இப்போது தான் யுத்தம் ஆரம்பித்துள்ளது!

-சாவித்திரி கண்ணன்

ண்ணல் காந்தி தேசமாக பார்க்கப்பட்ட இந்தியாவை, அதானியின் கார்ப்பரேட் தேசமாக்குவதா? இந்த நாட்டின் அனைத்து வளங்களையும் அதானி சூறையாடிக் கொழுக்கவே பா.ஜ.க ஆட்சி என்றால், அதை தட்டிக் கேட்பது தொடரும்!  பத்திரிகையாளர் சந்திப்பில் அறச் சீற்றத்துடன் வெளிப்பட்ட ராகுல் காந்தியின் அடுத்த நகர்வுகள் என்ன?

# பத்திரிகைகள், காட்சி ஊடகங்கள் என அனைத்தையும் விலை கொடுத்து வாங்கியாயிற்று!

# எதிர்கட்சிகளை ஒன்று சேர முடியாமல் அச்சுறுத்தி பிரித்தாயிற்று.

# வருமான வரித்துறை, சி.பி.ஐ, அமலாக்கத்துறை ஆகியவற்றைக் கொண்டு அரசியல் எதிரிகளை பணிய வைத்தாயிற்று..!

# இயன்றவரை பல மாநிலங்களில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி காங்கிரசை பலவீனப்படுத்தியாயிற்று!

‘ஆக, இனி நமக்கு ஒன்றும் கவலை இல்லை…’ என சொகுசாக நாட்டை சூறையாடிக் கொழுக்க அதானி, அம்பானிகளுக்கு பட்டுக் கம்பளம் விரித்து, பகல் கொள்ளைக்கு துணை போன பாஜகவிற்கு ஒரே தலைவலி ராகுல் காந்தி தான்!

இந்த மனிதன் ‘ஒற்றுமைப் பயணம்’ என்று சொல்லி நடந்தால், நாடே அவர் பின்னால் அணி வகுக்கிறது!

சதா சர்வ காலமும் மோடியின் முகத் திரையை கிழித்து தொங்கவிடுகிறார் பாராளுமன்றத்தில்!

ஆகவே, இவரை முடக்க ஒரே வழி, எப்போதோ, எங்கேயோ பேசிய ஒரு பேச்சை தூசு தட்டி எடுத்து அவதூறு வழக்கென்று போட்டு, அதை  அரசியலில் இருந்தே ராகுலை அழித்தொழிக்கும் வழக்காக மாற்றி விட்டது பா.ஜ.க அரசு .

ஒரு சாதாரண விமர்சனத்திற்கு விஷமத்தனமான வியாக்கியானம் தந்து, அவருக்கு இரண்டாண்டு தண்டனை விதித்த வேகத்திலேயே – மேல் முறையீடும் அதற்கான தீர்ப்பும் பெறுவதற்கு முன்பே – அவரது எம்.பி.பதவி பறிக்கப்பட்டு உள்ளது! ‘இனி, நாடாளுமன்றத்தில் பேச வாய்ப்பில்லை’ என மறுக்கபட்டவுடன், ‘அப்படியானால் சரி, மக்கள் மன்றத்தில் பேசிக் கொள்கிறேன்..’என தனிப் பாதை வகுத்துக் கொண்டார் ராகுல் காந்தி என்பதே 25.03.2023 அன்று பத்திரிகையாளர் சந்திப்பில் வெளிப்பட்ட செய்தியாகும்.

பத்திரிகையாளர்கள் நேர்காணலில் ராகுல்காந்தி முதலாவதாகச் சொல்லியது இது தான்!

‘மக்களவை உறுப்பினராக இருக்கும் எனக்கு என் மீதான குற்றச்சாட்டிற்கு விளக்கம் அளிக்கும் வாய்ப்பு கூட வழங்காமல் என் பதவியை அவசரமாக பறித்தது ஏன்?’ என சபா நாயகருக்கு கடிதம் அனுப்பினேன். பதில் இல்லை. மீண்டும் கடிதம் அனுப்பினேன், பதில் இல்லை. எனவே, நேரில் சென்று விளக்கம் கேட்டேன். அப்போதும் அவரிடம் பதில் இல்லை. என்னால் ஒன்றும் செய்ய முடியாது. தேனீர் சாப்பிடுகிறீர்களா?’ என்றார்.

இது இந்தியாவில் ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளதைத் தான் காட்டுகிறது. பாராளுமன்றத்தில் எந்த ஒரு உறுப்பினராலும் அரசுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை கூற முடியாத நிலை நிலவுகிறது. அதானி விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் பேசிய எனது பேச்சுகள் அனைத்தும் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டு விட்டன.

நான் கேள்வி கேட்பதை நிறுத்த மாட்டேன். பிரதமர் மோடிக்கும், அதானிக்கும் என்ன தொடர்பு? ஏன் இந்த நெருக்கம்? அவர்கள் என் குரலை அடக்கி, என்னை ஜெயில் கம்பிகளுக்குப் பின்னால் நிறுத்தலாம் என்று நினைத்தால், அவர்களால் அதைச் செய்ய முடியாது. நான் கேள்வி கேட்பதை நிறுத்த மாட்டேன், ஜனநாயகத்துக்காக தொடர்ந்து போராடுவேன்.

அதானி விவகாரத்தில் தொடர்ந்து கேள்விகள் கேட்பேன், தகுதி நீக்கம் செய்தும், சிறையில் அடைத்தும் என்னை பயமுறுத்த முடியாது. நான் சாவார்க்கர் அல்ல, மன்னிப்பு கேட்பதற்கு! பின்வாங்க மாட்டேன்.  அதானி குறித்து நான் பேசும் போது பிரதமர் கண்களை நேருக்கு நேராகப் பார்த்தேன். அதில் பயம் வெளிப்பட்டது. அதானி பற்றி நான் பேசுவது அவர்களுக்கு பிடிக்கவில்லை. அதனால்தான், என்னை தகுதி நீக்கம் செய்துள்ளனர்.

அதானி ஷெல் நிறுவனங்களில் 20,000 கோடி ரூபாய் முதலீடு செய்தது யார்? என்பது எனது முக்கிய கேள்வி.எளிய மக்கள் இந்த அரசை நம்பி வங்கிகளில் போட்ட பணத்தை அதானிக்கு எப்படித் தரலாம்…? இந்த கேள்விகளை நான் கேட்டுக் கொண்டே இருப்பேன்.

பாதுகாப்புத் துறையில் அதானியை நுழைக்கிறீர்கள்! விமான நிலையங்களை அதானிக்கு தாரை வார்க்கிறீர்கள்! இலங்கை, வங்க தேச அரசுகளிடம் நிர்பந்தித்து அதானியின் வியாபார விருத்திக்கு பாடுபடுகிறீர்கள். இதற்கெல்லாம் நீங்கள் பதில் சொல்ல மறுக்கிறீர்கள். எனக்கு உண்மையைத் தவிர வேறு எதிலும் ஆர்வம் இல்லை. நான் உண்மையை மட்டுமே பேசுகிறேன், அது என் வேலை, நான் தகுதி நீக்கம் செய்யப்பட்டாலும் அல்லது கைது செய்யப்பட்டாலும் தொடர்ந்து பேசுவேன். என்னை ஒடுக்க முடியாது! என்றார்.

பாராளுமன்றத்தில் பேச மறுக்கப்பட்டுவிட்டது. அதனால், இனி மேல் ராகுல் காந்தியின் குரல் மக்கள் மன்றத்தில் வலுவாக ஒலிக்கும். மக்களுக்கு சேவையாற்ற கடமைப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி ஒற்றை மனிதரான அதானிக்கு சேவை செய்வதையே அரசின்  நோக்கமாக கொண்டு செயல்படுவதை அம்பலப்படுத்துவார். எவ்வளவு நாள் மோடியும் கள்ள மெளனத்துடன் இருப்பார் பார்த்துவிடலாம். ஆக, நீங்கள் அதிகாரத்தை பிரயோகிக்க, பிரயோக்கிக்க ராகுலின் அறச் சீற்றத்தை மட்டுமல்ல, நாட்டு மக்களின் அறச் சீற்றத்தையும் சேர்த்தே அதிகப்படுத்தி வருகிறீர்கள் என்பதே உண்மை!

Tags: