வளர்ச்சியின் பெயரால் அழிக்கப்பட்ட வாழ்வாதாரம்!

-ச.அருணாசலம்

மதம், பக்தி, கலாச்சாரம் ஆகியவற்றின் பெயரால் ஜோஷிமத்தில் ஏராளமான  மக்கள் குவிந்தனர்! வீட்டுமனைகள், வணிக நிறுவனங்கள் பெருகின! வளர்ச்சியின் பெயரால் இயற்கை சுரண்டப் பட்டது! தற்போது வாழ இயலா நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது! ஊட்டியும், கொடைக்கானலும் இன்னொரு ‘ஜோஷிமத்’ ஆக வாய்ப்புள்ளதா..?

புகழ்பெற்ற கேதாரிநாத், பத்ரிநாத் “புண்ணிய ” கோவில் தலங்களின் நுழைவாயிலாக கருதப்படும் ஜோஷிமத் (Joshimath) என்ற சுற்றுலா நகரம் இன்று கொஞ்சம் கொஞ்சமாக புதைந்து கொண்டிருக்கிறது! ஜோஷிமத் என்பது உத்தரகண்ட் (Uttarakhand) மாநிலத்தின் சாமோலி (Chamoli) மாவட்டத்தில் உள்ள ஒரு புனித நகரமாகும். கடல் மட்டத்திலிருந்து கிட்டத்தட்ட ஏழாயிரம் அடி உயரத்தில் இரண்டு பள்ளத்தாக்குகளுக்கிடையில் இமயமலைச் சரிவின் நடுவில் அமைந்துள்ள இந்த நகரம் மெள்ள மெள்ள, புதைந்து கொண்டிருப்பது அதிசயமல்ல! ஆனால், மிகப் பெரிய வேதனை! அச்சுறுத்தலுங்கூட!

வீடுகள், விடுதிகள், வணிக கூடங்கள் என எல்லா கட்டிடங்களிலும் பாலம்பாலமாகக் கீறல்!  இவை, எப்போது நொறுங்கி விழுமோ எனத் தெரியவில்லை. இந்தக் கட்டிடங்களை விட்டு அதன் உடமையாளர்களை வெளியேற மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அங்கு வசிக்கும் மக்களை வேறு வாழ்விடங்களில் அமர்த்தக்கோரி பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்துள்ளனர் . அரசு அறிவித்துள்ள நிவாரணத்தொகை , மாற்று ஏற்பாடு ஆகியவை திருப்திகரமாக இல்லை என பரவலாக புகார் எழுவது ஒருபுறம் இருக்க, இந்நிலை ஏற்பட என்ன காரணம் ? யார் காரணம்?

புண்ணியத் தலம், கலாச்சாரம் என்று வாய் கிழிய பேசுகிறோமே உண்மையில் இன்றிருக்கும் இயற்கையை பேணி பாதுகாத்து எதிர்கால சந்ததியினருக்கு எதையாவது விட்டு வைத்திருக்கிறோமா?

இடிந்து விழக் காத்திருக்கும் வீடுகள்!

வளர்ச்சி , முன்னேற்றம் என்ற கோதாவில் எதை வளர்த்தெடுத்தோம் எதை சிதைத்துள்ளோம் என்று எண்ணிப் பார்க்க வேண்டிய தருணம் இது.

வளர்ச்சி என்ற பெயரில் என். டி.பி.சி கட்டியெழுப்பும் 525 மெகா வாட் சக்தியுள்ள நீர் மின் நிலைய திட்டம் இயற்கைக்கு இழைத்துள்ள சேதாரம் இன்றைய நிலைக்கு மிக முக்கிய காரணம் என சாதாரண மக்களும் சுற்றுச்சூழல் விஞ்ஞானிகளும், ஆர்வலர்களும் ஒரு சேரக் குரல் கொடுக்கின்றனர்.

கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே 1976ல் வெளியான மிஸ்ரா கமிஷன் அறிக்கை , ஜோஷிமத்தின் அடிநாதமான இயற்கை சூழலை சேதாரப்படுத்தினால், அது ஜோஷிமத் நகருக்கு பயங்கர விளைவுகளை ஏற்படுத்தும் . ஏனெனில் ஜோஷிமத்தின் மண்ணின்  குணம் சறுக்கி வரும் பனிப்பாறைகளின் (Glacier)  குணத்தையொட்டியது , எனவே இங்கு பாறைகளினடியில் குடைவதோ , சுரங்க வழி அமைப்பதோ ஆபத்தை வரவழைக்கும் செயல் என்று எச்சரித்தது.

ஆனால், அதை சற்றும் பொருட்படுத்தாமல், வளர்ச்சி என்ற பெயரில் பாறைகளை குடைந்து, சுரங்க வழி ஏற்படுத்தி, குழாய்கள் பொறுத்தப்பட்டன. ஹேலாங் -மேர்வாரி பை-பாஸ் ரோட்டு பணிகளும், இந்த மலைக்குடைச்சல்களை அதிகப்படுத்தியதன் விளைவு, இன்று அந்த நகரமே புதைகுழியில் சிக்கியதை போன்று கொஞ்சம் கொஞ்சமாக மூழ்கி கொண்டுள்ளது.

பொதுவாக நிலம்  குறைந்து இறங்குதல், பூமியின் ‘க்ரஸ்ட்’ என்றழைக்கப்படும் மையப்பகுதியில் ஏற்படும் நகர்வுகளாலும் அல்லது நில நடுக்கத்தாலும் ஏற்படலாம் . நிலபரப்பு திடீரென தாழ்ந்து பள்ளமாகுதல் நிலத்தடி நீரோட்டத்தினால் ஏற்படும் பாறை தேய்மானங்களாலும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இந்நிலை இயற்கையாக அன்றி, செயற்கையாக மனித செயல்களாலும் இத்தகைய நிலக் குறைதல்கள் ஏற்படும்.

இத்தகைய நிலக் குறைதல் (Land Subsidence)  ஏற்பட மூலக்காரணிகள் இரண்டு என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

ஒன்று, நிலத்தடி நீரை அதீதமாக உறிஞ்சி சுரண்டுவதால் ஏற்படும் பாறைகளின் இறக்கமும், இடம் நகர்தலும் ஆகும் .

இரண்டாவதாக, அக்கஃபையர்ஸ் என்றழைக்கப்படும் நீரூற்று சேதப்படுத்தப்படுவதால் நீர் குறைந்து பாறைகளின் மட்டம் குறைவதும் இதற்கான காரணிகளாகும்.

இந்த இரண்டு காரணங்களுமே ஜோஷிமத்தில் வளர்ச்சியின் பெயரால் கட்டவிழ்த்து விடப்பட்டன. இதே காரணிகள் தான் இந்தோநேஷிய நாட்டின் தலைநகரான ஜகார்த்தாவின் “மூழ்குதலை” துரிதப்படுத்தின!  அமெரிக்க புவியியல் ஆய்வறிக்கை , உலகில் நடக்கும் நிலக்குறைதலில் -Land Subsidence- 80% அளவு நிலத்தடி நீரை அதீதமாக சுரண்டுவதால் ஏற்படுகிறது என்று கூறுகிறது.

ஜோஷிமத்தின் இன்றைய மூழ்கும் நிலைக்கு காரணம் மனித செயல்களே!  1976- ஆம் ஆண்டே மேலே குறிப்பிட்ட கமிஷனின் அறிக்கை , ஜோஷிமத் மூழ்கிக்கொண்டுள்ளது. எனவே இங்கு கனரக கட்டுமானங்களை முற்றிலும் தடை செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்தது.

ஆனால், அந்த  எச்சரிக்கையை யாரும் பொருட்படுத்தவில்லை, எந்த அரசியல் சக்தியும் இதற்கு முக்கியத்துவம் தரவில்லை.

பக்தியின் பெயராலும், சமயத்தின் பெயராலும் , கலாச்சாரத்தின் பெயராலும் வளர்ச்சி என்ற மாயவலையில் அனைவரும் மூழ்கியதன் விளைவு ஜோஷிமத்தில் ஏராளமான – லட்சக்கணக்கான பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் குவிந்தனர் . ஏனெனில், இங்கிருந்து 45 கி.மீ தூரத்தில்தான் பத்ரிநாத் உள்ளது.”வளர்ச்சி”யும் ஜோஷிமத் நகரை பற்றி கொண்டது கண்மண் தெரியாமல்.

பல நீர்மின் திட்டங்கள் தீட்டப்பட்டு நிறைவேற்றப்பட்டன, இவற்றில் முக்கியமானது தபோவன் விஷ்ணுகாட் நீர் மின் திட்டம் ஆகும். பளபளக்கும் சாலைகள் மலைகளை குடைந்தும் ,நொறுக்கியும் போடப்பட்டன. சுரங்கவழிப் பாதைகள் தோண்டப்பட்டன, நிலத்தடி நீர் தாறுமாறாக சுரண்டப்பட்டன! நில நீரூற்றுகள் சிதைக்கப்பட்டு ஏராளமான நீர் விரயமானது.

2009 ஆம் ஆண்டு டிசம்பரில் இப்படி ஒரு நீரூற்று சிதைக்கப்பட்டு நாளொன்றுக்கு 70மில்லியன் லிட்டர் நீர் வீண்டிக்கப்பட்டது

இதை 2010ம் ஆண்டே எம்பிஎஸ் . பிஷ்ட் மற்றும் பியூஷ் ராதெலா என்ற இரண்டு விஞ்ஞானிகளும் சுட்டிகாட்டி, ’ஜோஷிமத் நகரை ஆபத்து சூழ்ந்துள்ளது’ என எச்சரிக்கை விடுத்தனர்.

ஆனால், அனைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்காக மாறியதால் இன்று  ஜோஷிமத் நகரமக்கள் இன்னல்களை எதிர் நோக்கியுள்ளனர் . மத்திய மாநில அரசுகள் சுற்று சூழலுக்கென்று அமைச்சகங்களை வைத்திருந்தாலும் உருப்படியாக ஏதாவது செய்தார்களா என்றால் இல்லை. இதில் அரசியல் வேறுபாடுகள் ஏதுமில்லை . வளர்ச்சியின் பெயரால் மனித குலத்தின் எதிர்காலமே கேள்விக்குறியாக்கப்படுவது குறித்து யாரும் கவலைப்படவில்லை.

உத்தராகண்ட மாநிலமே இத்தகைய இயற்கை சீற்றங்களுக்கு பெயர்போன மாநிலமாக உள்ளது. 1880 முதல் 1999 வரை வெறும் ஐந்து கோர நிகழ்வுகளில் 1,300 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

வீட்டிற்குள் வாழ முடியாமல், வீதியில் நின்று கண்ணீர் விடும் பெண்!

2000 முதல் 2009- க்குள் நிலச்சரிவு, மேகச்சிதறல், திடீர் வெள்ளம் போன்ற சீரழிவினால், சுமார் 450 பேர் பலியாயினர். 2010முதல் 2020 வரையான ஆண்டுகளில் ,1312 பேர் உயிரிழந்துள்ளனர் . இவையெல்லாம் வெறும் எண்ணிக்கை மட்டுமல்ல, அம்மாநிலமும் குறிப்பாக சார்-தம் என்றழைக்கப்படும் பரப்பும் ஆபத்தான பகுதிகளாக மாறிவரும் அடையாளங்கள் என்பதை நாம் மறக்க முடியாது.

மனிதனின் எண்ணமும், செயலும்  இயற்கையோடு இயைந்து இயங்க வேண்டுமே அல்லாது அதை சீரழித்து மேன்மையை வளர்ச்சியை அடைய இயலாது என்ற புரிதல் அவசியமாகிறது.

இது போன்ற நிலக்குறைதல்கள் பல்வேறு கனிமவளச்சுரங்கபகுதிகளிலும் அதீத சுரண்டலினால் ஏற்படுகின்றன! ஜாரியா, புர்குண்டா, கபாசாரா, ராணிகஞ்ச் போன்ற நிலக்கரி சுரங்க பகுதிகளிலும் இத்தகைய நிலை ஏற்பட்டுள்ளதை நாம் நினைவில கொள்ள வேண்டும் , மேசானாவில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும்பொழுது ஏற்பட்ட நிலக்குறைதல் , இமாச்சலில் நீர்மின் திட்டத்தால் சம்பா என்ற பகுதியில் ஏற்பட்டுள்ள  நிலக்குறைதல் போன்றவைகள் நமக்கு விபத்துகள் மட்டுமல்ல நமக்கு விடப்படும் எச்சரிக்கைகள் என நாம் புரிந்து கொள்வது அவசியம்.

கொடைக்கானலில் ஏற்பட்ட மண் சரிவு!

இதைப்போன்றே சுற்றுலா தளங்களாக மாறிவிட்ட கோடை வாச தலங்களான கொடைக்கானல் , ஊட்டி போன்ற நகரங்களும் ஏராளமான கட்டுமானங்களால் திணறுகின்றன! தற்போது இவை மனிதனின் அதீத பேராசை கொண்ட சுரண்டலால் பாழ்பட்டு விளிம்பு நிலையில் உள்ளதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

மனித முகத்தோடு இயைந்த வளர்ச்சி என்பது வெறும் வார்த்தை ஜாலமாக இருந்துவிடாமல், உயிருள்ள கொள்கையாக அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் . சுற்றுச்சூழலை மாசு படுத்தும் சீர்குலைக்கும் எந்த திட்டமும் உண்மையில் வளர்ச்சிக்கு உதவாது. மாறாக, ஒருசிலரின் கொள்ளை லாபத்தை கூட்ட உதவலாம்.

மனித குல வளர்ச்சி, நாட்டின் வளர்ச்சி, பகுதியின் வளர்ச்சி என்பவை ஒன்றுக்கொன்று போட்டியிடும் நிலைப்பாடுகள் இல்லை . வாழும் இடத்தையும் , பகுதியையும் , நிலப்பரப்பையும்  செவ்வனே பேணி பாதுகாத்து இயற்கையோடு இயைந்து வாழ்வதே ஆட்சியாளர்களுக்கு மட்டுமின்றி அனைத்து மக்களுக்கும் உகந்த வழிமுறையாகும் . இதை வெறும் கொள்கை முழக்கங்களாக மட்டுமின்றி அன்றாட வாழ்வியல் நடைமுறை நெறியாக அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும்.

தவறினால், பாதுகாக்கப்பட வேண்டிய விலங்கின பட்டியலில் மனிதனும் சேர்க்கப்படுவான்.

Tags: