இந்தி, இந்து, பாரதீயம் – பாரதிய ஜனதாக்கட்சியின் பிற்போக்கு அரசியலின் புதிய வாய்ப்பாடு

ராஜன் குறை  

பாரதீய ஜனதா கட்சி அரசின் அடுத்த அதிரடி நடவடிக்கை குற்றவியல் சட்டங்களை புதிதாக இயற்றுதல். இவற்றிற்கு இந்தி மொழியில் பெயர்களை வைத்துள்ளது மற்றொரு புதிய அம்சம். இந்திய தண்டனைச் சட்டம் (Indian Penal Code 1860), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (Criminal Procedure Code 1898), இந்திய சாட்சிய சட்டம் (Indian Evidence Act, 1872) ஆகிய மூன்றும் இவ்விதம் புதிய சட்டங்களால் பதிலீடு செய்யப்படப் போகின்றன. அவற்றிற்கு சூட்டப்பட்டுள்ள புதிய பெயர்களை முதலில் தெரிந்துகொள்வோம். 

Indian Penal Code – Bharatiya Nyaya Sanhita

Criminal Procedure Code – Bharatiya Nagarik Suraksha Sanhita 

Indian Evidence Act – Bharatiya Sakshya 

இந்த புதிய சட்டங்களில் என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன, புதிய சட்டங்கள் ஏற்புடையவையா என்பன குறித்து நிறைய விவாதங்கள் இனிவரும் நாட்களில் பொதுக்களத்தில் எதிர்பார்க்கலாம். இப்போதைக்கு நாடாளுமன்றத்தில் இவை தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தொடர்புடைய நாடாளுமன்ற நிலைக்குழுக்கள் இவற்றை விவாதித்து சட்டமாக்கலாமா என கருத்துக் கூறும். 

இவற்றின் உள்ளடக்கங்களைக் குறித்து பேசுவதற்கு முன்னால் சட்டங்களுக்கு வைக்கப்பட்டுள்ள பெயர்களே சர்ச்சைக்குள்ளாகியுள்ளன. பல்வேறு மொழி பேசும் மாநிலங்களை கொண்ட நாட்டில் இவ்வளவு முக்கியமான சட்டங்களுக்கு இந்தி மொழியில் பெயர் வைக்கலாமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே அரசின் நலத்திட்டங்களுக்கு எல்லாம் இந்தி, சமஸ்கிருத பெயர்களை வைத்து இந்தி பேசாத மாநிலங்களை திணறடித்து வருகின்றது பாஜக அரசு. இந்த முறை அனைத்து மக்களையும் பாதிக்கக் கூடிய முக்கியமான சட்டங்களுக்கு இவ்வாறான பெயர்களை வைப்பது மேலும் இந்தி மொழி ஆதிக்கத்திற்கு வழி வகுப்பதாகவே உள்ளது. 

பாரதீய ஜனதா கட்சியின் தோற்றுவாய்

பாரதீய ஜனதா கட்சியின் அடிப்படைக் கொள்கைகள், கோட்பாடுகள் எல்லாம் தெளிவாக சாவர்க்கர், கோல்வால்கர் ஆகியோர் எழுதிய நூல்களில் கூறப்பட்டுள்ளன. அவர்களுக்குள் சிறு வேறுபாடுகள் உண்டு என்றாலும் அடிப்படையில் அது இந்து மத அடையாளத்தை தேசத்தின் அடையாளமாக மாற்ற வேண்டும், சமஸ்கிருதமயமான இந்தியை அரசின் மொழியாக, தேசத்தின் மொழியாக மாற்ற வேண்டும் என்பவற்றை அச்சாணியாகக் கொண்டவை. 

மொழிவாரி மாநிலங்கள் அமையும்போது அதனை ஆர்.எஸ்.எஸ் கடுமையாக எதிர்த்தது. இந்திய தேசிய அரசு என்பது ஒற்றை அரசாக விளங்கவேண்டும், அதிகாரம் ஒன்றியத்தில் குவிக்கப்பட வேண்டும் என்பதே அதன் நிலைப்பாடாக விளங்கி வந்துள்ளது. அதனால் மாநில உரிமைகள், மாநில சுயாட்சி, கூட்டாட்சி அமைப்பு, இந்திய ஒன்றியம் உள்ளிட்ட சிந்தனைகள் அதன் அடிப்படை இலட்சியங்களுக்கு முரணானவை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். குறிப்பாக தமிழ் நாடு இந்தி மொழியை மட்டுமே ஒற்றை ஒன்றிய அலுவல் மொழியாக மாற்றுவதை தொடர்ந்து எதிர்த்து வருவது பாஜக-விற்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்துவதாகவே உள்ளது. அதேபோல தமிழ் நாட்டிலுள்ள மதப் பிரிவுகளும் தனித்துவத்துடன் இருப்பதும், இந்து என்ற ஒற்றை அடையாளத்திற்குள் அடக்க முடியாதவையாக இருப்பதும், அவற்றுக்குள்ளேயே பார்ப்பனீய மறுப்பு, எதிர்ப்பு உள்ளடங்கியிருப்பதும் ஒரு சவாலாகவே உள்ளது. 

அதனால் எவ்வகையிலாவது இந்தி மொழியை நாடெங்கும் பயன்படுத்துவதை நிர்பந்திக்க வேண்டும் என்ற நோக்கத்தில் புதிய சட்டங்களுக்கு இந்தியில் பெயர் வைப்பதை உணர முடிகிறது. ஆனால் அந்த முயற்சியில் உள்ள முரண்பாடுகள் கவனத்திற்குரியவை. 

இந்தியாவா, பாரதமா

பாரசீக மொழியில் சிந்த் என்பதை ஹிந்த் என்று உச்சரிப்பதில்தான் இந்துஸ்தான் என்ற அடையாளம் இந்திய நிலப்பரப்பிற்கு உருவானது என ஆய்வாளர்கள் பலர் கருதுகிறார்கள். அல் ஹிந்த் என்று அரேபிய மொழியில் வழங்கப்பட்டு, ஹிந்துஸ்தானமாக உறுதிப்பட்டது. இப்படி இந்துஸ்தானத்தில் உள்ளவர்களின் வழிபாடுகள், இறை நம்பிக்கைகள் எல்லாம் இந்து மதம் என்று கருதப்பட்டதில் ஆங்கிலேயர்கள் அத்துடன் இசம் என்பதைச் சேர்த்து ஹிண்டுயிசம் என்ற வரலாற்று மதமாக கட்டமைத்தார்கள். அதற்கடுத்து ஹிந்துஸ்தானத்து மக்கள் பரவலாக பேசிய கலைவை மொழியை ஹிந்துஸ்தானி என்றும் அழைத்தார்கள். 

இந்த இந்துஸ்தானம் என்ற நிலப்பரப்பு, இந்து மதம் என்ற அடையாளம், இந்துஸ்தானி என்ற மொழி ஆகியவை எல்லாம் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை என்ற ஒரு எண்ணம் தேசியவாதிகள் பலர் மனதில் தோன்றியது. ஆங்கிலேய வரலாறு எழுதியதிலும் முஸ்லீம் இந்தியா, இந்து இந்தியா என்று பிரித்து எழுதியதால் பல்வேறு பிரித்துப் பார்க்கும் நடைமுறைகள் தோன்றின. ஹிந்துஸ்தானியில் கலந்திருந்த  பர்சிய, உருது சொற்களை பிரித்து சமஸ்கிருத வேர்ச்சொற்களால் நிரப்பி, உருது வேறு, இந்தி வேறு என்று இருமொழிகள் உருவாக்கப்பட்டன. இந்த இந்தியையே “தேவ”நாகரி வரிவடிவத்தில் எழுதி அதை தேசிய மொழியாக்க வேண்டும் என்று நினைத்தனர். 

இந்த இந்தி மொழி உருவாக்கம் என்பது ஏதோ மொழி சார்ந்த செயல்பாடல்ல. அதுவே இந்திய தேசிய, இந்து அடையாள கட்டமைப்பின் சாரமாகவும் இருந்தது. இந்தி மொழி ஆர்வலர் பிரதாப் நாராயண் மிஸ்ரா என்பவர் 1893-ஆம் ஆண்டு எழுதிய ஒரு பாடல் இதனை முழுமையாக உணர்த்துகிறது. அந்த பாடலை ஒருவாறு தமிழில் இப்படி எழுதலாம்:

ஓ பாரதத் தாயின் புதல்வர்களே!   

உங்களுக்கு உண்மையிலேயே சிறந்த எதிர்காலம் வேண்டுமானால்

இந்த சொற்களை ஓயாமல் ஜபியுங்கள்

இந்தி, இந்து, இந்துஸ்தான்!   

இப்படி மக்களிடையே நிலைபெற்றுவிட்ட இந்துஸ்தான் என்ற பிரதேச அடையாளம், தேசிய இயக்கத்தின் போது இந்தியா என்று சுருக்கப்பட்டாலும் அது இந்தி, இந்து ஆகிய இரண்டு சொற்களுடன் இணக்கமாகவே இருந்ததால் பெரிதாக எதிர்க்கப்படவில்லை. இந்து, இந்தி, இந்தியா எல்லாம் ஒன்றாகத்தானே ஒலிக்கின்றன. 

ஒரு சில இந்து தேசியவாதிகள் இந்தியா என்பது அன்னியர் வைத்த பெயர், நாமே சூடிக்கொண்ட பெயர் பாரதம் என்பதுதான் என்று கூறினாலும், அதற்கு அதிகம் அழுத்தம் கொடுக்கப்படவில்லை. ஆனால் பல துணை அமைப்புகளுக்கு “பாரதீய” என்ற அடைமொழியை சங் பரிவாரத்தில் கொடுப்பார்கள். ஜன சங்கம் ஜனதா கட்சியில் ஐக்கியமாகி, பின்னர் பிரிந்து வெளியேறிய போது அதற்கு பாரதீய ஜனதா கட்சி என்று பெயர் வைத்தார்கள்.   

இப்போது மீண்டும் ஒரு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எதிர்கட்சிகளின் கூட்டணிக்கு இந்தியா என்று சொல்லும்படி Indian National Developmental Inclusive Alliance, I.N.D.I.A என்று பெயர் வைத்துவிட்டார்கள். இப்போது இந்தியா என்ற சொல் மீண்டும் அலர்ஜியாகிவிட்ட து பாஜக-விற்கு. பாரதீயத்தின் மேல் புதிய ஈடுபாடு வந்துள்ளது. அதனால் குற்றவியல் சட்டங்களில் இருந்த இண்டியன் என்ற வார்த்தையை நீக்கி பாரதீய என்று தொடங்கும் இந்தி/ சமஸ்கிருத பெயர்களை சூட்ட முற்படுகின்றனர்.   

ஒன்றியத்தின் அலுவல் மொழியாக ஆங்கிலமே நீடிப்பதில் என்ன தவறு  

ஆங்கிலம் உலகில் பெரும்பாலோர் பேசக்கூடிய, பேசாதவர்களும் தொடர்பு மொழியாக ஏற்றுக்கொள்ளக்கூடிய நிலையை இருபதாம் நூற்றாண்டில் எட்டிவிட்டது. இதற்கு முக்கிய காரணம் உலக பொருளாதாரத்தின் மையமாக விளங்கும் அமெரிக்கா ஆங்கிலம் பேசும் நாடாக இருப்பதுதான். இது சைனா, ஜப்பான் போன்ற நாடுகளையும் தொடர்பு மொழியாக ஆங்கிலம் கற்க வகை செய்கிறது. இந்தியா பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்தே ஆங்கிலம் பயின்று வருவதால், இந்தியர்கள் கணிசமான அளவில் அமெரிக்காவில் குடியேறி, அங்கு தேசிய வாழ்வில் அவர்கள் சந்ததியினர் பங்கேற்று வருகின்றனர். பிரிட்டிஷ் பிரதமராக, அமெரிக்க துணை ஜனாதிபதியாக இந்திய வம்சாவழியினர் பதவி வகித்து வருகின்றனர் என்பது நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம்.   

கடந்த எழுபது ஆண்டுகளில் இந்தியாவில் கோடிக்கணக்கானவர்கள் ஆங்கிலம் பயின்றுள்ளார்கள். இந்திய மொழிகள் அனைத்திலும் அன்றாட வழக்கில் கணிசமான ஆங்கில சொற்கள் கலந்துள்ளன என்பது மட்டுமன்றி, கிராமப்புறங்களிலும் கூட ஆங்கில பதங்கள் பரவலாக பயன்படுத்தப் படுகின்றன. சேதன் பகத் போன்ற ஆங்கில நாவலாசிரியர்களின் நாவல்கள் இலட்சக்கணக்கான பிரதிகள் இந்தியா முழுவதும் விற்றுத் தீர்க்கின்றன. ஹாலிவுட் படங்கள் இந்தியாவெங்கும் அரங்கு நிரம்பிய காட்சிகளாக ஓடுகின்றன. ஆங்கிலம் இந்தியாவிற்கு அன்னிய மொழி என்பதெல்லாம் அர்த்தமற்ற பேச்சு.   

இந்தியாவின் அலுவல் மொழி, தொடர்பு மொழி பிரச்சினையை ஆங்கிலத்தை கொண்டு தீர்ப்பதுதான் அறிவுடமை. அதனால் ஏராளமான நன்மைகள் உள்ளன. உள் நாட்டு தொடர்பு மொழியே சர்வதேச தொடர்பு மொழியாக அமையும்போது நம்மால் சுருங்கிவரும் உலகில் சிறப்பாக இயங்க முடியும். உச்ச நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக ஆங்கிலம் இருந்தால், அது சர்வதேச சட்டங்களையும், நீதிபரிபாலன வரலாற்றையும் சுலபமாக தொடர்பு படுத்திக்கொள்ள முடியும்.   

நம்முடைய பொருளாதார வளர்ச்சிக்கு நாம் அன்னிய முதலீட்டையே நம்பியுள்ளோம். தேசத்தின் பாதுகாப்பிற்கு அன்னிய ராணுவ தளவாடங்களை நம்பியுள்ளோம். அமெரிக்காவுடன் நல்லுறவைப் பேண எந்த சமரசங்களையும் செய்து கொள்கிறோம். அமெரிக்க இற்க்குமதி பொருட்களால் சந்தையை நிரப்புகிறோம். இதிலெல்லாம் இல்லாத அடிமைத்தனம், ஆங்கில மொழியை பயன்படுத்துவதால் மட்டும் வந்துவிடப் போவதில்லை.   

கணணியுகமும், செயற்கை நுண்ணறிவும் மொழியாக்கத்தை மேலும், மேலும் சுலபமாக்கப் போகின்றன. இந்த நேரத்தில் இந்தி மொழி பேசாத ஐம்பது, அறுபது கோடி இந்தியர்கள் மீது இந்தி பெயர்களை திணிப்பது என்பது காலனீய மனோபாவமே தவிர வேறொன்றில்லை. ஆங்கிலம் இன்றைக்கு காலனீய மொழியில்லை. அந்த நாலைந்து தலைமுறையாக பரவலாக இந்தியர்கள் பயின்று வரும், பயன்படுத்தும் மொழி. ஆனால் இந்தி மொழி பேசாதவர்கள் அந்த மொழியை அரசு அலுவல் மொழியாக பயன்படுத்துவது தங்களை இரண்டாம் நிலை குடிமக்களாக்கிவிடும் என்றுதான் கருதுவார்கள். அது தேசத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு சிறிதும் நன்மை செய்யக்கூடியதல்ல.  

பாரதீய ஜனதா கட்சி இந்தி, இந்து, இந்துஸ்த்தான் என்பதை இந்தி, இந்து, பாரதீயம் என்று மாற்றுவதால் பிற்போக்கு சிந்தனையை முற்போக்கானதாக மாற்ற முடியாது. இந்தியா பன்மைத்துவத்தின் ஊற்றாக, பன்மையை தன் உள்ளுறை ஆற்றலாக உணர்ந்துவிட்டது. அதையே வளர்ச்சியின் ஊற்றுக்கண்ணாக பார்க்கிறது.  காலத்திற்கு பொருந்தாத “இந்தி, இந்து, இந்துஸ்தான்” என்ற பழமைவாத கோஷத்தை பாஜக முன்னெடுப்பது நல்லதல்ல.   

புதிய சட்டங்களின் உள்ளடக்கங்களை விவாதிக்கும் முன்னால், முதலில் அவற்றின் பெயர்களை மாற்ற வேண்டும். அனைத்து இந்தியர்களுக்கும் இணக்கமான பெயர்கள் வேண்டும். பாரதீய ஜனதா கட்சிக்கும் இந்தியா கூட்டணிக்குமான முரண்பாடும், போராட்டமும் பல முனைகளிலும் தீவிரமடைவது காலத்தின் கட்டாயம்.        

Tags: