டார்வின் கோட்பாடு : மனிதப் பரிணாமமும் சமூகமும்
–பொ. இராஜமாணிக்கம்
1. மனிதப் பரிணாம வளர்ச்சி
60 இலட்சம் வருடங்களுக்கு முன் ஒரு வாலில்லா குரங்கிலிருந்து மனித இனம் பிரிந்து வளர்ந்தது. 25 இலட்சம் வருடங்களுக்கு முன் ஒஸ்ட்ரலோபித்திகஸ் (Australopithecus) என்ற நமது மூதாதையர் கிழக்கு ஆப்ரிக்காவான பிறந்த இடத்தை விட்டு நகர்ந்து ஆப்பிரிக்கா, ஆசியா, ஐரோப்பா கண்டங்களுக்கு பயணித்தது. இதில் ஆசியாப் பக்கம் வந்தவைகள் ஹோமோ எரெக்டஸ் (Homo erectus) என்ற பெயரில் ஆதியில் பரிணாமம் அடைந்து பல வகை மனித முன்னோடிகளை உருவாக்கி இருக்கிறது. ஹோமோ எரெக்டஸ் 20 இலட்சம் வருடங்கள் வாழ்ந்திருக்கிறது என்பது மிகப்பெரிய ஆச்சரியம். ஹோமோ எரெக்டஸில் இருந்து தான் நியான்டர்தால் (Neanderthal), ஜாவா மனிதன் (Java Man), பீகிங் மனிதன் (Peking Man), புளோரஸ் (Flores Man) என்ற லில்லிபுட் மனிதர்கள் ( 3அடி மனிதன், 25 கிலோ) சமீபத்திய டெனிசொவியன் (Denisovans). இது போன்ற பல மனித முன்னோடிகள் தோன்றி அழிந்து உள்ளனர்.
மனிதனின் தொட்டில் ஆன கிழக்கு ஆப்ரிக்காவில் பரிணாமம் தொடரந்தது. ஹோமோ எர்காஸ்ட்டர் (Homo ergaster), ஹோமோ சேப்பியன்ஸ் (Homo sapiens) என நவீன மனிதன் பரிணமித்தான். இருபது இலட்சம் வருடத்தில் இருந்து சமீபத்திய பத்தாயிரம் வருடத்திற்கு முன் வரை பல்வேறு மனித இனங்கள் வாழ்ந்திருக்கின்றன. எப்படி கரடிகளில் பல வகைகள் வாழ்வது போல் மனித இனம் வாழ்ந்திருக்கிறது. தற்போது வாழும் மனிதன் சுமார் 2 இலட்சம் வருடத்தில் இருந்து வருகிறான்.
சுமார் எழுபதாயிரம் வருடங்களுக்கு முன்னர் மனித இனத்தின் கலாச்சாரப் பரிணாமம் கல் கருவிகளில் இருந்து துவங்கியது. 12000 வருடங்களுக்கு முன் விவசாயம் சுமார் 500 வருடங்களுக்கு முன் அறிவியல் தொழில் நுட்பப் புரட்சி என மனித சமூகம் வளர்ச்சி பெற்று வருகிறது. இந்த வளர்ச்சிகளோடு பல கோடி உயிரினங்களோடு வாழந்து கொண்டிருக்கிறான்.
2. டார்வின் பரிணாமக் கொள்கை
டார்வின்(Darwin 1809-1882) பரிணாமக் கொள்கை இயற்கைத் தேர்வு வழியாக உயிரினங்களின் தோற்றம் என்ற நூல் மூலம் 1859 இல் உலகத்திற்குத் தெரிய வந்தது. உயிர் பரிணாம அறிவியலில் மரபணு மாற்றம் (mutation) நேர்கோட்டுப் பரிணாமம் (Orthogenisis) உருவான குணங்ளைக் கடத்துதல் ( acquired characters inheritance), இயற்கைத் தேர்வு (Natural Selection) என்ற நான்கில் டார்வினுடைய இயற்கைத் தேர்வுக் கோட்பாட்டே சிறந்து விளங்குகிறது. டார்வின் கூறியது குறித்து இந்தப் பயிற்சிப் பட்டறையில் நிறையவே தெரிந்து கொள்வீர்கள். இது வரையிலும் கூட பாடங்கள் மூலமும் பல வழிகள் மூலமும் அறிந்து இருக்கலாம். டார்வின் கூறியது பல வழிகளில் தவறாகவும் புரிந்து கொள்ளப்பட்டுள்ளதையும் நம்மிடம் பார்க்கலாம்.
அவர் கூறியதில் வாழ்வதற்கான போராட்டம் என்ற பதமும் தக்கன பிழைத்தல் (survival of the fittest) என்பதும் அவருடையது அல்ல. முன்னது மக்கள் தொகை குறித்து மால்தூஸ் (Thomas Malthus) கூறியது. மக்கள் தொகைப் பெருக்கம் என்பது இயற்கையால் நோய், பஞ்சம் பிற பேரிடர்கள் மூலம் ஏற்படும் போராட்டத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது. மனித குல முயற்சியால் நோய் பஞ்சம் இயற்கைப் பேரிடர் ஆகியனவற்றில் இருந்து காப்பற்றப்பட்டு பிழைக்க வைக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தொகை வளர்ந்து கொண்டே இருக்கிறது. மக்கள் தொகைக் கட்டுப்பாடு என்பது வறுமை கல்லாமை சுகாதாரமின்மை போன்றவைகளுக்குக் காரணமாக இருக்கிறது என்று பல காலங்களுக்கு முன்னர் பேசிக் கொண்டிருப்பார்கள். ஆனால் கடந்த சுதந்திர தன உரையில் இந்தியப் பிரதமர் சிறிய குடும்பம் கொண்டவர்கள் தான் உண்மையான தேச பக்தி உள்ளவர்கள் மரியாதைக்குரியவர்கள் எனறு அரசியல் ஆக்கியுள்ளார்.
தக்கன பிழைத்தல் என்பது ஹெர்பட் ஸ்பென்சர் (Herbert Spencer) கூறியது. டார்வின் தனது ஐந்தாவது பதிப்பில் தக்கன பிழைத்தல் என்பது பொருத்தமாக இருப்பதாக் கருதி அதைப் பயன்படுத்தினார். இதை மனிதப் பரிணாமத்திற்கு (Descent of Man 1871 ) கையாண்டுள்ளார்.
டார்வின் கூறியதில் மிக முக்கியமானது என்னவென்றால் உயிரினங்கள் நிரந்தரமானவையல்ல, நேர்கோட்டுப் பரிணாமம் கொண்டது அல்ல, அது கிளைகள் கொண்டது, தொடர் மாற்றம் கொண்டது, பெரிய அளவில் இடைவெளியற்றது, இயற்கை உயிரினங்களைத் தேர்வு செய்கிறது.
டார்வின் கொள்கை என்பது வரலாற்றுத் தன்மையை உள்ளடக்கியது. பல கோடி வருடங்களுக்கு முன்னர் நடந்த நிகழ்வுகள், வழிமுறைகளை விளக்கும் விதமாக அமைந்துள்ளது. உற்று நோக்குதல், ஒப்பிடுதல், வகைப்படுத்துதல் என்ற அறிவியல் வழிமுறைகள் இதில் கையாளப்பட்டுள்ளது. அது நாள் வரை உயிரினங்கள் கடவுளின் சட்டங்களால் உயிரினங்களுக்கும் இயற்கைக்கும் பல தகவமைப்புகள் உருவானதெனக் கருதி வந்தனர். ஆனால் டார்வின் அபார சக்திகளினால் படைக்கப்படவில்லை எனக் கூறி கடவுளை அந்த இடத்தில் இருந்து அகற்றினார்.
உயிரினங்கள் ஒவ்வொரு வகையாக இறுக்கமாகப் படைக்கப்பட்டது என்ற கோட்பாட்டை மறுக்கிறார். அதாவது முக்கோணம் சதுரம் செவ்வகம் என அறுதி செய்யப்பட்டவை அல்ல. சிலர் கூறுவது போல மனித இனம் ஆப்ரிக்கன் ஆசியன் வெள்ளைக்காரன் என ஒவ்வொரு வகையானவன் இல்லை. தற்போதைய 700 கோடி மக்கள் ஒவ்வொருவரும் வேறுபட்டவர்களே. உயிரினங்கள் திட்டமிடப்பட்டு உருவானதில்லை (predetermined) காலஓட்டத்தில் நுண்ணிய அளவில் தொடர்ந்து மாறிக் கொண்டே இருக்கிறது. எடுத்துக்காட்டாக பல்வேறு உறுப்புமண்டலங்கள் (Digestive system) காலஓட்டத்தில் மாற்றம் கொண்டுள்ளதைக் காணலாம். எந்தத் திட்டமில்லாமல் அரிய வாய்ப்புமிக்கதையே இயற்கை தேர்வு செய்து வருகிறது. உயிரியலின் பரிணாமத்திற்கென கெடுபிடியான கோட்பாடுகள் கிடையாது (பால்சிபிகேசன் கோட்பாடு செல்லாது)
டார்வின் மனித இனம் பிரைமேட்ஸ் வகையைச் சார்ந்தது என்றும் சிம்பானசி கொரில்லா போன்ற குரங்குகள் போல உடலமைப்புக் கொண்டதென்றும் இதன் மூலம் ஆப்ரிக்காவே மனித இனத்திற்கு முன்னோடிகள் வாழ்ந்த இடம் எனக் கருதினார். ஆப்ரிக்காவில் 60 இலட்சம் வருடம் முதல் இன்று வரை பல்லாயிரக்கணக்கான மனித முன்னோடிகளின் தொல்படிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. எனவே டார்வின் கூற்று உண்மையாகிறது.
மனிதப் பரிணாமம் என்பது தனிச் சிறப்பானதல்ல என்கிறார். பிற உயிரினங்கள் எவ்வாறு பரிணாமம் வழியில் வந்ததோ அதே போன்று தான் மனிதன் பரிணாமும். தத்துவஞானிகளும் மத குருமார்களும் மனிதன் எல்லா உயிரினங்களுக்கும் மேலானவன் எனக் கூறுவதை இவர் மறுத்தார். ஏனென்றால் வாலில்லா குரங்குக்கும் மனிதனுக்கும் ஒரே மூதாதையர் என்பதில் இருந்து விளங்கிக் கொள்ளலாம். இதை பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற திருவள்ளுவரின் எளிய சிந்தனையில் பார்க்கலாம்.
மனித சமுதாயம் பெற்றுள்ள முன்னேற்றத்திற்கு பொதுநலப் பண்பும் (Atruism) ஒத்திசைவான கூட்டுறவும் (Harmonious cooperation) தான் காரணம். பரிணாமத்தில் இயற்கை தேர்வு என்பது தனி உயிரினத்தின் மீதல்ல. அந்த இனத்தின் குழுவாகும். எனவே மனித இனத்தின் வாழ்க்கை என்பது பொதுநலப் பண்பாலும் ஒத்திசைவான கூட்டுறவாலும் இயற்கையால் தொடர்ந்து அங்கீகரிக்கப்பட்டு தேர்வு செய்ததால் மனித குலம் முன்னேறி இருக்கிறது. இது தற்செயல் நிகழ்வல்ல ஒரு தீர்மானிக்கப்பட்ட இலக்கை நோக்கிச் செல்லும் இயற்கையின் செயல் என்ற கோட்பாட்டுக்கு எதிரானது. பரிணாமம் என்பது திட்டமிடாததும் அவ்வப்போதைய வாய்ப்புகளே பரிணாமத்தின் இலக்காகும்.
