நிலையில் முன் கூட்டியே அங்கிருந்து வெளியேறியுள்ளார். அதுவும் பிரதான வாயில் வழியாக வெளியேறாமல் சர்ப்ப வாசல் எனப்படும் சிறிய பகுதி வழியே சென்றுள்ளார்.
தான் கொண்டு வந்த உடைகள், பொருள்கள் எதையும் எடுத்துக் கொள்ளாமல் அவர் வெளியேறி இருப்பதும் வெளியேறும் போது வழக்கமான பாதையை தவிர்த்து குறுக்கு வழியாக வெளியேறியதும், அப்படி வெளியேறிய அவர் நடக்காமல் ஓடுவதும், இடையே ஒரு டாக்சியை நிறுத்தி ஏறியவர் இருட்டு பள்ளம் அருகே இறங்கியதும், இறங்கியவர் கணவனிடம் பேசுவதற்காக வழியில் தென்பட்ட ஒருவரிடம் செல்போனை வாங்கி தொடர்பு கொள்ள முயன்றதும்.. இயல்பான நிகழ்வாக பார்க்க முடியவில்லை! அதனால் தான் இன்று கோவையில் மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சியும், அதன் வாலிபர் மற்றும் மாதர் அமைப்புகளும் இந்த மரணத்தில் உண்மை தெரிய வேண்டும் என போராட்டம் நடத்தி உள்ளன.
ஈஷாவில் அவருக்கு ஏதோ ஒரு மோசமான அனுபவம் ஏற்பட்டதன் விளைவா இந்த நிகழ்வு? அல்லது அங்கு பார்க்க கூடாத எதையாவது இவர் பார்த்ததன் விளைவா? அல்லது அங்கு இவர் கேட்கக் கூடாத கேள்வி எதையும் கேட்டாரா? அதன் விளைவாக அவர்களின் கோபத்தில் இருந்து தப்ப வெளியேறினாரா? ஒன்றும் புரியவில்லை!
டிசம்பர் 18 ஆம் தேதி காணாமல் போகும் அவர் ஜனவரி ஒன்றாம் தேதி சடலமாக கண்டெடுக்கபடுகிறார். சுமார் ஆறு தனிப் படைகள் அமைத்து போலீசார் தேடி வருவதாகச் சொல்லப்பட்டது! ஆனால், கடைசியில் ஈஷாவிற்கு மூன்று கிலோ மீற்றர் அருகில் உள்ள தோட்டத்தில் அவர் சடலமாக கிடப்பதை அதன் உரிமையாளர் சொல்லித் தான் தெரிய வந்துள்ளது.
ஈஷாவை நன்கு அறிந்த வகையில் ஒன்றை உறுதியாகச் சொல்ல முடியும்! ஈஷாவைச் சுற்றி சுமார் இருபது கிலோ மீற்றர் அளவில் உள்ள அனைத்து கிராமங்களிலும் மற்றும் ஊர்களிலும் ஈஷாவின் செயல்பாடுகள் இன்றும் உயிர்ப்போடு நடக்கின்றன! அவர்களின் இயற்கை வேளாண்மை தொடர்பான பயிற்சிகள், கிராமிய கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுகள், யோகா பயிற்சிகள்..என சகல விதத்திலும் சுற்றுவட்டார மக்களுடன் தொடர்பில் உள்ள இயக்கம் ஈஷா! கொங்கு மண்டலம் முழுக்க அவர்களிடம் பயிற்சி பெற்ற பத்து லட்சத்திற்கும் அதிகமானானோர் உள்ளனர். ஆக, தன் அமைப்பில் இருந்து வெளியேறிய ஒரு பெண்ணை அவர்கள் கண்டு பிடிக்க அதிகபட்சம் மூன்று மணி நேரம் போதுமானது.
அந்த அளவுக்கு அவர்களிடம் ‘நெட்வொர்க்’ எனப்படும் சமூக வலைப்பின்னல் உள்ளது. ஈஷா மைய வெள்ளை சீருடையோடு உள்ள ஒரு பெண்ணை அவர்களுக்கு இன்னும் சுலபத்தில் நெருங்கிவிட முடியும். இந்த விவகாரத்தில் அவர்களால் காவல்துறைக்கே உதவ முடியும்! ஈஷா விரும்பி இருந்தால், அந்தப் பெண்ணை அன்றைக்கே அவர் குடும்பத்திடம் சேர்த்திருக்க முடியும்!
ஆறு போலீஸ் படை அமைத்து தேடிய போலீசார் ஈஷா மையத்திடம் ஏன் விசாரணை மேற் கொள்ளவில்லை. அவருக்கு பயிற்சி தந்த யோகா மாஸ்டர், உடன் பயின்றவர்களை விசாரித்தார்களா? ஏன் அங்கு என்ன நடந்தது என்பது மறைக்கப்படுகிறது?
தற்போது மர்மமான முறையில் இறந்து போனவர் தகவல் தொழில் நுட்பத் துறையில் வேலை பார்க்கும் பெண்! ஆக, படித்தவர், விபரமானவர்! 12 வயது குழந்தையின் தாய்! இவரது மரணத்திற்கு நிச்சயம் ஈஷா யோகா மையம் பொறுப்பேற்று விளக்கம் அளிக்க வேண்டும்.
இந்த சம்பவத்திற்கு ஐந்து மாதம் முன்பாக ஆந்திராவை சேர்ந்த இளைஞர் ரமணா என்பவர் ஈஷா யோகா மையத்தின் உள்ளேயே தற்கொலை செய்து இறந்த செய்தி பெரிய அளவில் விவாதிக்கபடாமல் கடந்து போனது!
இதற்கு சில ஆண்டுகள் முன்பு கோவை வடவள்ளியைச் சேர்ந்த ஒரு பெண் ஈஷா பயிற்சி பெற்ற நிலையில் மர்மமாக இறந்தார்! மற்றும் ஒரு மாணவர் இறந்ததாக தகவல்கள் வந்தன!
இன்றைக்கு இருபதாண்டுகளுக்கு முன்பு ஈஷாவில் பயிற்சி எடுத்த இரண்டு இளம் பெண்கள் சத்திய மங்களம் வனப் பகுதியில் வழக்கமாக அவர்கள் அணியும் வெள்ளாடை இல்லாமல் நிர்வாண நிலையில் இறந்து கிடந்த சம்பவத்திலும் இது வரை உண்மை துலங்கவில்லை!
அதற்கும் முன்பாக 1998 வாக்கில் ஜக்கி வாசுதேவ் (Jaggi Vasudev) அவர்களின் மனைவி விஜி என்பவரின் மர்ம மரணம் தொடர்பாக அவரது தகப்பனார் தந்த புகாருக்கும் இன்று வரை நடவடிக்கை இல்லை! அவர் சமாதி நிலையை அடைந்தார் என அப்போது சொல்லப்பட்டது! சமாதி நிலையை அடைய விரும்பும் ஒரு யோகி அதை மிக நெருக்கமானவரக்ளுக்கு அறிவித்தே அமைதியாக சில நாட்கள் தவமிருந்து உயிர் துறப்பார்களே அன்றி, அரைமணி நேரத்திற்கு முன்பு வரையிலும் அன்றாடப் பணிகளை செய்த வண்ணம் அடுத்தவர்களிடம் பேசியபடி இருக்க மாட்டார்கள்! ஆக, சந்தேகத்திற்கு இடமில்லாமல் இதுவும் மர்ம மரணம் தான்!
ஜக்கி ஈஷாவின் பலம் என்பது மத்திய பாஜக அரசோடு அவர்கள் மிக நெருக்கமாக இருப்பது தான்! பிரதமர் மோடி, பா.ஜ.க தலைவர் ஜே.பி நட்டா ஆகியோரெல்லாம் ஜக்கியை தேடி வந்து சந்தித்து செல்லத்தக்க ஆன்மீக அதிகார மையமாக அவர் இருப்பதால், சட்டமும், நீதியும் அவரிடம் செல்லாக் காசகிவிடுகிறதோ என்னவோ?
ஆன்மீகத் தலைவர் என்பவர் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும். சகிப்புத் தன்மை அற்றவராக இருப்பது ஏற்புடைதல்ல!