கடலையும் காவு கேட்கும் பொருளாதார வளர்ச்சி!
-நாஞ்சில் ஹமீது

உலக உருண்டையில் நான்கில் மூன்று பங்கு (72 %) நீரால் ஆனது. அதில் பெரும்பகுதி கடலாக உள்ளது. இது இயற்கையின் பெருங்கொடைகளில் ஒன்று. கடல் பூமியின் பருவ நிலையைச் சீராக வைப்பதோடு மட்டுமல்லாமல் காற்றைச் சுத்தப்படுத்தவும், உணவு வழங்கவும் உதவி செய்து கோடிக்கணக்கான உயிரினங்கள் வாழுமிடமாகவும் இருக்கிறது. நுண்ணுயிரி முதல் உலகின் மிகப்பெரிய விலங்கான நீலத்திமிங்கலம் வரை கடலில்தான் வாழ்கின்றன.
இந்த பூமியிலுள்ள அனைத்து உயிர்களும் வாழ சம உரிமை உள்ளபோதும் உயிரினங்களின் இறுதித் தோற்றமாகிய மனிதனின் அளவு மீறிய நுகர்வுக் கலாச்சாரத்தின் காரணமாக ஒட்டுமொத்த உயிரினங்களும், தாவர வகைகளும், இயற்கை வளங்களும் அழிவுப் பாதையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றன. ஆம்! மனிதக்குலம் ஏற்படுத்தும் மாசு இதற்கு முக்கிய காரணமாக அமைகிறது. அதில் குறிப்பாகக் கடல் மாசுபடுவதால் மனிதனுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் பயன்படும் கடல் வளங்கள் அழிவை நோக்கிய ஆபத்தில் உள்ளன. இது உலகில் உள்ள ஒட்டு மொத்த உயிரினங்களுக்கும் பெருந்தீங்கு விளைவிக்கும். நிலத்தில் உள்ள எல்லா கழிவுகளும் இறுதியாகப் போய்ச் சேர்வது கடலில்.
கடல் மாசுபட முக்கிய காரணிகளாகப் பின்வருபவை உள்ளன.
நெகிழிக் கழிவுகள் (பிளாஸ்ரிக் கழிவுகள்)
தொழிற்சாலை கழிவுகள்
அணுமின் நிலைய கழிவுகள்
கப்பல் போக்குவரத்து
பெருமழை
சுரங்கப் பணிகள்
பவளப் பாறைகளின் அழிவு
இவற்றால் ஏற்படும் விளைவுகளை விரிவாகப் பார்ப்போம்.
நெகிழிக் கழிவுகள்
கடலில் சிறுமீன்கள், பெரிய மீன்கள், திமிங்கிலம் போன்ற பாலூட்டிகள், கடல் விலங்குகள், தாவரங்கள் என ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் வகை உயிரினங்கள் உள்ளன. இதில் கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிரிகளும் அடக்கம். உத்தேசமாக பதினாறாயிரத்துக்கும் மேற்பட்ட மீன் வகைகளும், இருபதாயிரம் வகை தாவரங்களும் உள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. இவை கடல் மாசுபடுவதால் அழியும் அபாயமுள்ளது.

இன்று கடலும், கடற்கரைகளும் குப்பைகளால் நிறைந்து காணப்படுகின்றன. அதில் பெரும்பகுதி நெகிழிக் குப்பையாக இருப்பது கவலை தரும் விஷயமாகும். நெகிழி மட்கிப் போவதற்கு நானூற்று ஐம்பது ஆண்டுகள் ஆகும் எனக் கணிக்கப்பட்டாலும் உறுதியாக எத்தனை வருடங்கள் ஆகும் எனச் சொல்லிவிட முடியாது.
வட பசிபிக் கடலில் பெரும் தீவு போல நெகிழி குப்பைகள் சுமார் பதினான்கு லட்சம் சதுர கிலோமீட்டர் அளவில் மிதந்து கொண்டிருக்கின்றன. நூற்றியெண்பது கோடி டன் (ஒரு டன் என்பது ஆயிரம் கிலோ) நெகிழி துண்டுகள் மிதப்பதாகக் கருதப்படுகிறது. இந்த மொத்தக் கழிவு கடலின் மேற்பகுதியிலிருந்து நூறு மீட்டர் ஆழம் வரை நிறைந்திருக்கிறது. இதையே பசிபிக் கழிவு மண்டலம் என்கிறார்கள். இதுபோல் உலகெங்குமுள்ள கடல்களில் நெகிழி கழிவுகள் மிதக்கின்றன.
இவ்வாறு மிதக்கும் நெகிழி கழிவுகளால் கடல் வாழ் உயிரினங்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. கடலில் மிதக்கும் நைலான் மீன்பிடி வலைகளில் சிக்கிக் கொள்ளும் மீன்களும், ஆமைகளும் நீந்தவோ, இரைதேடவோ முடியாமல் இறக்கின்றன. குளிர்பான டின், பாட்டில்களைப் பொதிந்து வரும் நெகிழிகளிலும் மீன்கள் மற்றும் ஆமைகள் சிக்கிக் கொள்ளும் காணொளிக் காட்சிகள் நெஞ்சைப் பதைபதைக்க வைப்பவை.
மேலும் நெகிழியை உணவாக உட்கொள்ளும் மீன்கள், அதனால் இரையைத் தேடுவதில் குழப்பமடைவதோடு நெகிழி வயிற்றில் ஜீரணமாகாமல் நோய் தாக்கி இறக்கவும் நேரிடும். ஆண்டுக்கு ஒரு லட்சம் பாலூட்டிகள், பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட பறவைகள் மற்றும் நிறையக் கடல் ஆமைகள் இக்கழிவுகளால் இறக்கின்றன. இந்தோனேசியாவில் ஒரு திமிங்கிலத்தின் வயிற்றில் ஆறு கிலோ எடையில் நெகிழி சேர்ந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் நெகிழி கப்புகள், உணவு பொதியப்படும் நெகிழி தாள்கள் போன்றவை இருந்தன.
கடந்த ஆண்டுகளில் அறுநூற்று ஐம்பது டன் நெகிழி கழிவுகள் கடலில் கொட்டப்படுவதாக ஆய்வுகள் சொல்கின்றன. இதே நிலை தொடர்ந்தால் 2050ஆம் ஆண்டு கடலில் மீன்களை விட அதிகம் நெகிழி இருக்குமென ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கிறது. மேலும் சில வளர்ந்த நாடுகள் மருத்துவ கழிவுகளைக் கப்பல்கள் மூலம் ஏற்றி வந்து ஆழ்கடலில் நேரடியாகக் கொட்டிச் செல்வதும் வேதனையான விஷயம். இதில் அதிகமாக ஒருமுறை உபயோகித்து வீசி எறியப்படும் பைகள், குடிநீர், பழரசச் சாறுகள், குளிர்பான பாட்டில்களே மிக அதிகமாகக் காணப்படுகின்றன.
தொழிற்சாலை கழிவுகள்
கடலை மாசுபடுத்துவதில் தொழிற்சாலைகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன. கடற்கரையை மற்றும் துறைமுகங்களை ஒட்டிய தொழிற்சாலைகளின் கழிவுகள் சுத்திகரிக்கப்படாமல் கடலில் கலக்கப்படும்போது அவை கடலை அமிலத் தன்மை உடையதாக மாற்றுகின்றன. இது உணவுச் சங்கிலியில் பெரும் பாதிப்பை உண்டு பண்ணுகிறது. கடல் உணவை உட்கொள்ளும் பறவை மற்றும் விலங்குகளின் மூலம் அவ்வேதிப்பொருட்களின் நஞ்சு நிலத்தில் உள்ள விலங்குகளுக்கும் பரவி, அவற்றின் பால் மற்றும் இறைச்சியை உண்பவர்கள், நேரடியாக மீனை உண்பவர்கள் ஆகியோருக்கு புற்றுநோய் மற்றும் கொடிய நோய்கள் பரவ காரணமாகிறது. ஆண்டு தோறும் மூன்று கோடி லிட்டர் கழிவுநீர் கடலில் கலக்கிறது. முந்நூறு ஆண்டுகளில் இல்லாத அளவு கடல் அமிலமாக மாறியிருக்கிறது. இதில் முப்பது சதவீதம் தொழிற்சாலைகள் கடந்த இருநூறு ஆண்டுகளில் வெளியேற்றிய கழிவுகளால் ஏற்பட்ட சேதம்.