3. சமூக வளர்ச்சி
மனித சமுதாய வளர்ச்சி என்பது ஹெகேல் (Georg Wilhelm Friedrich Hegel) போன்ற அறிஞர்களின் பார்வையில் மாற்றம், மேலும் மாற்றம், முன்னேற்றம் என்பதாகும். இதனால் மார்க்ஸ் போன்றோர் அவரின் சீடர்களாக இருந்தனர். ஆனால் மாற்றத்திற்கான காரணத்தை அவரால் சரியாகச் சொல்ல முடியவில்லை. ஆனால் அது அவனிடம் தோன்றும் தெய்வீக சிந்தனை, மதம் என முடித்துக் கொண்டார். ஆனால் மார்க்ஸ் மனிதன் தான் மதத்தை உருவாக்கினார். மனிதனே உலகம் மனிதனே அரசு மனிதனே சமூகம் என்று முன் வைத்தார். மாற்றமும் முன்னேற்றமும் தெய்வீகமாகவோ ஊகத்தினாலோ வருவதில்லை.மாற்றம் என்பது மனிதகுலம் பெறும் திறன்களினாலும் அத் திறன்களை உருவாக்கும் அவர்கள் வாழும் சமூகமே காரணம் என்றார்.
மனிதனுக்கான சிந்தனை மாறும் உலகத்தினோடேயே உருவாகிறது. மாற்றத்திற்கான பின்னணியும் சமுதாயத்தில் இருந்து வருகிறது. மாற்றம் என்பது அவன் வாழுகின்ற வாழ்க்கையிலிருந்தே வருகிறது. மானுட விடுதலை என்பது சமூக மேம்பாட்டில் இருந்து வருகிறது. மனித குல விடுதலை என்பது அன்பினால் வருவதில்லை உழைப்பாளர்களின் உற்பத்தி முறையில் உருவாக்காப்படும் பொருளாதார பரிமாற்றத்தில் வருகிறது. மனித இதயத்தின் மாற்றத்தால் அல்ல. இப்படித்தான் பண்டைய சமூகத்தில் இருந்து இன்றைய முதலாளித்துவ சமூகம் வரை சமுதாய வளர்ச்சி நடைபெற்று வருகிறது.
மனித சமுதாய வளர்ச்சியில் பல கோளாரான கொள்கைகளையும் பரப்பி வருகின்றனர். அதில் ஹெர்பர்ட் ஸ்பென்சர் (Herbert Spencer) என்பவர் 1864ல் சமூக டார்வினிசம் (Darwinism) என்ற கோட்பாட்டைப் பரப்பினார். தக்கன தப்பிப் பிழைக்கும் (survival of the fittest) என்ற கருத்தினை உருவாக்கியவர் இவரே. சூழலுக்கேற்ற தகவமைப்புக் கொண்ட உயிரினத்தை இயற்கை தொடர்ந்து இனப் பெருக்கம் செய்ய அனுமதிக்கிறது. இதை மனதில் வைத்துக் கொண்டு சொத்தை குமிக்கும் திறமையும் வழிமுறையும் பரம்பரையாகச் செல்கிறதென்கிறது இந்தக் கோட்பாடு. மேலும் இவர் ஒரு படி போய் தொழிலாளர்கள் ஏழைகளுக்கு உதவிடு்ம் அரசின் சட்டங்களை எதிர்க்கிறார். இந்தச் சட்டங்கள் தகுதியற்றவர்களை ஆதரித்து இந்த சமூகம் முன்னேறுவதை தடுப்பதாகக் கூறுகிறார். இந்த தகுதியற்றவர்களை இயற்கையை மீறி நீண்ட நாளாக வாழ அனுமதிக்கிறது என்கிறார். வில்லியம் கிரஹாம் சம்மர் (William Graham Sumner) என்பவர் இன்னும் தடாலடியாக சொத்துக்கும் சமூக அந்தஸ்த்துக்கும் தனி நபர்களிடையே ஏற்படும் போட்டி திறனற்றவர்களையும் அறமற்றவர்களையும் வெளியேற்றும் என்கிறார். தனி நபர் சொத்துக்குவிப்பது என்பது அறமற்ற செயல் என இவர் அறியவில்லை.
மற்றொருவர் பிரான்சிஸ் ஹால்ட்டன் (Francis Galton). அவர் மனித இனத்தை மேம்படுத்த அதனிடம் உள்ள விரும்பத்தகாத குணங்களை நீக்க வேண்டும் என்ற யூஜெனிக்ஸ் (Eugenics) என்ற கோட்பாட்டை முன் வைக்கிறார். சமூக நல அமைப்புகள் மனவளர்ச்சி குன்றியோர்க்கான அமைப்புகள் தரம் குறைந்த மனித இனத்தை காப்பாற்றுகின்றன என குற்றம் சாட்டுகிறார். இதனையொட்டி 1930களில் 32 அமெரிக்க மாகாணங்கள் யூஜெனிக்ஸ் சட்டம் இயற்றி 60000 இற்கும் மேற்பட்டோரை அழித்திருக்கின்றனர்.
பிரிதொருவர் ஹிட்லரும் இதே வழியில் இனச் சுத்தம் என்ற பெயரில் ஆரியரல்லாத யூதர்கள் ரோமா என்ற ஜிப்சிகள் போலந்துக்காரர்கள் சோவியத்துகளை இலட்சக் கணக்கில் கொன்று குவித்தான். குறிப்பாக ஜிப்சி இனத்தவர்கள் ஆரிய இனத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிந்திருந்தும், அதிலும் தூய தன்மையைக் கண்டறிய அவர்களுடைய பெற்றோர்கள் அவர்களின் மூதாதையர்களின் தகவலைத் திரட்டி தீர்த்துக் கட்டினான். தற்போதைய மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் பெற்றோர்களின் பிறப்பிடத்தையும், அவர்களது பிறந்த திகதியையும் தகவலாகத் திரட்டச் சொல்வதை, இதனால் தான் எதிர்க்க வேண்டியதாயிருக்கிறது.
4. தற்போது என்ன செய்ய வேண்டும்
தற்போதுள்ள வலதுசாரி சூழ்நிலை (மதம், பிற்போக்குத் தன்மை, தேசீயவாதம்) உலகெங்கும் வளர்ந்து வருகிறது. இதன் பிரதிபலிப்பாக பல் வேறு நாடுகளில் வலதுசாரி அமைப்புகள் அரசினைப் பிடித்துள்ளன. இந்தியாவும் இதில் அடங்கும். ஏற்கனவே மத அடிப்படையிலான அரசுகள் பல நாடுகளில் இயங்கி வருகின்றன. பாகிஸ்தான், சவுதி அரேபியா, பிற..
வலதுசாரி அமைப்புகளின் எழுச்சிக்குக் காரணம் முதலாளித்துவத்தின் தற்போதைய நவீன தாராளமயமாக்கல். 1990 இற்குப் பின் முதலாளித்துவம் மிகப் பெரிய தோல்வி அதிர்ச்சியில் இருப்பதால் அதன் விளைவாக உலகம் முழுவதும் மக்கள் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். முதலாளித்துவ சொத்துக் குவியல் சிலரிடமும் சொத்தில்லாமல் வறுமையில் பெரும்பான்மையினரும் உள்ளனர். இதனைப் பயன்படுத்தி மக்களிடம் தேசீயவாதத்தையும் இனவாதத்தையும் பிரச்சாரமாக்கி வலதுசாரி அமைப்புகள் ஆட்சியைப் பிடித்துள்ளனர்.
இந்தச் சூழ்நிலையில் ஆளும் அரசுகள் நவீன தாராளமயக் கொள்கைகள் மக்களை மேலும் துயரத்தில் வீழ்த்தியுள்ளது. இந்தத் துயரத்தில் இருந்து மீள்வதற்கு மக்கள் கடவுள் நம்பிக்கையில் வீழ்வதும், அதுவே நமது நாட்டில் மதவாத அரசியலுக்கும் வழிவகுத்துள்ளது. மேலும் போலி அறிவியல் மூலம் மக்களை மரபணு ரீதியாக பிரித்தாளும் சூழ்ச்சிகளையும் வலதுசாரி போலி அறிவியலாளர்கள் செய்து வருகின்றனர். மத வெறியை ஒரு புறமும் தாராளமய பொருளாதாரத்தை மறுபுறமும் எதிர்த்தாக வேண்டும் இதுவே மக்களின் சிந்தனையை பிற்போக்கிற்கு இழுத்துச் செல்கிறது. இதனை சரி செய்ய டார்வின் கோட்பாட்டினை அறிந்து கொள்வதம் சரியாகப் புரிந்து கொள்வதும் அவசியமாகிறது.