பில்கிஸ் பானு மனு தள்ளுபடி: இதுவரை நடந்தது என்ன?

ஜெ.பிரகாஷ்

குஜராத் வன்முறை சம்பவத்தில் பாலியல் தாக்குதலுக்குள்ளான பில்கிஸ் பானு தொடர்ந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

குஜராத்தில் அரங்கேறிய வன்முறை

நாட்டை உலுக்கிய கலவரங்களில் இன்னும் பல பேருடைய மனங்களில் நினைவலையாக இருப்பது குஜராத் கலவரம். கடந்த 2002ம் ஆண்டு பெப்ரவரி 27ஆம் தேதி கோத்ரா ரயில் நிலையம் அருகே சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில் கரசேவர்கள் வந்த இரு பெட்டிகளில் மர்மநபர்கள் தீவைத்தனர். இதில் ரயில் பெட்டிகளில் பயணம் செய்த 59 கரசேவகர்கள் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் மிகப்பெரிய அளவில் வன்முறை வெடித்தது. இதற்கு முஸ்லிம்கள்தான் காரணம் என குஜராத் முழுவதும் கலவரம் வெடித்தது. குறிப்பாக, ‘குல்பர்க் சொசைட்டி’ என்று அழைக்கப்படும் குடியிருப்பு வளாகம் தீ வைத்து எரிக்கப்பட்டது.

இதில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்பியான இஹ்ஸான் ஜாஃப்ரி உள்ளிட்ட 69 பேர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர். 2 வாரங்கள் கட்டுக்கடங்காமல் நடந்த வன்முறையில் முஸ்லிம்களின் 20 ஆயிரம் வீடுகள் மற்றும் கடைகள், 360 மசூதிகள் அழிக்கப்பட்டன. இதில், 1.5 இலட்சம் முஸ்லிம் மக்கள் உயிர் பிழைப்பதற்காக வேறு இடங்களுக்குத் தப்பிச் சென்றனர்.

தப்பிச் சென்ற பில்கிஸ் பானு (Bilkis Bano)

அந்த தப்பிச் சென்ற மக்களில் இன்று உயிர் பிழைத்து, நீதிக்காக உச்சநீதிமன்றத்தை நாடியிருக்கும் பில்கிஸ் பானுவும் ஒருவர். ஆம், அந்த கொடுமையிலிருந்து அவர் மீண்டுவந்தது பெரும்கதை.

அகமதாபாத் அருகே உள்ளது ரன்திக்பூர் கிராமம். இந்தக் கிராமம் கோத்ரா ரயில் எரிப்பு நடைபெற்ற இடத்திலிருந்து குறைந்த தூரத்திலேயே உள்ளது. அக்கிராமத்தைச் சேர்ந்தவர்தான் பில்கிஸ் பானு. அப்போது அவருக்கு வயது 19. ஏற்கெனவே ஒரு குழந்தைக்குத் தாயாக இருந்த பானு, இரண்டாவது குழந்தையை வயிற்றில் சுமந்து இருந்தார்.

ஐந்துமாத கர்ப்பிணியான பில்கிஸ் பானு, தனது குடும்பத்தினர் 17 பேருடன் கலவரக்காரர்கள் கையில் சிக்காமல் இருக்க அடைக்கலம் தேடி ஒவ்வோர் ஊராய் ஓடினார். ஆனாலும் விதி, பில்கிஸ் பானுவை துரத்தியது. பனிவெல் எனும் கிராமத்துக்கு அவர்கள் சென்றபோது, இரண்டு ஜீப்களில் வந்தவர்களிடம் அந்த குடும்பம் சிக்கியது. வந்தவர்கள், அவர்களைக் கொடூரமாகத் தாக்கினர்.

பில்கிஸ் பானுவின் கையிலும், காலிலும் வெட்டுக் காயங்கள் விழுந்தன. அத்துடன் மட்டும் அவரை விடவில்லை. அவருடைய ஆடைகளை கிழித்தெறிந்து, அவரை கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினர். தாம், ஐந்து மாத கர்ப்பிணி என்றும், இரக்கம் காட்டுமாறும் பில்கிஸ் பானு அவர்களிடம் மன்றாடிய போதும், கலவரக்காரர்களுக்கு அது எதுவும் காதில் ஏறவில்லை. அனைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்காக மாறிப்போனது.

