ஜி20 மாநாடு பாரதிய ஜனதாக்கட்சி அரசின் சாதனையா?

-ச.அருணாசலம்

ஜி 20 (G20) உச்சி மாநாட்டை முதன் முதலாக இந்தியாவில் நடத்திய பெருமையை தேர்தல் அரசியல் வெற்றியாக்கிக் கொள்ள முயல்கிறது பா.ஜ.க அரசு! இந்த மாநாடு நடந்த விதம், இதில் எடுக்கப்பட்ட முடிவுகள், இந்தியாவின் பங்குபாத்திரம் என்ன? உலக அரசியலில் இந்தியா எந்தப் பக்கம் நிற்கிறது? அலசுகிறது இக்கட்டுரை:

18வது ஜி 20 உச்சி மாநாடு செப்டம்பர் 9,10 ல் கோலாகமாக நடந்து ஞாயிற்றுக்கிழமை ”புது டெல்லி பிரகடனத்துடன்” முடிவுக்கு வந்தது, அடுத்த தலைமை பொறுப்பு பிரேசில் நாட்டிற்கு கிடைத்துள்ளது.

910 கோடி ரூபாய்களே ஒதுக்கப்பட்ட  நிலையில் 4,300 கோடி ரூபாய்கள் செலவு செய்ததே.., ஒரு வகை முறைகேடு தான்! அதிலும், எங்கு திரும்பினாலும், தனது மூஞ்சியையே போஸ்டராக போட்ட மோடி, ஆறு மாதத்திற்கும் மேலாக ஊர்ஊராக கிளை மாநாடு போல் நடத்திய ஒன்றிய அரசு, எதிர்கட்சி தலைவரைக் கூட விருந்துக்கு அழைக்காத ‘பெருந்தன்மை ‘ நிறைந்த மோடி அரசு இந்த “வெற்றியை ” மோடியின் விஷ்வ குரு”  நிலைக்கு கிடைத்த வெற்றி என மார் தட்டுகிறது. 2024 தேர்தலில் இது மோடிக்கு பலம் கொடுக்கும் எனவும் எண்ணுகின்றனர்.

ஆனால், ‘குளோபல் சௌத்’ (Global South) எனப்படும் ஆசிய, ஆபிரிக்க, தென் அமெரிக்க நாடுகளின் “தலைமை இடம்” காலியாக இருப்பதாக நமக்கு தெரியவில்லை. வலுவான சீனாவை விடுத்து, ஆபிரிக்க கண்டத்தில் தென் ஆபிரிக்கா நாடும் , தென் அமெரிக்க நாடுகளில் பிரேசில் நாடும் தெற்கு நாடுகளுக்கு தலைவர்களாக வளர்ந்துள்ளனர். மேலும், இவர்கள் சீனத்திற்கு எதிரானவர்கள் அல்ல, அமெரிக்க ஆதரவாளர்களும் அல்ல. இன்றைய உலகின் ஏற்றத் தாழ்வான நிலைக்கு அமெரிக்காவும் மேலை நாடுகளுமே காரணம் என்ற உண்மையை அறிந்த தலைவர்கள்!

ஜி 20 மாநாடு குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறுகையில், ‘பிரதமர் மோடியிடம் மனித உரிமைகளுக்கு மதிப்பளிப்பது, பத்திரிகைகளுக்கு சுதந்திரம் வழங்குவது ஆகியவை தான் வளமான, வலுவான தேசத்தை உருவாக்க உதவும் என்று வலியுறுத்தினேன்’ என்று அறிவுறுத்தி உள்ளது கவனத்திற்கு உரியது. சீன அதிபர் இந்த மாநாட்டில் பங்குபெறவில்லை. மாநாட்டின் இறுதியில் கூட பத்திரிகையாளர்களை சந்தித்து பேச அஞ்சி மோடி தவிர்த்ததையும் உலகத் தலைவர்கள் கவனித்தனர்.

இன்றிருக்கும் உலகச்சூழலில் அமெரிக்க மேலாண்மையை , ஆதிக்கத்தை எதிர்த்து தனி வழி காணும் அளவிற்கு வளர்ந்து விட்ட சீனம் , உலக நாடுகளுக்கிடையிலான உறவும் வளர்ச்சியும்  ‘இளைத்தவன் -வலுத்தவன் ‘ என்ற நிலையிலிருந்து மீண்டு, அனைத்து நாடுகளின் நலனையும், வளர்ச்சியையும் கருத்தில் கொண்டதாக இருக்க வேண்டும் என்று பகிரங்கமாக கூறி வருகிறது. அமெரிக்கா இழந்துவிட்ட செல்வாக்கை சரி செய்ய, சீனாவை தனிமைப்படுத்தும் முயற்சியில் ‘ பனிப்போர்’ (cold war) சூழலை ஏற்படுத்த பல கூட்டணிகள், அமைப்புகளை உலகில் ஏற்படுத்தி வருகிறது.

உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்காவும், நேட்டோ மற்றும்  ரஷ்ய நாட்டின் ”ஆக்கிரமிப்பை” கண்டித்தும், நேட்டோவை விரிவு படுத்தவும் முயல்கின்றனர், ரஷ்ய நாட்டிற்கு எதிராக பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்தது.  இத்தடைகளால் உலக நாடுகளில் உணவுப் பற்றாக்குறையும், எரிசக்தி பற்றாக்குறையும் தலைவிரித்தாடியது. ஏற்கனவே கோவிட் பெருந்தொற்றால் பெரும் பாதிப்புக்குள்ளான குளோபல் சௌத் எனப்படும் ஆசிய, ஆப்ரிக்க மற்றும் தென் அமெரிக்க நாடுகள் இந்த பொருளாதார தடைகள் மூலம் தாங்கவொண்ணா கொடுமைகளை சந்தித்தன. சமாதானத்தை முன்னிறுத்தாமல் சண்டையை தூண்டிவிடும் அமெரிக்க மற்றும் நேட்டோ நாடுகளின் பொருளாதார தடையை இந்நாடுகள் ரசிக்கவில்லை.

இந்தச் சூழலில் தான் கடந்த மாதம் பிரிக்ஸ் மாநாடு- பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்ரிக்கா- நாடுகளின் மாநாடு- தென்ஆப்ரிக்காவில் நடந்தது.

இக்கூட்டமைப்பு அரசியல் மற்றும் பொருளாதார பலம் பெற்று விளங்குகிறது. இது மேலைநாடுகளுக்கு குறிப்பாக அமெரிக்க டொலருக்கும் மேலாதிக்கத்திற்கும் ஒரு சவாலாக முளைத்துள்ளது.

உலகச் சூழல் இவ்வாறிருக்க உள்நாட்டிலோ – நம் இந்திய நாட்டிலோ-  நிலைமைகள் மிக மோசமாகவே உள்ளன. என்னதான் மோடி அரசு அதிவேகமாக வளர்ச்சியுறும் நாடுகளில் ஒன்று இந்தியா என தம்பட்டமடித்தாலும், இந்திய பொருளாதாரம் 2016 இற்கு முன்பிருந்த நிலையை இன்னும் எட்டவில்லை என்பதே உண்மை.

பணமதிப்பிழப்பு என்ற முட்டாள்தனத்தினால் வீழ்ந்த இந்திய பொருளாதாரம் இன்று , வரலாறு காணா வேலையின்மை, விலைஏற்றம், உணவுப்பொருள்களின் விலை உயர்வு மற்றும் மக்களிடையே வாங்கும் திறன் இன்மை போன்ற பிரச்சினைகளை எதிர் நோக்கி உள்ளது.

 ஜும்லாக்கள் மட்டுமே தெரிந்த மோடி அரசு தொட்ட துறைகளையெல்லாம் உடைத்து நாசமாக்கி வருகிறது, சட்டத்துக்கு புறம்பாக க்ரோனி காப்பிட்டலிசத்தை (crony capitalism) வளர்த்தெடுக்கிறதுமோதானி என்றால், சிறுபிள்ளையும் புரிந்து கொள்ளும் நிலையாக மோடி-அதானி கள்ள உறவு இந்திய நலன்களுக்கெதிராக வளர்ந்து விஸ்வரூபம் எடுத்துள்ளது.

வெறுப்பு அரசியலும், ஜனநாயக மறுப்பும் மணிப்பூர் போன்ற ரணங்களை ஏற்படுத்தி ஒட்டுமொத்த இந்தியா முழுவதும் பெரும்பான்மை வாதத்தையும் ஜனநாயகச் சீரழிவையும் ஏற்படுத்தி உள்ளது.

இந் நிலையில் இந்தியாவில் உள்ள 26 இற்கும் அதிகமான எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து ‘இந்தியா’ (I.N.D.I.A) என்ற கூட்டணியை ஏற்படுத்தி நெருக்கடி கொடுக்கின்ற வேளையில் இந்த ஜி20 மாநாடு நடைபெற்றுள்ளது.

ஜி7 நாடுகளான அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், பிரான்சு, ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் தங்களின் இயலாமையை உணர்ந்து தங்கள் நிலையினின்றும் “இறங்கி” வந்து பிரகடனத் தீர்மானத்தின் வாசகங்களை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் தங்களின் நிலையிலிருந்து மாறுபடவில்லை. இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பிரேசில், இந்தோனேஷியா நாடுகள் இந்த ஒத்திசைவை ஏற்படுத்த பெரிதும் உதவின என்று தனது நன்றியை கூறியுள்ளார். இந்தியாவின் ஜி20 ஷெர்பா (தலைமை முயற்சியாளர்) அமிதாப் காந்த் என்ற அதிகாரி 200 மணி நேரங்கள் இந்த ஒற்றுமை நிலையை அடைய செலவிட வேண்டியதாயிற்று என்று கூறியுள்ளார்.

இது இந்தியாவிற்கான வெற்றியா? மோடிக்கான வெற்றியா? ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளின் வெற்றியா? அல்லது பிரேசில் இந்தோனேஷியா ஆகிய நாடுகளின் வெற்றியா? அல்லது ஜி7 நாடுகளின் மறைமுக வெற்றியா?

“சீனத்தை தனிமைப்படுத்த இந்தியாவை துருப்பு சீட்டாக பயன்படுத்த எண்ணும் ஜி7 நாடுகள் , இந்தியாவில் – இந்திய தலைமை பொறுப்பில் – நடைபெறும் இம்மாநாடு தோல்வியில் முடியக் கூடாது என்று எண்ணி தங்களது நிபந்தனைகளை சிறிது தளர்த்தி குளோபல் சௌத் நாடுகளுக்கான தலைவர் இந்தியா என உறுதிப்படுத்த இந்த சமரசத்தை செய்து கொண்டன” என்று முன்னாள் இந்திய வெளியுறவு செயலர் திருமதி. நிருபமா சுப்ரமணியன் கூறியுள்ளார்.

இதற்கு கைமாறாக இந்தியா, அமெரிக்கா இராணுவக் கப்பல்களுக்கு உதவ இந்தியா முழுவதும் உள்ள துறைமுகங்கள் “உதவித் தளங்களாக” மாற்றப்படுகிறது என்பது இந்தோ – அமெரிக்க கூட்டு அறிக்கையின் “வாசகங்கள்” உணர்த்துவதாக காங்கிரஸ் கட்சியை சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் திரு. மணீஷ் திவாரி குற்றஞ்சாட்டுகிறார்.

இரண்டாவது முக்கிய அறிவிப்பாக இம்மாநாட்டில் வந்துள்ள செய்தி இந்தியா – மேற்காசியா – கிழக்கு ஐரோப்பாவை ரயில் மற்றும் சாலை இணைப்புகள் மூலம் ஒரே பொருளாதார மண்டலமாக மாற்ற இம்மாநாட்டில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இம்முயற்சிக்கு அமெரிக்கா நிதி உதவி செய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும் என்றும் அமெரிக்கா கூறுகிறது. சீனாவை தனிமைப்படுத்தும் எண்ணத்தில் இந்தியாவையும் , சவூதி அரேபியாவையும் ‘கொம்பு சீவி’ விட்டு களமிறக்குவதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

அடுத்ததாக ஆபிரிக்க யூனியன் இந்த ஜி20 நாடுகளின் கூட்டணியில் ஒரு உறுப்பினராக இணைந்துள்ளது இம்மாநாட்டின் வெற்றியாக கூறப்படுகிறது.

காலநிலை மாற்றங்களால் (climate change) ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றங்களும், அதனால் ஏற்படும் இயற்கை பேரழிவுகளும் குளோபல் சௌத் நாடுகளை அச்சுறுத்துகின்ற வேளையில், அதற்கு உதவிட பத்து ட்ரில்லியன் டொலர்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டாலும், படிம எரிபொருள் (நிலக்கரி போன்ற) உபயோகத்தை குறைக்க உறுதியான இலக்கை நிர்ணயிக்கவில்லை.

இம்மாநாட்டின் மூலம் ரஷ்யா பலவீனப்பட்டுள்ளதா? என்று நோக்கினால் , உண்மையில் ரஷ்யாவை உக்ரைன் யுத்தத்தின் மூலமாக தனிமைப்படுத்தி வீழ்த்த நினைத்த அமெரிக்காவும் நேட்டோ நாடுகளும் இன்று தோல்வியின் விளிம்பில் விழி பிதுங்கி நிற்பதை இம்மாநாடு வெளிச்சம்போட்டு காட்டியுள்ளது. 2024 இல் ஜனாதிபதி தேர்தலை எதிர் நோக்கியுள்ள ஜோ பைடன் உக்ரைன் போரில் வெற்றி பற்றி அமெரிக்க மக்களிடையே பேசத் தயாராய் இல்லை!

எப்படியாவது சீனாவை இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் தனிமைப்படுத்தி விட்டால் அது தமது தேர்தலுக்கு உதவும் என்று ஜோ பைடன் எண்ணி உக்ரைனை “கை கழுவி” விட்டார். இதனால் தான் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ‘’ஜி20 மாநாட்டு பிரகடனம் பெருமைப்படும் தீர்மானமல்ல’’ என்று குறிப்பிடுகிறார்

கடந்த ஆண்டு உக்ரைன் யுத்தத்தின் போது நான்கு நாட்கள்  மோடி போர் நிறுத்தத்தை கொண்டுவந்தார் என பெருமை பேசிய சங்கிகள், இன்று இதற்கு என்ன சொல்வார்கள் என எண்ணினால் நகைப்பு தான் வருகிறது.

இப்படியாக தட்டுத்தடுமாறி அகில உலக அரசியல் சூழல்களால் சமரசம் ஏற்பட்டதை பா.ஜ.க வினரும், மோடியும் தங்களது வெற்றி என்று கொண்டாடுவது தவிர்க்கமுடியாதது. வெறும் வாயை மெல்பவர்களுக்கு “அவல்” கிடைத்தால் விடுவார்களா?

இந்தியாவின் மோடியும் சீனத்தை எதிர்க்க துணிந்தவர் அல்ல, சீனத்திற்கு பயந்து தான் அமெரிக்காவை அதிகமாக அண்டுகிறார்! இதனால் தான் இவருக்கு – இவர் உள்நாட்டில் நிகழ்த்தும் வெறுப்பு அரசியலும், சிறு பான்மையினர் உரிமை மறுப்பும், ஜனநாயக விரோத  நடைமுறைகளையும் சகித்துக் கொண்டு- அமெரிக்கா “சிவப்புக்கம்பளம்” விரித்து இவரை “தாதா” வாக்க முயல்கிறது. மோடியோ இதன் மூலம் தன்னை ‘விஷ்வகுரு’ என பறைசாற்றி தேர்தல் ஆதாயம் அடைய முயலுகிறார் .

வெற்றிக் கனி யாருக்கு ? மக்களுக்கே வெளிச்சம்!

Tags: