புலிகளிடம் சரணடைந்த 112 பொலிசாரும் 3 அப்பாவிப் பெண்களும்!
–எஸ்.எல்.எம். ஹனிபா
10.06.1990 என் வாழ்வில் மறக்க முடியாத நாட்களில் மிகவும் துயரம் தோய்ந்த நாளாகும்.
அன்றுதான், கல்குடாப் பொலிசார் 112 பேர் புலிகளிடம் சரணடைந்தனர்.
அன்றிரவு ஒரு வாகனத்தில் அவ்வளவு பேரையும் ஏற்றி அவ்வப்போது கொண்டு வந்து எனது வீட்டிலிருந்து 100 மீற்றர் தூரத்திலுள்ள மஸ்ஜிதுல் கைர் பள்ளிவாசலின் இடப்பக்கமிருந்த வீட்டில் அடைத்து வைத்தார்கள்.
கிட்டத்தட்ட 140 சதுர அடி பரப்புள்ள வீடு. அதற்குள் 112 பேர். ஒரேயொரு மலசலகூடம். அன்றிரவு அவர்கள் சாப்பிட்டார்களோ எதுவும் தெரியாது. என்னால் வீட்டில் இருப்புக் கொள்ள முடியவில்லை. அந்தப் பொலிஸ் நிலையத்தின் சப் இன்ஸ்பெக்டர் எனது நண்பர். அவ்வப்போது கல்குடாவிலிருந்து உணவுப் பண்டங்கள் மரக்கறி வகைகள் கொள்முதல் செய்ய ஓட்டமாவடி சந்தைக்கு வருவார்கள். அவர் சொல்லுவார்; “ஹனிபா ஐயா! இந்த சீருடைக்கு எந்த ஆத்ம கௌரவமும் இல்லை. இது வெறும் துவக்கு. தோட்டாக்களை பதினைந்து வயதுப் பொடியன் எங்களிடமிருந்து எடுத்துக் கொண்டுதான் அனுமதிப்பார்கள். பிரேமதாசா ஜனாதிபதியானதும் புலிகளுக்குக் கொண்டாட்டம்.”
அப்படி அடிக்கடி சொல்வார்.
இங்கே வீட்டில் அடைபட்டிருக்கும் அவரைக் கண்டு ஆறுதல் சொல்ல நான் நினைத்தாலும், மனைவி விடுவதாக இல்லை.
மறுநாள் காலையில் புலிகளின் உள்ளூர் தளபதிகளில் ஒருவரான துரை எனும் உமர் என்னிடம் வந்தார். “காக்கா! இந்தப் பொலிசாருக்கு சமைக்க வேண்டும். பக்கத்திலுள்ளவர்களை அழைத்தோம். யாரும் வருவதாக இல்லை. நீங்கள் சொன்னால் வருவார்கள். ஒரு மூன்று பெண்களை எங்களுக்குத் தந்தால் சமையலை முடித்துக் கொள்வோம். உப்புக் கருவாடும் வாழக்காயும்தான் கறி.” என்று அவர் என்னிடம் கெஞ்சினார்.
நான் பள்ளிவாசலிலிருந்து கிழக்கே 100 மீற்றர் தொலைவில் அப்பொழுது வாழ்ந்து கொண்டிருந்த ஏழைப் பெண்மணிகளில் மூவரை அழைத்து, “நம்மட பொலிசார், நீங்கள் பயமின்றி சமைத்துக் கொடுங்கள். உங்களுக்கு எதுவும் நடக்காது” என்ற உத்தரவாதமளித்தேன்.
அதன் பின்னர் அவர்கள் சமையலில் ஈடுபட்டார்கள்.
காலை 9 மணியளவில் மீண்டும் நான் பள்ளிவாசல் இருந்த காணிப் பக்கம் போனேன். நெருப்புப் புகைந்தது.
மலசல கூடத்தினடியில் உள்ளூர்ப் புலி இளைஞன் ஒருவன் இருந்து கொண்டு, “வன் பை வன்…” என ஆங்கிலத்தில் பொலிசாரை அழைத்து மலசலகூடத்திற்கு அனுப்பிக் கொண்டிருந்தான்.
அந்த நேரம் பார்த்து புலிகளின் இசைக்குழுவுக்குப் பொறுப்பான கிண்ணையடியைச் சேர்ந்த சண்முகநாதன் என்பவர் பிக்கப்பில் வந்தார்.
ஏற்கனவே டெலோவிலிருந்து பின்னர் புலியில் இணைந்தவர். நானும் அந்தப் பக்கம் உலாவினேன். தூரத்தில் ஒரு வாகன சப்தம் கேட்டதும், சண்முகநாதன் தன்னுடைய பிக்கப்பை புழுதி கிளம்ப எடுத்துக் கொண்டு பறந்தார். எல்லோருக்கும் அவரவர் உயிருக்குப் பயந்தான் என்பதை அவரின் செயலிலிருந்து புரிந்து கொண்டேன்.
அன்றிரவு, யாராவது எனக்கு உதவியாக இருந்திருந்தால் அந்த மனிதர்களை நான் பாதுகாத்திருப்பேன். எனது வீட்டிலிருந்து 100 மீற்றர் தூரத்தில் ஆறு. ஆற்றைக் கடந்தால் இராணுவ முகாம்.
சரணடைந்த நேரம். அந்தப் பொலிசாரின் மனம் என்ன சொல்லியிருக்கும். நாங்கள் மட்டும் சரணடையவில்லை. எங்கள் பெற்றோர், இரத்த உறவுகள், நண்பர்கள். அனைவரும் சரணடைகிறோம். இதோ எங்கள் ஆயுதம். எங்களை நீங்கள் காப்பாற்றுங்கள் என்று அந்த மனங்கள் அழுதிருக்கும்.
அதிலிருந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு அந்தச் செய்தி வந்தது. சரணடைந்த அத்தனை பொலிசாரும் கல்குடாவிலேயே கொலை செய்யப்பட்டார்கள் என்று.
இந்த நாட்களில் மன்னார், வவுனியா போன்ற பொலிஸ் நிலையங்களிலிருந்தும் பொலிசார் கடத்தப்பட்டனர். ஆனாலும் அவர்கள் விடுவிக்கப்பட்டார்கள். அவ்வாறு விடுவிக்கப்பட்டவர்களில் எனது உறவினர் இஸ்மாயில் பொலிசும் ஒருவர்.
இது நடந்து இரண்டு வாரங்களில் இராணுவத்தினர் இந்தப் பிரதேசத்தைக் கைப்பற்றினார்கள். அப்போது எனக்கு ஏற்கனவே நன்கு அறிமுகமாகியிருந்த கெப்டன் ராஜ் பெர்னாண்டோ அவர்கள் எனது வீட்டுக்கு வந்தார்.
“ஹனிபா மாத்தையா! பொலிசாருக்கு சமைத்துக் கொடுத்த அந்த மூன்று பெண்களையும் நீங்கள் எங்களோடு அனுப்பி வைக்க வேண்டும். நாங்கள் அவர்களை விசாரித்து விட்டு உடனே மீண்டும் அவர்களின் இல்லங்களுக்குக் கொண்டு சென்று விடுவோம்.” என்று வாக்குறுதி தந்தார்.
பயந்து, நடுங்கி ஒடுங்கிப் போன அந்த மூன்று பெண்களும் ராஜ் பெர்னாண்டோவின் ஜீப் வண்டியில் ஏறி அமர்ந்தனர். நான், “பயப்படாமல் போங்கள். உங்களுக்கு எதுவும் நடக்காது. நமது பொலிசாருக்குத்தானே சமைத்துக் கொடுத்தது.” என்று சொன்னேன்.
இரண்டு நாட்களாக அவர்கள் வரவில்லை. மறுநாள் நான் இராணுவ முகாமை நோக்கிச் சென்றேன். அங்கே ராஜ் பெர்னாண்டோ அவர்களைச் சந்தித்து அந்தப் பெண்களுக்கு என்ன நடந்தது என்று கேட்டேன். அவர் சர்வசாதாரணமாக நான் இல்லாத நேரம், விஷயம் விளங்காத இராணுவ வீரர்கள், அந்த மூன்று பெண்களையும் கொன்று விட்டார்கள் என்றார்.
அவர்கள் மூவரும் பொலிசாருக்கு உணவு சமைத்துக் கொடுத்தவர்கள்.
சில ஆண்டுகளுக்கு முதல் காணாமல் போனவர்கள் பற்றிய விசாரணைக் கமிஷன் மண்முனை தெற்கு உதவி அரசாங்க அதிபர் காரியாலயத்தில் விசாரணை நடத்திக் கொண்டிருந்த நேரம், அவர்களிடத்தில் இந்த மூவர் பற்றிய எனது முறைப்பாட்டை முன்வைத்து அழுதேன்.
இலங்கை பொலிசாருக்கு சமைத்துக் கொடுத்த இந்த மூன்று பெண்களும் அன்று போனவர்கள் இன்னும் வீடு திரும்பவில்லை. இவர்களின் கதி என்ன? மாண்புமிகு ஜனாதிபதி அவர்களுக்கு இதைத் தெரியப்படுத்த மாட்டீர்களா? இதற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று உங்களிடம் கெஞ்சிக் கேட்கிறேன் என்று அழுதேன்.
அதில் இருந்தவர்களில் ஒருவரின் கண்களும் குளமாகின.
அதிகாரமும் ஆயுதமும் எந்த நேரமும் யாரையும் எதுவும் செய்யும். மறக்க முடியாத இந்த நினைவை இன்று உங்களுடன் பகிர்ந்து கொண்டதன் மூலம் சற்று ஆறுதல் அடைகிறேன்.