அதானியைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றுக!

பா.ஜ.க அரசாங்கம், அதானி குழுமத்தின் அனைத்து துர்செயல்களையும், வெட்கம் எதுவுமின்றி பாதுகாத்துக் கொண்டிருக்கிறது. அது, பாரத ஸ்டேட் வங்கி மற்றும் எல்.ஐ.சி (LIC) போன்ற தேசியமயமாக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களின் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்களை தன்னுடைய கூட்டுக்களவாணி கோர்ப்பரேட்டுகள் சூறையாடுவதற்கு வசதி செய்து கொடுத்திருக்கிறது. 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழுக் கூட்டம் மார்ச் 25, 26 ஆகிய தேதிகளில் புதுடெல்லியில் உள்ள மத்தியக்குழு அலுவலகமான ஏ.கே.கோபாலன் பவனில் நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

2014-க்குப் பின்னர் இந்தியாவில் கோர்ப்பரேட்-மதவெறிக் கள்ளக்கூட்டணி எப்படி இழிவான முறையில் எல்லாம் செயல்பட்டு வந்திருக்கிறது என்பதை ஹிண்டன்பர்க் அறிக்கை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கிறது. மோடி அரசாங்கம் 2014 இல் ஆட்சியில் அமர்ந்தபோது, அதானி குழுமத்தின் சந்தை மூலதன மதிப்பு ஃபோர்ப்ஸ் நிறுவனத்தின் கூற்றுப்படி 7.1 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இது 2022 வாக்கில் 200 பில்லியன் டொலர்களாக பூதாகரமாகியது. சர்வதேச அணிவரிசையில், 2014 இல் 609 ஆவது பணக்காரராக இருந்த அதானி, 2022 இல் உலகின் இரண்டாவது பணக்காரராக மாறியிருந்தார்.

பா.ஜ.க அரசாங்கம், அதானி குழுமத்தின் அனைத்து துர்செயல்களையும், வெட்கம் எதுவுமின்றி பாதுகாத்துக்கொண்டிருக்கிறது. அது, பாரத ஸ்டேட் வங்கி மற்றும் எல்.ஐ.சி போன்ற தேசியமயமாக்கப்பட்ட பொதுத்  துறை நிறுவனங்களின் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்களை தன்னுடைய கூட்டுக்களவாணி கோர்ப்பரேட்டுகள் சூறையாடுவதற்கு வசதி செய்து கொடுத்திருக்கிறது. அதானி குழு மத்தின் மீது எவ்வித விசாரணைக்கும் அப்பட்டமாக மறுத்து வருவது முன்னுக்கு வந்திருக்கிறது. அதானி குழுமத்தின் துர்செயல்கள் அனைத்தும் நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் மூலம் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்கிற கோரிக்கையை அரசியல் தலைமைக்குழு மீண்டும் வலியுறுத்துகிறது. அதானி குழுமம் நாட்டிலுள்ள சட்டங்களின்படி விசாரிக்கப்பட வேண்டும்.

நாடாளுமன்றத்தை முடக்கும் பாஜக 

அதானி குழுமம், தன்னுடைய ஆட்சிக் காலத்தில் தங்களுடைய வர்த்தகத்தை விண்ணை நோக்கி உயர்த்திச்சென்றது எப்படி  என்கிற கேள்விகளுக்குப் பதிலளிக்க இயலாமல், அதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தவும், நாடாளுமன்ற கூட்டுக்  குழு விசாரணை மேற்கொள்ளவும் அடாவடித்தனமாக மறுத்துக்கொண்டிருக்கிறது. இந்திய ஜனநாயகம் குறித்து காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறிய  கூற்றைத் தந்திரமாகப் பயன்படுத்திக் கொண்டு ஆளும் கட்சி உறுப்பினர்களே தொடர்ந்து மக்களவையை முடக்கிக் கொண்டிருப்பதுபோல், இதற்கு முன்னெப்போதும் நடந்ததில்லை. இதன் காரணமாக ஒன்றிய பட்ஜெட்  மீது எவ்விதமான விவாதமுமின்றி அது நிறை வேறவும் இட்டுச்சென்றிருக்கிறது. 

அரித்துவீழ்த்தப்படும் அரசமைப்புச்சட்ட அமைப்புகள் 

நாடாளுமன்றத்தை முடக்குவதோடு, நீதித்துறையின் மீதான தாக்குதல்களும் தொடர்கிறது. ஒன்றிய சட்ட அமைச்சரும், குடியரசுத் துணைத் தலைவரும் நீதித்துறைக்கு  எதிராகத் திரும்ப திரும்ப அறிக்கைகளை விட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு நீதித்துறை மீது ஆட்சியாளர்கள் கட்டுப்பாட்டைக் கொண்டுவர மேற்கொள்ளும் முயற்சிகள் முறியடிக்கப்பட வேண்டும். பா.ஜ.க ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் உள்ள ஆளுநர்களும், பா.ஜ.கவின் அரசியல் நோக்கங்களை முன்னெடுத்துச் செல்வதற்கான வேலைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.

மதவெறித் தீ விசிறிவிடப்படுகிறது

சிறுபான்மையினருக்கு எதிராகத் தாக்குதல்கள் அதிகரித்துக் கொண்டிருப்பதை கட்சியின் அரசியல் தலைமைக்குழு ஆழ்ந்த கவலையுடன் சுட்டிக்காட்டுகிறது. பசுப்பாதுகாப்புக் குண்டர்கள் முஸ்லிம் இளைஞர்களைக் கொல்வது எவ்விதக் கட்டுப்பாடுமின்றி தொடர்கிறது. பல மாநிலங்களில் தேவாலயங்கள் மற்றும் கிறிஸ்தவர்கள், அதிலும் குறிப்பாக கிறிஸ்தவ பழங்குடியினர், தாக்கப்படுவதாகவும் செய்திகள் வந்திருக்கின்றன. மேலும் மதவெறித்தீயைக் கூர்மைப்படுத்தும் விதத்தில் பொய்க் கதைகள், குறிப்பாக தேர்தல் நடைபெறவிருக்கும் மாநிலங்களில் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. கர்நாடக பா.ஜ.க அரசாங்கம், இதர  பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரிவின்கீழ் முஸ்லிம்களுக்கு இருந்துவந்த இட ஒதுக்கீட்டை ரத்து செய்யத் தீர்மானித்திருக்கிறது. சட்ட மன்றத் தேர்தல் நடைபெறக்கூடிய சூழ்நிலையில் அந்த மாநில அரசு இதனைச் செய்திருக்கிறது. மாநிலம் முழுவதும் முஸ்லிம் சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்களும்,  துன்புறுத்தல்களும் விரிவடைந்து கொண்டிருக்கின்றன.

அதிகரித்துவரும்  பொருளாதாரச் சுமைகள்

எவ்வித விவாதமுமின்றி 2023-24 ஒன்றிய பட்ஜெட் நிறைவேற்றப்பட்டிருப்பதற்கு அரசியல் தலைமைக்குழு கண்டனத்தை தெரிவிக்கிறது. பட்ஜெட், பொருளாதார மந்தம், வேலை வாய்ப்பு அல்லது சாமானிய மக்களின் வாங்கும் சக்தி போன்ற பிரச்சனைகளைக் குறிப்பிடுவதில் பரிதாபகரமான முறையில் தோல்வி அடைந்துவிட்டது. மாறாக, பணக்காரர்களுக்கு வரிச்சலுகைகளை மேலும்  அளித்துள்ள அதே சமயத்தில் பற்றாக்குறையைச் சமாளிக்க அரசின் செலவினங்களை மேலும் வெட்டிக் குறைத்திருக்கிறது. ஒக்ஸ் ஃபாம் (Oxfam) அறிக்கை, கடந்த இரண்டாண்டுகளில் இந்தியாவில் உள்ள மிகப்பெரும் பணக்காரர்களில் 1 விழுக்காட்டினர் நாட்டின் செல்வத்தில் 40.5 விழுக்காட்டை குவித்திருக்கிறார்கள் என்று சொல்லியுள்ள நிலையில் இந்த பட்ஜெட் வந்திருக்கிறது. இவ்வாறு, நாட்டிலுள்ள பொருளாதார நெருக்கடியை மேலும்  அதிகரிக்கக்கூடிய விதத்தில் ஒரு முரண்பட்ட பட்ஜெட்டாகத் தயார் செய்யப்பட்டிருக்கிறது.  சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மற்றுமொருமுறை உயர்த்தப்பட்டு மக்கள்  மீது மேலும் சுமைகள் ஏற்றப்பட்டிருக்கின்றன. ஏற்றத்தாழ்வு மிகவும் கொடூரமான அளவிற்கு அதிகரித்துள்ள அதே சமயத்தில், வேலையின்மையும் பசி-பட்டினிக் கொடுமையும் தொடர்கின்றன.

100 நாள் வேலைத்திட்டம் அழிக்கப்படுவதை நோக்கி…

100 நாள் வேலைத்திட்டமான மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்திற்காக, ஒவ்வொருவரும் தேசிய மொபைல் மானிட்டரிங் சிஸ்டம் செயலி  வைத்திருக்க வேண்டும் என்று அரசாங்கம் கொண்டுவந்துள்ள உத்தரவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று அரசியல் தலைமைக்குழு கோருகிறது. செயலியில் உள்ள பிரச்சனைகள் காரணமாக தொழிலாளர்கள் தாங்கள் வாங்கும் ஊதியத்தில் பாதியை இழக்கிறார்கள் என்று செய்திகள் கூறுகின்றன. இத்திட்டத்தில் பெரும்பான்மையாகவுள்ள பெண் தொழிலாளர்கள், ஸ்மார்ட்போன்கள் வாங்குவதற்காக கடன்வலைக்குள் தள்ளப்படுகின்றனர். இத்திட்டத்திற்கான பட்ஜெட் ஒதுக்கீடும் கணிசமாக வெட்டப்பட்டிருப்பதாலும், அளிக்கப்படவேண்டிய நிலுவைத் தொகையும் வெகு நீண்டகாலமாகத்  தொடர்வதாலும், இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது இத்திட்டத்தையே வலுவற்றதாக்கி இருக்கிறது.

சமீபத்திய சட்டமன்றத் தேர்தல்கள்

மோடி அரசாங்கம், ஊடகங்களைத்தன்  கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதன் மூலம், தான் தேர்தலில் எவராலும் வெல்லமுடியாத சக்தி என்ற முறையில் சித்தரித்துக் கொண்டிருக்கிறது. இது முற்றிலும் தவறானது. முன்பு  நடைபெற்ற தேர்தலில் கூட குஜராத்தில் அது  தன்னைத் தக்கவைத்துக்கொண்ட போதிலும், இமாச்சலப்பிரதேசத்தில் மற்றும் 15  ஆண்டுகளாகத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த டெல்லி மாநகராட்சிக்கான தேர்தலிலும் தோல்வி அடைந்தது. சமீபத்தில் திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய மூன்று வடகிழக்கு மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களில், மொத்தம் உள்ள 180 இடங்களில் பா.ஜ.க 46 இடங்களில் மட்டுமே  வெற்றி பெற்றிருக்கிறது. திரிபுராவில் அதன்  இடங்கள் 42 இலிருந்து 32 ஆகக் குறைந்திருக்கின்றன. நாகாலாந்தில் 12 இடங்கள் மட்டுமே பெற்று இரண்டாவதாக வெகுதூரத்தில் இருக்கிறது. மேகாலயாவில் அது இரு இடங்களில் மட்டும் வெற்றிபெற்று, மீதம்  உள்ள 58 இடங்களிலும் டெபாசிட் இழந்துள்ளது. வாக்கு விழுக்காட்டின் அடிப்படையில் பார்த்தாலும், திரிபுராவில் 38.97 விழுக்காடு, நாகாலாந்தில் 18.81 விழுக்காடு மற்றும் மேகாலயாவில் 9.33 விழுக்காடு அளவே அது பெற்றிருக்கிறது. எனினும், அங்கேயுள்ள வட்டார அரசியல் கட்சிகளுடன் சேர்ந்து மூன்று மாநிலங்களிலும் ஆட்சியை அமைத்திருக்கிறது. பூனே மாவட்டத்தில் கஸ்பா பேத் இடைத்தேர்தலில் தொடர்ந்து இருபதாண்டுகளாக பா.ஜ.க வெற்றிபெற்று வந்த இடத்தை, எம்.வி.ஏ கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளரிடம் பறி கொடுத்திருக்கிறது. மேற்கு வங்கத்தில் சகர்திகியில் நடை பெற்ற இடைத்தேர்தலில் 2011இல் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் வெற்றிபெற்று வந்த இடத்தை அது, காங்கிரசிடம் பறிகொடுத்திருக்கிறது. 2021இல் இங்கே திரிணாமுல் காங்கிரஸ், எதிர்த்துப் போட்டியிட்ட பா.ஜ.க-வை  விட 50 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்றிருந்தது. காங்கிரஸ்-இடதுசாரி வேட்பாளர் சுமார் 23 ஆயிரம் வாக்குகள் பெற்று, பா.ஜ.க வை மூன்றாவது இடத்திற்குத் தள்ளி இருந்தது.