அதேநேரத்தில், அப்போது இரண்டு நாட்களுக்கு முன்பாக பிரசவித்திருந்த பானுவின் உறவுக்காரப் பெண்ணையும் அந்தக் கும்பல் பலாத்காரம் செய்து கொன்றுபோட்டது. பில்கிஸ் பானு சுயநினைவிழந்து போனதால், அவரும் இறந்துவிட்டதாக நினைத்து கலவரக்காரர்கள் போய்விட்டார்கள்.

அதனால் பானு உயிர் பிழைத்தார். இந்த வன்முறையில், பானுவின் குழுவில் எட்டுப் பேர் கொல்லப்பட்டனர். அதில், மற்ற ஆறு பேர்களைக் காணவில்லை. பில்கிஸுடன் அவரது ஆண் குழந்தையும் மற்றொரு ஆண் நபருமே உயிர் தப்பினர்.

புகாரை மாற்றி எழுதிய போலீசார்!

பின் சுயநினைவுக்குத் திரும்பிய பில்கில்ஸ் பானு, இரத்தம் தோய்ந்த உடலை, உள்ளாடையால் மூடிக்கொண்டு அருகே இருந்த பழங்குடியின கிராமத்திற்குச் சென்றார். அவர்கள் பானுவுக்கு ஆடை கொடுத்து உதவினர். அப்போது வந்த போலீஸாரிடம் தஞ்சமடைந்த பானு, அவர்களிடம் நடந்ததைக் கூறியுள்ளார்.

ஆனால், அவர் அளித்த புகார் எதையுமே போலீசார் பெறாமல், அவரிடமிருந்து வெறும் கைரேகையை மட்டும் பெற்றுக்கொண்டு தங்கள் இஷ்டத்துக்கு எழுதிக்கொண்டனர். இதுகுறித்து அவரே, பிபிசி தமிழுக்கு பேட்டியளித்துள்ளார். இந்த சம்பவத்துக்குப் பிறகு பில்கிஸ், கோத்ராவில் அமைக்கப்பட்டிருந்த முகாமிற்கு அனுப்பப்பட்டார்.

அங்கு 15 நாட்களுக்கு பின்னர் தன்னுடைய கணவருடன் சேர்ந்துகொண்டார். பாலியல் தாக்குதலிலிருந்து தப்பிப் பிழைத்த தன்னுடைய இரண்டாவது குழந்தையையும் அங்கேயே பெற்றெடுத்தார். அகமதாபாத் லிம்கேடா காவல் துறையினர் அவருக்கு ஆதரவளிக்காததைத் தொடர்ந்து, மாவட்ட நீதிமன்றத்தை பானு நாடினார். போதிய சாட்சியங்கள் இல்லையென்று குஜராத் குற்றவியல் நீதிமன்றம், 2003ஆம் ஆண்டு இவ்வழக்கை முடித்து வைத்தது.

சிபிஐ நீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

இதைத் தொடர்ந்து தேசிய மனித உரிமைகள் ஆணையத்தை பில்கிஸ் பானு அணுகினார். 2004 ஜூலையில் தன்னுடைய வழக்கிற்கு குஜராத்தில் நீதி கிடைக்காது என்று வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தை நாடினார் பானு. இதையடுத்து இவ்வழக்கு மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி டி.யு.சால்வி 2008 ஜனவரி 21இல் தீர்ப்பளித்தார்.

’பாலியல் வல்லுறவு, கொலை உள்ளிட்ட 4 கொடிய குற்றங்களைச் செய்த 11 பேரைக் குற்றவாளிகள்’ என அறிவித்து அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்தார் நீதிபதி. இதை எதிர்த்து 11 பேரும் மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

அதேபோல், முக்கிய குற்றவாளிகளின் தண்டனையை அதிகரிக்க வேண்டும் என்றும், வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் அரசு மருத்துவர்கள் உள்ளிட்ட 7 பேரையும் குற்றவாளிகள் என அறிவிக்க வேண்டும் என்றும் மும்பை உயர் நீதிமன்றத்தில் சிபிஐயும் மேல்முறையீடு செய்தது.

இது தொடர்பான விசாரணையின் முடிவில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டை மும்பை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. குற்றவாளிகள் 11 பேர் மீதான ஆயுள் தண்டனையையும் உறுதிப்படுத்தியது. குற்றம்சாட்டப்பட்டவர்களைக் காப்பாற்றும் விதமாக பில்கிஸ் பானுவின் புகாரை திரித்து பதிவு செய்ததற்காக தலைமைக் காவலர் தண்டிக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து, குற்றவாளிகள் 11 பேரும் 2008 முதல் சிறையில் இருந்து வந்தனர். மேலும், குஜராத் அரசு வழங்கிய 5 லட்ச ரூபாய் இழப்பீட்டை ஏற்க மறுத்த பில்கிஸ் பானு, உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். ஏப்ரல் 2019இல் உச்சநீதிமன்றம் பில்கிஸ் பானுவிற்கு 50 இலட்ச ரூபாய் இழப்பீடு வழங்குமாறு குஜராத் அரசிற்கு உத்தரவிட்டது.

மாநில அரசு எடுத்த முடிவு!

இந்த நிலையில், இவ்வழக்கில் 15 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையிலிருந்த குற்றவாளிகளில் ஒருவர், குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 432, 433இன் கீழ் தண்டனையை ரத்து செய்யக் கோரி குஜராத் உயர் நீதிமன்றத்தை அணுகினார். இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இம்மனுவை விசாரித்த நீதிபதிகள், குற்றத்தின் வழக்கு விசாரணை, மும்பையில் நடந்திருந்தாலும் குற்றம் குஜராத்தில்தான் நடந்திருக்கிறது.

எனவே, வழக்கில் விசாரணை முடிந்து தண்டனை விதிக்கப்பட்ட பிறகு குற்றவாளியின் தண்டனையை குறைப்பது குறித்து முடிவு எடுக்கும் அதிகாரம் குஜராத் அரசுக்குத்தான் இருக்கிறது என்றும், ஆகையால், மனுதாரரின் மனு மீது இரண்டு மாதத்தில் முடிவு செய்யும்படி மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, குஜராத் அரசு, பஞ்சமஹால் மாவட்ட ஆட்சியர் சுஜல் மயாத்ரா தலைமையில் 11 பேர் கொண்ட குழுவை அமைத்தது. இந்த குழு 11 குற்றவாளிகளின் விடுதலைக்கு ஆதரவாக ஏகமனதாக முடிவெடுத்தது. அதன்படி, 11 ஆயுள் தண்டனை கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கிய குஜராத் அரசு, தண்டனைக் காலம் முடியும் முன்பே அவர்களை கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி (2022) விடுதலை செய்தது.

ஆட்சியர் சுஜல் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில் 2 பாஜக எம்எல்ஏக்களும் இடம் பெற்றிருந்ததது குறிப்பிடத்தக்கது. இவர்களின் விடுதலை குறித்து குஜராத் மாநில அரசு, ’கடந்த 1992ஆம் ஆண்டு குஜராத்தில் அமல்படுத்தப்பட்ட சிறைக் கைதிகள் தண்டனைக் குறைப்பு கொள்கை அடிப்படையில், அவா்கள் 14 ஆண்டுகள் சிறையில் இருந்துள்ளனர். மேலும், அவர்களின் நன்னடத்தை காரணமாக விடுதலை செய்வதாகவும், இதற்கு மத்திய அரசின் ஒப்புதலை பெற்று இருக்கிறோம்’ எனவும் குஜராத் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

எனினும், உச்ச நீதிமன்றம், குற்றவாளிகள் 11 பேர் முன்கூட்டியே விடுவிக்கப்பட்டது தொடர்பாக விரிவான பிரமாணப்பத்திரத்தை தாக்கல் செய்ய குஜராத் அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி குஜராத் அரசு தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில், மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதியளித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

விடுதலைக்கு சிபிஐ எதிர்ப்பு!

ஆனால், 11 பேரையும் தண்டனைக் காலத்துக்கு முன்கூட்டியே விடுவிக்க சிபிஐ அமைப்பும், சிறப்பு விசாரணை நீதிமன்றமும் எதிர்ப்புத் தெரிவித்தன. இது தொடர்பாக சிபிஐ அமைப்பு, கோத்ரா கிளைச்சிறை கண்காணிப்பாளருக்கு எழுதிய கடிதத்தில் “குற்றவாளிகள் 11 பேரும் கொடூரமான, இரக்கமற்ற, தீவிரமான குற்றத்தைச் செய்தவர்கள். அவர்களை தண்டனைக் காலத்துக்கு முன்பே விடுவிக்கக் கூடாது அவர்களுக்கு கருணை காட்டக்கூடாது” எனத் தெரிவித்திருந்தது.

அதுபோல் சிறப்பு நீதிமன்றம், “குற்றவாளிகள் 11 பேரும் பாதிக்கப்பட்டவரின் மதத்தை அடிப்படையாக வைத்து குற்றம் செய்துள்ளனர். இந்த செயலில் பச்சிளம் குழந்தையைக்கூட விட்டுவைக்கவில்லை. இவர்களை முன்கூட்டியே விடுவிக்கக்கூடாது” எனத் தெரிவித்திருந்தது.

அதேநேரத்தில், குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதுமே பில்கிஸ் பானு, ‘எனது குடும்பத்தையும், என் வாழ்க்கையையும் சீரழித்த 11 குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாட விடுதலை செய்யப்பட்டனர் என்று கேள்விப்பட்டேன். அது முதல் நான் இன்னும் உணர்ச்சியற்றவளாக இருக்கிறேன். ஒரு பெண்ணுக்கான நீதி இப்படித்தான் முடிவடைய வேண்டுமா? நான், நமது மண்ணின் உச்சபட்சமாக உள்ள நீதிமன்றங்களை நம்பினேன்.

ஆனால், 11 குற்றவாளிகளின் விடுதலை என்னிடமிருந்து அமைதியைப் பறித்தது மட்டுமில்லாமல், நீதியின் மீதான எனது நம்பிக்கையையும் அசைத்துவிட்டது. என்னிடம் உள்ள சோகங்களும், நான் வைத்திருந்த நம்பிக்கையும் எனக்கானது மட்டுமல்ல. நீதிமன்றங்களில் நீதிக்காகப் போராடும் ஒவ்வொரு பெண்ணுக்கானது. குஜராத் அரசிடம் நான் வேண்டுகோள் விடுப்பது இதுதான்.

தயவுசெய்து இந்த விடுதலை உத்தரவை திரும்பப் பெறுங்கள். அச்சமின்றி, நிம்மதியாக வாழ்வதற்கான எனக்கான உரிமையை, சுதந்திரத்தைத் திருப்பிக் கொடுங்கள். நானும் எனது குடும்பத்தினரும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யுங்கள்’ எனக் கேட்டிருந்தார். ஆனால், குஜராத் அரசோ அதைக் கண்டுகொள்ளவில்லை.

பில்கிஸ் பானு மனுத் தாக்கல்!

தண்டனைக் காலம் முடியும் முன்பாக குற்றவாளிகள் 11 பேரையும் முன்கூட்டியே விடுதலை செய்தது தொடா்பான குஜராத் மாநில அரசின் முடிவுக்கு எதிராக பில்கிஸ் பானு கடந்த நவம்பர் 30ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். ’மகாராஷ்டிர அரசின் தண்டனைக் குறைப்பு கொள்கை இவ்வழக்கில் பொருந்தும் என்றும், அதைப் பின்பற்றியிருந்தால் 11 பேரும் விடுதலை செய்யப்பட்டிருக்க வாய்ப்பில்லை’ என்றும் பில்கிஸ் பானு தனது மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி மற்றும் பெலா எம்.திரிவேதி ஆகியோா் அடங்கிய அமா்வுமுன்பு கடந்த டிசம்பர் 13ஆம் தேதி விசாரணைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த வழக்கிலிருந்து நீதிபதி பெலா எம்.திரிவேதி விலகினார். அவர் விலகுவதற்கான காரணத்தையும் நீதிமன்ற அமர்வு குறிப்பிடவில்லை.

இதையடுத்து, வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. இதன் பின்னர் இந்த மேல்முறையீட்டு மனுவை புதிய அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்றும், புதிய அமர்வை நியமிக்க வேண்டும் என்றும் பில்கிஸ் பானுவின் வழக்கறிஞர் தலைமை நீதிபதிக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இதற்குப் பதிலளித்த தலைமை நீதிபதி, ’புதிய அமர்வு விரைவில் அமைக்கப்படும். மீண்டும் மீண்டும் அதைக் குறிப்பிடாதீர்கள்’ எனத் தெரிவித்திருந்தார்.

தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்

இந்த நிலையில், பில்கிஸ் பானு தாக்கல் செய்திருந்த இரண்டு மனுக்களில் ஒரு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பான மனுவை பரிசீலனை செய்யும்படி குஜராத் அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த மே மாதம் 13ஆம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யும்படி பில்கிஸ் பானு தாக்கல் செய்த மனு, கடந்த 13ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. இதுதொடர்பான தகவலை பில்கிஸ் பானுவின் வழக்கறிஞருக்கு உச்ச நீதிமன்ற உதவி பதிவாளர் அனுப்பியிருக்கிறார். இது பில்கிஸ் பானுவுக்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது.

என்றாலும், அவரது மற்றொரு மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. இதற்கிடையில், 11 பேர் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட பொதுநல வழக்குகளும் இதே அமர்வில் விசாரணைக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: