இந்தியாவில் பத்திரிகைகள் சந்திக்கும் படுபாதக அடக்குமுறைகள்!
– சித்தார்த் வரதராஜன்

உண்மைகளைச் சொன்னால் கைதா? பாதிக்கப்பட்டவர்களின் குரலை பிரதிபலிப்பதே குற்றமா? இந்தியாவில் பத்திரிகை சுதந்திரம் படு மோசமாக உள்ளதா..? அதிகாரத்தின் அழுத்தங்களால் உண்மைகள் புதைக்கபடுகின்றனவா? ஓம்! பா.ஜ.க அரசு பற்றிய உண்மைகளை வெளியிடும் ஊடகங்கள் மிரட்டப்படுகின்றன என்கிறார், ‘தி வயர்’ சித்தார்த் வரதராஜன்
மாற்றத்திற்கான ஊடகவியலாளர் சங்கம் ஏற்பாட்டில், ‘தி வயர்’ (The Wire) இணைய இதழின் நிறுவன ஆசிரியரான சித்தார்த் வரதராஜன், பெப்ரவரி ஒன்றாம் தேதி உரையாற்றினார். காயிதே மில்லத் அறக்கட்டளையின் பொது வாழ்வில் நேர்மைக்கான விருதைப் பெற சென்னை வந்திருந்த அவர், பத்திரிகையாளர்கள் இடையே பேசினார்.
‘மோடியை பிரதம வேட்பாளராக பா.ஜ.க அறிவித்தபிறகு, தேர்தலுக்கு முன்பு மோடி திருச்சி வந்திருந்தார். ‘மோடியே திரும்பிப் போ’ என்று மக்கள் கலை இலக்கிய கழகம் ஆர்ப்பாட்டம் செய்தது. அப்போது இந்து நாளிதழின் ஆசிரியராக இருந்த சித்தார்த் வரதராஜன் இதனை முதற்பக்க செய்தியாக வெளியிட்டார். அப்போது, இது பத்திரிக்கையாளர்களிடையே பரபரப்பாக பேசப்பட்டச் செய்தி’ என்று தனது வரவேற்புரையில் ஹாசிப் குறிப்பிட்டார். சித்தார்த் வரதராஜன் உரையாடல் பாணியில் பேசியதை பீர் முகமது ஒருங்கிணைத்தார்.
சமீப காலங்களில் பத்திரிகையாளர்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதல் அதிகரித்து வருவது குறித்து என்ன நினைக்கிறீர்கள் ?
ஊடகங்களின் மீதான தாக்குதல் உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் பின்லாந்து நாட்டின் முன்னணி செய்திப் பத்திரிகையொன்று அந்நாட்டு இரகசியக் காவல்துறை குறித்து செய்தி வெளியிட்டது. அதனை எதிர்த்து வழக்குத் தொடுத்து இருக்கிறார்கள். ரஷ்ய அரசு எந்த அமைப்பையும் தேச விரோதம் என அறிவிக்க முடியும். அது வெளியிடும் செய்தியை மேற்கோள் காட்டினாலோ, அதற்கு செய்திக் கட்டுரை அனுப்பினாலோ, நிதி உதவி செய்தாலோ அரசு நடவடிக்கை எடுக்கலாம். துருக்கியில் பிரச்சினை இருக்கிறது. விக்கி லீக்ஸ் இணையத்தின் ஜூலியன் அசான்ஜே இலண்டனில் உள்ள ஈக்வெடார் தூதரகத்தில் தஞ்சம் அடைந்துள்ளார். அவரை நான் பார்த்தேன். கடுமையாக மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார். அவர் வெளியிட்ட செய்திகள் அமெரிக்க வெளிநாட்டு கொள்கையை கேள்விக்கு உள்ளாக்குகின்றன. அவர் மீதான அடக்குமுறை இன்னமும் தொடர்கிறது. அவரை அமெரிக்கா பிடித்துவிடும் என்றே நினைக்கிறேன். இத்தனைக்கும் அவர் பெயர்களை மறைத்து வெளியிட்டார். உயிருக்கு ஆபத்து இருக்கும் செய்திகளை வெளியிடவில்லை. பொதுநலன் சார்பான செய்திகளையே வெளியிட்டார்.
உண்மையைச் சொல்ல நீதிபதிக்கே தடை!
கேள்வி: இந்தியாவில் நிலைமை எப்படி இருக்கிறது ?
2020 -ல் டெல்லியில் நடந்த கலவரத்தில் இறந்து போனவர்களில் மூன்றில் இருவர் முஸ்லிம்கள்; சேதாரமான சொத்துகளில் 95 சதவீதம் முஸ்லிம்களுடையது; தாக்குதலுக்கு ஆளான வழிபாட்டுத் தலங்களில் 99% முஸ்லிம்களுடையது. இது குறித்து விசாரணை செய்து நீதிபதி மதன் லோகுர் ஒரு அறிக்கை தயாரித்தார். இந்த அறிக்கையை வெளியிடுவதை தடை செய்ய வேண்டும் என்று மத்திய அரசு டெல்லி உயர்நீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது. இது அதிர்ச்சிக்குரிய ஒன்று. இதன் மூலம் குடிமைச் சமூகங்களைச் சார்ந்தவர்களின் நடவடிக்கைகளை மோடி அரசு கட்டுப் படுத்துகிறது.

கடந்த காலங்களில், உண்மைகளை வெளிக்கொணர்வதில், அரசு சாரா ஆணையங்களே பெரும்பங்கு வகித்தன. 1984 ல் ஏற்பட்ட கலவரத்தில் 2000 பேர் இறந்ததாக அரசு கூறியது. சீக்கியர் மீதான கலவரங்கள், காங்கிரஸ்காரர்களால் காவல்துறை ஒத்துழைப்போடு நடத்தப்பட்டன. அரசு அமைத்த மிஸ்ரா ஆணையம் இதனை மறைக்கப்பார்த்தது. ஆனால் நடந்த கலவரத்தில் 5,000 பேர் கொல்லப்பட்டனர். இதனை மக்கள் சிவில் உரிமைக் கழகம், வி.ஆர். கிருஷண அய்யர், தார்குண்டே போன்றவர்கள் நடத்திய விசாரணைகளே வெளிப்படுத்தின. பெரும்பாலான தேசிய ஊடகங்கள், பாஜக அரசாங்கத்தோடு சமரசமாகிவிட்டன. ஆனாலும், நியூஸ் லாண்டரி, குவிண்ட், ஸ்க்ரோல், வயர் போன்ற இணைய இதழ்கள் நன்றாகவே செயல்படுகின்றன. ஏற்கனவே, 2015 ல் நீதிமன்றம் 66.A பிரிவை ரத்து செய்துவிட்டது. அதனால், இப்போது புதிய தொழில்நுட்ப விதிகள் மூலம் இணைய ஊடகங்களை கட்டுப்படுத்த அரசு நினைக்கிறது.
ரேஷனில் அரிசி பற்றாக்குறையை எழுதியதற்கு கைது!
கேள்வி: இப்போது பத்திரிகைத் நடத்துவது எப்படி இருக்கிறது ?
தமிழ்நாட்டில் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது ‘மாட்டிறைச்சி உண்ணும் மாமி’ என்ற செய்திக் கட்டுரை வெளியிட்டதற்காக நக்கீரன் கோபால் வழக்குகளை எதிர்கொண்டார். இதே போன்ற செய்திக்காக இந்து பத்திரிகையாளர் கோலப்பனும் வழக்கை எதிர்கொண்டார். ஆசிரியர் என்ற வகையில் நானும் வழக்கை எதிர்கொண்டேன். பத்திரிகையாளர்கள் மீது இப்போது குற்றவியல் அவதூறு வழக்குகள் போடப்படுகின்றன. இதனால், பத்திரிகையாளர்களை கைது செய்ய முடியும். முன்பெல்லாம் சிவில் நட்ட ஈட்டு வழக்குதான் போடுவார்கள். அது நீதிமன்றத்தில் நடக்கும்.
உத்திரப் பிரதேசத்தில் கொரோனா காலத்தில் ரேஷன்கடையில் அரிசி,கோதுமை பற்றாகுறை இருந்ததை ‘சிம்ப்ளிசிட்டி’ என்ற இணையதளம் வெளியிட்டது. அதனை வெளியிட்ட பத்திரிகையாளர் கைது செய்யப்பட்டார். உத்திரப் பிரதேசம், காஜியாபாத்தில் ஒரு முஸ்லிம் முதியவர் ஒரு குறிப்பிட்ட மத கோஷத்தை போடச் சொல்லி தாக்கப்பட்டதை வெளியிட்ட பத்திரிகையாளர்கள் நான்கைந்து பேர்மீது வழக்குகள் பதிவாகின. இவர்கள் வகுப்புக்கலவரத்தை தூண்டுகிறார்கள் என காவல்துறை சொன்னது.
விவசாயி கொல்லப்பட்டதை சொன்னால் தேசத் துரோக வழக்கு!
டெல்லி விவசாயிகள் போராட்டத்தின்போது டிராக்டர் ஏற்றி ஒருவர் கொல்லப்பட்டார் என ‘தி வயர்’ செய்தி வெளியிட்டது. இதற்காக காவல்துறை எங்கள் மீது தேசதுரோக வழக்குப்போட்டது.

இதற்கு முன்பெல்லாம் தவறாக செய்தி வந்தால், அந்த செய்தி தவறானது என கடுமையான மொழியில் அறிக்கையொன்றை காவல்துறை வெளியிடும்; அதோடு, அந்தப் பிரச்சினை முடிந்துவிடும். இப்போதோ வழக்குகள் போடப்படுகின்றன. புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின்படி ஒரு செய்தி தவறானது என அரசு கருதினால் அதனை நீக்க வேண்டும் என அரசு உத்தரவிட முடியும். அதோடு, இணைய இதழ்கள் ‘வாசகர்கள் குறை தீர்ப்பு அலுவரை’ நியமிக்க வேண்டும். அவரிடம் வாசகர்கள் ஒரு செய்தி தவறானது என முறையிடலாம். 48 மணி நேரத்தில் அதற்கான திருப்திகரமான பதில் கிடைக்கவில்லை என்றால், அதனை எதிர்த்து அரசிடம் முறையிட முடியும். இப்போதுள்ள சூழலில், வாசகர் பெயரில் புகார்களை உருவாக்குவது எளிதானதே. அப்படி ஒரு ஆணையை அரசு பிறப்பித்தால், அதன் பிறகு யாரும் அந்தச் செய்தியை பகிர முடியாது.
பிபிசி (BBC) ஆவணப் படத் திரையிடலுக்கு நெருக்கடிகள்!
அவசரகால அதிகாரத்தின் கீழ்தான் பிபிசி ஆவணப்படத்தை முகநூல், டிவிட்டர் பகிரக் கூடாது என அரசு ஆணையிட்டது. இதற்கு எந்த எதிர்ப்பும் காட்டாமல் டிவிட்டர் உடனே பிபிசி ஆவணப்படத்தை நீக்கிவிட்டது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏற்கனவே இது போன்ற ஒரு சம்பவத்தில், பெங்களூருவில் ட அரசை எதிர்த்து, டிவிட்டர் வழக்குத் தொடுத்தது. இணைய இதழ்களுக்கும் அரசியல் சாசனம் வழங்கியுள்ள பேச்சுரிமை உள்ளது. பிபிசி ஆவணப்படம் தடை செய்யப்படவில்லை. ஆனால் இதனை வெளியிட முனைந்த மாணவர்கள் தடுக்கப்பட்டார்கள். விசாரணைக்கு ஆளானார்கள்! இதனை திரையிட முனைந்த நேரத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. ஓய்வு பெற்ற நீதிபதி விசாரணை செய்யக் கூடாது என்கிறார்கள். குடிமைச் சமூகங்கள், மாணவர்கள் என அனைத்துப் பிரிவினரும் தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர்.
மாநில உரிமைகள் பறிக்கப்படுகின்றன. பேச்சுரிமைக்கு சுதந்திரம் உள்ளது. ஆனால் பேசியபிறகு உங்களுக்கு சுதந்திரம் இல்லை என்பது தான் யதார்த்தம். என்ன செய்ய வேண்டும் என்பது தனிபரின் மனசாட்சியையும், அவரது திறமையைப் பொறுத்தே அமைகிறது.

கேள்வி: நீங்கள் நடத்திவரும், ‘தி வயர்’ இணைய இதழைப் பற்றி சொல்லுங்களேன் ?
2015 ஆம் ஆண்டு தி வயர் இணைய இதழை அரசாங்க அழுத்தமோ, நிறுவனங்களின் அழுத்தமோ இல்லாத வகையில் நடத்த வேண்டும் என்று தொடங்கினோம். ஓரிரு விளம்பரதாரர்களை மட்டும் நம்பி இருக்கக் கூடாது என நினைத்தோம். இப்போது கூட நாங்களாக விளம்பரத்திற்கு போவதில்லை. கூகுள் வழியாக வரும் விளம்பரம் தான்.
ரபேல் ஊழல் குறித்த செய்திக் கட்டுரைகளை வெளியிட்டதற்காக இந்து நாளிதழுக்கு அரசாங்க விளம்பரம் (DVAP) விளம்பரம் நிறுத்தப்பட்டது. இது மக்களின் வரிப்பணம். யாருக்கு விளம்பரம் தருவது என்பதை முடிவு செய்வதில் பாரபட்சம் இருக்க கூடாது. கோவிட் – 2 கால கட்டத்தில் அரசு சொன்னதை விட, கூடுதலாக மரணங்கள் ஏற்பட்டன என்பதை மயானங்களுக்குச் சென்று விசாரித்து, உண்மையைச் சொன்ன செய்தி நிறுவனத்தைச் சார்ந்தவர்களிடம் சோதனைகள் நடத்தப்பட்டன. ஹிட்டன்பர்க் அறிக்கை நம்மபகத் தன்மை உடையது. அதனால் தான் அதானி பங்குகள் மளமள வென்று சரிந்தன. செய்தி வெளியான ஒரே வாரத்தில் உலகத்தின் மூன்றாவது பெரிய பணக்காரர் என்ற நிலையில் இருந்து பத்தாவது இடத்திற்கு வந்துவிட்டார்.
என்டிடிவி ஓரளவு நம்பகத் தன்மையோடு செயல்பட்டு வந்தது. அதனுடைய பிரனாய் ராய் மீது நான்கு ஆண்டுகளுக்கு முன்பு எச்டிஎஃப்சி வங்கி விவகாரத்தில் வழக்கு வந்தது. அரசு இயந்திரங்கள் தவறாக பயன்படுத்தப்படுகின்றன.
காஷ்மீரில் நடப்பது இந்தியா முழுமையும் நடக்கும்!
‘தி வயர்’ புதிய தொழில் நுட்ப விதிகளை எதிர்த்து தடை ஆணை பெற்றது. இதனைத் தொடர்ந்து மேலும் பல நிறுவனங்கள் தடை ஆணையைப் பெற்றன. தி வயர் இதழுக்கு, காஷ்மீரின் கள நிலவரத்தை தர வேண்டும் என்று 40 பத்திரிகையாளர்களிடமாவது கேட்டிருப்போம். அச்சத்தின் காரணமாக யாரும் முன் வரவில்லை. இன்று, காஷ்மீரில் நடப்பதைத் தான் நாளை இந்தியா முழுவதும் விரிவுபடுத்த இருக்கிறார்கள். இனி வரும் காலம் பத்திரிக்கையாளர்களுக்கு மேலும் கடினமாகவே இருக்கும். ஹிட்டன்பர்க் அறிக்கை வெளிவந்த முதல் நான்கைந்து நாட்கள் ஆன பின்னரும் அதுபற்றிய விவாதத்தை என்டிடிவி நடத்தவில்லை.

கேள்வி: புதிய காலக்கட்டத்தில் பத்திரிகை நடத்துவதை எப்படி பார்க்கிறீர்கள் ?
தி வயர் இதழ் ஆறு இலட்ச ரூபாய் மூலதனத்தில் தொடங்கப்பட்டது. நான், எம்.கே.வேணு, சிதார்த் பாட்டியா ஆகியோர் இணைந்து உருவாக்கினோம். இப்போது அதனுடைய வருடாந்திர பட்ஜெட் 5 கோடி. ஆரம்ப காலத்தில் காணொளி வெளியிடுவது குறித்த நாங்கள் யோசிக்கக் கூட இல்லை. வினோத் துவா காணொளி வெளியிடுவதில் இணைந்து கொண்டார். இப்போது கரண் தாப்பர் வெளியிடும் பேட்டி வருகிறது. தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு அடுத்தபடியாக, அதிக பார்வையாளர்களை கொண்டது தி வயர்தான். நாற்பது இலட்சம் பேர் பார்க்கிறார்கள். பல இதழ்கள் தி வயரின் மொழிபெயர்ப்புகளை வெளியிடுகிறார்கள். இதனை பகிர்கிறார்கள். இதனால் இதன் வீச்சு அதிகமாகி வருகிறது. அதனால் தான் பகிர்வதை (share) தடுக்க அரசு விரும்புகிறது. எனவே தான் நியூஸ் லெட்டர் என்ற பாணியில் வாசகர்களை நேரடியாக தொடர்பு கொள்ள விரும்புகிறோம்.
கேள்வி: அரசாங்க தரப்பு தாக்குதல்களை எப்படி எதிர்கொள்வது ?
பல்வேறு நெருக்கடிகளுக்கிடையிலும் பல நிறுவனங்கள் நன்கு செயல்படுகின்றன. இது போன்ற 100 நிறுவனங்களுக்கு இடையே ஒருவிதமான கூட்டமைப்பை உருவாக்கியுள்ளோம். ஏனெனில், அச்சு ஊடகம் மக்களை சென்றடைய (delivery) நிறைய பொருட் செலவாகும். ஆனால், மின்னிதழ்களுக்கு அத்தகைய நெருக்கடி இல்லை. மக்களை சென்றடைய ஏராளமான வாய்ப்புகளை தொழில்நுட்பம் உருவாக்கி உள்ளது. ஜெயா டிவி நிருபர் பாதிக்கப்பட்டால், சன் டிவி நிருபரும் அரசியலுக்கு அப்பால் ஆதரவு அளிக்க வேண்டும். இதே போல அர்னாப் கோஸ்வாமி மீது, ஒரே சம்பவத்திற்காக அவர் மீது நான்கு இடங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்ட போது, அவரை எனக்கு பிடிக்காது என்றாலும், அவருக்கு ஆதரவாக நான் இருந்தேன். ஆல்ட் நியூஸ் நடத்திய முகமது ஜூபர் இரண்டு வாரங்களுக்குப் பிறகு தான் சிறையில் இருந்து வெளிவர முடிந்தது. இது போல தனியாக செயல்படுபவர்கள் அனேகம் பேர் உள்ளனர். அவர்களுக்கு நெருக்கடியான நேரங்களில் ஆலோசனை, வழக்கறிஞர்களை ஏற்பாடு செய்தல் போன்ற செயல்கள் மூலம் ஆதரவளிக்க முடியும்.
கோயம்பத்தூர் சம்பவத்தில் அரசு தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதை ஊடகங்கள் கண்டிக்கவில்லை. இப்போது டெல்லி, மும்பையில் உள்ள பத்திரிகையாளர் சங்கங்கள் முனைப்பாக செயல்படத் தொடங்கியுள்ளன. ஒரு நிறுவனம் வெளியிடும் செய்தியை மற்ற நிறுவனங்கள் தொடர்ந்து எழுதுவதில்லை. நான் ஹிந்துஸ்தான் பத்திரிகையில் ஆறாவது பக்கத்தில் சிறிய பத்தியில் வந்த செய்தியை மேலும் விசாரித்து முக்கிய செய்தியாக்கினேன்.
உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு அரசு தீஸ்தா செதால்வாட் டையோ, ஸ்ரீ குமாரையோ கைது செய்யாமல் இருந்திருந்தால் 2002 ல் நடந்த குஜராத் படுகொலை மீண்டும் செய்தியாகி இருக்காது. இப்படி பல வாய்ப்புகள் அதுவாகவே அமையும். அதிக அளவில் பெண்கள் செய்தியாளர்களாக இருபது உண்மைதான். ஆனால், தலைமைப் பொறுப்பில் இந்து, டெக்கான் ஹெரால்டு என ஒரு சில நிறுவனங்களில் மட்டுமே பெண்கள் உள்ளனர். பல சாதியினரும் இருப்பது, எந்த செய்தியை தேர்ந்தெடுப்பது என்பதில் முக்கிய காரணியாக விளங்கும். அமெரிக்கா போன்ற நாடுகளில் செய்தி அறைகளில் பல இனத்தவரும், பிரிவினரும் இருக்கும் வகையில் பார்த்துக் கொள்கிறார்கள்.
நான் வாழ்க்கையை எப்போதும் நம்பிக்கையோடு பார்ப்பவன். இப்போது இந்த அரங்கில் இத்தனை பேர் கூடியிருப்பதையே நான் ஆரோக்கியமான விஷயமாகவே பார்க்கிறேன்.
தொகுத்து எழுதியவர்; பீட்டர் துரைராஜ்