கடல் அமிலமாக மாறுவதால் கால்சியம் கார்பனேட் கரைந்து பவளம், சிப்பி, மட்டி(clam), ஓயிஸ்டெர் போன்றவை அழிந்துவிடும். கடலில் அமிலத்தன்மை அதிகரிக்கக் காற்றில் நாம் கலக்கும் கரியமில வாயுவும் ஒரு காரணம். சிலவகை புற்களை வளர்ப்பதால் கடலின் அமிலத்தன்மையைக் குறைக்கமுடியும் என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
அணுமின் நிலைய கழிவுகள்
மின்சாரத் தேவைக்காக உலகெங்கும் உள்ள அணுமின் நிலையங்கள் தமது கழிவுகளைக் கடலில்தான் கொட்டுகின்றன. அதிலுள்ள சக்திவாய்ந்த கதிர்வீச்சு காரணமாக கடல் வாழ் உயிரினங்கள் மற்றும் கடல் வளம் பாதிப்புக்குள்ளாகிறது.
பவளப் பாறைகள்
கோரல் பாலிப்ஸ் (polyps) எனும் நுண்ணுயிர் பாறைகளில் ஒட்டிக்கொள்கிறது. பின்னர் இந்த பாலிப்ஸ் வளர்ந்து பவளமாகிறது. இந்த பாலிப்ஸ் கால்சியம் கார்பனேட்டை சுரக்கிறது. அதில் மேலும் பல பாலிப்ஸ்கள் வந்து ஒட்டிக் கொள்வதால் இவை மிகக் கடினமானதாகிறது. வருடத்திற்கு இரண்டு இன்ச் வரை இது வளர்ந்து மிகப்பெரிய பவளப்பாறைகளாகின்றன. ஒவ்வொரு பவளப் பாறையும் தனது வாழ்வை இருநூறு கோடி ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியிருக்கும். இவை அதிக அலைகள் இல்லாத மித தட்பவெப்ப சீதோஷ்ண நிலையில் மட்டுமே வாழும். எனவே பூமத்தியரேகையை ஒட்டிய நாடுகளில் இவை அதிகமாகக் காணப்படுகிறது.

கடலில் ஒரு சதவீதம் மட்டுமே உள்ள பவளப்பாறைகள் இருபத்தி ஐந்து சதவீதம் உயிரினங்களுக்கு வாழுமிடத்தைத் தருகின்றன. இவை காற்றிலுள்ள கார்பன் டை ஆக்ஸைடை குறைக்கிறது. கடலலையின் வேகத்தைக் குறைப்பதால் கடலோர மண்ணரிப்பை தடுக்கிறது. சுனாமி ஏற்பட்டபோது ராமேஸ்வரம் பகுதி அதிகம் பாதிப்புக்குள்ளாகாமலிருந்ததற்கு அப்பகுதியில் உள்ள பவளப்பாறைகளே காரணம்.
கடலில் அமிலத்தன்மை கூடும்போது பவளப்பாறையை உருவாக்கும் பாலிப்ஸ் எனும் நுண்ணுயிர் அதில் கரைந்துபோவதால் பவளப்பாறையின் வளர்ச்சி பாதிக்கிறது. மேலும் சுண்ணாம்பு, அழகிய நகைகள் போன்ற ஆபரணங்கள் செய்ய வெட்டி எடுப்பது, வெடிவைத்து மீன் பிடிப்பது, கடலில் மணலைக் கொட்டி துறைமுகம் அமைக்க, அல்லது நகர்ப்பகுதி விரிவாக்கம் (உதாரணமாகச் சிங்கப்பூர்) செய்யும் போதும், கடல் நீர் வெப்பமாதல் மற்றும் கடல் மாசு போன்றவற்றால் பவளப்பாறைகள் அழிவை நோக்கிச் செல்கின்றன. இன்று சில நாடுகளில் விமானநிலையங்களைக் கடலை நிரப்பித்தான் கட்டியுள்ளனர். இருபது சதவீதம் பவளப்பாறைகள் அழிந்துகொண்டிருப்பதாகவும் அடுத்த சில ஆண்டுகளில் இருபத்துநான்கு சதம் பவளப்பாறைகள் அழிவை எதிர்நோக்கியுள்ளதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.
பவளப்பாறைகள் அழிந்தால் கடல் மாசு அதிகரிப்பதோடு, கடல் வாழ் உயிரினங்கள் மற்றும் நிலவாழ் உயிரினங்களுக்கும் ஆபத்து ஏற்படும் என்பதில் ஐயமில்லை. சிலவகை கடற்புற்கள் கடல்நீரிலுள்ள கார்பனை உள்வாங்கி கடலின் அமிலத்தன்மையைக் குறைக்கிறது. இது பவளப்பாறைகள் அழிவதிலிருந்து தடுப்பதுடன் ஆரோக்கியமாக வாழவும் உதவுகிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கடல்(கப்பல்) போக்குவரத்து
இன்று உலக வணிகத்தில் மிகக் குறைந்த செலவில் பொருட்களை ஓரிடத்திலிருந்து வேறிடத்திற்குக் கொண்டு செல்ல நீர்வழி போக்குவரத்து உள்ளது. அதில் கடல்வழி நவீன கப்பல் போக்குவரத்து பெரும் பயன்பாட்டில் உள்ளது. இன்று கடலில் நடக்கும் எண்ணிலடங்கா கப்பல் போக்குவரத்தால் கடல் மாசு அதிகரித்துள்ளது.
எண்ணெய்க் கப்பல்களிலிருந்து விபத்தால் கடலில் எண்ணெய் கொட்டுவதே கடல் மாசடைவதற்கு முக்கிய காரணி. 1989ஆம் ஆண்டு எக்ஸான் வால்டெஸ் (Exxon Valdzez) எனும் எண்ணெய் கப்பல் (oil tanker) பிரின்ஸ் வில்லியம் சவுண்ட்ஸ் பகுதியில் விபத்து ஏற்பட்டு ஒரு கோடி லிட்டருக்கும் அதிகமான கச்சா எண்ணெய்யைக் கடலில் கொட்டியது. இது ஆயிரத்து நூறு சதுர மைல்களுக்குப் பரவியது. மேலும் ஆயிரத்து ஐந்நூறு மைல் கடற்கரையைச் சேதப்படுத்தியது. இதில் இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் கடல் பறவைகளும், இரண்டாயிரத்து எண்ணூறு கடல் நீர்நாய்களும், இருநூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட வழுக்கை கழுகுகளும், உலகின் பெரிய விலங்கான இருபத்தியிரண்டு கில்லர் வகை திமிங்கிலங்களும் கொல்லப்பட்டன. விபத்து நடந்த பிரின்ஸ் வில்லியம் சவுண்ட்ஸ் பகுதி பல வகைப்பட்ட மீன்கள், பறவைகள் மற்றும் பாலூட்டிகள் வாழ உகந்த இடமாக இருந்தது. இந்த எண்ணெய்யைச் சுத்தப்படுத்தியபோது உணவு சங்கிலியில் இருந்த முக்கிய கூறுகள் மற்றும் உயிரினங்களை அழித்துவிட்டது வேதனையான விஷயம்.

விபத்து நடந்த ஓராண்டுக்குள்ளாகவே அப்பகுதி பெரும் பொருட்செலவில் சுத்தப்படுத்தப்பட்டாலும் அதன் சுற்று சூழல் பாதிப்பு இப்போதும் உள்ளது. இது உலக வரலாற்றில் மனிதனால் ஏற்படுத்தப்பட்ட சுற்றுச் சூழல் பேரழிவுகளில் ஒன்று.
2014ஆம் ஆண்டுக்கு முன்புவரை கப்பலில் உள்ள காகிதங்கள் மற்றும் இரும்பு போன்ற கழிவுகளைக் கடலில் கொட்ட அனுமதியிருந்தது. 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு உணவுக் கழிவுகளை மட்டும் கரையிலிருந்து மூன்று மைல் தொலைவில் கொட்ட அனுமதியுள்ளது. அதிலும் சிறப்புக் கடல் பகுதிகளில் உணவுக் கழிவுகளையும் கொட்ட அனுமதியில்லை. IMO (International Marine Organization), MARPOL (MARine POLlution act) ஆகியவை கடுமையான சட்டங்களை வகுத்துள்ளன. நெகிழியைக் கடலில் கொட்ட எப்போதும் அனுமதியில்லை. ஒரு துளி எண்ணெய் கூட கடலில் கொட்டக் கூடாது. கப்பலில் சேகரமாகும் கழிவு எண்ணெய்கள் முறையாக எரிக்கப்படுகிறது. கப்பல்களின் ஸ்திரத்தன்மைக்காகச் செய்யப்படும் பலாஸ்ட் நீரையும் வெளியேற்றச் சட்டங்கள் உள்ளன.
அமெரிக்காவில் கப்பலில் நிறைக்கப்படும் கடல்நீரை இந்தியத் துறைமுகத்தில் வெளியேற்றினால் அதிலிருக்கும் சில உயிரிகளால் இந்தியக் கடல்பகுதியில் மட்டும் வாழும் சில சிறப்புக் கடல் உயிரினங்கள் அழிந்துபோகும். எனவே Balaast Water Management வகுத்துள்ள விதிப்படி அல்ட்ரா வயலட் கதிர்களைச் செலுத்தி நுண்ணுயிரிகள் அழிக்கப்பட்டபின்தான் பலாஸ்ட் நீரை வெளியேற்ற முடியும்.
கப்பலின் குளிக்கவும், துவைக்கவும் பயன்படுத்தப்பட்ட நீர், கழிப்பறை கழிவு நீர் ஆகியவற்றை வெளியேற்ற சில இடங்களில் தடைசெய்யப்பட்டுள்ளது. ஆழ்கடலில் அவை சுத்திகரிக்கப்பட்டு முறையாக வெளியேற்றப்படுவதைக் கடுமையான சட்டங்களைக் கொண்டும், துறைமுக அதிகாரிகளின் சோதனைகள் மூலமும் கண்காணிக்கப்படுகிறது. விதிகளை மீறி எண்ணெய்க் கழிவுகளைக் கடலில் கொட்டினால் மிக அதிக அபராதத் தொகையுடன், கப்பலின் மூத்த அதிகாரிகள் சிறை செல்லவும் சட்டங்கள் உள்ளன.
சரக்குப் பெட்டகங்களை ஏற்றிச் செல்லும் கப்பல்களிலிருந்து ஆண்டுதோறும் பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட சரக்கு பெட்டகங்கள் மோசமான கடல் சீற்றம் மற்றும் விபத்துகளால் கடலில் மூழ்குகின்றன. இதில் அபாயகரமான சரக்குகள் (Dangerous goods) மற்றும் ரசாயனங்கள் ஏற்றிய சரக்கு பெட்டகங்கள் கடலில் மூழ்குவதால் ஏற்படும் கடல் மாசு பெரும் ஆபத்து நிறைந்த விளைவை உருவாக்கும் என்பதில் ஐயமேதும் இல்லை.
கடலில் உள்ள எண்ணெய்க் கிணறு மற்றும் திரவ வாயு நிலையங்கள் தொடர்ச்சியான உற்பத்தியால் கடலின் சுற்றுச்சூழலை அழிக்கும் அபாயகரமான வாயுக்கள் கடலில் கலக்கின்றன.
2010ஆம் ஆண்டு பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனத்துக்குச் சொந்தமான எண்ணெய்க் கிணறு மெக்சிகோ வளைகுடாவில் விபத்து ஏற்பட்டு வெடித்தபோது ஒரு கோடியே முப்பது லட்சம் காலன் கச்சா எண்ணெய் அந்த கடலில் கலந்தது. இதுவும் சுற்றுச் சூழலைப் பாதித்த மிகப்பெரிய விபத்து. அப்போது இதில் பணிபுரிந்த பதினோர் ஊழியர்கள் தவிர அக்கடல் பகுதியில் வாழ்ந்த எண்ணிலடங்கா கடல் பாலூட்டிகள், ஆமைகள், பறவைகள் மீன்கள் ஆகியவை கொல்லப்பட்டன. இந்த விபத்து நடந்து பன்னிரண்டு ஆண்டுகள் ஆனபின்பும் அந்த பகுதியில் வாழும் கடல் வாழ் உயிரினங்கள் பாதிப்புக்குள்ளாகின்றன. அதில் இருபது சதவீதம் டால்பின்கள் இப்போதும் கர்ப்பமடைவதில்லை என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
ஒலி மாசு
கடல் எப்போதும் பேரமைதியில் இருக்கும். டால்பின்கள், திமிங்கிலம் போன்ற பாலூட்டிகள் மற்றும் குறிப்பிட்ட மீனினங்கள் இரை தேடுவதற்காக ஒலி எழுப்பி தனது இனத்துக்கு அறிவிக்கும். இவை கடலில் மனிதனால் ஏற்படுத்தப்படும் ஒலிமாசுவால் பாதிக்கப்படுகிறது. கடலின் ஒரு பகுதியிலிருந்து வேறு பகுதிக்கு மூவாயிரம் மைல்கள் வரை பயணிப்பவை திமிங்கிலங்கள். இவற்றின் பயணப் பாதை கடலில் ஏற்படுத்தும் ஒலியால் பாதிக்கப்படுவதோடு ஏராளமான மீனினங்கள் இறக்கின்றன. அமெரிக்கக் கடல்பகுதியில் திமிங்கிலங்கள் வாழும் பகுதிகளாகக் கண்டறியப்பட்ட இடங்களில் கப்பலின் வேகத்தைக் குறைத்துச் செல்ல அறிவுறுத்தப்படுகிறது (அதிக பட்சம் 10 knot வேகம்). கோடிக்கணக்கான கப்பல்கள் பயணிப்பது, எண்ணெய் மற்றும் திரவ வாயுக்காக எண்ணெய்க் கிணறுகளில் நடக்கும் தொடர் உற்பத்தியால் ஏற்படும் ஓசை ஆகியவை கடலில் ஒலி மாசு ஏற்படக் காரணம்.
பெரும் மழைக்காலம்
மனிதனால் பூமியில் வீசப்படும் அனைத்து கழிவுகளும் இறுதியாகக் கடலில்தான் வந்து சேர்கிறது. பெருமழை பெய்யும்போது நிலத்தில் உள்ள அனைத்து குப்பைகளும் ஆறுகள் வழியாகப் பயணித்து கடலில் போய்ச்சேர்கின்றன. தங்கம் மற்றும் கனிம வளத்துக்காக சுரங்கப்பணிகளின் போது வெளியேற்றப்படும் கழிவுகளாலும் கடல் மாசடைகிறது.

வாழ்வாதாரம், பொருளாதாரம் இழப்பு
உலகம் முழுவதும் இன்று மீன் முக்கிய உணவாக உள்ளது. மீன்பிடி தொழில் மூலம் கடலை நேரடியாகச் சார்ந்து வாழ்பவர்களும், மறைமுகமாகக் கடலை சார்ந்து வாழ்பவர்களும் கோடிக்கணக்கானோர். கடல் மாசுபடுவதால் மீன்பிடி தொழில் பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் வாழ்வாதாரம் அழிவதோடு மிகப்பெரிய பொருளாதார இழப்பும் ஏற்படும். கடல் மாசுபடுவதால் பல்லுயிர் பெருக்கம் தடைப்படுவதோடு, நோய் பெருகவும் காரணமாகிறது. கடல் பூமியின் சுவாசப்பை என்று சொன்னால் மிகையாகாது. மழை பெய்யவும் கடல்தான் ஆதாரமாக உள்ளது. எனவே கடலை மாசுபடுத்தாமல் காக்க வேண்டியது அரசோ, தனியார் நிறுவனங்களோ மட்டுமல்ல. ஒவ்வொரு உலகக் குடிமகனும் இதை உணர்ந்து அன்றாட நடவடிக்கைகளில் நெகிழி உபயோகத்தைக் குறைத்தும், ஒருமுறை பயன்படுத்தித் தூக்கிவீசும் பொருட்களைத் தவிர்த்து நீண்டகாலம் உபயோகிக்கும் பொருட்களைப் பயன்படுத்தி, நிலத்தையும், நீரையும், கடலையும் மாசுபடுத்தாமல் இருக்கவேண்டியது இன்றைய கட்டாய கடமை.