திரிபுரா சட்டமன்றத் தேர்தல்

திரிபுரா சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக அரசியல் தலைமைக்குழு பூர்வாங்க ஆய்வினை மேற்கொண்டது. தேர்தல் அங்கே மிகவும் அசாதாரணமான சூழ்நிலையில் நடைபெற்றதைக் குறித்துக்கொண்டது. எதிர்க்கட்சிகள் செயல்பட அனுமதிக்கப்படவில்லை. தொடர் தாக்குதல்கள். எனினும் அனைத்தையும் மீறி அனைத்து வாக்காளர்களும் எதிர்க்கட்சியினருக்கு ஆதரவாக வாக்களித்திருக்கின்றனர். அதற்காக வாக்காளர்களுக்கு அரசியல் தலைமைக்குழு நன்றி தெரிவித்துக் கொள்கிறது. தான் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெறாததால் ஆத்திரம் அடைந்துள்ள பா.ஜ.க, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டபின் வெறித்தனமாகத் தாக்குதல்களைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீது அதன்  தாக்குதல்கள் பிரதானமாக இருந்தது. ஆயிரக்கணக்கான அலுவலகங்கள், வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. சொத்துக்கள் அழிக்கப்பட்டன. ரிக்சாக்கள், மூன்று சக்கர வாகனங்கள் போன்ற வாழ்வாதாரக் கருவிகள் அழிக்கப்பட்டன. பயிர்கள் குறிப்பாக ரப்பர் தோட்டங் கள் நாசமாக்கப்பட்டன. மீன் குட்டைகளில் நஞ்சைக் கலந்தனர். மாநிலத்தில் நடைபெற்ற வன்முறையை ஆய்வு செய்ய வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் கட்சி ஆகியவற்றைச் சேர்ந்த ஏழு உறுப்பினர்கள் கொண்ட நாடாளுமன்றக்குழுவும் காவல்துறையினர் முன்னாலேயே ஆர்.எஸ்.எஸ்/பா.ஜ.க குண்டர்களால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டனர். இவை அனைத்தும் மாநிலத்தில் பா.ஜ.க அரசாங்கத்தின் கீழ் நிலவும் மிகவும் ஆபத்தான நிலைமைகளைப் பறைசாற்றுகின்றன.

கேரள அரசை குறிவைத்திருப்பதற்குக் கண்டனம்

கேரள இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம் மற்றும் முதல்வர் மீது தனிப்பட்ட அவதூறுகளைப் பொழிவதற்கு அரசியல் தலைமைக்குழு கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது. பாஜகவுடன் சேர்ந்து கொண்டு அங்கேயுள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி இதில் இணைந்து கொண்டிருக்கிறது. இவர்களின் இத்தகைய முயற்சிகளுக்கு கேரள மக்கள் சரியான முறையில் பதிலடி கொடுப்பார்கள்.

அதிகரித்துவரும் மக்கள் போராட்டங்கள்

மக்களின் பல்வேறு பிரிவினர் மத்தியிலும் அதிகரித்துவரும் போராட்டங்களை அரசியல்  தலைமைக்குழு கவனத்தில் கொள்கிறது. சம்யுக்த கிசான் மோர்ச்சா மார்ச் 20 அன்று டெல்லி ராம்லீலா மைதானத்தில் மிகப்பெருவாரியாகக் கலந்துகொண்ட விவசாயிகளின் கிசான் மகாபஞ்சாயத்தை நடத்தி  இருக்கிறது. விவசாயத்தின் மீது கோர்ப்பரேட்டுகள் கட்டுப்பாட்டைக் கொண்டுவர மேற் கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கு எதிராக  நாடு தழுவிய அளவில் கிளர்ச்சிப் போராட்டங்களுக்கு அறைகூவல் விடுத்திருக்கிறது. மகாராஷ்ட்ரா கிசான் சபா, நாசிக்கிலிருந்து மும்பை வரை மார்ச் 12 அன்று தன்னுடைய மூன்றாவது நீண்ட பயணத்தைத் துவக்கியது. நீண்ட பயணம் மும்பை சேர்வதற்கு முன்னாலேயே ஷிண்டே – பா.ஜ.க தலைமையிலான மாநில அரசாங்கம், வெங்காயத்திற்கு குவிண்டாலுக்கு 350 ரூபாய் மானியம், 80 ஆயிரம் விவசாயிகளுக்குக் கடன் தள்ளுபடி உட்பட விவசாயிகளின் அனைத்துக் கோரிக்கைகளையும் ஏற்றுக்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டது. பல மாநிலங்களில் மின் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் இறங்கியிருப்பது, பா.ஜ.க அரசாங்கத்தைப் பணிய வைத்திருக்கிறது. மாநில அரசு ஊழியர்களும், அங்கன்வாடி தொழிலாளர்களும், திட்ட ஊழியர்களும் நாட்டின் பல பகுதிகளில் வேலைநிறுத்த நட வடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.  ஏப்ரல் 5 அன்று நடைபெறவுள்ள தொழிலாளி-விவசாயிகளின் நாடாளுமன்றம் நோக்கிய நீண்ட பயணத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு தன் ஒருமைப்பாட்டையும் ஆதரவையும் மீண்டும் தெரிவித்துக் கொள்கிறது.

– தமிழில்: ச.வீரமணி

Tags: