வியட்நாம், ஈராக் போர் எதிர்ப்பு வழியில் பலஸ்தீன ஆதரவு இயக்கம்

சுஹாசினி ஹைதர் (SUHASINI HAIDAR)

மனித குலத்தின் கவனத்தை ஈர்க்கக்கூடிய மிகக் கடுமையான ஆபத்தான விளைவு களை உள்ளடக்கிய ஒரு விஷயத்தில் நாம் போராடாமல் இருக்க முடியாது. நம்முடைய பேச்சு சுதந்திரம் பறிக்கப்படலாம். ஊமையாகவும் மௌனமாகவும் இருக்கும் நாம் ஆடுகளைப் போல படுகொலைக்கு அழைத்துச் செல்லப்படலாம்.

-ஜோர்ஜ் வாஷிங்டன் .(கி.பி.1783)

கல்வி வளாகங்களுக்குள் மாணவ – மாணவிகள் நடத்துகின்ற போராட்டங்கள் வெறும் சடங்கல்ல . ஆதிக்க அரசின் மூர்க்கத்தனமான அடக்குமுறைக்கு எதிராக தங்கள் வலிமையை  சோதித்துப் பார்க்கும் போர்க்களமாகும். மே மாதம் ஜோர்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் உள்ளே காஸா ஒற்றுமை முகாமில் நான் கண்டதைப் போன்ற ஒருமைப்பாடு நிறைந்த போராட்டத்தை வேறெங்கும் பார்த்ததில்லை. அதுவும் உலகின் மிக சக்தி வாய்ந்த அரசாங்கம் நடைபெறும் வெள்ளை மாளிகைக்கு மிக அருகாமையில் அமைந்துள்ள கல்வி வளாகத்தில் இளைஞர்களும் பெண்களும் போருக்கு எதிராக குரல் எழுப்புவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

ஒக்ரோபர் 7 ஹமாஸ் தாக்குதலுக்கு பிறகு பலஸ்தீனத்தில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட பொதுமக்கள் கொல்லப்பட்டு வருவது உலகை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது. கொலம்பியா பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் மீது காவல்துறை அடக்குமுறையை ஏவியது. லொஸ் ஏஞ்சல்ஸில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பலஸ்தீன சார்பு மற்றும் இஸ்ரேல் ஆதரவு வழங்கிட வன்முறை மோதல்கள் வெடித்ததால் காவல்துறை வரவழைக்கப்பட்டு போராட்டங்கள் ஒடுக்கப்பட்டன. அமெரிக்கா முழுவதும் சுமார் 12 இற்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களில் இந்த மோதல்கள் வெடித்துள்ளன.

காஸா ஒற்றுமை மண்டலங்கள்!

இந்தச் சூழ்நிலையில், கல்வி வளாகங்களில் நடைபெற்று வரும் காஸா ஒற்றுமை மண்டலங்கள் நன்கு ஒழுங்கமைக்கப்பட்டவை. தண்ணீர் போத்தல், சோப், பற்பசை, டோர்ச் லைட்டுகள் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகள் கிடைத்தன. தன்னார்வக் குழுக்கள் உணவுக் கடைகளை நடத்தினர். திடீர்த் தேவைகளுக்காக மளிகைக்கடை கூட இருந்தது. பேச்சாளர்களின் சொற்பொழிவுகள் நடந்தன. முஸ்லிம் மாணவர்கள் தொழுகை செய்ய ஒரு மூலையில் பாய்களும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

பலஸ்தீன இயக்கத்தின் ஒற்றுமையின் அடையாளமான “அரபு கிபியே”(Arab keffiyeh) தலைப்பாகையை போராட்டக்காரர்கள் கட்டியிருந்தனர். ஜோர்ஜ் வாஷிங்டன்- அமெரிக்காவின் ஸ்தாபகத் தலைவர்- முதல் ஜனாதிபதியின் சிலை பலஸ்தீன கருப்பு, வெள்ளை, பச்சை மற்றும் சிவப்பு கொடியால் மூடப்பட்டது. அவரது முகம் மற்றும் உடல் முழுவதும் இஸ்ரேல் எதிர்ப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன. ஸ்பிரே பெயிண்ட்டும் அடிக்கப்பட்டது.

இரு நாடு அல்ல,  1948 தான் எம் கோரிக்கை!

இலாப வேட்டைக்காக போர் வேண்டாம்! சுதந்திரப் பலஸ்தீனம் வேண்டும்! இஸ்ரேலுக்கு செய்யும் நிதி உதவியை நிறுத்து! என்று அமெரிக்க அரசுக்கு கட்டளையிட்டனர். இஸ்ரேலிய முதலீடுகளையும் நிதி  பரிவர்த்தனைகளையும் அமெரிக்க பல்கலைக் கழகங்கள் உடனடியாக கைவிட வேண்டும் என்றும் கோஷம் எழுப்பினர். ஐ.நா தீர்மானத்தின் மூலம் இஸ்ரேலிய அரசு உருவாக்கப்படுவதற்கு முன், அதாவது 1948 ஆம் ஆண்டுக்கு முன்பு இருந்தபடி எங்களுக்கு பலஸ்தீனம் வேண்டும் என்றும் அவர்கள் கோரினர்.

எதிர்த் தாக்குதல் நியாயமே!

இனப்படுகொலையை எதிர்கொள்ளும் பொழுது எதிர்ப்பும், தாக்குதலும் நியாயமே என்ற கோஷத்தை அங்கே கேட்க முடிந்தது. சுதந்திரமான பேச்சு மற்றும் வெறுப்பூட்டும் பேச்சு, இரண்டுக்குமிடையிலான கோடு மிகவும் மெல்லியது. இது குறித்து விவாதங்களும் நடைபெற்றன. மேற்கு ஆசியாவில் அமெரிக்காவின் தலையீடு இரத்தம் தோய்ந்த அந்த வரலாற்றுடன் பின்னிப்பிணைந்த ஒன்று. அதுவும் தேர்தல் நடைபெறும் ஆண்டில் முக்கிய பிரச்சனையாக மாற்றப்பட்டுள்ளது.

அமெரிக்க மாணவர்களின் போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு அதன் அரசியல் தலைமையில் இருந்து ஆதரவு எதுவும் இல்லை. மாணவர்கள் காவல்துறையால் ஒடுக்கப்பட்டதை அழகானது என வர்ணித்தார் டிரம்ப், யூத எதிர்ப்பு போராட்டங்கள் ஒடுக்கப்பட வேண்டும் என பைடன் கண்டித்தார். இரண்டு கட்சிகளையும் தவிர்த்து மூன்றாவது தேர்வு அமெரிக்க மக்களிடம் வெளிப்படலாம் என்றும் மாணவர்கள் விவாதித்தனர்.

எங்கள் பெயரில்  தாக்குதல் வேண்டாம்!

பல்கலைக்கழகங்களை அவமதிப்பதாக குற்றம் சாட்டப்படுகின்றது. காஸாவில் உள்ள எல்லா பல்கலைக்கழகங்களையும் இஸ்ரேல் குண்டு வீசி நாசப்படுத்தி உள்ளதே, அமெரிக்கா அதைப்பற்றி ஏன் கவலைப்படவில்லை என மாணவர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால், உண்மையில் யூத மாணவர்களையும் இந்த போராட்டம் இணைத்துள்ளது. பலஸ்தீன ஒருமைப்பாட்டு குரலையும் ஒலிக்கச் செய்துள்ளது.

எங்கள் பெயரில் காஸா மீது தாக்குதல் வேண்டாம் என்ற பதாகையை யூத மாணவர்கள் ஏந்தி வந்தனர். பேராசிரியர்கள் ஒதுங்கி நின்றாலும் பலர் இரு பிரிவு மாணவர்களுக்கும் இடையே அமைதிப் பாலத்தை உருவாக்க முயன்றனர். காவல்துறை மாணவர்களை வகுப்பறைக்குச் செல்லுமாறு கேட்டுக் கொண்டது. ஆனால் பலஸ்தீன கொடியை அவர்கள் ஏந்துவதை தடுக்க முடியவில்லை. அமெரிக்கக் கொடியை மாணவர்கள் கழற்றி எறிந்த போது செய்வதறியாது திகைத்து நின்றது.

காலத்தின் பயணம்!

1990 இல் ஜோர்ஜ் டபிள்யூ புஷ் முதலாவது ஈராக் போரை துவக்கிய போது 50 இற்கும் மேற்பட்ட பல்கலைக் கழகங்களை கொண்ட பொஸ்டன்  நகரில் நடந்த போராட்டங்களில்  மாணவப் பருவத்தில் எங்களைப் போன்ற வெளிநாட்டு மாணவ- மாணவிகள் பங்கேற்கக்  கூடாது, விசாவை இழக்க நேரிடும் என்றெல்லாம் மிரட்டப்பட்டோம். பாஸ்டன் பல்கலைக்கழக பாலத்தின் மீது போர் எதிர்ப்பு மற்றும் ஆதரவு மாணவர்களுக்கும் இடையே மோதல், காவல் துறை தடியடி, கண்ணீர்ப் புகை என்றெல்லாம் பார்த்துள்ளோம். ஆனால் அமெரிக்க வெளியுறவுக் கொள்கை குறித்து மாணவர்களுடைய ஆவேசம் நிறைந்த பேச்சும்  கருத்து மோதலும் மறக்க முடியாதது. பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்திரம் அனுமதிக்கப்பட்டது.

ஆனால் இன்றைய நிலைமையோ வேறு. மாணவ, மாணவிகள் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர். மே 8 ஆம் திகதி காஸா ஒற்றுமை முகாம்கள் பிய்த்து எறியப்பட்டன. கூடாரங்கள் அகற்றப்பட்டன. 33 பேர் கைது செய்யப்பட்டனர். பல்கலைக்கழக வளாகம் காவல்துறையினரால் முற்றுகை இடப்பட்டது. அப்போதும் வாஷிங்டன் சிலை மூடப்பட்டு தான் இருந்தது. தேசத்தின் ஸ்தாபக தந்தையை இழிவுபடுத்துவது பலருக்கு திகைப்பை ஏற்படுத்தினாலும் 1783 ஆம் ஆண்டு இராணுவ அதிகாரிகளிடம் வாஷிங்டன் ஆற்றிய நியூ பர்க் உரை அர்த்தம் நிறைந்தது. ஒரு தேசத்தின் சுதந்திரமும் இறையாண்மையும் விலை மதிப்பற்றது.

1960களில் சிவில் உரிமைகளுக்கான அணி வகுப்பிலிருந்து தொடங்கி வியட்நாம், ஈராக் போர் எதிர்ப்பு வழியாக இன்று பலஸ்தீன ஆதரவு முகாம்கள் வரையிலான இயக்கங்கள் அமெரிக்கா  பல்கலைக்கழகங்களில் நடந்த பல போராட்டங்களின் அழுத்தமான சாட்சி. அமெரிக்கக் கொள்கைகள் ஒரு குறுகிய கால  மாற்றத்தைக் கூட கண்டதில்லை. ஆனால் அமெரிக்க வரலாற்றில்,மிக நீண்ட காலத்திற்கு ஒவ்வொரு போராட்டமும் அதன் முக்கியத்துவத்தை பதிவேற்றி காலம் பயணிக்கிறது.

மூலம்: Inside the ‘Liberation Zone’ at George Washington University
தமிழில்: கடலூர் சுகுமாரன்

Tags:

Leave a Reply